பெருவெள்ளம் வடிய அரசு என்ன செய்ய வேண்டும்?

பருவநிலை மாற்றமா? சென்னையின் புவியியல் இட அமைவா? ஏரிகளை ஆக்கிரமித்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களா? யார் காரணம்? என்ன காரணம்? என்று ஒவ்வொரு சென்னைவாழ் குடிமக்களும் மிக்ஜாம் புயலுக்கான காரணங்களை தற்போது அலசிக் கொண்டிருக்கக் கூடும். சமூக வலைத்தளங்களில் 2015 வெள்ள பாதிப்புகளையும் 2023 வெள்ள பாதிப்புகளையும் ஒப்பீடு செய்து கொண்டே இருக்கக் கூடும். ஆனால் அன்றும் இன்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நின்று கொண்டிருக்கிறது மே 17 இயக்கம்.

கடந்த டிசம்பர் 3 அன்று, சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்படுவதற்கு முன்னரே மிக்ஜாம் புயல் குறித்து IMD மற்றும் சில தனியார் வானிலை முன்னறிவிப்பாளர்கள் துல்லியமாகக் கணித்து எச்சரிக்கை செய்திகளை விடுத்தனர். தீவிர கனமழை எச்சரிக்கை விடப்பட்டப் பின்னரும், இத்தகைய இயற்கை சீற்றங்களை நாம் எதிர்கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகள்தான் இன்றைய விவாதப்பொருளாகி இருக்க வேண்டும். 

காலநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் கடல் மட்ட உயர்வும் மிக முக்கிய காரணிகள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற கடற்கரை நகரங்களுக்கு புயல் பாதிப்புகள் இனி அடிக்கடி எழக்கூடும் என்று  IPCC அறிக்கையின்படி பல ஆய்வுகள் எச்சரித்திருந்தன.

“இந்தியாவில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், ஆண்டுதோறும் மழைப்பொழிவு சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும். சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இந்திய துறைமுக நகரங்களில் கடல் மட்டம் 50 செமீ உயர்ந்தால், கிட்டத்தட்ட 2.86 கோடி மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவார்கள். எனவே வெப்ப அலைகள், புயல்கள், சீரற்ற பருவ மழை, குடிநீர் பற்றாக்குறை, பெருவெள்ளம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று அனைத்து வகையான பேரிடர்களுக்கும் அரசு தகுந்த முன்னேற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்று குரல் பத்திரிக்கையில் கடந்த 2021ஆம் ஆண்டு கட்டுரையும் வெளியிடப்பட்டிருக்கிறது. (விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/climate-change-brings-disasters-to-the-world/)

இந்த காலநிலை மாற்றங்களோடு, நகரமயமாக்கலும் சேர்ந்து பெருவெள்ளமாக நம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இயற்கை உருவாக்கிய நீர்வழித்தடங்கள் மட்டுமே தண்ணீரை வெளியேற்ற போதுமானதாக இருந்தது. ஆனால் சென்னையின் ‘வளர்ச்சி’  பிம்பமாகக் காட்டப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெருகிய பின், நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு என்பது வெள்ளம் வரும்போது மட்டும் பேசுபொருளாகிறது. வெள்ளம் வடிந்தபின், நமது கவனமும் வேறு அரசியலுக்கு மடைமாற்றப்படுகிறது.

உலகில் கடல் மட்டத்திற்கு மிக அருகில் உள்ள இடங்கள் அனைத்தும் இவ்வாறான வெள்ளப்பெருக்கினை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்ற தேடலை இந்த பெருவெள்ளம் மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை கட்டப்பட்ட கட்டிடங்கள் நீங்கலாக, இனி வருங்காலத்தில் நாம் கையாளப்போகும் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களைக் குறைக்கும் வழிகளில் ஒன்று. அத்தகைய கட்டுமானத் தொழில்நுட்பத்தில் ஒன்று ஜப்பானில் உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகத்தரம் வாய்ந்த வெள்ளநீர் வெளியேற்றக் கால்வாய் ஒன்று (UNDERGROUND DISCHARGE CHANNEL) நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளது. தரையில் இருந்து சுமார் 50 மீட்டர் தோண்டப்பட்ட 6.3 கி.மீ. நிலத்தடி சுரங்கப்பாதைதான் அது. அங்கு வெள்ளநீரை சேமித்து வைப்பதற்கான செங்குத்து தண்டுகள் இருக்கின்றன. இந்த செங்குத்து தண்டுகள் ஒவ்வொன்றும் மிகவும் பிரம்மாண்டமான தொட்டிகளைப் போன்றது.(ஒவ்வொரு தொட்டியும் 500 டன் எடையுள்ள உயரமான தூண்களால் தாங்கப்படுகிறது).

2006-இல் இருந்து டோக்கியோ மக்களுக்கான மழைநீர் சேகரிப்புத் திட்டமாகவும் வெள்ளநீர் வடிகால் திட்டமாகவும் இந்த கட்டுமானம் செயல்படுகிறது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய இந்தத் திட்டம் ஜப்பானின் அதிநவீன சிவில் இன்ஜினியரிங் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்ததாகும்.

புவியியல் அமைப்பால் ஜப்பானின் ஆறுகள் பலத்த மழை பெய்யும்போது எளிதில் நிரம்பி விடும். எனவே, வெள்ளக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை தீவிரமாகக் கடைபிடிக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது.

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் இருந்து, தரைக்குக் கீழே கட்டப்பட்ட ஐந்து பிரமாண்டமான செங்குத்துத் தண்டுகளில் தண்ணீரை வெளியேற்றி, பின் தண்டுகளை இணைக்கும் நிலத்தடி சுரங்கம் வழியாக ஆறுகளில் வெள்ளநீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்டுகள் சுமார் 70 மீட்டர் உயரம், 30 மீட்டர் விட்டம் கொண்டவை. ஆறுகளில் வெளியேற்றப்படுவதற்கு முன், வெள்ள நீர் ஒரு பெரிய அழுத்தக் கட்டுப்பாட்டு தொட்டியில் (Pressure-controlled Tank) சேமிக்கப்படுகிறது. இந்தத் தொட்டி தரையில் இருந்து சுமார் 22 மீட்டர் கீழே,  177 மீட்டர் நீளமும், 78 மீட்டர் அகலமும் கொண்டது (ஒரு கால்பந்து மைதானத்தின் அளவை விட பெரியது). தொட்டியின் கட்டமைப்பை உற்றுப் பார்த்தால், பூமிக்கு கீழே ஆயிரங்கால் மண்டபம் இருப்பதுபோல் தெரியும்.

ஒவ்வொரு வடிகால் பம்ப்பிலும் ஒரு அதிவேக தூண்டி (high-speed impeller) உள்ளது. இது விரைவாக வெள்ளநீரை ஆறுகளுக்குள் வெளியேற்றுகிறது. ஆகஸ்ட் 2008இல் டோக்கியோ பகுதியில் கன மழை பெய்த போது , இந்த வடிகால் வசதியால்  சுமார் 12 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை ஆறுகளில் வெளியேற்ற முடிந்தது.

ஜப்பானின் இந்த வெள்ளக் கட்டுப்பாடு திட்டம் அப்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சீனா மற்றும் தென் கொரியா உட்பட பல நாடுகளில் இருந்து வெள்ளக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் இதை பார்வையிட்டுச் சென்றனர்.

சென்னை போலவே ஒரு சிறிய நிலப்பரப்பில் அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்டுள்ளன நாடு ஜப்பான். சிறிய நிலப்பரப்பில் இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான விடயம். ஆனால் ஜப்பான் தனது கட்டுமான பொறியியல் துறையின் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி இந்த வெள்ளநீர் வடிகால் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

சென்னையிலும் 2015 வெள்ளத்திற்குப் பிறகு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததை குறிப்பிட்டே ஆக வேண்டும். குறிப்பாக மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்கள் நகரத்தின் வெள்ள மட்டத்திலிருந்து சுமார் 0.6மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. இதனாலேயே அங்கு வெள்ளநீர் நுழைவது தடுக்கப்பட்டது. ( மெட்ரோ நிலையங்களில் அதிகளவில் உள்ள படிக்கட்டுகள் / நகரும் படிக்கட்டுகள் இந்த உயர்மட்ட நிலையை சமன் செய்தன.)

இதேபோன்று ‘SPONGE CITY’ எனப்படும் மழைநீரை உறிஞ்சும் தொழில்நுட்பங்களும்  திட்டமிடப்பட வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) இன்னும் பல புது தொழில்நுட்பங்களைத் தேர்வு செய்து அதற்கேற்ற வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு போன்ற மனிதவளம் அதிகமுள்ள மாநிலத்தில் கட்டுமானப் பொறியாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். எனவே இவர்களின் அறிவுத்திறனை நகரத்தின் கட்டுமானத் தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்துவது சாத்தியமான ஒன்றே.

தன் வாழ்நாள் உழைப்பான வீட்டை என்று வெள்ளம் சூழுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்படாவண்ணம் இவையனைத்தும் விரைந்து திட்டமிடப்பட்ட வேண்டும். ஆனால் இவையெல்லாம் ஒரே இரவில் செய்துவிட முடியாது. கட்டுமானத் தொழில்நுட்ப வளர்ச்சி இங்கு முழுமையாக செயல்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேரிடர் பாதித்த மக்களோடு நாம் துணை நிற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »