
ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு மேல் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்தும், தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்தும் கொன்ற இலங்கை இனவெறி ராணுவம், தமிழீழத்தில் மட்டுமல்ல, ஐநா அமைதிக்குழுவுடன் சென்ற ஹைதி நாட்டிலும் பாலியல் சுரண்டலை அரங்கேற்றியது. சிறுவர் சிறுமிகள் மீது நடத்தப்பட்ட இந்தப் பாலியல் முறைகேடு பற்றி போதிய விசாரணை செய்யாமல், அதில் ஈடுபட்டவர்களுக்கே பதவி உயர்வை இலங்கை அரசு அளித்திருப்பதைக் கண்டித்து, இனி மீண்டும் இலங்கை ராணுவத்தை ஐ.நா அமைதி குழு அழைக்கக்கூடாது என ITJP (சர்வதேச நீதி மற்றும் உண்மைகளுக்கான அமைப்பு) அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹைத்தி தீவில் 2004ல் ஏற்பட்ட அரசியல் வன்முறை காரணமாக அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐநா அனுப்பிய MINUSTAH (ஹைத்தியை நிலைப்படுத்தும் ஐக்கிய நாடுகளின் தூதுக் குழு) குழுவுடன் 114 இலங்கை படை வீரர்கள் சென்றுள்ளனர். இக்குழு மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி செய்யவும், காவல் துறைக்கு பயிற்சி அளிக்கவும் தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் சென்றது. 2004 ஜூன் முதல் 2007 அக்டோபர் வரை இலங்கை ராணுவம் ஹைத்தியில் இருந்தது.
இந்த சூழலில் ஆகஸ்ட் 2007-ல், ஐ.நா அல்லாத வெளிக் குழு ஒன்று போர்ட்-ஆ-பிரின்ஸ் நகரில் உள்ள த மார்ட்டிசாண்ட் பகுதிக்கு சென்றபோது, இலங்கை வீரர்களுக்கும் ஹைத்தி சிறார்களுக்கும் இடையே சந்தேகத்திற்கிடமான தொடர்புகள் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
புகாரைத் தொடர்ந்து, இக்குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு, “ஐ.நா-வின் உள் மேற்பார்வை சேவைகள் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவிடம் (ID/OIOS)” MINUSTAH கோரியது.

நவம்பர் 2007-ல், ஐ.நா விசாரணை முடிவில், 2004 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து 2007 அக்டோபர் நடுப்பகுதி வரை, தற்போதைய மற்றும் முந்தைய இலங்கை படையணிகளைச் சேர்ந்த குறைந்தது 134 இராணுவ உறுப்பினர்கள், தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பாலியல் சுரண்டல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த பாலியல் சுரண்டல் ஐ.நா இராணுவ வாகனங்கள், போர்ட்-ஆ-பிரின்ஸில் உள்ள இராணுவ நிலையான காவல் தளங்கள், ஹைத்தி முழுவதும் உள்ள இலங்கை இராணுவ தளங்களில் நடைபெற்றதாக விசாரணையில் தெரிந்தது. பாலியல் உறவுக்கு ஈடாக, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகக் குறைந்த அளவாக பெற்றுள்ளனர். சிலர் உணவுக்காகவும் கூட பாலியல் சுரண்டல் செய்யப்பட்டிருக்கின்றனர். சில சமயங்களில் கைபேசிகளும் கொடுத்துள்ளனர். அந்த கைபேசிகள் பாலியல் உறவுக்கான வலைப்பின்னல்களான உருவாகக்க பயன்பட்டன.

இலங்கை வீரர்கள் கைபேசி மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, உடலுறவுக்காக குழந்தைகளைத் தேடியதாகவும், பழைய படைப்பிரிவு வெளியேறும்போது ஹைத்திக்கு வந்த புதிய படைப்பிரிவு வீரர்களுக்கு அந்த கைபேசிகளையும் எண்களையும் கைமாற்றியதாகவும் ரகசிய ID/OIOS (ஐநாவின் உள் மேற்பார்வை சேவைகள் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவு) அறிக்கை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளை சுரண்டும் விபச்சார வலையமைப்பை உருவாக்கியுள்ளனர். சில இலங்கை வீரர்கள் சிறுமிகளை கர்ப்பிணியாக்கி ஏமாற்றியிருக்கின்றனர்.
இலங்கை இராணுவ காவல் படையைச் சேர்ந்த தேசிய புலனாய்வு அதிகாரிகளும் 25 முறைக்கும் மேல் விசாரித்துள்ளனர். அவற்றில் மூன்று ID/OIOS முன்னிலையில் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமிகள் சிங்கள மொழியில் நல்ல அறிவைப் பெற்றிருந்ததாகவும், அவர்கள் கூறிய அடையாளங்கள் மூலம் இராணுவ பதவிகள், இராணுவ சொற்கள், வீரர்களின் படைப்பிரிவு மாற்றங்களை தெளிவாக அடையாளம் காணக் கூடியதாக இருந்துள்ளது. மேலும் தடயவியல் ஆதாரம், நேரில் பார்த்த சாட்சிகளின் சாட்சியம், ID/OIOS மேற்கொண்ட சுயாதீன புலனாய்வு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியத்தை உறுதிப்படுத்தின.
போர் சூழலில் உள்ள குழந்தைகளின் மோசமான சூழலை பயன்படுத்தி அவர்களை முறைகேடாக பாலியல் சுரண்டலுக்கு இணங்க வைப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் கடுமையானக் குற்றமாகும். ஆனால் இலங்கை இராணுவப் படையணியைச் சேர்ந்த 114 உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கை காரணங்களுக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டாலும் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை. குற்றச்சாட்டுகளை விசாரிக்க இராணுவ விசாரணை நீதிமன்றம் கூட்டப்பட்டாலும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறைந்தது. மேலும், ஹைதியில் நிறுத்தப்பட்ட 6-வது இலங்கை அமைதிப் படையணி தொடர்பாக மட்டுமே விசாரிக்கப்பட்டது. இதனால் முந்தைய ஐந்து படையணிகளின் குற்றங்கள் அனைத்தும் விலக்கப்பட்டன.
இந்த விசாரணை நீதிமன்றத்தின் அடிப்படையில், 10 இராணுவ அதிகாரிகள் மற்றும் 13 இராணுவ ஊழியர்கள் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறியது. ஆனால் தண்டனை விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதுவும் அந்த 13 வீரர்களில் மூன்று பேர் விசாரணையின் போதே போரில் ஈடுபட்டதால் கொல்லப்பட்டனர். இது பாலியல் சுரண்டல் மற்றும் முறைகேடு பற்றிய கடுமையான குற்றச்சாட்டு விசாரணையில் இருக்கும்போது அவர்கள் ஏன் இன்னும் இலங்கை உள்நாட்டுப் போரில் செயல்பாட்டு சேவையில் இருந்தனர் என்ற கேள்வியை எழுப்புகிறது.

2006-ல் இலங்கை இராணுவ தளபதி மூலமாக ஒரு ஹைதி சிறுமி கருவுற்றிருப்பதைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து 2017-ல் இலங்கை அரசு இழப்பீடு கொடுத்திருக்கிறது. பொறுப்புக்கூறலை முறையாக செய்யாமல் ஐநாவை கவர்வதற்கான நடவடிக்கையாக கருவுற்ற ஹைதி சிறுமிக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டதும், இந்த இழப்பீட்டில் கையொப்பமிட்ட இலங்கை பாதுகாப்புச் செயலாளரே எங்கள் ராணுவத்தினர் மீது மோசமான பதிவுகள் இல்லை என அறிவித்ததும் நிகழ்ந்தது. பத்தாண்டுகள் கழித்த பின்பே அந்த நபரை வேலையிலிருந்து நீக்கப்பட்டதும் கண்துடைப்பாக நடந்தது.
2013-ல் ஹைதி சிறுவன் ஒருவன் இலங்கை ராணுவ ஊழியனால் ஓரினச்சேர்க்கை பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழும்பியதால், இதனை விசாரிக்க இலங்கை அரசாங்கம் ஒரு மேஜரை அனுப்பியது. ஆனால் அவர் யாரையும் விசாரணையே செய்யாமல், குற்றம் சாட்டப்பட்ட இராணுவ வீரரை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, இலங்கை இராணுவத்தில் தொடர்ந்து இருக்க அனுமதித்திருக்கிறார்.
இவ்வாறு ஐ.நா மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இணைந்து உருவாக்கிய அடுத்தடுத்த சோதனை மற்றும் தணிக்கை வழிமுறைகள் முறையாக இல்லை. விரிவான விசாரணைகள் செய்யப்படவில்லை. பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் ஐநா அமைதிப்பணிக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என இலங்கை அரசும் கூறியது. ஆனால் ஹைத்தியில் பணியமர்த்தப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று வெகுமதி அளிக்கப்பட்டனர். தங்கள் இராணுவ சேவைக்காக விருதுகளைப் பெற்றனர். ஒருவர் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தூதர் பதவியில் கூட பணியாற்றியிருக்கிறார்.
இவை அனைத்தையும் கணக்கில் கொண்டே ITJP இலங்கை படையணியை ஹைதிக்கு அனுப்புவதை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபைகளை கேட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச விசாரணைப் பொறிமுறையை விசாரிக்க கேட்கிறது. ஹைதி சிறுமிகளுக்கு நிகழ்ந்த இந்தப் பாலியல் சுரண்டல் குறித்தான இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் இல்லாமல் ஐநாவின் அமைதி குழுவை இலங்கை ராணுவத்தினரை பணியமர்த்துவது ஒரு நடுநிலையான நிர்வாக முடிவு அல்ல, அது தண்டனையின்மைக்கு ஒப்புதல் அளிக்கும் செயல், அமைதி காக்கும் பணியை சமரசம் செய்யப்பட்ட தரங்களில் தொடர முடியாது, தொடரவும் கூடாது என ITJP இலங்கை ஐ.நா அமைதி காக்கும் பணிகளில், குறிப்பாக ஹைத்தியில், பங்கேற்பதை மீண்டும் தொடங்க அனுமதிக்கக்கூடாது என இந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
2009 போருக்கு பின்பாக இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் மீதும், தமிழ்ப் பெண்கள் மீதும் இலங்கை ராணுவ அதிகாரிகள் நடத்திய பாலியல் வன்புணர்வு சித்திரவதைகளை அம்பலப்படுத்தி தொடர்ச்சியான அறிக்கைகளை ITJP வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு 2015-2022 வரையிலான ஏழு ஆண்டுகளில் தடுப்பு முகாம் சித்திரவதைக்கு உள்ளான சுமார் 14 பெண்கள் வாக்குமூலத்தை ‘தடுப்புக் காவல் மற்றும் சித்திரவதை‘ என்ற அறிக்கையில் வெளிப்படுத்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இப்பெண்களை ஒவ்வொரு நாளும் விடுதலைப் புலிகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, உண்மையைச் சொல்லுமாறு அடித்து துன்புறுத்தி, அவர்களின் மீது பாலியல் ரீதியான வன்புணர்வுகளை செய்து, மரணத்தை விட வேதனையான இழிசெயல்களை இலங்கையின் விசாரணை இராணுவ அதிகாரிகள் செய்துள்ளனர். நெகிழிப் பைகளால் முகத்தை மூடி மூச்சுத் திணற வைப்பது, பூட்சு காலினால் மிதிப்பது, சிகரெட்டினால் உடலின் அனைத்து இடங்களிலும் சூடு வைப்பது, கயிற்றில் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுவது மற்றும் இரும்புக் கம்பிகளை பிறப்புறுப்பில் திணிப்பது, ஆண்கள், பெண்கள் என பாராமல் வாய்வழி வன்புணர்ச்சி செய்வது, அந்தரங்க உறுப்புகளை சிதைப்பது என நினைத்துப் பார்க்கவே அச்சம் தரும் வகையில் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளதை ITJP 2023-ல் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இனவெறி சிங்கள ராணுவத்தின் ஆணவத்தை ஆயுதம் தரித்த பெண் விடுதலைப் புலி வீரர்கள் தகர்த்தார்கள். 2009 போரில் இலங்கை மட்டுமே போரில் ஈடுபட்டிருந்தால் விடுதலைப்புலி பெண் போராளிகளே சிங்கள இனவெறி இராணுவத்தை ஒழித்துக் கட்டியிருக்கும் அளவிற்கு வீரம் மிக்கவர்களாக இருந்தனர். ஆனால் உலக வல்லாதிக்க நாடுகளின் துணையுடன் இணைந்து இலங்கை இனவெறி இராணுவம் 2009 – போரில் கொடூரமான பாலியல் வக்கிரத்தை நம் தமிழ் பெண்கள் மீது செய்து முடித்தது. இதன் பாலியல் கொடூர முகம் தான் ஹைதி நாட்டில் சிறார்கள் மீது பாலியல் சுரண்டலாக வெளிப்பட்டிருக்கிறது..
சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய தமிழினப்படுகொலையை செய்தும், இன்றுவரை இலங்கையில் உள்ளக விசாரணைப் பொறிமுறை கடத்தும் கால நீட்டிப்பை பற்றி ஐநா கண்டு கொள்ளவில்லை. அதுபோலவே ஹைதி நாட்டில் இலங்கை இனவெறி இராணுவத்தினர் ஹைதி சிறார்கள் மீது நடத்திய பாலியல் சுரண்டல் விசாரணைப் பொறிமுறைகளையும் ஐநா முறையாக தொடரவில்லை. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டே, ஐநா அமைதிக்குழுவில் இலங்கை ராணுவத்தை இணைக்கக் கூடாதென்ற அறிக்கையை ITJP வெளியிட்டுள்ளது.

ஈழத்தில் 1,69,798 தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இராணுவத்தை அம்பலப்படுத்தும் ITJP -ன் பணி போற்றத்தக்கது. இப்படிப்பட்ட இனவெறியர்களால் கொல்லப்பட்ட நம் உறவுகளை நினைவேந்தும் கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உரியது. இனவெறி ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழீழ உறவுகளை ஆண்டு தவறாமல் மே 17 இயக்கம் நினைவேந்தலை நடத்துகிறது. இந்த ஆண்டு நினைவேந்தல் மே 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற இருக்கிறது. தமிழர்களாய் திரண்டு நினைவேந்துவோம்.