ஆண் பெண் குடும்ப உறவுகள் குறித்து பெரியார் கொச்சையாக எழுதியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமீபத்தில் கூறினார். சீமானின் சுயநல ஆதாயத்திற்காக, பெரியார் மீது கூறப்பட்ட இந்த அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து பெரியாரியவாதிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரையும் கொதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
“உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களோடு உடலுறவு வைத்துக் கொண்டு சந்தோசமாக இரு என்று சொன்னது பெண்ணுரிமையா?”- என சீமான், தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ளதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வார்த்தைகள் இவை. பெரியார் எழுதிய குடியரசு நாளேட்டிலோ, விடுதலை இதழிலோ இது போன்ற வரிகள் எதிலுமில்லை என்று ஆதாரத்துடன் பலரும் மறுத்த போது, பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்கினால் ஆதாரம் தருகிறேன் என மழுப்பலாகப் பேசினார்.
பெரியார் எழுத்துக்களில் எங்குமில்லாத வார்த்தைகளைக் கொண்டு அவர் மேல் களங்கம் சுமத்தும் உள்நோக்கத்துடன் பேசிய சீமான், பெரியாரை மட்டுமல்ல, பெண்களையும் மேடைதோறும் கொச்சைப்படுத்திப் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர். பெண் உடல் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளைக் கொண்டு பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர். பெண்களுக்கு சமபங்கு தருவதாக மேம்போக்காக நடித்து விட்டு, பொதுவெளியில் அருவருக்கத்தக்க வகையில் ‘சிங்களப் பெண்களை கற்பழிப்பேன், மானத் தமிழச்சி மார்பில் பால் குடித்தவன், நீ ஒரு அப்பனுக்கும் ஒரு ஆத்தாளுக்கும் பிறந்தவனாக இருந்தால், இரண்டு ஆண்களுக்கு நடுவில் ஒரு பெண்(ஜெயலலிதா) படுத்து இருக்கிறார், வெள்ளைக்கார ஃபிகர் (பெண்)களோடு ஜாலியாக இருக்கும் நித்யானந்தா, பிசிறு (நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள்) எனத் தொடர்ந்து பெண்களைக் குறித்து மட்டமாகப் பேசுவதை தனது உரையின் ஒரு வழிமுறையாகவே கைக்கொண்டிருக்கிறார். ஆணாதிக்கம் மேலோங்கும் உணர்ச்சிவயமான வசனங்களைப் பேசி தனது கட்சியின் இளைஞர்களை அருவருப்பான பாதையில் வழிநடத்தும் பேர்வழியாகவே சீமான் நடந்து கொண்டிருக்கிறார்.
பெரியார் எழுதாததையும், பேசாததையும் அவர் கூறியதாகப் பொய்யுரைத்த சீமானுக்கு எதிர்ப்பு வலுப்பட்டதும், சீமானின் நாம் தமிழர் கட்சியினர் பெரியாரின் உறவு முறை என்னும் ஒரு கட்டுரையை கொண்டு வந்து ஆதாரமாகத் தந்தனர். அந்தக் கட்டுரையில் பெரியார் இந்த உறவு குறித்து மறைமுகமாக ஆதரவு அளித்துப் பேசியதாகப் பரப்புகின்றனர். ஆனால், அந்த கட்டுரையில் பெரியார் உலக அளவில் இருந்த உறவு முறைகளைப் பற்றி பேசுகிறாரே ஒழிய, அதை ஆதரித்து நிற்கவில்லை என்பதை, தமிழை சரியாகக் கற்று உணர்ந்தவராக இருந்தாலே அறிந்து கொள்ளலாம். ஆனால் ஆதாய நோக்கம் கொண்டவர்கள் அதனைத் திரிப்பதை அவரின் காலத்திலிருந்தே செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த கட்டுரை குறித்தான விளக்கம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பெரியார், ‘உறவு முறை’ என்ற தலைப்பில் எழுதிய அந்தக் கட்டுரையின் சுருக்கம்:
“உலகில் ஒரே விதமான உறவு முறைகள் என்பது இருந்ததில்லை. தேசம், மதம், சாதி, பழக்க வழக்கம் போன்ற பலவகையான மார்க்கங்களைப் பின்பற்றியே உறவுகள் இருந்திருக்கின்றன. ஒரு சமூகத்தின் அத்தை, மாமன் மகனை, மகளை திருமணம் செய்வதாகவும், இசுலாமிய சமூகத்தில் சித்தப்பா, பெரியப்பா மகன், மகளை திருமணம் செய்யும் முறையாக எடுத்துக் கொள்வதையும், இந்த இரத்தபந்த முறைப்படி அல்லாமல் குலம், கோத்திரம் வழிப்படி சில சமூகங்கள் திருமண முறையை வகுத்துக் கொள்வதையும் எடுத்துக் கூறுகிறார். சயாம் (பர்மா) போன்ற தேசங்களில் சில அரசக் குடும்பங்களில் சொந்த தங்கையையே திருமணம் செய்து கொள்ளும் முறை இருந்ததையும், ஒரு காலத்தில் ஆரியர்களிடம் சொந்த சகோதர, சகோதரிகளையே திருமணம் செய்து கொள்ளும் முறை இருந்ததைப் பின்பற்றியே சயாம் அரச குடும்பமும் பின்பற்றியதையும், பவுத்த இராமாயணத்தில் இராமனின் தங்கையாக இருக்கும் சீதையை இராமனே மணமுடிக்கும் படி எழுதப்பட்டிருக்கிறது எனவும் விளக்குகிறார். கேரளா, திபெத் போன்ற பகுதிகளில் ஒரு பெண் பல ஆண்களுக்கு மனைவியாக இருக்கும் வழக்கம் இருந்தது. சில சாதிகளில் பெண்கள், கணவனின் தந்தை முதற்கொண்டு அவனின் சகோதரன்களுக்கும் மனைவியாக இருந்திருக்கிறார்கள்.
இவ்வாறு திருமண முறைகள் மட்டுமல்ல, சொத்து முறைகளில் நாயர், தேவதாசி சாதிகளில் குடும்ப சொத்து பெண்களுக்கே உரிமையாக இருந்திருக்கிறது. இசுலாம் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்து பங்களிப்பதில் வித்தியாசம் இருக்கிறது. சில தேசங்களில் பெண்களே சம்பாதித்து ஆண்களைக் காப்பாற்றுகிறார்கள் எனப் பல்வேறு தேசங்களில் சொத்து முறையில் பின்பற்றும் முறைகளைக் குறிப்பிடுகிறார்.
விபச்சாரம் என்று சொல்லப்படும் நிலையிலும், சில இடங்களில் ஆண்களும், சில இடங்களில் பெண்களும் விபச்சாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில இடங்களில் ஆண்கள் விபச்சாரம் செய்வதை குற்றமாக பார்ப்பதில்லை. சில இடங்களில் பெண்கள் விபச்சாரம் செய்வதை குற்றமாகப் பார்க்கிறார்கள். சில இடங்களில் இதை குறித்து பேச்சே இல்லை. சில இடங்களில் சில வகுப்பினர் திருமணமே செய்வதில்லை என இந்த முறையிலும் பல இடங்களிலும் பல்வேறு நிலைப்பாடுகள் இருப்பதை குறிப்பிடுகிறார்.
அதுபோல துக்க நிகழ்வுகளையும் வரிசைப்படுத்துகிறார். சிலர் கணவன் இறந்தால் அதிகமாக அழுகிறார்கள். சிலர் மனைவி இறந்தால் அதிகமாக அழுகிறார்கள். சிலர் மனைவி இறந்தால் அவ்வளவாக அழுவதில்லை. சிலர் கணவன் இறந்தால் அதிகமாக அழுவதில்லை. சிலர் ஆண் குழந்தை இறந்தால் அதிகமாக அழுகிறார்கள். சிலர் பெண் குழந்தை இறந்தால் அவ்வளவாக துக்கப்படுவதில்லை. துக்கம் என்பதும் இறந்தவர்களின் வயது, நிலைமை, அவர்களால் தமக்கு ஏற்பட்ட பலன் ஆகியவற்றைப் பொறுத்தே மாறுபடுகிறது என்கிறார்.
ஆகவே திருமண முறைகள், சொத்து முறைகள், விபச்சார நிலைகள், துக்க நிலைகள் என இவை அனைத்திலும் அகில உலக தேச அளவில் பொதுவான ஒரு முறைகள் இல்லை. அவை தேசம், மதம், சாதி, பழக்கம் பொறுத்தே இருந்திருக்கின்றன. புராணங்களைப் பார்த்தால் கூட, தான் பெற்ற மகளையும், தன்னை ஈன்ற தாயையும் கூட புணர்ந்த கதைகள் இருக்கின்றன. குருவின் மனைவி, சகோதரனின் மனைவியுடன் கலவி, பிள்ளை பேற்றிற்காக வேறொருவனுடன் கலவி, பிராமணர்களுடன் கலவி, கடவுளர்கள் பக்தைகளிடம் நடத்தும் கலவி என இன்னது தப்பு, இன்னது சரி என்ற உறவு முறைகள் இல்லாமலே இருந்து வந்திருக்கின்றன.
இருப்பினும் தேக தத்துவத்திற்கு ஏற்றபடி சில முறைகள் கற்பிக்கப்பட்டு இருப்பதை குற்றம் என்று சொல்ல இதுவரை யாரும் முன் வரவில்லை. ஆனால் பகுத்தறிவு உள்ள மனிதன் இதனை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லலாம். ஆகவே இவை அனைத்திலும் உலகம் முழுமைக்கும் பொது முறை என்று ஒன்று இல்லாத பொழுது, இந்த உறவு முறையை வைத்துக் கொண்டு பாவ புண்ணியம், நன்மை தீமை என்பதை எவ்வாறு நிர்ணயித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புவதற்காகவே இந்த உறவு முறை பற்றி இவ்வளவு ஆய்வுகளையும், விளக்கங்களையும் கூறுகிறார் பெரியார்.
இவ்வாறு உறவு முறைகள் என்பது வேறு வேறு இடங்களில் வேறு வேறாக இருக்கும்பொழுது, ‘மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?’ என்ற கேள்விக்கு, சமயோசிதம் என்பதைத் தவிர வேறு வழிகாட்டி இருப்பதாய் தோன்றவில்லை என்பதற்காகவே இந்த உறவுமுறை பற்றி இவ்வளவு விளக்கங்களை கூற வேண்டியது ஆயிற்று என்று முடிக்கிறார்.
இந்த சமயோசிதம் என்னும் ஒரு வார்த்தையைக் கொண்டே, சீமானும், அவரின் அடிவருடிகளும் அவர்களாகவே கற்பனை செய்து கொண்ட திணிப்பைக் கூறுகின்றனர். பெரியார் இந்த உறவு முறைகளை தவறில்லை எனக் கூறுவதற்கு பெயரே சமயோசிதம் என்பதாக பிதற்றுகின்றனர். ஆனால் பெரியார் தேச, மத, சாதி அளவுகளில் அவரவர் அந்தந்த பகுதிகளில் கற்பிதம் செய்து வைத்த முறைகளன்றி பகுத்தறிவுப்படி எவ்விதம் நடந்து கொள்வது தகுந்ததோ அவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே சமயோசிதம் எனக் கூறுவதை இந்த கட்டுரையை முறையாகப் படித்தவர்கள் புரிந்து கொள்ளலாம்.
பெரியார், தனிமனித ஒழுக்கம் குறித்து பேசியவையும், எழுதியவையுமே சமயோசிதம் என்னும் சொல்லுக்கு சான்றாக இருப்பதை அறியலாம்.
பெரியார், ஒழுக்கம் பற்றிய வரையறையைக் குறித்து சொல்லும் போது, ‘ஒழுக்கம் என்பது உங்களிடம் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அது போல நீங்கள் அவர்களிடம நடந்து கொள்வதே ஒழுக்கம்’ என்று குறிப்பிட்டவர். மேலும் பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்றும் சொன்னவர். இவ்வாறு ஒழுக்கத்தைப் பற்றிக் கூறியவர், உறவுமுறைகளில் முறையற்றதைப் பின்பற்றச் சொன்னவர் என்று வன்மத்துடன் கூறுகிறார்கள் இந்தப் பொய்யர்கள்.
நவம்பர் 24, 1964-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் பெரியார் ஆற்றிய உரையில், “நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்ப வில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?
ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்கு பேர்தானே?
ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து” எனப் பேசுகிறார்.
‘மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்ற கேள்விக்கு, பாவ புண்ணியம் என்பது உலக அளவில் பொது முறைகளே இல்லாத சமூகங்கள் கற்பிதமாக வரையறுத்துக் கொண்டவை என்று உறவு முறை என்ற கட்டுரையிலும், ஒழுக்கம் பற்றிக் கூறும் போது, ‘பக்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒழுக்கம் இல்லையென்றால் எல்லாமே பாழ்’ என்று உரக்கக் கூறிய பெரியாரை நோக்கித்தான், இந்த அடிவருடிகள் இப்படியான அவதூறுகளை சுமத்துகிறார்கள்.
பெரியாரின் உறவு முறை என்கிற இந்த கட்டுரை மானுடவியல் ஆய்வாளர்களின் விரிவான தொகுப்புகளில் உள்ளவைகளின் சாராம்சமாகவே இருந்தது. இக்கட்டுரைப்படியே, அகமண முறை, புறமண முறை, பலதார மணம், பல கணவர் மணம், குழு மணம், சகோதர மணம் என்பவையெல்லாம் குறித்து கம்யூனிசத்தின் பேராசான் ஏங்கல்சும் ‘தன்னுடைய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற புத்தகத்திலும் தெளிவுபடுத்துகிறார்.
1909-ம் ஆண்டு, சென்னை அருங்காட்சிப் பொறுப்பாளராக பணிபுரிந்த எட்கர் தர்ஸ்டன் அவர்கள் எழுதிய ‘தென்னிந்தியக் குலங்களும், குடிகளும்’ என்கிற புத்தகத்தில் ஒவ்வொரு குலங்களுக்கும் உள்ளிருந்த ஒழுங்கற்ற மண முறைகளைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் குறிப்பாக நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேரளப் பகுதிகளில் கற்பனை செய்து பார்க்க முடியாத நெறிமுறையற்ற உறவுமுறை ஆண், பெண் உறவுகளிடையே இருந்ததாக எழுதுகிறார். உலக புத்தகங்களை ஆராய்ந்து, மானுடவியல் நூல்களைக் கற்றுணர்ந்து எழுதிய பெரியாரின் சுருக்கமான ஆய்வுக் கட்டுரையைத் தான் தங்களுக்கேற்ற வகையில் புரிந்து கொண்ட அறிவிலிகளாக சீமானும், அவரின் கட்சியினரும் உளறிக் கொண்டிருக்கின்றனர்.
பெரியாரைக் களங்கப்படுத்த காலம் முழுதும் பல அவதூறுகளைக் கையிலெடுத்தது இந்தியப் பார்ப்பனியம். இதனை இங்கு மேற்கொண்ட இந்துத்துவ சக்திகளான ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் தோற்றுப் போயினர். பல அவதூறுகளுக்கும் பெரியாரியவாதிகள் பதிலடி கொடுத்து விட்டனர். அனைத்திலும் தோற்றுப் போன இந்தியப் பார்ப்பனியம் சீமான் போன்ற கைக்கூலிகளை நியமித்து, அவர்கள் மூலமாக பெரியாரை களங்கப்படுத்த முனையும் முயற்சியே இப்போதும் நடக்கிறது.
தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் நடத்திய ‘நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரை வாங்கிக் கொடுத்தவர் பார்ப்பனரான ஆடிட்டர் குருமூர்த்தி. சீமான் பெரியார் மீது களங்கம் சுமத்தியவுடன் சீமானைப் பாராட்டும் எச். ராசா, ரங்கராஜ் பாண்டே போன்ற பீகாரிப் பார்ப்பனர்கள், இதற்கு ஆதாரம் உண்டு என்று திரும்பத் திரும்ப இதே அவதூறுகளைக் கொண்டு வரும் அண்ணாமலை, தமிழிசை போன்றார் சீமானைப் பாராட்டும் முறைகளில் இருந்தே, இவர் இந்தியப் பார்ப்பனியத்தின் கைக்கூலி என்பதற்கு சான்றாக நிரூபணமாகிறது.
பெண்களை சுயமரியாதை கொண்ட மனிதப் பிறவியாகவே கருதாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்த சமூகத்தில், தனது பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் பெண் விடுதலையை சாத்தியப்படுத்தியவர் தந்தை பெரியார். பெண்களை மூடத்தனங்களால் முடக்கி வைத்திருந்த சமூகத்தை கேள்விக் கணைகளால் தாக்கிக் கொண்டே இருந்த பெரியாரை, குடும்பக் கட்டமைப்பின் பிற்போக்குத் தனங்களை தோலுரித்து பெண்ணுரிமைக்கு தோளாக நின்ற பெரியாரை, பெண்களின் முன்னேற்றம் குறித்த வழிகளையெல்லாம் பல கோணங்களிலும் ஆய்வு செய்து விழிப்பூட்டிய பெரியாரை, ஆணாதிக்கக் கட்டமைப்பை அம்பலப்படுத்தி பெண்ணுரிமைக்கு முன்களப் போராளியாக நின்ற பெரியாரை, பெண்களை அடிமைப்படுத்திய புராணம், இதிகாசம், மனு சாஸ்திரங்களைக் கொளுத்தியப் பெரியாரை, மனித ஒழுக்க முறைகளுக்கு எதிரானவர் என்று கற்பிக்கப் படாத பாடுபடும் அற்பர்களின் முயற்சி தமிழ்நாட்டில் என்றுமே வெல்லாது.
பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவதூறுகளைப் பரப்பும் சீமானை, தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் நேருக்கு நேரான விவாதத்தில் சந்திக்கத் தயார் என பகிரங்கமாக அறிவித்தும் மௌனமாக கடந்து செல்வதே சீமானின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.
இனியும் சீமான் பெரியாரை இழிவுபடுத்துவதை பைத்தியக்காரனின் உளறல் என கடந்து சென்ற பெரியாரியவாதிகள், அதையே தொடர்ச்சியாக செய்யும் சீமானின் எல்லை மீறிய பேச்சை இனியும் பொறுப்பதில்லை என முடிவெடுத்து, பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் சனவரி 22, 2025 அன்று சீமானின் இல்லத்தை முற்றுகையிட முடிவெடுத்திருக்கிறது.
கட்சி, அமைப்பு என பாராமல் பெரியாரிய தொண்டர்களாய் திரண்டு சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நம் கடமையெனக் கொண்டு தமிழர்கள் திரள்வோம். தமிழ்நாடு என்றுமே பெரியார் மண் என்பதை உறுதிப்படுத்துவோம்.