மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது, தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு, மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்களின் பதிலடி:
வழக்கம் போல வசவுகளை விமர்சனம் எனும் பெயரில் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் சார்பில் தோழர் அருணபாரதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 2009 இனப்படுகொலை போரின் போது மாணவராக தோழர் செந்தமிழன் (ஐயா மணியரசன் அவர்களின் மகன்), தோழர் திருமுருகன் காந்தி, தோழர் இராசாராம் உள்ளிட்ட தோழர்கள் இணைந்து உருவாக்கிய இளந்தமிழர் பாசறையில் அறிமுகமானவர். அவரது அறிக்கையில் உள்ள தகவல் பிழை அல்லது அரசியல் கருத்துப்பிழை என்னவென முதலில் காண்போம்…
1) ஈழப்படுகொலையில் இந்திய ஆரிய அரசை அம்பலப்படுத்தாமல், தமிழ்நாட்டின் அதிகாரவர்க்க ஒட்டுண்ணிகளை மட்டுமே அடையாளப்படுத்தி, இந்திய ஆளும்வர்க்கத்தின் பக்கம் மக்கள் கவனம் சென்றுவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் நாம் தமிழர், த.தே.பே மற்றும் இதர ‘சாதியவாத தமிழ்த்தேசியர்கள்’ நோக்கிய கேள்விகளே, ‘இந்தியத்தை எப்போது அம்பலப்படுத்த போகிறீர்கள்‘ எனும் எங்கள் கேள்வி. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட திமுக, அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் அதிமுக மட்டுமே முதன்மை எதிரிகளாக மாற்றிக்காட்டுவதால், தமிழ்நாட்டில் இக்கட்சிகளுக்கு மாற்றாக வேறுகட்சிகள் ஆட்சிக்கு வரலாம். அப்படியான மாற்று கட்சிகள், இந்தியாவின் கொள்கையை மாற்றிவிடும் அதிகாரம் கொண்டவையா என்பதை குறித்து மக்களிடம் விளக்காமல் மாநில அதிகாரத்தை வைத்து இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்பு கொள்கையை மாற்றிவிடலாம் எனும் மாய்மாலத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் எனும் கேள்விக்கு பதில் இல்லை. திமுகவும், அதிமுகவும் மக்களிடையே அம்பலப்பட்டுப்போன கட்சிகள். அவற்றின் பணபலத்தால் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவை. தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மைய அதிகாரமே முதன்மை எதிரியாக மக்களை உணர வைக்காமல், மாநிலங்களை மட்டுமே குறிவைப்பது அடக்குமுறைக்கு உள்ளாகாமல் தப்பிக்கும் யுக்தி என்பதை மே 17 இயக்கம் சுட்டிக்காட்டியதற்கான பதிலை சொல்லாமல் மடைமாற்றிய பதிலால் எவ்வித பயனும் இல்லை. உங்களது மாதாந்திர பத்திரிக்கையில் அறிக்கை விடுவதோடு இந்தியத்தை அம்பலப்படுத்திவிடுவதாக நீங்கள் நம்புவதும், பேட்டிகளில் திமுக-அதிமுக ஒன்றிய அரசிற்கு எதிராக கருத்து சொல்லி தப்பித்துக்கொள்வதும் வேறுவேறானவையா? ஒன்றிய அரசை நோக்கிய கேள்விகளை 2009 இனப்படுகொலைக்கு பின் தமிழகத்தில் எழுந்த தமிழ்த்தேசிய உணர்வின் மையப்புள்ளியாக இருந்தது. இதன் காரணமாகவே காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக முறித்துக்கொள்ளும் நிலை உருவானது. காங்கிரஸ் தனித்து விடப்பட்டதன் காரணம், தமிழ்நாட்டில் எழுந்த தமிழ்த்தேசிய உணர்வு நிலை. மாணவர் எழுச்சி போராட்டங்களில் எழுந்த ‘தமிழ்நாடு விடுதலை’ எனும் முழக்கங்களை அடுத்த ஓரிரு வருடத்திற்குள்ளாக மடைமாற்றியது நாம் தமிழர் கட்சியின் சீமானும், உங்களது அதிதீவிர திராவிடர் எதிர்ப்பு ஒவ்வாமையும். ஒன்றிய அரசினை எதிர்த்த ஜல்லிக்கட்டு போராட்டங்கள் அதிமுகவை, பாஜகவை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தியது. இந்திய தேசிய கட்சிகள், மாநில அதிகாரவர்க்க திராவிட கட்சிகள் ஆகிய இரண்டு அணிகளும் நெருக்கி பின்னுக்கு தள்ளப்பட்டு மாற்று அரசியல் உணர்வு தமிழ்நாட்டில் எழுந்தது. ஈழ இனப்படுகொலையில் தனிமைப்பட்டவை திமுக-அதிமுக ஆகிய கட்சிகள். இதில் அதிமுக நோக்கி ஈழ போராட்டத்தை முன்வைத்து வாக்கு சேகரித்து மடைமாற்றிய சீமான் உங்களின் நெருங்கிய பங்காளி. அவர் அதிமுகவிற்கு வாக்கு கேட்டபொழுது, இரண்டு திராவிட கட்சிகளையும் எதிர்த்து பரப்புரை செய்தவர்கள் மே 17 இயக்கத்தினர். ஈழம், கூடன்குளம், மூவர் தூக்கு, முல்லைப்பெரியாறு எழுச்சி ஆகியன திமுக-அதிமுக ஆகிய கட்சிகளை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தின. இந்த போராட்டங்களில் முன்னனி பாத்திரமும், பரப்புரையும் மேற்கொண்டவர்கள் திராவிட இயக்கத்தவர்கள். கிட்டதட்ட 2009லிருந்து 2016 வரை திமுகவை தேர்தலில் தனிமைப்படுத்தியவர்கள் பெரியாரிய அமைப்புகள். தேர்தலில் இக்கட்சிகளை அம்பலப்படுத்தாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் த.தே.பேரியக்கத்திற்கு தேர்தல் காலத்திய மக்கள் கருத்து ஓட்டங்களை திமுக-அதிமுக நிராகரிப்பை நோக்கி நகர்த்திய திராவிடர் இயக்கங்கள், மே 17 இயக்கம் ஆகியவற்றின் களப்பணி புரிந்தாலும் அங்கீகரிக்கும் மனநிலை கொண்டவர்கள் அல்ல. இக்கட்சிகளை மக்களிடத்தில் த.தே.பேரியக்கத்தைவிட அதிகளவில் அம்பலப்படுத்தியவர்கள் திராவிட-மே 17 இயக்கத்தவர்கள். திமுக-அதிமுக கட்சிகளை அப்புறப்படுத்த மூன்றாம் அணியை உருவாக்க பெருமுயற்சி எடுத்தவர்களும் நாங்களே. சீமானை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் த.தே.பேரியக்கம், தமிழ்நாட்டில் சனநாயக தமிழ்த்தேசிய சிவில் சமூக கூட்டமைப்பு வந்துவிடக்கூடாதென்பதில் உறுதியாக நின்றதை மே 17 இயக்கம் அம்பலப்படுத்த சில சம்பவங்களை குறிப்பிட்டிருந்தோம்.
முதலாவதாக, காவிரி உரிமை மீட்பு குழு தஞ்சை டெல்டா மண்டலத்திலிருந்து விரிவுபடுத்திய தமிழ்நாட்டின் சிக்கலாகவும், தமிழ்த்தேசிய உரிமை முழக்கமாகவும், மாநில கழக கட்சிகளை நிராகரித்து மக்கள் எழுச்சியை கட்டமைத்தது மே 17 இயக்கம். மெரினாவில் பல்லாயிரக்கணக்கான வெகுமக்கள் பங்கெடுத்த நிகழ்வும், தாம்பரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கெடுத்த மாநாடும், ஒன்றிய அலுவலக முற்றுகை போராட்டமும், ஐ.பி.எல் போராட்ட எதிர்ப்பு என பல போராட்டங்களை சென்னையில் உருவாக்கியது மே 17 இயக்கம். இப்போராட்டங்களில் காவிரி உரிமை மீட்பு குழு பங்கேற்காமல் விலகி இருந்தது எதற்காக என ஐயா மணியரசன் விளக்குவாரா? இக்குழுவில் அங்கம் வகித்து ஐயா மணியரசன் ஒருங்கிணைத்த நிகழ்வுகளில் தவறாது பங்களித்த மே 17 இயக்கத்தை நீக்கியதன் காரணம் என்ன என்பதை என்றேனும் சனநாயகமாக விளக்கினீர்களா? காவிரி போராட்டத்தை தங்கள் கைகளுக்குள்ளாக, தஞ்சைக்கான போராட்டமாக சுருக்கியது எதற்காக? காவிரி உரிமை தமிழ்த்தேசிய போராட்டமாக விரிந்ததை எதற்காக பிராந்திய சிக்கலாக மாற்றினீர்கள்? இவையெல்லாம் தமிழ்த்தேசிய பண்புகளா? எழுச்சியுடன் தோழர் வேல்முருகன் நடத்திய 150 சனநாயக அமைப்புகள் இணைத்த கூட்டமைப்பு போராட்டங்களுக்குள்ளாக பெரும்முயற்சி எடுத்தே உங்களை சேர்க்க வேண்டியிருந்தது. அனைத்து தமிழர் உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு உருவெடுத்து போர்க்குணமிக்க தமிழ்த்தேசிய கூட்டமைவு உருவான பொழுது அதிலிருந்து நீங்கள் வெளியேறிய காரணமென்ன? திமுக-அதிமுகவிற்கு ஒப்ப இந்தியத்துடன் கொஞ்சி குலாவும் சீமானுடன் தங்குதடையின்றி கைகோர்க்கும் உங்களால் இந்திய-தமிழக அதிகார கட்சிகளை எதிர்க்கும் எங்களுடன் இணையாமலும்,.திராவிட ஆளும்வர்க்க கட்சிகளுக்கு மாற்று உருவாகமல் தடுத்த பணி உங்களுடையது.
இதைப்போலவே கர்நாடகத்தில் காவிரிக்காக தமிழர் மீது நடத்திய தாக்குதல் நடத்திய கன்னட அரம்பர்களுக்கு எதிராக போராடி பின்னரான காலத்தில் இந்த கன்னட இனவெறியர்களை அமைப்பாக திரட்டி தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ். என்பது அம்பலமான பொழுது பலவேறு சனநாயக அமைப்புகள் ஒன்றுதிரண்டு சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக முற்றுகைப் போர் நடத்திய நிகழ்வில் உங்களுக்கு மே 17 இயக்கம் அழைப்பு கொடுத்தது. கன்னட ரவுடிகளை மட்டுமே குறையாக சொல்ல இயலும், கன்னட இனவெறி மட்டுமே காரணி என கூறி இப்போராட்டத்தில் பங்கெடுக்காமல் தவிர்த்தீர்கள். ஆர்.எஸ்.எஸ் தமிழின விரோத அமைப்பாக இயங்குவது என்பதை நன்கு அறிந்தவராக இருந்தும் இப்போராட்டத்தில் பங்கெடுக்காமலும், பிற சனநாயக அமைப்புகளோடு இணையாமலும் தவிர்த்தது ஆரிய கும்பலுடனான சமரசமில்லையா? இந்த இரு நிகழ்வுகளே உங்களது போலி தமிழ்த்தேசிய அரசியலை அம்பலப்படுத்தியது. இந்தியதேசிய இடதுசாரி இயக்கத்திலிருந்த உங்களது ஆரம்பகால அரசியலில் உங்களுள் விதைக்கப்பட்ட தேசிய இன எதிர்ப்பு அரசியலையும், தேசிய இன எழுச்சிக்கான சூழலை நிராகரிக்கும் போக்கினையும், உள்ளார்ந்த தமிழ்தேசிய பற்றில்லாமல் குறுங்குழுவாத தமிழின எதிர்ப்பு அரசியலையே காண நேர்ந்தது. அரசியலில் பலவேறு காலகட்டங்களில் உருவாகும் புறச்சூழலை உள்வாங்கி எழும் சனநாயக இயக்கங்களோடு ஐக்கியம் ஏற்படுத்தியே தேசிய இனப்போராட்டங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. தேசிய இன முரண்கள் எழும் பலவேறு காரணிகள் பலவேறுவகையான மக்கள் திரட்சியை, சிறு சிறு மக்கள் ஒன்றிணைவுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றை பயன்படுத்தியே தேசிய இன அமைப்புகள் முன்னகர்கின்றன. இதற்கான சமகால உதாரணமாக பாலஸ்தீனத்தின் பி.எல்.ஓ உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் உட்பட வெகுசனமக்கள் முன்னனி வரையில் ஒன்றாகி போராட்டத்தை நடத்தின. காசுமீரில் ஹுரியத் கமிட்டி பலவேறு போராட்ட அமைப்புகளின் சனநாயக கூட்டமைவாக எழுந்தது. இப்படியான கூட்டமைவுகள், கூட்டியக்கங்கள், கூட்டு போராட்ட தலைமைகள் எழுந்த சமயங்களில் எல்லாம் அவற்றை எதிர்த்தே நீங்கள் அரசியல் செய்திருக்கிறார்கள். மிக மேலோட்டமான இந்திய ஆரிய எதிர்ப்பும், 1950-60களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த திராவிடர் இயக்க எதிர்ப்பும், பெரியாரிய எதிர்ப்பையும் தக்கவைத்திருக்கும் பழமைவாத சிறுகுழுவாகவே சுருங்கி நிற்கிறீர்கள். உங்களுக்குள்ளாக விதைக்கப்பட்டிருக்கும் இந்த வெறுப்பு ஒவ்வாமை அரசியல் தமிழ்த்தேசிய அரசியல் எழாமல் இருப்பதற்குரிய நகர்வுகளை செய்ய வைக்கிறது. உலகெங்கும் வெகுசன கட்சிகளில் எழுந்த மேலோட்டமான சுயநிர்ணய உரிமை குறித்தான கருத்துகளையே கொள்கை பிரகடனமாக முன்வைத்து, அதற்கான செயல்திட்டமில்லாமல் அடையாளபூர்வ போராட்டங்களை மேற்கொள்கிறீர்கள். ஆனால் உள்ளார்ந்து தமிழ்நாட்டில் வெகுசன தமிழின உணர்வு கொண்ட கூட்டமைவு உருவாகாமல் தடுக்கும் பணியை வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மேற்கொள்கிறீர்கள். இதே பணியை சீமானும் மேற்கொள்கிறார். இதனாலேயே நீங்கள் இருவரும் ஒன்றிணைவது எளிதாகிறது. தமிழின விரோத அரசியலுக்கு அடித்தளமாக இந்த இரு அமைப்புகளும் இயங்குகின்றன. தமிழக மக்களிடையே அம்பலமான திமுக-அதிமுகவிற்கு மாற்றை உருவாக்க விடாமல் ஒருபுறம் தடுப்பதும், மறுபுறம் பாஜகவிற்கு எதிரான கூர்மையான போராட்டங்களை முன்னெடுக்காமலும், மாற்று கூட்டமைவு வேண்டுமென்ற பிற அமைப்புகளை தனிமைப்படுத்தியும் நிறுத்தினீர்கள். தேர்தல் களத்தில் மாற்றுகூட்டணி உருவாகாமல் சீமான் தடுத்தார், மக்கள் இயக்கங்களில் சனநாயக ஒன்றிணைவு உருவாகாமல் த.தே.பேரியக்கம் தடுக்க முயன்றது. இதை செய்ய திராவிட எதிர்ப்பு எனும் ஆழமற்ற அவதூறு அரசியல் உங்களுக்கு பயன்பட்டது. பெரியார் மீதான உங்கள் அவதூறுகளுக்கு உரிய விடையை அளித்து எதிர்கேள்விகள் தோழர் வாலாசாவல்லவன் எழுப்பிய பொழுது கடந்து சென்றீர்கள். இச்செயலே உங்களது நோக்கத்தை விளக்கியது. தேசிய இன அரசியல் வழிகாட்டுதல் உங்களிடத்தில் இல்லை. தமிழ்த்தேசிய போராட்ட ஐக்கியத்திற்கு எதிராகவே செயல்படுகிறீர்கள். இந்தியாவிற்குள் எழும் தேசிய இனங்களின் போராட்டங்களோடு ஐக்கியம் கொள்ளாமல், தேசிய உணர்வை ஆரம்பகட்ட நிலையில் கொண்ட அண்டை தேசிய இனங்களோடு, தமிழ்த்தேசிய இனம் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்வதை கூர்மைப்படுத்துகிறீர்கள். தேசிய இனங்களோடு ஒன்றிணைந்து அண்டை மாநிலங்களுள் எழும் இனவாத அரசியலை தனிமைப்படுத்தி அண்டைதேசிய இனங்களோடு இணக்கத்தை ஏற்படுத்தும் அரசியலை திட்டமிட்டு மறுக்கிறீர்கள். அண்டைய அரசுகளின் இனவெறி அரசியலை, அம்மாநில மக்களின் அரசியலாக முன்மொழிகிறீர்கள். வி.புலிகள் சிங்கள இனவாத அரசை நோக்கியே போராட்டத்தை கூர்மைப்படுத்திய அதேசமயம், சிங்கள மக்களுடனான உறவிற்கும், தமிழீழ கோரிக்கையின் சனநாயக தன்மையை சிங்கள மக்களுக்கும் கொண்டு செல்ல முயன்றார்கள். சிங்கள சனநாயகவாதிகளுக்கான மேடைகளை தமிழர்களிடத்தில் அமைத்தார்கள். இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் செய்து இனவெறியர்களை தனிமைப்படுத்தாமல், அண்டை இனவெறியர்களுக்கு நிகராக தமிழகத்திலும் இனவெறியை ஊக்குவிக்கும் வலதுசாரி அரசியலையே முன்னெடுத்து வருகிறீர்கள். தமிழர் விரோத இனவெறிக்குள் அண்டை மாநில மக்களை கொண்டு செல்ல முயலும் சக்திகளை அந்தந்த மாநிலங்களில் எதிர்க்கும் சனநாயக அமைப்புகளுடன் கூட உறவை த.தே.பேரியக்கம் வளர்ப்பதில்லை. இது மென்மேலும் தமிழர்கள் நெருக்கடிக்குள்ளாகவே பயன்படும். இதன் வழியாகவே உங்களது அரசியல் தேசிய இனவிடுதலை அரசியல் திசையில் இல்லாமல், இந்திய பார்ப்பனியத்தின் பிரித்தாளும் அரசியலுக்கு துணை செய்வதாகவே உள்ளதால் உங்கள் அரசியல் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான அரசியலென்ற முடிவுக்கு மே 17 இயக்கம் வந்தது. இந்தியாவிற்குள்ளான தேசிய இன அரசியலுக்கு த.தே.பேரியக்கத்தின் எதிர்நிலை தமிழின அரசியலுக்கு இரண்டகத்தை செய்வதாகும். இது ம.பொ.சி தன் இறுதிகாலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக பரப்புரை செய்து இந்திய பார்ப்பனிய அரசியலுக்கு பயன்பட்டதைப் போன்ற நிலைக்கே செல்லும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
உங்களது கட்டுரையில் உள்நோக்கத்துடனோ, அறியாமலோ தெரிவிக்கப்பட்ட உண்மைக்கு மாறான (பொய்யான) தகவல்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
1) 2009 இனப்படுகொலை போரின் போது அதிமுகவிற்காக தோழர் திருமுருகன் காந்தி வாக்குகேட்டதாக சொல்லி இருக்கிறார். இது உண்மைக்கு நேர் எதிரானது. முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கத்தின் சார்பில் தோழர் ராஜீவ்காந்தியை வேட்பாளராக அறிவித்து, அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரை மேற்கொண்டனர். அச்சமயத்தில் தோழர் செந்தமிழன், அருணாபாரதி ஆகியோர் ஈரோட்டில் காங்கிரசின் ஈ.வி.கே.எஸ் க்கு எதிராக பரப்புரை மேற்கொண்டிருந்தனர். அவர்களும் அதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்தார்கள் என்கிறீர்களா?
2) இச்சமயத்தில் தோழர் கோவை. கு.இராமகிருட்டிணன் இராணுவ வாகன தாக்குதலில் சிறைப்பட்டிருந்தார். அப்படியெனில் யார் அதிமுகவிற்காக வாக்குகேட்டார்களென்றால், ஐயா மணியரசன் அவர்களின் கருத்தியல் மாணவர் திரு.சீமான். இலை மலர்ந்தால் ஈழம் மலருமென அருள்வாக்கு கொடுத்துக்கொண்டிருந்தார்.
முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கம் ப.சிதம்பரத்திற்கு எதிராக கடும் ஒடுக்குமுறைக்குள்ளாக பரப்புரை செய்துகொண்டிருந்தனர். பரப்புரை குழுவில் 11 பேர் புதுக்கோட்டை சிறையில் அடைபட்டிருந்தனர். அச்சமயத்தில் பஞ்சாபில் பரப்புரைக்கு சென்ற ப.சிதம்பரத்தின் மீது சீக்கிய இனப்படுகொலையை கண்டித்து சீக்கியர் ஒருவர் செறுப்பை வீசி எறிந்தார். ‘தமிழன் மீது செறுப்பை எறிவதா? ‘ என கண்டனத்தை தெரிவித்தார் ஐயா.மணியரசன் அவர்கள். இந்தியாவின் தேசிய இனங்களின் உரிமை குறித்த போராட்ட களத்தில் அடக்குமுறை ஏவும் அதிகாரவர்க்கத்தில் இனம் பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பது எவ்வகை அரசியல் கோட்பாடு என தெரியவில்லை. இந்த நிகழ்வை அவர் மறந்திருக்கமாட்டார், நாங்களும் மறக்கவில்லை.
3) அடுத்ததாக மே 17 இயக்கத்தின் மீது வீசப்படும் அவதூற்றினை எடுத்து விமர்சனம் என வைக்கிறார். 2014 தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாட்டின் மீதான விமர்சனத்தை வைத்தே தேர்தலில் ஆதரவு தெரிவிக்க இயலாதென மே 17 இயக்கம் சொன்னது. ஆனால் மதிமுகவிற்காக பரப்புரை மேற்கொண்டதாக த.தே.பே சொல்கிறது. மதிமுக கட்சியினரே இதை ஏற்காத பொழுது, மே 17 பரப்புரை செய்ததற்கான ஆதாரத்தை வெளியிடுவது தோழர்.அருணபாரதியின் பொறுப்பு. மதிமுகவிடமாவது இதற்கான ஆதாரத்தை பெற்று வெளியிட்டால் நல்லது.
4. இந்திய பணியில் வடவர் நியமனத்திற்கு எதிரான போராட்டத்தை மே 17 இயக்கமோ, திராவிட இயக்கங்களோ செய்யவில்லை என்கிறார் தோழர் அருணபாரதி. இது வழக்கம்போல பொய்.
இந்திய ஒன்றிய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டில் உள்ளோருக்கான பணி மறுப்பும், வடவர் ஆதிக்கத்தையும் கண்டித்து பலவேறு போராட்டங்களில் மே 17 இயக்கம் பங்கெடுத்துள்ளது. உதாரணமாக 2015ல் ஐ.சி.எப் பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கான பணியை நிராகரித்த நிர்வாகத்திற்கு எதிராக தீக்குளித்த பயிற்சி பொறியாளர் உடலை பெற்றுக்கொள்ளாமல் மறித்து போராட்டத்தை தொழிலாளர்களோடு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மே 17 இயக்கத் தோழர்கள் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் எங்களுடன் இருந்தவர் முன்னாள் ச.ம.உ. தோழர் தமீமும் அன்சாரி. இவர்களின் போராட்டத்திற்காக 2014 முதல் தொடர்ந்து பங்களித்து விரிவு செய்ய மே 17 இயக்கத் தோழர்கள் துணை நின்றவர்கள். வருமானவரி துறையில் வடவர் ஆதிக்கம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வாறு நிரப்பப்படுகிறது என்று திராவிடர் விடுதலை கழக மாநில பொறுப்பாளர் தோழர் அன்பு தனசேகர் நூலாகவே வெளியிட்டார். இதற்கான பலவேறு போராட்டங்களை திராவிடர் இயக்கங்கள் நடத்தியுள்ளன. இப்போராட்டங்களில் மே 17 இயக்கம் பங்கெடுத்துள்ளது. இதுபோன்றே வங்கித்துறையில் வடவருக்கான பணியிடம் ஒதுக்கப்படுதல் உள்ளிட்ட போராட்டங்களை, பரப்புரைகளை வாய்ப்புள்ள அமைப்புகளோடு பல சமயங்களில் செய்துள்ளது. இவையனைத்தும் மே 17 இயக்கத்தின் துவக்க 2-6 ஆண்டுகளிலேயே நடந்துள்ளன. மேலதிக பட்டியல் வேண்டுமெனில் வெளியிட விருப்பத்துடன் உள்ளது. தோழர் அருணபாரதியின் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் விளக்கி மறுதலித்துள்ளோம். அவரின் பொய்க்குற்றச்சாட்டிற்காக வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. தோழர் வாலாசாவல்லவனுக்கே பதிலளிக்கவில்லை எனும் நிலையில் இதை நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை.
இப்பொழுது அவர் அடுக்கியிருக்கும் அரசியல் குற்றச்சாட்டுகளை கணக்கிலெடுப்போம்.
1. தனியார் துறையில் வடவர்களை வரவேற்பதாக பொத்தம் பொதுவாக த.தே.பே வசவினை வைத்துள்ளீர்கள். இவையனைத்தும் முடிவான ஒன்றாகவே நீங்கள் எழுப்பியுள்ளதால், கருத்தியலான கேள்வியை முதலில் விவாதிப்போம்.
தனியார் துறையில் வடநாட்டு தொழிலாளர் ஆதிக்கத்தை த.தே.பே பேசுவதிலிருந்து மே 17 இயக்கம் மாறுபடும் புள்ளி உள்ளது. வடநாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தமிழ்நாட்டில் குவிக்கப்படும் நிதி மூலதனம், கட்டமைப்பு திட்டங்கள், இந்திய அரசின் உள் கட்டமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மே 17 இயக்கம் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. தமிழ்நாட்டில் செய்யப்படும் அன்னிய முதலீடுகள், வெளிமாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்களை கொண்டு வரச் செய்கின்றன. வெளிமாநில நிதி குவிப்பு தமிழ்நாட்டில் நடைபெறுவதை விமர்சனத்திற்குட்படுத்தாத த.தே.பேரியக்கம். தொழிலாளர்களை நோக்கி மட்டுமே கேள்வி எழுப்புகிறது. மூலகாரணத்தை விளக்கும் பொறுப்பு இடதுசாரி இயக்கங்களுக்கு உண்டு. வடநாட்டு தொழிலாளர்களை முதன்முதலாக கொண்டு வந்தவர்கள் தாராளமய கொள்கையின் ஆரம்பகால பெருமுதலாளிகளே. அவர்களது அசுர வளர்ச்சிக்கான போதுமான தொழிலாளர்களை குவிப்பதும், குறைந்த கூலிக்கு தொழிலாளர் இறக்குமதி செய்வதுமாக சமநிலையை குலைத்தவர்கள் பெருமுதலாளிகள். இந்த லாபநோக்கமே தொழிலாளர்கள் இங்கே இடம்பெயர முதன்மை காரணியாக அமைந்தது. வடநாட்டு/அன்னிய மூலதனம் வேண்டும், தொழிலாளி வேண்டாம் என்பது எவ்வகையில் சிக்கலுக்கு தீர்வை கொடுக்கும்? ஐயா மணியரசன் அவர்களின் நிலைப்பாட்டில் மும்பை, டில்லி அரசுகளும் கடைபிடிக்குமெனில் மும்பை தாரவி தமிழர்களுக்கு தீர்வென்ன தரப்போகிறது த.தே.பேரியக்கம். தமிழர் நலன் என்பது தமிழ்நாட்டிற்குள்ளாக வாழும் தமிழர் நலன் மட்டும் என்பதா? அல்லது த.தே.பே கொள்கையை இந்தியாவிற்குள்ளாக இடம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களிடத்திலே உரையாடி எடுக்கப்பட்ட கொள்கை முடிவா?
ஐயா.மணியரசன் அவர்கள் கவனிக்க வாய்ப்பற்ற பல்வேறு கூட்டங்களில் மே 17 இயக்கம் இச்சிக்கல் குறித்து பேசி இருக்கிறது. தமிழ்நாட்டில் கொட்டப்படும் முதலீடுகளில் தமிழ் தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் குறைந்தபட்ச ஊதியமும், பணி விகிதமும் (குறைந்தபட்ச மண்ணின் மைந்தர் வேலைவாய்ப்பு விகிதம்), பணி நிரந்தரமும் உறுதி செய்யப்படும் வழிமுறையே இதற்கான குறைந்த பட்ச பாதுகாப்பை கொடுக்கும் என பேசியுள்ளது. அன்னிய பெருமுதலீடுகளை எதிர்த்தே மே 17 இயக்கம் நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. கடந்த டிச 2024ல் என்.எல்.சியில் தமிழர்களுக்கான நிரந்தர தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தில் பங்கெடுத்தது. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறைகள் அமுலாகும் பொழுது அனைத்து தமிழ் சமூகங்களுக்குமான போதிய வாய்ப்புகள் பங்கீடு செய்யப்படுமென்பதே இக்கோரிக்கையின் விரிவடைந்த நிலை. இத்தகைய நிலைப்பாடுகளை வாய்ப்புள்ள நிகழ்வுகளில் மே 17 இயக்கம் பதிவு செய்துள்ளது. ஆண்டுக்கு எண்ணற்ற வாழ்வுரிமை சார்ந்த கோரிக்கை போராட்டங்களில் மே 17 இயக்கம் பங்கெடுத்து இக்கருத்துகளை பகிர்ந்துள்ளது. ஆதலால் ‘…இரட்டைவேடம் தரிக்கிறார்கள், வடவரை வரவேற்கிறார்கள்…’ போன்ற வசவுகள் அர்த்தமற்றவை, ஆதாரமற்றவை. தர்க்கரீதியான வாதங்களே நம் இரு இயக்கங்களின் நிலைப்பாடுகளை வலுப்படுத்திக்கொள்ள, கருத்துகளை பரிமாறிக்கொள்ள உதவும். மார்க்சிய அமைப்பிலிருந்து வந்த, கிட்டதட்ட 35 ஆண்டுகளாக இயங்கும் அமைப்பிடம் இதை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. உங்களை போன்று முத்திரை குத்தும் திறமை மே 17 இயக்கத்திற்கும் உண்டு என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
பின்னர் நீங்கள் பொங்கி இருக்கும்,’ ஈழத்தில் சிங்கள பாட்டாளி வந்தால் எதிர்ப்பார்கள், பாலஸ்தீனத்தில் யூதர் குடியேற்றம் எதிர்ப்பார்கள், தமிழ்நாட்டில் நடந்தால் பாட்டாளி வர்க்க சர்வதேசியம்-மார்க்சிய சாயம் பூசுவார்கள் என எழுதியுள்ளது எவ்வகையில் எங்களுக்கு பொருந்துமென தெரியவில்லை. வேறெங்கோ காட்ட இயலாத கோவத்தை எங்களிடம் வெளிப்படுத்தி எங்களை ‘இனத்துரோகி’ என முத்திரை குத்துவதால் என்ன பயன்.
தமிழ்நாட்டிற்கென்று அரசியல்சாசனமோ, குடியுரிமை பாதுகாப்போ இல்லாத நிலையில் வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் குடியுரிமையை அங்கீகரிப்பது ஏற்புடையதல்ல என்று மே 17 இயக்கம் சொல்லி இருக்கிறது. ஐரோப்பாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும் அங்கே சுயநிர்ணய உரிமை கொண்ட அரசாங்கம் இருப்பதால் அரசியல் தேர்வு என்பது பாதிப்பிற்குள்ளாகாது. அப்படியான நிலையை தமிழகத்திற்கு பொறுத்த இயலாது என விளக்கி பேசியுள்ளது. வாக்குரிமை என்பது இந்தியாவிற்குள்ளாக transferable என்பதில் உடன்பாடில்லை ஏனெனில் தமிழ்நாடென்பது sovereign constitution கொண்டதல்ல என்றே சொல்லி இருக்கிறோம். த.தே.பேரியக்கம் போல பொத்தாம் பொதுவான எதிர்நிலை சொல்லாமல், குடியுரிமை சார்ந்தே அரசியல் உரிமை என்று சொல்லியுள்ளது. ஆனால் இந்தியாவின் அரசியல் சாசனத்தின் கீழாக நடைமுறையில் வெளிமாநிலத்தார் அனைவருக்கும் ரேசன் அட்டைகள் தரப்படுவதை கண்டித்த முதல் அமைப்புகளில் மே 17 இயக்கமும் ஒன்று. ரேசன் அட்டைகளை நியாயவிலை கடைகளுக்கான அடையாள அட்டையல்ல, அது குடியுரமை ஆவணம் என பலமுறை பதிவு செய்துள்ளது. இந்த transferable குடியுரிமையே transferable வாக்குரிமையாக மாறுகிறது என வெளிப்படையாக ஊடக விவாதங்களிலேயே வாதம் வைத்துள்ளது. ஆகவே இனத்துரோகம் என முத்திரை குத்துவது நகைச்சுவையானது. எங்கள் நிலைப்பாடுகளுக்கான தர்க்கத்தை அரசியல்பூர்வமாக வைத்துள்ளோம்.
திமுக, அதிமுக ஆகியவற்றின் மீதான உங்கள் விமர்சனங்களை விட ஆழமான அரசியல் விமர்சனங்களை மே 17 இயக்கம் வைத்துள்ளது. திராவிட கட்சிகள் மீதான விமர்சனம் திராவிட இயக்க கோட்பாட்டின் மீதான ஒவ்வாமை எனில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உங்கள் விமர்சனம், மார்க்சிய கொள்கையின் மீதான நிராகரிப்பு என்றே பொருள்கொள்ள இயலுகிறது. இதே அளவில் நாம்தமிழர், பாமக, விசிக மற்றும் பிற மரு.கிருட்டிணசாமி, திரு ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிவித்த தமிழ்த்தேசிய கட்சிகளின் மீதான உங்கள் விமர்சனம் தமிழ்த்தேசியத்தின் மீதான நிராகரிப்பாகுமா அல்லது அந்தந்த கட்சிகள் மீதான தனித்த விமர்சனங்களா? அல்லது உங்கள் வசதிக்கு விமர்சனம் செய்ய ஏதேனும் ஸ்கேல் ஒன்றை கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களா? (..இதில் நாம் தமிழர் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புரட்சிகர தமிழ்த்தேசிய கட்சியாக, தன்னுரிமை மீட்பு கட்சியாக அங்கீகரித்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையையும் திரு. சீமான் சாகடிக்காமல் இருக்க அவரது முப்பாட்டனை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்..)
திமுகவின் ஈரோட்டு பரப்புரையில் இந்தி துண்டறிக்கைக்கு எதிர்வினை என்ன என கேட்கிறீர்கள். நீங்கள் எங்களை போல இனதுரோகம் செய்யாதவரல்லவா, உங்கள் இயக்கம் என்ன செய்யப்போகிறது என தெரிந்தால் கற்றுக்கொள்கிறோம். அறிக்கையை உங்கள் புத்தகத்தில் வெளியிடுவது போல நாங்களும் அறிக்கை வெளியிடுவதை செய்துகொண்டிருக்கிறோம்.
1956ம் ஆண்டிற்கு பின்னர் தமிழ்நாட்டில் குடியிருக்கும் மார்வாடி, ஆந்திரர், மலையாளிகள் வெளியேற வேண்டுமென்கிறீர்கள். அதற்காக போராடுவதாக சொல்கிறீர்கள். இதேசமயம் 1960ம் ஆண்டில் பிரிக்கப்பட்ட மராத்தியம், குஜராத் மாநிலங்களில் குறிப்பாக மும்பையிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அந்த மாநிலங்கள் அறிவிக்குமெனில், 1956க்கு பின் கர்நாடகத்தில் குடியேறிய தமிழர்கள், டில்லி மாநிலம் உருவான பின்னர் குடியேறிய தமிழர்கள் வெளியேற வேண்டுமென அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பை உங்களது கோரிக்கைகளை போல செய்யுமெனில் த.தே.பேரியக்கம் தாயகம் திரும்பும் தமிழர்களை எவ்வாறு எதிர்கொள்ள போகிறது எனும் வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்துகொண்டு அரசியல் செய்வது எளிது. மும்பை உருவாக்கத்தில் பங்கெடுத்த தமிழர்களின் நிலையை தஞ்சாவூர் தமிழர்கள் முடிவு செய்ய இயலாது. மானுட சமூகம் முழுவதும் மக்கள் வாழ்வாதாரம் தேடி புலம்பெயர்கிறார்கள். நிலத்தின் இறையாண்மையே அரசுகளின் இறையாண்மையாக மாறி மாநிலங்கள் உருப்பெரும் காலமே தீர்வுகளை தரும் வழியாகும். தமிழ்நாட்டிற்குள்ளாக நுழையும் மூலதனங்களை கட்டுப்படுத்தும் இறையாண்மை இல்லாதவரை இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்கள், ஒருவழிபாதைகள்.
‘ஒசூர் டாட்டா நிறுவன போராட்டம், வெளியார் எதிர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளதை எங்கள் முகநூலில் போட்டுள்ளோம், அதையெல்லாம் கவனிக்கவில்லையா? தூங்குபவர்களை போல நடிக்கிறவர்கள்’ என அங்கலாய்த்துள்ளீர்கள். உங்கள் வழியிலேயே பதில் சொல்கிறோம். வடவர் நிறுவனமான மாஞ்சோலை தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தை கொண்டு செல்கிறது மே 17 இயக்கம். அதுவும் திமுக-மார்வாடி கூட்டனிக்கு எதிராக போராடுகிறது. அன்னிய முதலீட்டு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம் மூடப்படும் போது போராடி தமிழ் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்குமான நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கும் போராட்டம் நடத்தியவர்கள் மே 17 இயக்கத் தோழர்கள். இவையும் சமூலவளைதளத்தில் உள்ளன. இந்த சிக்கல்களில் தமிழ்தொழிலாளர்களுக்காகவே மே 17 இயக்கம் போராடியது. இதையெல்லாம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டீர்களா? இப்போராட்டத்தை நடத்துபவர்களை இனத்துரோகம் செய்பவர் என்கிறீர்களே, தமிழ் தொழிலாளர் உரிமைக்காக போராடுவது இன துரோகமா? இதில் சிறிதளவும் கிள்ளிப்போடாத நாம் தமிழரின் சீமானை கொண்டாடும் நீங்கள் எங்கே? திமுக-அதிமுக என ஆளும்வர்க்க முதலாளிய கட்சிகள், பெருமுதலாளிகளை எதிர்த்து போராடும் எங்கள் தோழர்கள் எங்கே? என ஒப்பீட்டு வரலாறு கணித்துக்கொள்ளும்.
தமிழ்நாடு தமிழருக்கே எனும் பெரியாரின் விளக்கக் கொள்கையே எமது கொள்கைகளில் ஒன்று என்பதை பலநூறு கூட்டங்களில் விளக்கியுள்ளோம். பிற திராவிடர் கட்சி அல்லது அமைப்புகளின் மீதான விமர்சனங்களை எங்கள் மீது சுமத்த முடியுமென்றால், பாமக, புதிய தமிழகம், நாம் தமிழர் ஆகிய தமிழ்த்தேசிய கட்சிகளின் மீதான விமர்சனங்களுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதைத் தவிர உங்கள் அறிக்கை எனப்படும் வசவுகளில் அரசியல் ஏதும் இல்லை.
பின்னர் நீங்கள் நீண்டகாலம் முன்வைக்கும் ‘திராவிடன்’ எனும் பெயர், திராவிட ஒவ்வாமை குறித்த நீண்ட விவாதம் பொதுவெளியில் தேவை. உங்களது வாதங்கள் அடித்தளமற்றவை என்பதை உங்கள் முன்னிலையில் வைக்க விரும்புகிறோம். அது தமிழ்ச்சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும். வாய்ப்புள்ள நாட்களில் இதை நடத்தலாம். காத்திருக்கிறோம்.
கொண்டல்சாமி
மே பதினேழு இயக்கம்