குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு கோத்ரா சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் முக்கியக் காரணமாகும். அந்த சம்பவத்தை முன்வைத்து வெளிவந்திருப்பதே சபர்மதி ரிப்போர்ட் என்னும் இந்தித் திரைப்படம். பாஜகவின் பிரச்சாரத் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக வெளிவந்திருக்கிறது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இத்திரைப்படத்தை நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் அமர்ந்து மோடி, அமித்சா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் பார்த்துள்ளனர். இப்படம் குறித்து மோடி தனது X (எக்ஸ்) தளத்தில் ‘சமூகத்தில் பகைமையை உருவாக்க செய்த நிகழ்வின் உண்மையை அறிய மக்களுக்கு முழு உரிமை உள்ளது….‘ எனப் பதிவிட்டுள்ளார். படக்குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தான திரைப்படங்கள் எடுப்பதற்கான படைப்பு சுதந்திரம் என்பதே இங்கு இல்லாத நிலையில், பாஜக-வின் சார்புநிலை பிரச்சாரப் படங்கள் மட்டும் வெளிவந்து கொண்டே இருப்பது மக்களின் அமைதியைக் குலைப்பதற்கான முயற்சியே என ஜனநாயக கட்சி, அமைப்புகள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். குஜராத் இனப்படுகொலை குறித்தான மக்களின் கருத்து கேட்பு வகையிலான ஆவணப்படம் ஒன்றை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதுவும் மோடி அரசினால் இந்தியா முழுக்க தடை விதிக்கப்பட்டது.
இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டம் குசராத்தில் இசுலாமியர்களை வேட்டையாடி 2000-க்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களைக் கொன்றது. பலரை உயிரோடு எரித்தது. நூற்றுக்கணக்கான பெண்களை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தது. குசராத்தில் குல்பர்க் என்றும் இடத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான இசான் ஜாப்ரி மற்றும் அவரிடம் அடைக்கலம் புகுந்த 68 பேரை உயிரோடு எரித்துக் கொன்றது. பல்கீஸ் பானு குடும்பத்தையே கொன்றதுடன், 2 வயது குழந்தையை கல்லில் அடித்துக் கொன்றது என எண்ணற்ற வெறியை அரங்கேற்றியதற்கு மூல காரணமாக சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த 59 கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டதே காரணமாக சொல்லப்பட்டது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தவர் மோடி. ‘கலவரங்களை கண்டு கொள்ள வேண்டாம் என காவல் உயரதிகாரதிகளுக்கு கட்டளையிட்டார் ‘எனக் கூறிய உயரதிகாரியாரி சஞ்சய்பட் 2015-ல் பதவி நீக்கப்பட்டார். பல வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட அவர் சமீபத்தில்தான் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். ஆனால் குஜராத் இனப்படுகொலையாளர்கள் அனைவரும் வெளியில் முதன்மையான பதவிகளுடன் சுகமாக வாழ்கின்றனர்
இந்த இனப்படுகொலைக்கு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே காரணமாக சங்பரிவார அமைப்புகள் கொதித்தன. மோடியும் இந்த இனப்படுகொலை எதிர்வினை என கடந்து சென்றார். இப்படுகொலைக்கு இந்துத்துவவாதிகள் செய்யும் பிரச்சாரங்களே அதிகமாக பரப்பப்பட்ட நிலையில், நீதிபதிகளான கிருஷ்ண ஐயர், பி.பி. சாவந்த், ஹாஸ்பட் சுரேஷ் ஆகியோரால் அமைக்கப்பட்ட Concerned Citizens Tribunal எனும் தீர்ப்பாய விசாரணை குழுவினர் களத்திற்கு சென்று, மக்களை சந்தித்து, பேசி ‘குஜராத் இனப்படுகொலை மனித இனத்திற்கு எதிரான பெருங்குற்றம்’ எனும் தலைப்பில் அறிக்கைகள் அளித்தனர்.
அந்த அறிக்கையில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் அயோத்தியில் இருந்து அகமதாபாத்திற்கு திரும்பும் போது பெண்கள், குழந்தைகள் என பாராது அனைவரும் கையில் திருசூலங்களை ஏந்தியபடி இருந்தன. முஸ்லிம்களே பாகிஸ்தானுக்கு செல், இந்தியாவிலிருந்து வெளியேறு, காஷ்மீரைக் கேட்டால் வெட்டுவோம் எனப் பலவாறு கூச்சலிட்டு சென்றுள்ளனர். இவையெல்லாம் இரயில்வே காவல் துறை ஆணையாளரான பி.பி. அக்ஜா அவர்கள் மார்ச் 29, 2002 -ல் Times of india பத்திரிக்கைக்கு அளித்த பேட்டிகள் என தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 27, 2002 அன்று காலை 7.30 மணிக்கு கோத்ரா ரயில் நிலையத்திற்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்திருக்கிறது. ரயில் சுமார் 1100 பேர் பயணிக்கக் கூடிய அளவு உடையது. ஆனால் 2000 பயணிகள் அதில் இருந்துள்ளனர். அதில் 1700 பேர் கரசேவகர்கள். அதில் சிலர் நடைபாதை முஸ்லிம் வியாபாரிகளை வம்பிழுத்து, அவர்களின் தாடியை பிடித்து இழுத்துள்ளனர். இளைஞன் ஒருவனை ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளனர். முஸ்லிம் பெண்களின் மீது பாலியல் சீண்டல்களை செய்துள்ளனர். இப்படியான அத்துமீறல்களில் கரசேவகர்கள் ஈடுபட்டதாக அந்த தீர்ப்பாயம் விரிவாக பதிவு செய்துள்ளது.
ரயில் புறப்பட்டதும் அபாய சங்கிலியை பிடித்து யாரோ இழுத்துள்ளனர். பிளாட்பாரத்தில் உள்ள கரசேகவர்கள் ஏறாமலிருந்ததால் சங்கிலியை இழுத்திருப்பதாக சொல்லப்பட்டது. ரயில் கிளம்பிய பின்னர், சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றதும் மறுபடியும் ரயில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. சங்கிலியை யாராவது இழுத்து ரயில் நின்றதா அல்லது ஏதேனும் கோளாறா என்பது குறித்தான தெளிவுகள் இல்லை. ஆனால் ரயில் ஓட்டுனர் வெளியிலிருந்து கற்கள் எறியப்பட்டதை மட்டுமே பார்த்ததாக கூறியிருக்கிறார். அதற்கு பின்னர் S-6 பெட்டி முழுதும் தீப்பற்றி எரிந்திருக்கிறது. இந்த இடைவெளிக்குள் தீவிபத்து, அதுவும் அந்தப் பெட்டியில் மட்டும் எப்படி ஏற்பட்டது என்பதுதான் கேள்வியாக எழுந்தது.
அன்றைய குஜராத் மாநில மோடி அரசின் அறிக்கைப்படி, கோத்ரா ரயில் நிலையம் அருகே வசித்த முஸ்லிம்கள் சுமார் 2000 பேர் தீப்பந்தங்களுடன் திரண்டு வந்து ரயில் மீது வீசியதால் தீப்பிடித்து எரிந்ததாக கூறியது. ரயிலை எரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2000 முஸ்லிம்கள் திரண்டிருந்தால் ரயிலில் இருந்த S-6 பெட்டியை மட்டுமா எரித்திருக்க முடியும் என்கிற கேள்வியே வலுவாக எழுந்தது. மேலும் ரயில் நின்ற இடத்தின் இருபுறமும் 2000 பேர் கூடுவதற்கான சாத்தியமே இல்லாத குறுகலான பகுதியாக இருந்திருக்கிறது.
அரசு சொல்வது போல, 2000 முஸ்லீம்கள் என்றால் அந்தப் பெட்டியை விட நீளமாக நிற்கும் வாய்ப்பு இருக்கும் போது அந்தப் பெட்டி மட்டுமல்ல, எல்லாப் பெட்டியும் எரித்திருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது. மேலும் S-6 பெட்டியின் கதவு, ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருந்திருக்கின்றன. வெளியில் இருந்து உள்ளிருக்கும் எவரையும் அடையாளம் காண முடிந்திருக்காது. உள்ளே நடந்தவை யாவும் வெளியில் உள்ளவர்களுக் தெரிவதற்கு வாய்ப்பும் இல்லை. கதவுகளுக்கு அருகில் பயணிகள் உடைமை வைத்திருந்ததால் யாரும் நுழையவோ, வெளியேறவோ முடியாத நிலையே இருந்துள்ளது.
அந்த இடத்தை தீர்ப்பாயக் குழுவினர் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில், சபர்மதி ரயில் நின்றிருந்த இடம் தரைமட்டத்திலிருந்து 12-15 அடியாக இருக்கலாம் என்றும். ரயிலின் உயரத்தின் படி தீப்பந்தம் தொண்டு வீசப்பட்டிருந்தால் பெட்டியின் வெளிப்புறம் எரிந்ததற்கான அடையாளங்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் அப்படியான எந்த அடையாளங்களும் இல்லை எனக் கூறியுள்ளனர்.
தடய அறிவியல் ஆய்வாளரும் இதனையே உறுதிப்படுத்தினார். தடயவியல் நிபுணரான எம்.எஸ். தஹியா சமர்ப்பித்த அறிக்கையிலும், வெளியிலிருந்து தீப்பந்தம் வீசப்பட்டிருக்குமானால் பெட்டியின் கீழும், வெளிப்புறத்திலும் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறான சேதங்கள் இல்லை. பெட்டி எரிந்த அளவைக் கொண்டு பார்க்கும் போது சுமார் 60 லிட்டர் எரிபொருள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் அதை எடுத்துச் சென்று ஊற்றியதற்கான ஆதாரமும் இல்லை. கையில் திரிசூலம் முதலான ஆயுதங்கள் வைத்திருக்கும் கரசேவகர்களின் பெட்டியில், 60 லிட்டர் பெட்ரோல் கொள்கலனை எடுத்துக் கொண்டு செல்வது சாத்தியமில்லை. மேலும் தீப்பற்றியிருக்கும் விதத்தை வைத்துப் பார்த்தால் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததே உறுதியானது. எனவே தீ உள்ளிருந்தே பற்றியிருக்கிறது என்பதே தெளிவானது என இந்த குடிமக்கள் தீர்ப்பாயம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து ரயில்வே அமைச்சரான லல்லு பிரசாத் அவர்களால் அமைப்பட்ட நீதிபதி பானர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் இதையேதான் விசாரித்து அறிக்கை கொடுத்தது.
சபர்மதி ரயில் தீப்பற்றி எரிந்தபிப்ரவரி 27-ந்தேதி மாலை அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய், விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார். மாவட்ட ஆட்சியர் இரவு வரை, இது முஸ்லிம்களால் திட்டமிடப்பட்டது இல்லை, இது ஒரு விபத்து என்றே தூர்தர்ஷன் டி.வியில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அன்று இரவு 7.30 மணி அளவில் குஜராத் முதல்வராக இருந்த மோடி, இதில் ஐஎஸ்ஐ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதன் பின்னர் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசும் இதையே பேசினர். வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டினர். இந்த பேச்சுகள் குஜராத் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னர் பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஹெச்பி போன்ற சங்பரிவார அமைப்புகள் பொது அடைப்பு (பந்த்) அறிவித்து, வன்முறைகளைக் கூடித் திட்டமிட்டு அரங்கேறியதே இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலை.
குஜராத்தின் வரலாற்றில் 2002-ல் நடந்த இனப்படுகொலைக்கு முன்பே தொடர்ச்சியான கலவரங்களும், படுகொலைகளும் நடந்தேறியுள்ளன. 1906-ல் வதோரா கலவரம் 1961 – 71 – வரை 16 மாவட்டங்களில் கலவரம், இதில் 1100 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். 1985-ல் பிற்பத்தப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் அரசு இட ஒதுக்கீட்டை அதிகரித்து கொடுத்தது. இதற்கு உயர்சாதியினரிடையே பெரும் எதிர்ப்பு நீடித்தது. இந்த சாதிய இட ஒதுக்கீடு மோதலை தவிர்ப்பதற்காக, திட்டமிட்டு இஸ்லாமியர்கள் மீது வகுப்புக் கலவரங்கள் தூண்டப்பட்டன. 1987-91-க்கு இடையில் 106 வகுப்புக்கலவரங்கள் நடந்தன.
1990-களில் நடந்த அத்வானியின் ரத யாத்திரை ரத்தக் களறியை குஜராத்திலும் நிகழ்த்தியது. இந்தக் காலகட்டங்களில் தான் அதிகப்படியான இந்துத்துவ பிரச்சாரங்கள் நிகழ்த்தப்பட்டன. பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து, முஸ்லிம்கள் தேச விரோதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் எனப் பல்வேறு வகையிலான பிரச்சாரங்களை, இன்று தமிழ்நாட்டில் எவ்வாறு வன்முறைக்கு அடித்தளம் இடுகிறார்களோ அதைப் போன்ற பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் சுலபமாக 1998-ல் பாஜக குஜராத்தின் ஆட்சியை பிடித்தது. மோடி முதல்வரானார். இந்துத்துவ அடிப்படைவாதிகளாக RSS, VHP, பஜ்ரங்கள் போன்ற சங்பரிவாரங்களின் வளர்ச்சி ஏகபோகமாக வளர்ந்தது.
1998-99 களில் பழங்குடி மக்களுக்கான பள்ளிகள், மருத்துவமனைகள் கொண்டிருந்த கிறிஸ்துவ நிறுவனங்களில் இருந்து இந்து-கிறிஸ்துவ முகாம்களாக பிரித்தனர். 2000-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தல், நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளில் வலுவுடன் வென்றது. 1999-ல் நடந்த கார்கில் போரினால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என பொய் பிரச்சாரத்தினைக் கிளப்பி அகமதாபாத்தில் வன்முறை செய்தன இந்துத்துவ அமைப்புகள். இந்த பின்புலத்தை கணக்கில் கொண்டு பார்க்கும் போதே குஜராத் இனப்படுகொலை சூத்திரதாரிகளின் வலைப்பின்னலும், 2003 தேர்தலுக்கு முன்பான கோத்ரா ரயில் எரிப்பு சதிக்கான உண்மையும் விளங்கும்.
இந்த சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை இந்திய ஒன்றிய அமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து பார்த்ததன் வாயிலாக, உண்மையான சம்பவம் தாமதம் ஆயினும் வெளி வரும் என்று கூறியதன் மூலமாக தங்களின் தேர்தல்களுக்கு வலுவான அடித்தளமாக இப்படிப்பட்ட திரைப்படங்களைத் தூண்டுகிறார்கள் என்பதே தெளிவாக அறிய முடிகிறது. இப்படத்தின் கதையைப் பொறுத்தவரை ‘சபர்மதி ரயில் எரிப்பு பற்றி விசாரணை செய்து நேர்மையான ஊடகவியலாளர்கள் உண்மையான செய்திகளை கொண்டு வந்து தந்ததால் பத்திரிக்கை நிறுவனத்தினால் வெளியேற்றப்படுகிறார்கள், அவர்கள் ஒன்று சேர்ந்து துப்பறிகிறார்கள்’ என்பதுதான். ஆனால் 2002-ல் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடக்கிறது. ஊடகம் முதற்கொண்ட அதிகார மட்டங்கள் அனைத்தும் இவர்களின் வளையத்தில் செயல்படுகிறது. அந்த சமயத்தில் திரைப்படத்தில் காட்டியதைப் போல இந்தக் கதையமைப்பைப் போல நடந்திருக்க சாத்தியமா? இது தலைகீழான இருட்டடிப்பு திரைப்படம்.
குஜராத் இனப்படுகொலை போன்ற கொடூர வன்மத்தையும், கோத்ரா சபர்மதி ரயில் எரிப்பைப் போன்ற சதியின் பின்னணியையும் மறைக்க இந்த திரைப்படம் பெரும்பான்மை இந்துக்களின் உணர்ச்சிகளைத் தூண்ட எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சூழ்ச்சிகள் அறியாத மக்களிடம் இஸ்லாமிய வெறுப்புணர்வைத் திணித்து, அதனை தங்கள் வாக்குகளின் முதலீடாக பயன்படுத்துவதற்கான பெரும் கருவியாக பிஜேபிக்கு கிடைத்திருப்பதே பாலிவுட் திரையுலகம்.
ஒரு திரைப்படம் எந்த நோக்கத்தில் எடுக்கப்படுகிறது என்பதை எடுத்துச் சொல்பவர்களின் விளக்கங்கள் வெகுமக்களிடம் சென்று சேரும் தளங்கள் இங்கு சொற்பமாகவே இருக்கிறது. ஒரு சம்பவத்தை அரசு, அதிகார மட்டங்கள், திரையுலகம் சொல்லும் கட்டுக் கதைகளின் ஊடாக நம்பத் துவங்குவது பேராபத்தின் அறிகுறி. வட நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சுலபமாக உருவாக்கப்படும் இந்த மனநோய் தமிழ்நாட்டையும் தாக்காதிருக்க வேண்டுமானால் ஜனநாயகப் பற்று கொண்ட அறிஞர்களின் ஆய்வுகள், நேர்மையான இடதுசாரி ஊடகவியலாளர்களின் கள ஆய்வுகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் அறிக்கைகள் என ஏராளமாக உண்மை செய்திகள் புத்தக வடிவில் இருக்கின்றன. அந்த வகையில் நீதியரசர்களாக இருந்த கிருஷ்ண ஐயர், பி.பி. சாவந்த் போன்றவர்களின் தலைமையில் அமைந்த ‘Concerned citizens Tribunal’ என்ற தீர்ப்பாய உறுப்பினர்களின் கள ஆய்வு செய்தி ‘குஜராத் இனப்படுகொலை 2002 – மனித இனத்திற்கு எதிரான பெருங்குற்றம்’ – புத்தகம் கிடைக்கிறது. இன்னும் ரானா அயூப் போன்ற நேர்மையான ஊடகவியலாளர்களின் புத்தகங்களும் கிடைக்கின்றன. இவர்களைப் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். பாஜக தொடுக்கும் உயிர் அச்சுறுத்தலை மீறி களத்தில் நிற்பவர்கள். அவர்களின் புத்தகங்களை வாசிப்போம். அரசு மட்டங்கள் விடுக்கும் செய்திகளிலிருந்து, இவற்றையும் இணைத்து பகுப்பாய்வு செய்து உண்மையை அறிவோம். வலதுசாரிகளின், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாலிவுட் திரையுலகினால், 90% உயர்சாதிப் பார்ப்பனர்களே அடைத்து கொண்டிருக்கும் ஊடகங்களால் கட்டமைக்கப்படும் போலி செய்திகளை நம்பும் அறியாமையிலிருந்து விடுபடுவோம். பாஜக-வின் திரையுலக பிரச்சாரக் கட்டமைப்புகளால் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் இருந்து விடுபட, பாஜக, ஆர்.எஸ்.எஸ். பார்பனியம் திணிக்கும் இந்துத்துவ மதவாத பேராபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ள புத்தகங்களே கருவிகள்.
பாஜகவின் (காசுமீர் 370 பிரிவு) ஆதரவான திரைப்பட கட்டுரை வாசிக்க: