கீழ்வெண்மணி: ஆதிக்க மனநிலையின் கொடூரம்

செந்நெல் சுமந்த செழுமை நிலமாம் தஞ்சையில்  செந்நீரும், மரண ஓலமும் கண்ட ஒரு கொடுந்துயரமான சமூகக் கொலைக்களம்தான் கீழ்வெண்மணி. இங்கு நடந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின்   படுகொலையை,  இடைநிலை சாதியினர் அன்று வெளிப்படுத்திய ‘ஆதிக்க மனநிலையின் கொடூரம்’ என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள செழுமையான நிலப்பரப்பை கொண்ட கிராமம்தான் கீழ்வெண்மணி. இந்த அழகான  கிராமத்தில் , 1968 டிசம்பர் 25ம் தேதி,  முதலாளித்துவ கொள்கைகளில் ஊறிய  நிலக்கிழார்கள் நடத்திய இரக்கமற்ற வன்முறையால், ‘கீழ்வெண்மணி’  என்ற பெயரைக் கேட்டவுடன் இங்கு நடந்த  பாட்டாளி மக்களின் படுகொலைதான் நம் அனைவருக்கும் நினைவில் வரும். 20 பெண்கள் ,  19 குழந்தைகள், 5 முதியவர்கள் என 44 தாழ்த்தப்பட்ட  மக்களை அதுவும் விவசாயக் கூலிகளை,  ஒரு குடிசையில் அடைத்த நிலக்கிழார்கள், அவர்களை  துடிக்கத் துடிக்க தீயிட்டுக் கொளுத்திய,  நெஞ்சைப் பதற வைக்கும்   நிகழ்வுதான் கீழ்வெண்மணி படுகொலை.

 அன்று  தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகிதம்  தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. அதிலும் குறிப்பாக கீழ்வெண்மணி கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலை தருபவையாகவும் இருந்தன. இங்குள்ள நிலக்கிழார்களின்  நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் பலர்  இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

சாதி வெறியும் ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட நில உடைமையாளர்கள்,   இந்த வேளாண்  தொழிலாளர்களை  அடிமையாக நடத்திவந்தனர். நில உடைமையாளர்கள் சரியான கூலி கொடுக்காததால் தொழிலாளர்கள் இருவேளை மட்டுமே  உணவு உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ( அன்றைய கால கட்டத்தில்  பணமாக அல்ல, விளையும் நெல்லாகவே கூலி கொடுக்கப்பட்டு வந்தது. )

இத்தகைய சூழலில் ஆண் தொழிலாளர்களை விட  பெண் தொழிலாளர்கள் பட்ட இன்னல்கள் மிக அதிகம். குறிப்பாக   குழந்தை பிறந்த சிறிது நாட்களில் வேலைக்கு வந்தாக வேண்டும். அவர்களின் உடல் நிலை பற்றி  கட்டிய கணவன்கூட பேசக்கூடாது. மீறிப் பேசினால் சவுக்கடி, சாணிப்பால் தண்டனை போன்ற கொடுமைகள் நடந்தேறின. பெண்கள் தங்கள்  பச்சிளம் குழந்தைகளைத்  தாங்கள்  வேலை பார்க்கும் இடத்தருகே மரக்கிளையில் தொட்டில் கட்டி  விட்டு வேலை செய்ய வேண்டும் , இடையே பாலுக்கு அழுதாலும் போகக்கூடாது, மீறினால் மறுநாள் வேலை கிடையாது எனப் பல இன்னல்களை எதிர்கொண்டனர் பெண் தொழிலாளர்கள்.

இவற்றை எதிர்க்கும் எந்த தொழிலாளரும் வேலை இழப்பர். மேலும் அவர்கள் வேறு பண்ணையாரிடமும் வேலைக்கு போக முடியாத சூழல் இருந்தது. ஏனெனில் அன்று பண்ணையாளர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்து இத்தகைய கொடுமைகளை சட்டமாக இயற்றி வைத்திருந்தார்கள். இந்த சட்டங்களே தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்க அவர்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியது. 

இதற்கிடையில் 1960களில் இந்திய – சீனப்போருக்கு பின்னர் இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனால் பண்ணைத்தொழிலாளர்கள் நில உரிமையாளர்களிடம் கூலி உயர்வாக  அரைபடி நெல்லை அதிகமாக தருமாறு கேட்டனர். தங்களின் அன்றாட வாழ்க்கைக்கே பற்றாக்குறை இருந்ததாலேயே கூலி உயர்த்தி கேட்டனர் தொழிலாளர்கள்.  ஆனாலும் அவர்களுக்குக் கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

இந்த தொழிலாளர்கள் நிலையை அறிந்த பொதுவுடைமை கட்சியை  சேர்ந்த மணியம்மை, சீனிவாசராவ் போன்ற தோழர்கள் இணைந்து  ‘விவசாய  தொழிலாளர் சங்கத்தை ‘ துவங்கினர்.(1954 லேயே தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட திராவிடர் விவசாய தொழிலாளர்கள் சங்கம் மிகப்பெரும் இயக்கமாக உருவாக காரணமாக இருந்தவர்கள் பாவா நவநீத கிருஷ்ணன் மற்றும் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் அவர்கள். இவர்கள் பின்னர் பெரும்பாலான திராவிட விவசாயத் தொழிலாளர் சங்க தோழர்களுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் செங்கொடி அமைப்பில் சேர்ந்தனர்.)   இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்த  தொழிலாளர்கள் தங்கள்  கூலி உயர்வு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த சங்கத்தில் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்துவார்கள். அதில்  அனைத்து தொழிலாளர்களும்  கூடிப் பேசி தங்கள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துக்கொள்வார்கள். தொழிலாளர்களிடம் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உருவாக கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த சங்கமும் பெரும் பங்கு வகித்தன.

 இதைப் பற்றி  அறிந்ததும் பண்ணையார்கள் ஒண்றினைந்து ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்ற சங்கத்தை ஆரம்பித்தனர். அரைபடி நெல்லை கூலி உயர்வாய் கொடுக்க மனம் வராத நில உரிமையாளர்கள் தொழிலாளர்களுடன்   பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  அது தோல்வியில் முடியவே, “நேற்று வரை நம்முன் கைகட்டி கொத்தடிமையாக வேலை பார்த்தவர்கள் இன்று நம் எதிரமர்ந்து, கேள்வி கேட்டு பேச்சு வார்த்தை நடத்துவதா?” என்ற ஆணவத் திமிர் அவர்களின் மனதில் கனலாய் கனன்றது. தங்களுக்கு  எதிராக சங்கம் ஆரம்பித்தது மட்டுமல்லாமல் தங்களுடன்  சமமாக தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதையும்  பெரும் குற்றமாக நினைத்தனர்.  இதனால் கீழ்வெண்மணியை சார்ந்த  முத்துக்குமார், கணபதி என்ற  இருவரை கட்டி வைத்து அடித்தனர்.  இதனை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  இதனால் பெருங்கலவரம் தொடங்கிற்று.

1968 டிசம்பர் 25ம் தேதி, உலகமே கிறிஸ்து பிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடிக்கொண்டிருக்க, கீழ்வெண்மணி மக்களோ இரத்த வெள்ளத்தில், உடல் எரிந்து கருகிக் கொண்டிருந்தனர்.

தனக்கு அடிமையாய் இருந்தவர்கள் தன்னை எதிர்த்து கேள்வி கேட்பதா என்ற ஆத்திரத்தில் பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்ற நபர் தலைமையில் அடியாட்கள்  பலர் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிசான் போலீஸ் துணையுடன் இந்தப்  படுகொலையை அரங்கேற்றினார்கள்.

 விவசாயிகளும் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். அப்போது  கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில், அக்குடிசை எரிந்து சாம்பலானது. இவ்வாறு பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருக படுகொலை செய்யப்படனர்.

இந்த சம்பவத்தில் காவல்துறையால் இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. முதல் வழக்கில் தொழிலாளர்கள் 120பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதியபட்டு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  மேல் முறையீட்டுக்காக வழக்குகள் சென்றன.  முதல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஜாமீன் வழக்கியது. 

இது மட்டுமின்றி இறுதித் தீர்ப்பில் “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருமே நிலக்கிழார்களாக இருப்பது வியப்பாக உள்ளது.  அவர்கள் அனைவரும் பணக்காரர்கள் .  கவுரவமிக்க சமூக பொறுப்புள்ள அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்” என்று இருந்தது.  இந்தத் தீர்ப்புதான் நில உடைமையாளர்களை  விடுதலை செய்தது.  (அதாவது பணம் வைத்திருக்கும் நபர் குற்றவாளி ஆகமாட்டார்.  பணமே அவருக்கான சமூக தகுதியை கொடுக்கிறது என்பதுதான் வேதனை.)

கோபாலகிருஷ்ணன் விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு  புரட்சிகர இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த எழுவரால், கீழ்வெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார்.  அந்தக் கொலை தொடர்பாக காவல்துறை சிலரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான  திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திராவிடமணியை மிக மோசமாக அடித்துத் துன்புறுத்தியது காவல் துறை. கைது செய்யப்பட்டவர்கள் மேல்முறையீட்டுக்குப்பின் (1985-இல் ) விடுதலை    செய்யப்பட்டார்கள்.

அரைப்படி நெல் கூலி உயர்வாய்க் கேட்டதற்காக 44 உயிர்களை உயிரோடு எரித்தார்கள் நிலவுடமையாளர்கள் என்பதாக மட்டுமே இதைப்  பார்க்க முடியாது. “விளைச்சலுக்காக பாடுபட்ட எங்களுக்கு சரியான கூலிவேண்டும், மொத்த உற்பத்தியை கணக்கிட்டு அதற்கு தக்க கூலிவேண்டும், அதுவும் விளைச்சல் இடத்திலேயே வேண்டும்” எனவும் “உங்கள் வீட்டின் பின்புற புழக்கடையில் வந்து காத்து நிற்க மாட்டோம்” என்று தொழிலாளர்கள்  சொன்னதுதான் நிலவுடைமையாளர்கள் செய்த படுகொலைக்குக் காரணம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அநீதி ஏற்பட்டால், சட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் துணையாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலக்கிழார்கள் விடுவிக்கப்பட்டது, மக்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.  “அடித்தள மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் கீழ்வெண்மணி வழக்கில் (கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு)அளித்த தீர்ப்பு தவறு என்பதை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவிப்பதே அம்மக்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்” என்பார்  நீதியரசர் கே. சந்துரு.

அதோடு ஒடுக்கப்பட்ட  (தொழிலாளர்) மக்கள்  மீது நிலவுடைமை  சமூகம் காலங்காலமாக நிகழ்த்தி வந்த சமூக அடக்குமுறையை  எதிர்த்து அவர்கள் யோசித்ததால் ஏற்பட்ட மாற்றங்கள் , மேல்சாதி மனப்பான்மையை எதிர்க்க தொழிலாளர்  முனைந்தது– இவையும் கீழ்வெண்மணிப் படுகொலைக்கு மிக முக்கியமானக் காரணம்.

தன்மானமும் சமத்துவமும் மிக்க வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதை பல்லாண்டு காலமாய் வாழ்ந்துவந்தது தமிழனின் வரலாறு. ஆனால்,  காலம் செல்ல செல்ல ஏற்றத்தாழ்வுமிக்க சாதியச் சமூகம் தமிழ் நிலத்திற்குள் புகுத்தப்பட்ட பொழுது, உழைக்கும் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். தன்மானச் சமத்துவ குணத்துடன் வாழ்ந்த மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

“நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” என்று கூறுவார் தந்தை பெரியார். கீழ்வெண்மணியில் நடந்தது  கூலி உயர்வுக்கான போராட்டம் என்றாலும் அதில் உரிமையும் – சுயமரியாதையும் முதலாகப் பார்க்கப்பட்டது. உழைக்கும் விவசாய வர்க்கத்தின் முன்னேற்றம் என்பது வெறும் கூலி உயர்வால் மட்டுமே வந்துவிடாது. ஒட்டு மொத்த சமூக மாற்றத்தினால் மட்டுமே அது முடியும்.

கீழ்வெண்மணிப் படுகொலை என்பது உழைக்கும் வர்க்கத்தினரின் மீதான  அதிகார ஒடுக்குமுறையாக ஆரம்பித்து, அம்மக்களின் மீதான சாதிய ஒடுக்குமுறையாக வேர் பிடித்து வளர்ந்த உண்மை வரலாறு. இன்றும் இந்தியா முழுமையும் நடக்கும் பல்வேறு தொழிலாளர் வர்க்க ஒடுக்குமுறைகளின் பின், எளிய மக்களை ஆட்டிப்படைக்கும் முதலாளித்துவமும் அதற்கு துணை போகும் அரசும் உள்ளதை நாம் மறுக்க இயலாது. மக்களை நேர்வழியில் அரசியல்படுத்தும் முறைகளே  இந்த நிலையை மாற்றும் வழியாக நாம் கருத வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »