காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைத்த உச்சநீதிமன்றம்! காஷ்மீர் மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் தவறான முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளது உச்சநீதிமன்றம்! – மே பதினேழு இயக்கம்
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசமைப்பின் 370வது பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் 370வது பிரிவு நீக்கப்பட்டது செல்லும் என 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் அரசமைப்புக்கு எதிரான நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பு, காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அரசமைப்பு ரீதியான சிக்கல்களை உருவாக்கும் வகையில் இந்த தீர்ப்பு பல தவறான முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளதாக மே பதினேழு இயக்கம் அஞ்சுகிறது.
ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட பல நிபந்தனைகளோடு நெருக்கடியான சூழலில் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட பகுதியாகும். அதற்காக உருவாக்கப்பட்டதே இந்திய அரசமைப்பின் 370வது பிரிவாகும். இதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையை 1956-இல் கலைக்கப்பட்டதானால் இந்திய ஒன்றியத்திற்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையேயான உறவு 370வது பிரிவில் வரையறுக்கப்பட்ட நிலையிலேயே நீடித்தது. ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதனால் 370வது பிரிவின் 3வது விதியை இந்திய குடியரசுத் தலைவர் பயன்படுத்த முடியாது என்றாலும், இந்திய அரசமைப்பின் 370வது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவுக்கும் காஷ்மீருக்குமான அதிகாரப்பூர்வ உறவு அறுந்துபோய்விட்டது என்பதே உண்மை. பாகிஸ்தானை போன்று காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்பதே தற்போதைய நிலை.
இந்த கூற்றுகளை உச்சநீதிமன்றம் அறிந்தபடியினாலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக 370வது பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளமால் கிடப்பிலேயே வைத்திருந்து, தற்போது நீதிபதிகளின் புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அரசியலமைப்பிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. 370வது பிரிவு நீக்கப்பட்டவுடன், காஷ்மீர் மீதான அனைத்து அதிகாரத்தையும் இந்திய அரசு இழந்துபோன நிலையில், அல்லது குடியரசுத் தலைவரின் உத்தரவை அனுமதிக்க ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபை இல்லாத நிலையில், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அரசமைப்பின் முதலாவது பிரிவை நீதிமன்றம் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள இயலாததாகும்.
தீர்ப்பில், 370வது பிரிவு தற்காலிக ஏற்பாடு என்று கருதும் நீதிமன்றம், நிரந்த ஏற்பாடு உண்டாவதற்கு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி, பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றியதா என்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். மேலும், இந்தியாவுடன் இணைய கையெழுத்திட்ட பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை என்று நம்புவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தற்காலிகமான ஏற்பாடு நிரந்தமாக்கப்படும் வரை status quo எனப்படும் நடைமுறை நிலையே நீடிக்கும் என்று நீதிமன்றம் அறியாதா? எனில், வெளியுறவு, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு தவிர்த்து ஜம்மு காஷ்மீர் மீது இந்திய ஒன்றியத்திற்கு எவ்வித இறையாண்மையும் இல்லை என்பது நீதிமன்றத்திற்கு தெரியாதா?
மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து இரண்டையும் ஒன்றியப் பகுதிகளாக மாற்றியதை இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 1-ன் படி சரி என்கிறது. 370வது பிரிவு நீக்கப்பட்டதாலும், அல்லது ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை இல்லாததாலும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் மீதான முழு அதிகாரத்தையும் குடியரசுத் தலைவர் இழந்துவிட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களின் அனுமதியின்றி இரண்டாக பிரித்ததும், அவைகளை ஒன்றியப் பகுதிகளாக அறிவித்ததும் முறையற்றதாகும். விரைவில் மாநிலங்களாக மாற்றப்படும் என்று ஒன்றிய அரசு கூறும் வார்த்தையை ஏற்று சட்டவிதிகளை பார்க்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை ஏற்பது என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகும். ஏனெனில், இதே போன்று மற்ற மாநிலங்களின் மீது ஒன்றிய அரசு தன்னிச்சையாக அதிகாரம் செலுத்தக்கூடிய வாய்ப்பை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. இங்கு அரசியலமைப்பு கூறும் ‘இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்’ என்பதற்கு எதிரான நிலையை உருவாக்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
இவ்வாறாக, அரசியலமைப்புக்கு உட்பட்டு ஆராய்ந்து தீர்ப்பு வழங்க வேண்டிய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, அரசியலமைப்பை கேலிக்குள்ளாக்கும்படி சட்டவிதிகளை பின்பற்றாமல் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட தீர்ப்பாகும். நீதியின் பக்கம் நிற்க வேண்டிய உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரத்தின் பக்கம் நின்றுள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காஷ்மீர் மக்களுக்கு இழைத்த வரலாற்றுத் துரோகமாகும்.
மீண்டும் ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகள் ஒரே மாநிலமாக ஒன்றிணைக்கப்பட்டு அவற்றிற்கு சிறப்பு அதிகாரம் திரும்ப வழங்கப்படுவதே காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச நீதியாக இருக்குமென மே பதினேழு இயக்கம் கருதுகிறது. அதே வேளை, இந்தியா உறுதியளித்தபடி, பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய பொதுவாக்கெடுப்பை காஷ்மீர் மக்களிடையே நடத்தி மக்களின் நம்பிக்கையை வென்று ஒன்றியத்துடன் இணைக்கப்படுவதே ஜனநாயகத்தின்படி முறையான செயலாக இருக்கும். காஷ்மீர் மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு காத்திருப்போம்!
மே பதினேழு இயக்கம்
9884864010