தமிழ்நாட்டின் RCH எனப்படும் தாய் சேய் நலத் திட்டத்தின் கீழ் பணி செய்யும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களின் தூய்மைப் பணியாளர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி, அவர்களின் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலமாக வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஒரு நாளைக்கு 50 ரூபாய் என ஒரு மாதத்திற்கு 1500 தான் RCH பணியாளர்களுக்கு ஊதியம் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு அரசு இப்படியுமா உழைப்புச் சுரண்டலை செய்ய முடியும் என்கிற அளவில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யவும், பணி விடுப்பு, பண்டிகை விடுப்பு என எந்த விடுமுறைக்கும் அனுமதி வழங்காமல் வருடத்திற்கு 365 நாட்களும் பணி செய்யவும் இவர்கள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்வளவு உடலுழைப்பைச் சுரண்டிய பின்னும் அவர்களுக்கு பணி நிரந்தரம் கூட இன்னும் செய்யவில்லை.
ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரண்டு பேர் வீதம் என 3140 தூய்மைப் பணியாளர்கள் 2005-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்த தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் பட்டியலினப் பெண்கள். வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழ்பவர்கள்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தூய்மையாக வைத்திருத்தல், மகப்பேறின் போது மருத்துவர், செவிலியர்களுக்கு உதவி புரிதல் பின்னர் மகப்பேறு அறையை தூய்மைப்படுத்துதல் எனப் பல்வேறு பணிகளை மிகவும் சொற்பமான ரூ 1500 மாத ஊதியத்திற்குத் தான் இப்பெண்கள் செய்கிறார்கள்.
இந்த அளவுக்கு அவர்களின் உழைப்பைப் பிழிந்தும், அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ 500-ம், 5 ஆண்களுக்குப் பிறகு ரூ 1000-ம், 7 ஆண்டுகள் பணி முடித்திருந்தாலோ அல்லது 10 மகப்பேறு நடந்திருந்தாலோ மட்டுமே மாதத் தொகுப்பூதியம் ரூ 1500-ம் வழங்கப்படும் நிலை தான் உள்ளது.
ஏழை, எளிய மக்களிடம் அரசாணைகளும் அடங்கிப் போய்விடும் என்று நினைக்கும் அளவுக்கு தான், அரசுகளால் போடப்பட்ட எந்த அரசாணையும் இவர்களுக்கு எட்டவில்லை. 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அரசு சார்பான அலுவலகங்களில் தினக்கூலி, தொகுப்பூதியத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் அவர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யலாம் என ஆணையிடப்பட்டது. ஆனால் இன்று வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதே போல, 2017-ம் ஆண்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயம் செய்யும் தினக்கூலியை வழங்கலாம் என்கிற அரசாணையின்படியும் தினக்கூலி வழங்கப்படவில்லை. மேலும், தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டத்தின்படியும் தினக்கூலி கொடுக்கப்படவில்லை.
இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலைமையைப் போக்கவே, சென்னையில் இன்று 18-3-2023, கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை நடத்தியிருக்கிறார்கள்.
- 2010-ம் ஆண்டு அரசாணையின்படி, R.C.H தூய்மைப் பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்கு பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
- R.C.H தூய்மைப் பணியாளர்களுக்கு 2017-ல் போடப்பட்ட அரசாணையின்படி. மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்யும் தினக்கூலியை வழங்கிட வேண்டும்
- 2017 – லிருந்து ஊதிய நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும்.
- 12 மணி நேரப் பணி என்பதை மாற்றி 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும்.
- அரசு விடுமுறையும், மருத்துவ விடுமுறை, மகப்பேறு விடுமுறைகளை வழங்கிட வேண்டும்.
- பணிபுரியும் இடங்களில் பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
- சீருடை இலவசமாக வழங்கிட வேண்டும்.
- பணியின் போது இறக்க நேரும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடை வழங்கிட வேண்டும்.
- பொது சுகாதார இயக்குநரின் 2020- கடிதத்தின்படி, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் காலி இடங்களில் பரிந்துரை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
அரசு ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைகளின் படி தான், கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். 350க்கும் மேற்பட்ட RCH பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த கவனயீர்ப்பு உண்ணாநிலைப் அறப் போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். இனிவரும் காலங்களில் இவர்களின் போராட்டத்தில் மே 17 இயக்கமும் பங்கேற்கும் என உறுதியளித்தார். இந்த உண்ணாநிலைப் போராட்டத்திற்கு RCH தூய்மைப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் என்.எஸ். செல்வராச் தலைமை தாங்கினார். இதன் நிர்வாகக் குழுவைச் சார்ந்த எம். அருள்மணி, ஆர்.சாரதா, ஆர்.தாட்சாயணி, எ.லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா. முத்தரசன், எம். வீரபாண்டியன், ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன், AlTUC மாநில பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் ஜி.ஆர். இரவீந்தரநாத், மருத்துவர் சாந்தியும் இந்த அறப்போராட்டத்தை வழிநடத்தினர்.
மிகக் குறைவான ஊதியம் தரும் இந்தப் பணி வேண்டாம் என குடும்பத்தினரும், உறவுகளும் இந்தப் பணியாளர்களிடம் எடுத்துச் சொல்லியும், மகப்பேறு என்பது மகத்தான சேவைப் பணி என்று வேலையை விடாமலிருக்கிறார்கள் இந்தத் தாய்மார்கள். ஒரு பெண்ணின் மகப்பேறின் போது பத்து மாத கால இரத்தப் போக்கும் வெளியேறும். அவ்வளவு இரத்தத்தையும் தூய்மைப்படுத்துபவர்களுக்கு, 1500 அளவிலான ஊதியமே போதும் என்று நினைக்கும் அரசினை, பெண்களின் வலிகளைப் புரிந்து கொள்ள முடியாத ஆணாதிக்க அரசாகத் தான் பார்க்க முடியும். இப்படிப்பட்டவர்களை சுரண்டுவது மனிதத் தன்மையற்ற செயலாகத் தான் நினைக்க முடியும்.
திராவிட மாடலால் செம்மைப்படுத்தப்பட்டு வளர்ந்த தமிழ்நாட்டின் வெற்றிகரமான மருத்துவக் கட்டமைப்பின் அடிநிலைப் பணியாளர்களாகத் தொண்டு செய்து கர்ப்பிணிப் பெண்களையும், பிறந்த குழந்தைகளையும் காத்தவர்கள் இந்தத் தாய்மார்கள். தாய்-சேய் நலத்தைக் காத்து மகப்பேறு கால மரணம் உள்ளிட்ட சிக்கல்களையும் கையாண்டு, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் இவர்களை தமிழ்நாடு அரசு இதற்கு மேலும் உதாசீனப்படுத்தக் கூடாது. இது வரை இவர்களை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் மனித நேயமற்ற செயலை புறந்தள்ளி பட்டியலின- பிற்படுத்தப்பட்ட பெண்களின் இந்த தொண்டிற்கு உரிய ஊதியமும், 8 மணி நேர வேலையும் உறுதி செய்ய வேண்டும்.
“நாங்கள் பிரசவம் பார்த்த குழந்தைகள் பெரியவர்களாகி, அவர்களுக்கும் பிரசவம் பார்த்து விட்டோம். ஆனால் எங்களின் மோசமான கூலி நிலை மாறவில்லை” என்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கண் கலங்கிப் பேசிய பெண்களின் வலிகளைப் புரிந்து கொண்டு, இவ்வளவு கால தாமதங்கள் கடந்தாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தர ஜனநாயக சக்திகள் உறுதியேற்போம்.