தீண்டாமைச் சுவரை அகற்ற பாடுபடுவோம் என மன உறுதியுடன் நிற்கும் சங்கரலிங்கபுரம் மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகாந்தி மற்றும் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனரான தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் ஆகியோர் விடுதலை சிறுத்தைகளின் பொறுப்பாளர் தோழர் முரசு தமிழப்பன் அழைத்து சென்று, அங்குள்ள மக்களின் போராட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கரலிங்கபுரத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரிய கிராம மக்களின் போராட்டத்தில் ஆகஸ்டு 13, 2024 அன்று மே 17 இயக்கமும் கலந்து கொண்டது. அவ்வூரின் கள நிலவரங்களை ஆய்வு செய்து வெளிப்படுத்தியது.
அம்மக்கள் தீண்டாமைச் சுவரை அகற்ற போராட்டமே ஒரே வழி என்ற நம்பிக்கையுடன் போராடுகின்றனர். அதனை ஆரம்பிக்கும் பொழுது, அவர்கள் முன்னெடுத்த முழக்கங்ளே அவர்களின் உறுதித் தன்மையை வெளிப்படுத்தியது .
புரட்சியாளர் அம்பேத்கருக்கு, தந்தை பெரியாருக்கு, அயோத்திதாச பண்டிதருக்கு, இரட்டைமலை சீனிவாசருக்கு, சாதி ஒழிப்பு போராளிகளுக்கு, சமூக நீதி போராளிகளுக்கு மற்றும் மொழிப் போர் ஈகியர்களுக்கு என அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தி போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டம் ”சங்கரலிங்கம் ஆதிதிராவிட மக்களின் நில உரிமை போராட்டம், மண்ணை காப்போம் மக்களை மீட்போம் -ஜெய் பீம்” என்ற உரிமை குரலோடு கூட்டத்தை தொடங்கினர்.
இந்த தீண்டாமை சுவர் குறித்து அங்கு வசிக்கும் சகாய மேரி கூறியது – “இந்த ஊரில் தான் நான் பிறந்து வளர்ந்தேன், எனக்கு ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். இவ்வளவு ஆண்டுகளாகியும் இதுவரை அவர்கள் இருக்கும் அந்தப் பகுதியின் பக்கம் போகக் கூடாது. இதற்கு முன்பு அங்கு சிறியதாகதான் சுவர் இருந்தது. இங்கு எந்த ஊரில் கடைகள் கிடையாது. மேலத் தெருவில் தான் கடை இருந்தது. கடைக்கு செல்ல அந்த பகுதியின் வழியாகத்தான் சென்று கொண்டிருந்தோம். சிறிதாக இருந்த சுவரை பெரிதாக்கினார்கள். அப்போது நாங்கள் கல்வியறிவு இல்லாத காரணத்தால் ஏன் என்ற கேள்வி கேட்கவில்லை. ஆனால் இன்று பிள்ளைகள் படிப்பினால் முன்னேறி இருக்கும் போது, கேள்வி கேட்கும் அறிவு வந்துவிட்டது.
இந்த சுவர் ஏன் கட்டினீர்கள் என்று கேட்டதற்கு, இது தீண்டாமை சுவர் என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் நீங்கள், உங்கள் பார்வை எங்கள் மேல் படக்கூடாது. அப்படி பட்டால் தவறானது ஏதாவது நடக்கும், நாங்களும் உங்கள் போல் ஆகிவிடுவோம் என்று சொன்னார்கள். 4-5 அடி வரை சுவர் கட்டி விட்டார்கள் . சீனியம்மாள் என்ற பெயரை சீனி, தங்கம்மாள் என்ற பெயரை தங்கம், சேசம்மாள் என்ற பெயரை சேசு என்றுமே அவர்கள் அழைப்பார்கள். ஏனென்றால் ’அம்மா’ என்பது அவர்கள் ’அம்மாவை’ குறிக்கிறதாம். தப்பித்தவறி அவர்கள் இவர்கள்(ஆதி திராவிடர்) ஊர் பக்கம் வந்தால் கூட முட்டி வரை புடவையை உயர்த்தியே நடப்பார்கள். வீட்டின் முன்பு வந்து தங்கம்மாள் என்ற முழு பெயரை குறிப்பிடாமல் தங்கம் என்றே இந்நிமிடம் வரை அழைப்பார்கள். அவ்வளவு மட்டமாக பார்ப்பார்கள்.
விழாக்களுக்கும், விளையாட்டு போட்டிகளுக்கும், உபயோகிக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை, ஒரு ஆள் ஆக்கிரமித்து, அதற்கு பட்டாவும் நீதிமன்றம் மூலம் வாங்கி, இன்று கம்பி வேலி போட்டுள்ளார். அதுமட்டுமல்ல, இங்கு உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் கூட படிக்க அனுமதி மறுத்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுடன் சேர்ந்து படிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு, தேவாலயத்தின் பாதிரியார் கட்டிக் குடுத்த பள்ளிக் கூடத்திலேயே படித்தோம். எங்கள் முகத்தில் விழிக்கக்கூடாது என்று அவர்கள் கட்டிய இந்த தீண்டாமை சுவரை முதலில் இடிக்க வேண்டும். பிறகு அந்த நிலத்தை மீட்க வேண்டும்” என்று தனது கருத்தை அழுத்தமாக வைக்கிறார்.
இன்னொரு பெண்மணி கூறுகையில், ‘’நான் இந்த ஊருக்கு வந்து 11 வருடம் தான் ஆகிறது. இதன் முழு விவரம் இங்கு உள்ளவர்களுக்குதான் தெரியும். இந்த இடத்தில் தான் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வைத்து குடும்பத்தோடு அமர்ந்து பார்ப்போம். இப்போது அந்த இடத்தை வேலி கட்டி ஆக்கிரமித்துள்ளார்கள். கோயிலே தெரியாதவாறு கோட்டைச்சுவரை மறித்துக் கட்டியிருக்கிறார்கள். அதை முதலில் அகற்ற வேண்டும். அதன் பிறகு பழைய பாதையில் சுவரை கட்டிவிட்டதால்,வேறொரு புதிய பாதையில் சென்றோம். தற்போது நம் உரிமையை விட்டுக் கொடுக்காமல் அந்த பழையப் பாதையைப் பெற வேண்டும். தேவாலயத்தில் உள்ள மாதா முகம் சாலை வரை தெரிய வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த இடம் நம் முன்னோர்கள் புழங்கியது. வருவாய்த்துறை மூலமாக அந்த இடத்தை கைப்பற்றி விட்டார்கள். போராட்டத்தின் மூலமாக மட்டுமே நாம் வென்றுவிட முடியும். ஒற்றுமையும், வலிமையும் கொண்டு போராட வேண்டும், இங்கு வந்திருக்கும் நம் அண்ணன்கள் வழிகாட்டலில் அனைவரும் செல்வோம்” – எனப் பேசினார்.
ஒரு வயதான அம்மா பேசுவையில், “எனக்கு சிறு வயதாக இருக்கும் போது நாம் நிற்கும் இந்த இடங்களில் குப்பை கிடங்குகள் இருந்தன. இங்கு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளிக்கு போக பயந்து இங்கு இருக்கும் கொல்லையில் (வீட்டின் பின்புறம்) படுத்துக் கொள்வேன். இங்கு குப்பைகிடங்கு நிறைய இருந்தது. இது முழுவதும் காலி மனைகளாகவே இருந்தன. நாங்கள் ஆடு, மாடு கட்டிப்போட்டு வைப்போம். பிறகு எங்களுக்கு விவரம் தெரியாததால், சதி செய்து அவரவர்கள் பட்டா போட்டு குடி புகுந்து விட்டார்கள். கோட்டைச்சுவரை பொறுத்தவரை சிறியதாக தான் இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினார்கள் எங்களுக்கு விவரம் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுவரை வளர்த்து, நாளாக நாளாக கோயிலின் வாசலையும் மறைத்து விட்டார்கள். எங்கள் முகத்தில் விழிக்கக் கூடாது என்று தீண்டாமை சுவராக கட்டி விட்டார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. கோயிலுக்கு அருகில் சிறிய சுவராகதான் இருந்தது. அந்த வழியாகத்தான் நடப்போம். கோயில் வழியாக கடைக்குப் போகும் சந்து அங்கு தான் அது இருந்தது. அவர்கள் சுவர் கட்டும் போது ஏன் எழுப்புறீர்கள் என கேட்க பயம். நாங்கள் ஏழைகளாக இருந்ததாலும் அவர்களிடம் வேலை பர்த்தாலும் எதிர்க்காமல் இருந்து விட்டோம். அவர்கள் எங்களுக்கு சம்பளத்தை கொடுக்கும் போதும் இப்போது வரை கைப்படாமல் தூக்கித் தான் போடுவார்கள். அதேப்போல் தானியம் அளந்தாலும் பெட்டியிலிருந்து எட்டி நின்றே வாங்க வேண்டும், அவர்கள் மீது எங்கள் நிழல் கூட படக்கூடாது, இன்று வரை இந்த தீண்டாமை தொடர்கிறது” – எனக் கூறினார்.
அக்கிராமத்து பட்டியலின மக்கள் மீது நடத்தும் தீண்டாமைக் கொடுமையாக தீண்டாமைச் சுவர் எழும்பி நிற்கிறது. அவர்கள் விழா, விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் இடமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும், தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் என போராடும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
தீண்டாமைச் சுவரை அகற்ற நாங்கள் பாடுபடுவோம் என உறுதியுடன் நிற்கும் சங்கரலிங்கபுரம் மக்கள் பேசிய காணொளி : தமிழ்வினை சேனலில்