தேசிய இனத்திற்குள் உடைப்பை உருவாக்கும் சீமான் – திருமுருகன் காந்தி நேர்காணல்

ஒரு தேசிய இனத்திற்குள் உடைப்பை உருவாக்குகின்ற வேலையைத்தான் சீமானும், அவருடைய கும்பல் செய்கிறது என்பதை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் திசம்பர் 24, 2025 அன்று மின்னம்பலம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாம் பகுதி:

ஊடகவியலாளர்: மின்னம்பலம் நேயர்களுக்கு வணக்கம். நான் விசால் புலிவர். இன்றைய நேர்காணலில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நம்மோடு இணைந்திருக்கிறார். வணக்கம் தோழர்.

தோழர் திருமுருகன் காந்தி: வணக்கம்.

ஊடகவியலாளர் கேள்வி: சமீப நாட்களாகவே பெரியாரின் மீதான விமர்சனங்கள் அதிகரிப்பதை நாம் பார்க்கிறோம். இதன் மூலமாக சிலர் செய்யும் பெரியார் மீதான வெறுப்பு பரப்புரையை களத்தில் இருக்கும் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தோழர் திருமுருகன் காந்தி பதில்: பெரியார் மேடையில் மட்டும் பேசி செல்பவரல்ல, சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தியவர். பெரியாரினுடைய சிந்தனை கருத்தியல் ஏற்றுக்கொண்ட லட்சக்கணக்கான பெரியாரிய தொண்டர்கள் அவரவர் ஊர்களில் வேலை செய்திருக்கிறார்கள். என்னுடைய குடும்பத்தில் என் தாத்தா பெரியாரோடு இருந்தவர். அவர் குடும்பத்திற்குள் கொண்டு வந்த மாற்றத்தை நாங்கள் பார்த்திருக்கின்றோம். எல்லாருக்கும் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி வடமொழி பெயர்களை நீக்குவது, குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயரை சூட்டுவது, பார்ப்பனர் அல்லாத தமிழ் முறை திருமண நிகழ்வுகளை செய்வது என பல வழிமுறைகளை குடும்பத்திற்குள் கொண்டு வந்தார்கள். இவ்வாறு பல ஊர்களில் பல பெரியாரியவாதிகள் அவர்கள் குடும்பத்திற்குள் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தஞ்சாவூர் பகுதி முதற்கொண்டு பல பகுதிகளில் பார்ப்பனர் நிலவுடைமையார்களாகவும் பெரும் பண்ணையார்களாகவும் இருந்தார்கள். அவர்களின் ஆதிக்கத்திற்கு / கொடுமைகளுக்கு எதிராக பெரியாரியவாதிகள் சண்டை போட்டிருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் பெரியாரை நேசித்தார்கள். மேடைப் பேச்சாளாராக மட்டும் இருந்திருந்தால் இது சாத்தியமா?

16 ஆண்டுகளாக மேடையில் மட்டுமே பேசும் சீமானை மக்கள் நேசிக்கவில்லை. அதனால்தான் அவர் டெபாசிட்டே வாங்க முடியாத நிலை. ஆனால் பெரியாரினுடைய இயக்கத்தவரால் நேரடியாக மக்கள் பலனடைந்தார்கள். அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார்கள். நில உடமையிலிருந்து விடுதலை பெற்றார்கள். சுயமரியாதை பெற்றார்கள். இட ஒதுக்கீடு பெற்றார்கள், கல்வி பெற்றார்கள். அதிகாரத்தைப் பெற்றார்கள். பார்ப்பனர் கையிலிருந்த அதிகாரம் சாமானிய மக்கள் கைக்கு வர வேண்டும் என்று உழைத்தார் பெரியார். இன்று சீமான் தான் முதலமைச்சராக கனவு காண முடிகிறது என்றால் அதற்குக் காரணம் பெரியாருடைய உழைப்புதான். பார்ப்பன அதிகாரத்தை அப்புறப்படுத்துவதுதான் தன்னுடைய மிகப்பெரிய இலக்கு என்று வேலை செய்தார் பெரியார்.

பெரியாரின் இந்த அரசியலால் நேரடியாக பலன் அடைந்த ஒரு மிகப்பெரிய சமூகம் இங்கே இருக்கின்றது. ஆனால் இதைப் பேசினால் ’தெலுங்கன்’ என்று சீமான் கட்சியினர் முத்திரை குத்துகிறார்கள். எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறையாக முருகன் பெயர் சூட்டியிருக்கின்றோம். ஆந்திராவில் வைணவத்தை பின்பற்றுபவர் திருமுருகன் என்று பெயர் வைப்பார்களா? அந்த அளவுக்கு தற்குறித்தனமாக இருக்கிறது சீமான் கட்சி. அந்தக் கட்சி தலைமையில் இருந்து தொண்டன் வரை அனைவருமே தற்குறியாகத்தான் இருக்கின்றார்கள்.

பல்வேறு தேசிய இன மக்கள், பல சிறுபான்மை தேசிய இன மக்கள் அல்லது சிறுபான்மை மத இன மக்கள் எல்லாரும் சேர்ந்தே தேசிய இனத்தை உருவாக்குகிறார்கள். பிரஞ்சு தேசிய இனம் அப்படித்தான் உருவானது. அந்த பிரெஞ்ச் தேசிய இனத்திற்குள் அங்கிருந்த பழங்குடி மக்கள், ரொமானிய மக்கள், இங்கிலாந்து மக்கள் என அனைவரும் சேர்ந்துதான் பிரெஞ்சு தேசியம் உருவானது. அதேபோல பல்வேறு சிறு சிறு இனக்குழுக்கள் சேர்ந்துதான் இத்தாலி உருவானது. ஒரு தேசிய இன உணர்வில் பொது மனநிலை முக்கியமானதாக இருக்கிறது. அதில் குறிப்பிட்ட கால வரலாறு இருக்கின்றது. குறிப்பிட்ட கால வரலாற்றில் முதலாளித்துவ காலகட்டத்திற்கு உள்ளான வரலாறுதான் ஒரு தேசிய இன வரலாறு. தேசிய இன நாடுகள் உருவான காலகட்டம் என்பது முதலாளித்துவத்தினுடைய வெளிப்பாடுகள் நிறைந்தது.

தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று 300 ஆண்டுகளுக்கு முன் யாரும் போராடாததற்குக் காரணம் அப்போது அதற்கான தேவை எழாமல் இருந்தது. அப்போது சமூக கட்டமைப்பு, பொருளாதார கட்டமைப்பே வேறாக இருந்தது. முதலாளித்துவ கட்டமைப்புக்குள்தான் தேசிய இன நாடுகள் வருகின்றன. வரலாற்று ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டவர்களாக, ‘நாம்’ என்ற உணர்வு கொண்டவர்களாக ஒரே மனநிலை கொண்டவர்களாக தேசிய இன மக்கள் சேர்ந்து வேலை செய்கிறார்கள். இதே மனநிலையில் சகோதரத்தன்மை உணர்வோடு, ஒரு வரலாற்று பின்னணியோடு, பொருளாதார பிணைப்போடு, பண்பாட்டு நெருக்கத்தோடு இணையக்கூடிய எல்லாருமே தேசிய இன மக்கள்தான். இத்தகைய பண்போடு இணையாதவர்களைத்தான் நாம் கேள்வி எழுப்புகின்றோம். மார்வாடிகளோ பார்ப்பனர்களோ இதில் இணைந்து கொள்ள மறுத்தார்கள்.

அண்மையில் ஒரு பெண் ட்விட்டரில் “நான் உருது பேசக்கூடிய இசுலாமியர். காலம் காலமாக தமிழ்நாட்டில் இருக்கிறோம். ஆனால் நாங்கள் தமிழர் இல்லை என்று சொல்லுகிறார்கள்” என்று வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். உடனே நாம் தமிழர் கட்சியின் தற்குறிகள் பலர் “நீ தமிழர் கிடையாது, உன் அடையாளம் வேறு” என்று அவர் பதிவில் பதில் கூறியிருந்தார்கள். ஆர்எஸ்எஸ்காரர்கள் இவ்வாறுதான் பதில் கூறுவார்கள்.

தமிழர்களின் இன அரசியல், மொழி அரசியல் என்கிற காலகட்டம் தேசிய இனமாக உருப்பெறுகின்ற பொழுது இந்த தேசிய இன அடையாளத்தை ஏற்றுக் கொண்டவர்களால்தான் எல்லா தேசிய இனங்களும் உருவாகி இருக்கின்றன. இதை ஏற்றுக்கொள்ளாமல்  தூய்மைவாத அடிப்படையில்  பிரிப்பதை ஆர்எஸ்எஸ் வழியில் நாம் தமிழர் கட்சி வளர்த்திருக்கின்றது.

பொருளியல் தன்மையோடும் பண்பாட்டுத் தன்மையோடும் ‘தமிழ்’ என்ற பொதுமொழி அடையாளத்தோடும் அவர்கள் (தேசிய இன மக்கள்) இணைந்து வேலை செய்கிறார்கள். பண்பாட்டு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இணைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு விடுதலைக்காக தீரன் சின்னமலையோடும் மருதுபாண்டியரோடும் போரிட்டவர்கள் உருது இசுலாமியர்கள். வேலுநாச்சியாருக்காக படை திரட்டி நின்றவர்கள் உருது இசுலாமியர்கள். கோயம்புத்தூரின் விடுதலைக்காக போர் புரிந்து தூக்கு கயிறு ஏறிய 36 பேர் உருது இசுலாமியர்கள். வேலூர் கோட்டையில் நடந்த போரில் உயிர் துறந்த பலர் உருது இசுலாமியர்கள்.

இவர்களை தேசிய இனம் என்று கூறாது வேறு அடையாளத்தை சீமான் கட்சியினர் எப்படி கூறலாம்? இவ்வாறு அடையாள முத்திரை குத்துபவர்கள் தமிழ்நாட்டில் எந்த போராட்டத்துக்காக முன்வந்திருக்கின்றார்கள்? எந்த போராட்டமும் செய்யாமல் மக்களை பிரிக்கக்கூடிய வேலையை செய்கிறார்கள்.

 200 ஆண்டுகளுக்கு முன் ரோமானிய மக்கள், கவுல் மக்கள் எனப் பலர் இணைந்துதான் ‘பிரெஞ்சு தேசிய இனம்’ என்ற ஒன்று உருவாகி இருக்கிறது. அயர்லாந்து, இங்கிலாந்து-இவ்விரு நாடுகளிலும் ஆங்கிலம்தான் பேசுகின்றார்கள். அயர்லாந்து மக்கள் ஆங்கிலம் பேசினாலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தீவிரமான புரட்சியை முன்னெடுத்தார்கள். அயர்லாந்து விடுதலை போராட்டம் என்பது வரலாற்றில் முக்கியமான ஒரு விடுதலை போராட்டமாக மாறியது. இதேபோல்தான் ஒரே மொழியைப் பேசினாலும் அமெரிக்கா-இங்கிலாந்து நாடுகளிடையே போர் நடந்தது.

இவர்கள் (சீமான்) பேசக்கூடிய அரசியல், மக்களை பிரிக்கக்கூடிய அரசியல். பொது மன உணர்வோடு ஒன்றுபடக்கூடிய மக்கள் தமிழ்த்தேசிய இன மக்கள். சித்தூர் போன்ற ஆந்திர பகுதியில் வாழும் தமிழர்களை தெலுங்கர் என்று சீமான் கூறுகிறாரா? தமிழ்த்தேசிய சண்டைக்காக அந்தப் பகுதி தமிழர்கள் நின்றால் அவர்கள் தமிழ்த்  தேசிய இனத்தோடுதான் நிற்பார்கள்.

ஒரு மொழி தனித்து இயங்குவதற்குரிய சொற்கோவையும் இலக்கண கட்டமைப்பும் இல்லை என்றால் தனித்த தேசிய மொழியாக இயங்காது. அதில் இலக்கிய படைப்பு செய்ய இயலாது. சிந்தனை படைப்பை செய்ய முடியாது. பொருள் உற்பத்தியோடு தொடர்பு கொள்ள முடியாது.

ஒரு மொழி பொருள் உற்பத்தியோடு தொடர்புடையதாக இருக்கின்ற பொழுதுதான் அது ஒரு மொழியாக மலர்ந்து நிற்கிறது, ஒரு அடையாளமாக, ஒரு சைகையாக நிற்கிறது. அவர்களுடைய (தெலுங்கு பேசுபவர்களுடைய) பொருள் உற்பத்தி முறை, இங்கு இருக்கும் பொதுமொழி பேசக்கூடிய தமிழ் மக்களோடு சேர்ந்த ஒரு பொது பொருள் உற்பத்தி முறைதான். பொது பண்பாட்டுத் தளத்தில்தான் அவர்களும் இயங்குகிறார்கள். அவர்களும் பொங்கல் கொண்டாடுவதைப் போல பல விடயங்களில் தமிழ் பண்பாட்டோடு இணக்கமாக இணைந்து இருந்தவர்கள்தான்.

இந்த கண்டத்திலே மூத்த மொழியாக தமிழ் மொழி இருக்கும்போது,1500- 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களும் தமிழ் தான் பேசியிருப்பார்கள். திராவிட மொழி குடும்பத்திற்குள் அடித்தள கட்டமைப்பிற்குள்ளாக தமிழ் மொழி கட்டமைப்பும் தமிழ் இலக்கண கட்டமைப்பும் இருக்கிறது. சொற்கோவை கட்டமைப்பு இருக்கிறது. பொதுச்சொல் கட்டமைப்பும் இலக்கண கட்டமைப்பும் தமிழ் மொழி கட்டமைப்பாக நின்று கொண்டிருக்கின்றன. அதிலிருந்துதான் எல்லாமே இயங்குகின்றன. வேறு வேறு காலகட்டத்தில் வேறு வேறாக மாறிப் போயிருக்கின்றன.

சான்றாக சுவிஸ் தேசிய இனம் இருக்கின்றது. நீண்ட காலமாக சுவிஸ் மக்கள் தனித்த தேசிய இனமாக இருக்கிறார்கள். அங்கு நான்கு மொழிகள் இருக்கின்றன. பிரஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி மற்றும் ஒரு பழங்குடி மொழி அங்கே பேசப்படுகின்றன. ஆனால் நான்கு மொழி பேசினாலும் அவர்கள் இத்தாலி, பிரஞ்சு மற்றும் ஜெர்மனி நாடுகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை.

சுவிஸ் தேசிய இனத்திற்கென்று ஒரு பொது பொருளாதார கட்டமைப்பு இருக்கிறது. ஒரு நிலவியல் கட்டமைப்பு இருக்கிறது. அதனால் தான் தனித்த தேசிய இனமாக தேசியங்கள் உருவாகின்றன. இதே போலத்தான் பால்கன் நாடுகளில் இருக்கும் கட்டமைப்புகள். உலகத்தில் இவ்வாறு பல தேசிய இன வரலாறுகள் இருக்கின்றன. 

ஒரு தேசிய இனத்திற்குள் உடைப்பை உருவாக்குகின்ற வேலையைத்தான் சீமான் கும்பல் செய்கிறது. பொது எதிரிக்கு எதிராக ஒன்று சேர்வதுதான் தேசிய இன விடுதலை. ஆனால் சீமான் செய்வது பொது எதிரிக்கு எதிராக இருப்பவர்களை பிரிக்கும் மிகப்பெரிய துரோகம். அது தமிழ்த்தேசியத்திற்கு எதிரான துரோகம்.

தேசிய இன விடுதலைக்கு யார் எதிரியோ அந்த எதிரியோடு கொள்கை கூட்டணி வைக்கிறார் சீமான். தேர்தல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி வேறு. சீமான் யாருடனும் தேர்தல் கூட்டணி கிடையாது. ஆனால் இந்துத்துவ அமைப்புகளோடு கொள்கை கூட்டணி வைத்திருக்கின்றார்.

வி.பி.சிங் அமைச்சரவை உருவாக்கிய பொழுது வலதுசாரிகளாக பாரதிய ஜனதா கட்சியும் அந்த அமைச்சரவையில் இருந்தது, இடதுசாரியும் ஆதரவளித்தது. அது கொள்கை கூட்டணியா? அல்லது அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணியா? அன்றைக்கு ராஜீவ் காந்தியை எதிர்த்து ஒரு அரசை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் சங்கபரிவார் (ஆர்எஸ்எஸ்) சோசியலிஸ்ட் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களோடு தொடர்பு கொண்ட காரணம் என்ன?  அன்றைக்கு இந்திரா காந்தியினுடைய எமர்ஜென்சிக்கு எதிராக சண்டை போட வேண்டிய தேவை இருந்தது.

பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கும்போது எதிரியோடு கைகோர்த்து கொண்டு ஒன்றுபட வேண்டிய மக்களைப் பிரிக்கின்ற வேலையை சீமான் தெளிவாக செய்கிறார். அதனால் தான் சீமான் மிகப்பெரிய துரோகி. ஆர்எஸ்எஸ் மேடையேறிய சீமான் இங்கு இருக்கும் போராட்ட இயக்கங்களின் மேடையில் ஏன் ஏறவில்லை?

கேள்வி: அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதா?

தோழர் திருமுருகன் காந்தி: நாங்கள் பல முறை அழைப்பு கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு பிற கட்சிகள் அறிமுகமாவதற்கு முன்பே சீமான் அறிமுகமானார். 2012ல் ஐயா வைகோவோடு மேடையேறினோம். ஆனால் 2009-யிலேயே நான் சீமானை அழைத்திருக்கின்றேன். 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகள் அவர் வரவில்லை. 2012யிலும் அவர் வரவில்லை. யார் மேடையிலும் ஏற மாட்டேன் என்றவர் ஆர்எஸ்எஸ்காரன் கூப்பிட்டவுடன் அங்கு சென்றிருக்கிறார்.

தேர்தல் கூட்டணி என்பது அதிகாரத்தை பங்கிட்டு கொள்வதற்காக நடத்தக்கூடிய கூட்டமைப்பு. உலகத்தில் எல்லா இடங்களிலும் அதிகார பங்கு போடுவதற்காக தேர்தல் கூட்டணி உருவாகி இருக்கின்றது. ஆனால் கொள்கை கூட்டணி என்பது வேறு. பாரதியினுடைய கொள்கை வாரிசு என்று மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடையில் சீமான் பேசி இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முற்போக்கு கருத்தியலை, பாசிச எதிர்ப்பு கருத்தியலை முன்வைக்கின்றது. ஆனால் சீமான் அவர்கள் மேடையில் ஏற மாட்டார். ஆர்எஸ்எஸ் உடன் மட்டுமே சகவாசம் கொள்கின்றார்.

தமிழர்களுக்கு எதிரான எதிரியோடு கைகோர்த்து கொள்வது, தமிழர்களுக்குள்ளாக பிளவுகளை கொண்டு வருவது – இதை மிகத் தெளிவாக சீமான் செய்கின்றார். 2009 துயரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் உருவான எழுச்சியை மடைமாற்றி சிதைத்து, அதை எதிரிகளிடத்தில் கொண்டு போய் சேர்த்த மிகப்பெரிய துரோகி சீமான். இதை எல்லா இடத்திலும் ஆதாரங்களுடன் பேச நாங்கள் தயாராக இருக்கின்றோம். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போராட்டக் கட்டமைப்பு உருவாகும் போதெல்லாம் அதை உடைப்பார் சீமான். திமுக அதிமுக இரு கட்சிகளுக்கும் எதிராகத்தான் பலர் போராடியிருக்கிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சி இருந்தபோது அதிமுக உடன் கை கோர்த்துக்கொண்டார் சீமான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல முறை முதல்வரைச் சென்று சந்தித்தார். எந்த பெரிய இயக்கமும் இப்படி செய்யாத போது இவர் போய் இருக்கிறார்.

எந்த கட்சி வந்தாலும் முதலில் போய் மண்டியிடுவதுதான் அவர் வேலை. திமுக-அதிமுக அப்பாற்பட்டு உருவான மூன்றாவது மக்கள் அமைப்புகளை உடைத்து சிதைத்தவர் சீமான். திமுக-அதிமுக மாற்றாக அரசியல் உருவாகக் கூடாது என்று கவனமாக இயங்கி, மூன்றாவது ஆற்றல் எழக்கூடாது என்று மிகப்பெரிய அளவுக்கு சிதைவு வேலை செய்தது சீமான். இதை வெளிப்படையான குற்றச்சாட்டாக முன் வைக்கின்றேன்.

தமிழ்நாட்டில் மூன்றாவது ஆற்றல் வரக்கூடாது என்று வேலை செய்து அந்த இடத்தில் இந்துத்துவ அமைப்பை கொண்டு வந்தவர் சீமான். 2009ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட துரோகத்தை செய்தார் என்ற பட்டியலே எங்களிடம் இருக்கின்றது. இந்தத் தேர்தலில் சீமானை எங்கு எதிர்கொள்ள வேண்டுமோ அங்கு நாங்கள் எதிர்கொள்வோம். இத்தகைய துரோகிகளை ஒழித்துக் கட்டினால்தான் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் வளரும். அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இயக்கங்களை மேலே கொண்டு வர நாம் செய்த முயற்சிகளை உடைத்தவர் சீமான். ஆனால் அவர் அதிமுகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டார்.

இப்போது முதலமைச்சரை சென்று பார்த்த பிறகு, விஜய்க்கு எதிராக பேச ஆரம்பித்திருக்கிறார். பிஜேபிக்கு சாதகமாக இருந்து பாலியல் வழக்கில் இருந்து தப்பிக்க நினைக்கிறார். விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வழக்கிற்காக என்றாவது 3000 பேரைத் திரட்டி இருக்கின்றாரா? ஆனால் தன் மீதான பாலியல் வழக்கிற்கு ஆதரவாக தன் கட்சியினரைத் திரட்டி இருக்கின்றார். இவரை நம்பி இருக்கக்கூடிய அந்த கட்சியினரைப் பார்க்க பரிதாபமாக இருக்கின்றது. அவருடைய சுயநலத்துக்கு அவர்களை பயன்படுத்தும் ஒரு நபர்தான் சீமான்.

 அவர் (சீமான்) பெரியார் குறித்து இவ்வளவு இழிவாக பேசி வருகிறார், ஆனால் திமுக ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரு ஆண்டுக்கு முன் ஈரோடு இடைத்தேர்தல் வந்தபோது, இதே போல் பெரியார் குறித்து அவதூறு பரப்பினார். இப்போது சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் உடன் இணக்கமாக இருந்தால் தனக்கு 8%, 5%- 4% வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளலாம் என ஏமாற்றுகிறார். இவ்வளவுதான் அவருடைய அளவுகோல். தமிழ்நாட்டின் சீரழிவு சக்தியான இவருடைய துரோகத்தைப் பார்த்துக்கொண்டு மே 17  இயக்கம் அமைதியாக இருக்காது.

ஊடகவியலாளர்: பல்வேறு கேள்விகளுக்கு மிக ஆழமாகவும் பொறுமையாகவும் மிக விரிவாகவும் பதில் தந்தமைக்கு நன்றி.

தோழர் திருமுருகன் காந்தி: நன்றி! வணக்கம்!!

முதல் பாகத்தின் கட்டுரை இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »