சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய பார்ப்பனிய பயங்கரவாதமும்
வருகின்ற அக்டோபர் 13-ஆம் தேதி இனப்படுகொலை இலங்கை இராணுவம் ‘21-ஆம் நூற்றாண்டின் தேசப்பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த கருத்தரங்கில் இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத இலங்கை இராணுவத்தின் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிசனால் குற்றம் சாட்டப்பட்ட பாஜகவின் சுப்பிரமணிய சாமி கலந்து கொள்கிறார். அவரோடு, 2009 இனப்படுகொலை உச்சத்தின் போது தமிழர்களை இனப்படுகொலை செய்த அப்போதைய 53-வது படையணியின் தலைவரும் தற்போதைய கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு அமைச்சரின் செயலாகராக இருக்கக்கூடிய கமால் குணரத்னேவும் கலந்துகொள்கிறார்.
போர்க் குற்றவாளி கமால் குணரத்னே
இறுதி கட்ட போரின் போது பாதுகாக்கப்பட்ட வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வந்த தமிழர்களின் மீது கொத்துக் குண்டுகளை போட அனுமதி கொடுத்தவர். 29 சனவரி 2009 அன்று ஐநா-வின் செஞ்சிலுவை சங்கத்தினர் காயம்பட்ட தமிழர்களுக்கு புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருவதை தெரிந்து கொண்டு அவர்களை வெளியேற சொல்லிவிட்டு பிப்ரவரி 3, 2009 அன்று அந்த புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது திட்டமிட்டு தாக்குதல் நடந்த அனுமதி கொடுத்தவர்.
மார்ச் 9, 2009 அன்று பாதுகாக்கப்பட்ட வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மூன்று லட்சம் தமிழர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என்று செஞ்சிலுவை சங்கங்கள் கேட்டுக் கொண்ட பொழுது அங்கே மூன்று லட்சம் தமிழர்கள் இல்லை வெறும் 50 ஆயிரம் தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்று குறைத்துக் காட்டி 15% சதவீதத்திற்கும் குறைவான உணவையே அனுமதித்தவர்.
உலகையே பதற வைத்த தமீழீழ செய்தி வாசிப்பாளரும், பாடகருமான இசைப்பிரியாவை கொலை செய்த கொடூர கும்பலுக்கு தலைவரும் இவர் தான். அத்தோடு இல்லாமல் போர் முடிந்த பிறகு எஞ்சி இருந்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை மாணிக்பார்ம் என்கிற முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்தும், அங்கிருந்து ஜோசப் சித்திரவதை முகாம், வன்னி சித்ரவதை முகாம் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதை முகாம்களில் தமிழர்களை அடைத்து கொலை செய்த கொடூரமும் இவரது தலைமையில் தான் நடந்தது.
மேலே சொல்லப்பட்டிருக்கிற அனைத்து இனப்படுகொலை செயல்களும் ஏதோ தமிழர் தரப்பு சொன்னதல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை மீது ஐநா அமைத்த வல்லுநர் குழு (OISL) கொடுத்த அறிக்கையில் உள்ளது. இப்படிப்பட்ட இனப்படுகொலை குற்றவாளியோடு தான் பார்ப்பனிய சுப்பிரமணிய சாமி மேடையை பகிர்ந்து கொள்ளப் போகிறார்.
சுப்பிரமணிய சாமி தமிழர்கள் மீது தொடர்ச்சியாக வன்மத்தை காட்டி வருபவர். தமிழர் விரோத மனப்பான்மையோடே செயல்பட்டு வருபவர். தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதால் “தமிழ், தமிழர் நலனில்” அக்கறையோடு செயல்படும் அனைவரையும் “சாக்கடை எலிகள்” என்று அழைத்து தமிழர்களை சிறுமைபடுத்துபவர். தனது பார்ப்பனிய மேட்டிமைத்தனத்தை பெருமையோடு பறைசாற்றிக்கொள்பவர். இப்படியான ஆரிய பார்ப்பனிய மனநிலை கொண்டு, தொடர்ச்சியாக தமிழின விரோதி செயலில் ஈடுபடும் ஒருவர், இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் நிகழ்வில், அதுவும் சர்வதேச மட்டத்தில் போர்க்குற்றவாளியாக கருதப்படும் ஒருவருடன் மேடையை பகிர்ந்துகொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பல சர்வதேச உளவு நிறுவனங்களுடன் பல காலமாக இணைந்து செயல்பட்டு வருபவர் தான் சுப்ரமணியசாமி. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-விற்கு சுப்பிரமணிய சாமி முகவராக செயல்பட்டு, இங்கிருந்து ரகசிய தகவல்கள் அனுப்பியதாக விக்கி-லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் உடன் நெருக்கமாக இருந்து வருபவர். ராஜீவ் கொலையின் போது, சுப்ரமணியசாமி நடவடிக்கைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவரது உதவியாளராக இருந்த திருச்சி வேலுச்சாமி எழுப்பினார். அதேபோல், ராஜீவ் கொலையில் சர்வதேச கோணங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜெயின் கமிசன், சுப்பிரமணிய சாமி மீதும், சந்திராசாமி மீதும் பல கேள்விகளை வைத்தது. ஆனால் இன்றளவும் சுப்ரமணியசாமி விசாரிக்கப்படவே இல்லை.
ஏழு தமிழர் விடுதலை குறித்த பேச்சு எழும் போதெல்லாம், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பல பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி ஏழு தமிழர் விடுதலையில் சிக்கலை உண்டாக்க முயல்பவர் தான் சுப்பிரமணிய சாமி. அதே போல், இந்திய-இலங்கை கூட்டு சதியில் புலிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து மேற்குலகம் சார்ந்த இந்தியாவின் புவிசார் நலனை பாதுகாக்க முயற்சி செய்து வருபவர். சமீபத்தில் முன்னாள் போராளி என்று ஒருவரை போதைப்பொருள் கடத்தியதாக என்ஐஏ கைது செய்துள்ளது. தமிழினப்படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவதாக கூறிக்கொண்டு தங்கள் புவிசார் நலனுக்காக இனப்படுகொலை குற்றவாளிகளை காப்பாற்றும் வேலையில் மேற்குலகம் முயற்சிக்கும் வேலையில், தங்கள் தோல்வியை மறைக்க புலிகள் மீது அபாண்ட குற்றங்களை சுமத்தும் வேலையை அமெரிக்கா-இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த பின்னணியில் தான் தமிழின விரோத சுப்பிரமணிய சாமி போர்க்குற்றவாளி கமால் குணரத்னே உடன் இணைந்து பேசவிருப்பதை காண வேண்டும்.
மேலும், இந்த பார்ப்பனிய கும்பலின் மேலாதிக்கத்துக்காகத் தான் தமிழர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சிங்கள பௌத்த பேரினவாதத்தோடும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளோடும் கூட்டு சேர்ந்து இந்திய பார்ப்பனிய பயங்கரவாதம் தமிழர்களை அழித்து ஒழித்தது. எங்கே இந்தவெளியுலகுக்கு தெரிந்துவிடுமோ என்று பயந்து தான், தொடர்ந்து இனப்படுகொலை இலங்கை அரசாங்கம் இந்தியாவைப் புறக்கணித்து சீனாவோடு நட்புறவு கொண்டாலும் இந்தியா இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து பேசாமல் நெருக்கமாக போகவே நினைக்கிறது.
அதெல்லாம் ஒன்றுமில்லை சுப்பிரமணியசாமி அவரது தனிப்பட்ட பயணமாக இலங்கைக்கு செல்கிறார் என்று இந்திய அரசு சொல்லுமேயானால், நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. சுப்பிரமணியசாமி இலங்கைக்கு சுற்றுலாவுக்கு செல்லவில்லை. இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்தின் இராணுவம் ஏற்பாடு செய்திருக்கும் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறார்.
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் சுப்பிரமணியசாமி முதலில் பாஜக உறுப்பினர்; அதையும் தாண்டி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இன்னொரு நாட்டின் அரசு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொள்ள வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமல் போக முடியாது. ஆக, இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்தின் விழாவில் இந்திய அரசின் ஒப்புதலோடு தான் சுப்பிரமணியசாமி கலந்து கொள்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை!
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், அந்நாட்டுடன் இந்தியா எந்தவித உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அதை கொஞ்சமும் மதிக்காத பார்ப்பன பயங்கரவாதம் சிங்கள பௌத்த பேரினவாதத்தோடு தங்களது ஆரிய இன உறவை பேணி காப்பதில் தான் தொடர்ந்து குறியாக இருக்கிறது என்பதைத்தான் இந்த நிகழ்வு காட்டுகிறது.
இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான தீர்வுக்காகவும் சர்வதேச மட்டத்தில் தமிழர்கள் கடந்த 12 ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தொடர்ந்து இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்தை காக்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து குறிப்பாக இந்திய அரசாங்கங்களின் இதுபோன்ற செயல்கள், பாதிக்கப்பட்ட தமிழர்களின் விடியலை பின்னோக்கி இழுப்பது மட்டுமில்லாமல் அதை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்தும் செயலாகும். ஆகவே, இந்த பார்ப்பன பயங்கரவாதத்தின் சதித்திட்டத்தை முறியடிக்க தமிழர்கள் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவை எழுகிறது.