சிங்களப் பேரினவாத கப்பற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருந்த ’தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவமானப்படுத்தி இருக்கிறது’ இலங்கை அரசு. இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலமாகியும் இன்னும் மோடி அரசு இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
சிங்களக் கடற்படை கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறித் தாக்குகிறது. வலைகளை அறுத்து கடலில் வீசுவதையும், மீன்களையும், படகுகளையும், ஜி.பி.எஸ் போன்ற அதிநவீன கருவிகளை வன்முறையாக பறிக்கிறது. மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், அளவுக்கு மீறிய அபராதம் விதிப்பதும் போன்ற அட்டுழீயங்களும் தொடர்கிறது. சிங்கள இனவெறி கப்பற்படை, தங்கள் கப்பலால் தமிழக மீனவர்களின் படகுகளில் மோத செய்வது, கற்களை வீசி காயப்படுத்துவது, துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடிப்பதுமான கொலை முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொலை செய்துள்ளது.
இந்நிலையில், ராமேசுவரத்தில் இருந்து ஆகஸ்டு 27, 2024 அன்று மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் சிங்கள இனவெறி கப்பற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். 3 மீனவர்களுக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபதாரமும் கட்ட உத்தரவிட்டார். மீனவர்கள் அபராதத் தொகையை குறிப்பிட்ட நாளில் கட்ட தவறியதால், இனவெறி இலங்கை அரசின் சிறைத்துறை தமிழக மீனவர்களை கைவிலங்கிட்டு மொட்டை அடித்திருக்கிறார்கள். சிங்கள கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிவறைகளை சுத்தம் செய்யவும் வைத்திருக்கிறார்கள். வளாகத்திலுள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தியதாக சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர் அத்துமீறல் மற்றும் மனித நேயமற்ற செயலை கண்டித்தும், மீனவர்கள் பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய ஒன்றிய அரசு மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் தமிழ்நாடு தழுவிய அளவில் இந்திய ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குஜராத் மீனவன் மீது பாகிஸ்தான் கப்பற்படை தாக்குதல் நடத்திய போது பிரதமர் மோடி, உள்துறை அமித்சா, வெளியுறவுத்துறை ஜெய்சங்கர், சட்டமைச்சர் அர்ஜீன்ராம் மேக்வால், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ என பல்வேறு பாஜக தலைவர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள் வன்மையான கண்டனம் செய்தனர். வடநாட்டு ஊடகங்கள் முழு நேர விவாதங்கள் நடத்தின. ஆனால் தமிழர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய சம்பவத்தினை மோடி அரசும் கண்டு கொள்ளவில்லை. எதிர்கட்சியான காங்கிரசும் கண்டிக்கவில்லை.
இலங்கை கப்பற்படை விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் புலிகளைக் குறிவைக்கிறோம் எனும் பெயரில் 2002-2006 வரை கிட்டத்தட்ட 200 மீனவர்கள் வரை படுகொலை செய்தது. 2021-ல் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ராஜ்கிரண் என்ற மீனவரை இலங்கை கப்பற்படை கைது செய்து, சித்ரவதை செய்து கொன்றது. 2024-ஆகத்து மாதம் மலைச்சாமி என்ற மீனவரை, கண்காணிப்பு கப்பலால் மோதிக் கொன்றனர். கடலில் குதித்த இன்னொருவர் நிலை என்னவென்று தெரியவில்லை. இப்போது கைது செய்து, மொட்டையடித்து தமிழக மீனவர்களை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறது.
தமிழர்கள் மீது சிங்களர்கள் கொண்ட இனவெறி, பாரம்பரியமான பகுதிகளில் மீன் பிடித்தாலும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக சிங்கள அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்துவதற்கு காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கினாலும், கைது செய்தாலும் இந்திய ஒன்றிய அரசு அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. காலம்காலமாக மீன்பிடித்தொழில் செய்துவரும் பகுதியை இந்திய ஒன்றிய அரசு உறுதி செய்யவில்லை. மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் அமைத்திட வேண்டுமென தொடர்ந்து போராடி வருகிறார்கள் அதையும் கண்டுக்கொள்வதில்லை மோடி அரசாங்கம்.
தமிழக மீனவர்களை கொலை செய்யும் இலங்கை இனவெறி கடற்படை மீது இதுவரை திமுக அரசும் கொலைவழக்கை பதிவு செய்யவில்லை. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் கண்டன அறிக்கைகள் கொடுக்கிறார்கள். சர்வதேச விதிகளை மீறும் இலங்கை கப்பற்படை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேசிய கட்சிகள் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவில்லை.
”சிங்கள இனவெறி அரசு மட்டுமல்ல, இந்திய கடற்படையே தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதையும் கடந்த காலங்களில் நடந்துள்ளது. இந்திய அரசுக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை என்பதையே மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சம்பவங்கள் காட்டுகின்றன”. தமிழர்களை அழிக்க நினைக்கும் இலங்கைக்கு இந்திய அரசும் துணைபோகிறது என்பதையே இச்சம்பவங்கள் தெளிவுப்படுத்துகிறது.
Ocean Forum மாநாட்டில் WTO ஒப்பந்தம் அடிப்படையிலேயே தேசியகடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச்சட்டத்தை 2021-ல் மோடி அரசு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் வரைவுகள் மீனவர்களை மீன்பிடித்தொழிலை விட்டு அப்புறப்படுத்தும் நோக்கம் கொண்டது. மேலும் ஒன்றிய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள வரைபடத்தில் தமிழ்நாட்டில் 512 மீனவ கிராமங்களில் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த கிராமங்கள் விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்காக இந்தப் பெயர் நீக்கம் நடந்திருக்கிறதா என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். சுனாமி, கஜா புயல், ஒக்கி புயல், வர்தா புயல் மற்றும் மிக்ஜாம் புயல் போன்ற பேரிடர் நேரங்களில் மீனவர்கள் படகு கொண்டு வந்து தற்போதுவரை நம்மை பாதுகாக்கின்றனர். ஆனால் வானில் சாகசம் செய்யும் இந்திய இராணுவப்படை ஒக்கி புயலில் மீனவர்கள் வீடு திரும்ப முடியாமல் கடலில் சிக்கிய போது, அவர்களை காப்பாற்ற செல்லவில்லை.
அதானிக்கு கொழும்பு துறைமுகத்தை, காற்றாலை ஒப்பந்தத்தை வாங்கிக் கொடுக்க அலைந்த மோடி, மீனவர்கள் மீது நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் கடக்கிறார். குஜராத்தி, பனியாக்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்களுக்காக, இந்தியப் பார்ப்பனியத்தினால் வகுக்கப்படும் வெளியுறவுக் கொள்கையில், தமிழர்களின் படுகொலைகளைப் பற்றியான எந்த தீர்வும் இல்லை. இந்திய ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கையில் தமிழ்நாட்டின் பங்கும் இருக்க வேண்டும். இது தொடர்ந்து மறுக்கப்படுமானால் தமிழ்நாட்டிற்கென்று தனி வெளியுறவுக் கொள்கை வகுப்பதே மீனவர் படுகொலைகளுக்கு தீர்வாக அமையும்.
தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்தியிருக்கும் இலங்கை இனவாத அரசின் எதேசதிகாரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தினம் தினம் சிங்கள கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கி, கைது செய்தபோது பரபரப்பான செய்திகளாக்கப்படவில்லை, தொடர்ந்து சிங்கள இனவெறித் தாக்குதல் அதிகமானபோது மீனவர்களை பற்றிய செய்திகளும் அதிகரித்து அதை பெரிய விவாதமாக்கவில்லை. சமூகநீதி பேசும் ஊடகங்கள் தமிழர்களுக்கு நடந்த அவமானத்தை தேசிய அளவில் கொண்டு சேர்க்கவும் இல்லை. மீனவர்களை மொட்டையடித்து, கழிவறைகளை சுத்தம் செய்து அவமானப்படுத்திய இந்த நிகழ்வைப் மீண்டும் மீனவர்களுக்கு நிகழாது என்பது நிச்சயமில்லை. தமிழர்களின் தன்மானத்தை சீண்டிய நிகழ்வை கடந்து போக முடியாது. நாம் ஒற்றுமையின் பலத்தை காண்பிக்க வேண்டும். நம் தமிழக மீனவர்களுக்கு நாம் தான் குரல் எழுப்ப வேண்டும், போராட்டங்களுக்கு துணிய வேண்டும்.