
பாலஸ்தீன மக்களை இனவெறி இசுரேல் இனப்படுகொலை செய்து வருவதைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் மாபெரும் பேரணி நடந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளிலும் நேர்காணல்களிலும் இசுரேலின் இனவெறியைக் கண்டித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றி வருகின்றார். இசுரேல் காசா மீது தொடுத்துள்ள போர் குறித்து அக்டோபர் 6, 2025 அன்று மின்னம்பலம் ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணல்:
பத்திரிக்கையாளர் கேள்வி: வணக்கம்! காசா மீது இசுரேல் நடத்தக்கூடிய தாக்குதலை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் சேர்ந்து சென்னையில் பேரணி நடத்தி இருந்தீர்கள். குறிப்பாக இந்த பேரணியை நடத்த வேண்டும் என்கிற தேவை ஏன் வந்தது? காசா பிரச்சனைக்காக நாம் ஏன் குரல் கொடுக்க வேண்டும்?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: காசாவில் நடக்கக்கூடிய இனப்படுகொலைக் காட்சிகளை அன்றாடம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ருவாண்டா இனப்படுகொலை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அதை நம் கண்முன் காட்சிகளாக பார்த்தது கிடையாது. இந்த (காசா) இனப்படுகொலையில் தினம் தினம் குழந்தைகள் மற்றும் பெண்கள் மிக கொடூரமாக கொலை செய்யப்படுவதை பார்க்கிறோம். ஒரு காரணமும் இல்லாமல் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படுவதை பார்க்கிறோம். அவர்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக உணவு நிறுத்தப்பட்டு பசியும் பட்டினியுமாக மக்கள் கூட்டம் கூட்டமாக இறப்பதையும், அவர்களுக்கான நிவாரணப் பொருளை கொண்டு செல்லக்கூடிய வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுவதும், அந்த வாகனங்களில் உணவு எடுக்க ஓடுகின்ற அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதையும் இசுரேல் தொடர்கின்றது. அந்த மக்கள் மீது குண்டுகளை வீசி கொலை செய்கிறது இஸ்ரேல் ராணுவம்.
இதுபோன்ற கட்டுக்கடங்காத ஒரு இனப்படுகொலையை செய்து மக்கள் கொத்து கொத்தாக இறப்பதை நம்மால் பார்க்க முடியாது. மனிதநேயம் உள்ள யாருக்குமே, மனிதனாக இருக்கக்கூடிய எல்லோருக்குமே இது ஒரு பெரிய அன்றாட துயரத்தை கொடுக்கக்கூடிய ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் இந்த செய்திகளை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இந்தப் போர் தினம் ஒரு பெரிய துயரத்தை நமக்கு கொடுக்கிறது. இது பல்வேறு நினைவுகளை கொடுக்கிறது. ஏனெனில் 2009ல் இதே போன்ற இனப்படுகொலை நிகழ்வாக, ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அங்கே பயன்படுத்துகின்ற அத்தனை யுக்திகளும் இங்கே பயன்படுத்தப்படுகிறது. அன்றைக்கு நாம் “போரை நிறுத்துவதற்கு எல்லாரும் வாருங்கள்” என சொன்னோம். ஆனால் அன்றைக்கு பலர் வரவில்லை.
அன்றைக்கு (ஈழத்தில்) மருத்துவமனைகள் தாக்கப்படுவது, குழந்தைகள் கொலை செய்யப்படுவது, நோயாளிகள் தாக்கப்படுவதிலிருந்து, கொத்து குண்டுகள் போடுவதிலிருந்து, கார்ப்பெட் குண்டுகளிலிருந்து, மும்முனை தாக்குதல் நடத்துவதிலிருந்து, எல்லாமே இன்று அப்படியே காசாவில் நடத்தப்படுகிறது.

கேள்வி: குறிப்பாக காசா மீது நடத்தக்கூடிய தாக்குதல் என்பது இசுரேல் தரப்பில் ஹமாசை ஒழிப்பதற்கான வேலைகளை செய்கிறோம் என இன்றைக்கு வரைக்கும் நியாயப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அதை எப்படி பார்ப்பது?
பதில்: இல்லை, மக்களுக்காக போராடக்கூடியது ஹமாஸ் அமைப்பு. இசுரேல் நிலப்பரப்பிற்குள் சென்று ஹமாஸ் தங்களுக்கான அமைப்பை கட்டவில்லை, நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. பாலஸ்தீனர்கள் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கிறது. ஜியோனிஸ்டுகள் என்ற கொள்கை கொண்ட யூதர்கள் அதை ஆக்கிரமித்திருக்கிறார்கள். தங்களது நாட்டை பாதுகாப்பதற்கும் மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தேவை இருக்கிறது. அந்த அடிப்படையில் உருவான ஒரு அமைப்புதான் ஹமாஸ். அது ஒரு ஆயுத போராட்ட அமைப்பாகவும் இருக்கிறது. தேர்தலில் பங்கெடுத்து காசாவை நிர்வகிக்கக்கூடிய அரசியல் கட்சியாகவும் அது இருக்கிறது. ஒரு நாட்டுக்கான கட்டமைப்புகளோடுதான் ஹமாஸ் இயங்கிகொண்டு வருகிறது. இசுரேல் சொல்வதனாலயே எல்லாரும் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை பாலஸ்தீன மக்கள் சொல்ல வேண்டும்.
இன்னொன்று இங்கே நம் விடுதலைக்காக போராடிய சுபாஷ் சந்திர போசையும், பகத் சிங்கையும் இங்கிலாந்து என்ன சொல்லும்? விடுதலைப் புலிகளை இலங்கை என்ன சொன்னதோ அதே மாதிரிதான். அந்த மக்களுக்காக போராடக்கூடியவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி, அதை காரணமாக வைத்துக் கொண்டுதான் இசுரேல் இவ்வளவு அழிவை நடத்துகிறார்கள்.
தற்போது சர்வதேச சட்டங்களை மீறியதை மட்டுமல்ல, இயல்பு நெறிகளுக்கே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு படு பயங்கரமான, அயோக்கியத்தனமான ஒன்றைத்தான் இசுரேல் நடத்திக் கொண்டிருக்கிறது.
கேள்வி: இசுரேலை ஆதரிப்பவர்கள் தற்போது வரைக்கும் சொல்கின்ற ஒரு விசியம் என்னவெனில், அக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதலை வைத்து ஒரு பக்கமும், பிணைய கைதிகள் இத்தனை பேர் இவர்களிடம் இருக்கிறார்கள், அதனால்தான் காசா மக்கள் அழிவு இந்த அளவுக்கு காரணமாக இருக்கிறது என்கின்ற ஒரு விசியத்தை சொல்கிறார்களே? அதை எப்படி பார்ப்பது?
பதில்: இது இசுரேலுக்கு கொலை செய்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. 2023ல் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போர் நடக்கிறது. அதாவது ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பே, இசுரேலால் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பாலஸ்தீன மக்களை அடித்து கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய நம்பிக்கையில் மிக முக்கியமான இடமான ‘அல்அக்ஸா’ மசூதியில் அவமானப்படுத்தப்பட்டார்கள். மேலும் மிக முக்கியமான ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடலை சவப்பெட்டியில் எடுத்துக் கொண்டு போகக்கூடிய இறுதி ஊர்வலத்தில் இசுரேல் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்துக்கொண்டே இருந்தது. அதன் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை சட்ட விரோதமாக அடைத்துள்ளார்கள்.
உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து ஆட்களை பிடித்து கொண்டு போய் பாகிஸ்தானுடைய சட்டத்தில் கைது செய்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? மாட்டோம் இல்லையா, அப்படியாக பாலஸ்தீன மக்களைப் பிடித்துக் கொண்டு போய் இசுரேலுடைய சட்டத்தின் கீழாக சிறையில் வைத்திருக்கிறார்கள். அதற்கு வழக்கு நடத்த முடியாது, வழக்கு நடத்த யாரும் வரமாட்டார்கள். பாகிஸ்தானுக்கு போனால் உங்களுக்கு ஏதோ ஒரு வழக்கறிஞர் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம், ஆனால் இசுரேலில் அவ்வாறு கிடைப்பதில்லை. 10/12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு, பத்தாண்டுகள் கழித்து வெளியே விடுவது போன்ற சட்ட விரோதமான செயல்களால், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் அங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதற்கு எந்த வழியுமே கிடையாது. அதனால்தான் சட்டவிரோதமாக அடைத்த மக்களை விடுதலை செய், நாங்களும் (ஹமாஸ்) இசுரேல் பிணை கைதிகளை விடுதலை செய்கிறோம் என தெரிவிக்கிறார்கள். அது நியாயம்தான். இன்னும் எவ்வளவு காலம்தான் மக்களை அடக்குமுறை செய்வார்கள்? அந்த அடக்குமுறைக்குத்தான் இப்படி எதிர்வினை ஆற்றியுள்ளார்கள்.
அக்டோபர் 7, 2023 பின்பு அல்ல, இசுரேல் கிட்டத்தட்ட 1947/48லிருந்து பாலஸ்தீன மக்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் படுகொலை நடந்தது, அதற்கு முன் நடக்கவில்லையா என்ன? அது தொடர்ச்சியாக 70 ஆண்டுகள் நடந்தது. அது வரலாறாகவே இருக்கிறது. அதேபோலதான் இசுரேல் மிக கொடூரமாக ஈவிரக்கம் இல்லாமல் மனிதத் தன்மையே இல்லாமல், பாலஸ்தீன மக்களை படுகொலை செய்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு காலம்தான் பாலஸ்தீன மக்கள் பொறுத்துப் போவது என்பதுதான் இதனுடைய வெளிப்பாடு.
கேள்வி: இன்றைக்கு சர்வதேச அளவில் பார்க்கும் பொழுது ஆஸ்திரேலியா, கனடா, பிரான்சு போன்ற பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கிறோம் என்கிற ஒரு இடத்தை நோக்கி வந்துவிட்டார்கள். இருந்தாலும், பிணை கைதிகளை வெளியில் விட வேண்டும் என்ற கோரிக்கையை திரும்ப வைப்பதும், வரக்கூடிய ஆட்சி காலத்தில் ஹமாஸ் பங்கேற்க கூடாது என்கிற ஒரு விடயத்தை இசுரேலுக்கு சாதகமாகவும் முன்வைப்பதை எப்படி பார்ப்பது?
பதில்: இந்த போரை நடத்துவதே இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தான். இந்த நாடுகளினுடைய ஆயுதங்கள் இல்லாமல் இசுரேலினால் இவ்வளவு பெரிய போரை நடத்த முடியாது. இசுரேல் பெரிய ஆயுத வளம் கொண்ட நாடு கிடையாது. இங்கிலாந்து இன்றைக்கு வரைக்கும் ஆயுதம் வழங்குகிறது. சொல்லப்போனால் இங்கிலாந்து இந்த பயங்கரவாதத்திற்கு துணை போகக்கூடிய நாடுதான். இங்கிலாந்தினுடைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ’ஜெர்மி கோர்பின்’ இங்கிலாந்து அரசின் மீது ஒரு விசாரணை கமிட்டி உருவாக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வந்து, 60/ 70 எம்பிக்கள் அதை ஆதரித்து, தீர்மானம் தற்போது நடைமுறைக்கு வர ஆரம்பித்துவிட்டது.

இந்தியா இலங்கைக்கு உதவி செய்து ஈழத்தில் படுகொலை செய்தது. ஆனால் இந்தியாவில் எந்த எம்பியுமே இந்திய அரசின் விசாரணை கமிஷன் கேட்கக்கூடிய துணிச்சல் இல்லை. ஆனால் இங்கிலாந்தில் தீர்மானத்தை கொண்டு வந்து, தற்போது இங்கிலாந்து அரசின் மீதே விசாரணை கொண்டு வரக்கூடிய அளவுக்கு அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள். இங்கிலாந்து அரசு இதற்கான அனைத்து ஆயுத உதவியும் செய்து வருவது மட்டுமல்ல, காசா பகுதியில் உளவு விமானத்தை அனுப்பி, அந்த மக்களைப் பற்றி முற்றிலுமாக உளவு தகவலை கொடுப்பது என்பதும் இங்கிலாந்து அரசுதான். இதை இங்கிலாந்தில் இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். எந்த விமானம் போனது? எப்போது போனது? எத்தனை மணிக்கு போனது? அதன் வழி என்ன? அதன் வரைபடம் முழுக்க எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு அந்த நாடு செய்யக்கூடிய தவறுகளை அந்த பத்திரிக்கைகள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இன்று வரைக்கும் இந்தியா ஈழ மக்கள் படுகொலைக்கு என்ன துணைவு செய்தது என இந்தியாவில் எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை. ஆனால் இங்கிலாந்தில் அது போன்ற விடயங்கள் தற்போது வெளியில் அம்பலமாகிக் கொண்டே இருக்கின்றன. இங்கிலாந்து அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக மக்கள் போராட்டம் வெடித்து நிற்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வீதியில் நிற்கிறார்கள். லண்டன் நகரத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்ற பேரணிகள் நடந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. இந்த போர் நடப்பதற்கு முழு முதல் காரணம் அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிரான்சும் தான். இவர்கள்தான் அந்த போருக்கான முழு பின்னணியாக இருந்து இயங்கி கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: அப்போது இந்த நெருக்கடி அடிப்படையில்தான் அந்நாடுகள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றார்களா?
பதில்: ஐ.நா இதுவரைக்கும் ருவாண்டா இனப்படுகொலை, நமீபியா இனப்படுகொலை, ஸ்ரெப்ரெனிகா & போஸ்னியா இனப்படுகொலைகள், கம்போடியால் நடந்த இனப்படுகலைகள், ஈஸிதிமோர் இனப்படுகொலைகள் இதெல்லாம் நடந்து முடிந்ததற்கு பிறகு விசாரணைகளில் வரக்கூடியது. ஆனால் ஈழத்தில் நடந்ததைப் பார்த்தும், ரோகிங்கியா இனப்படுகொலை குறித்தெல்லாம் இதுவரைக்கும் பேசவே இல்லை. ஆனால் பாலஸ்தீன இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது ”இனப்படுகொலை” என அறிவித்துவிட்டது ஐ.நா.
இனப்படுகொலை என அறிவித்துவிட்டால் சர்வதேச சட்டங்கள் உடனே நடைமுறைக்கு வர வேண்டும். சர்வதேச சட்டங்கள் நடைமுறைக்கு வருகிறது என்றால் இனப்படுகொலையைத் தடுப்பதற்கு உடனடியாக சர்வதேச ராணுவம் அனுப்பப்பட வேண்டும். எந்த நாட்டு ராணுவம் வேண்டுமானாலும் தலையிடவும் செய்யலாம். இந்தியாவில் ஒரு யோக்கியமான அரசு இருந்தது எனில், இந்தியாவினுடைய ராணுவம் அங்கே தலையிடலாம். அது சர்வதேச சட்டத்தின்படி குற்றமாக பார்க்கப்படாது. ‘பாதுகாக்கும் உரிமை’ (Right to protect- R2P) என்று இருக்கிறது. அது ஐநாவில் கொண்டு வரப்பட்ட ஒரு சாசனம். அதை ஒப்புக்கொண்டு நடைமுறைப்படுத்தி சேர்த்தார்கள். அதைக் கொண்டு வந்த ”நோம் சாம்ஸ்கி” அவர்கள் மிக முக்கியமான ஒரு சிந்தனையாளர்.

ஐ.நா இனப்படுகொலை என அறிவித்த உடனே R2P Act உள்ளே வந்துவிடும். அந்த இனப்படுகொலை செய்யக்கூடிய கும்பல்களை யார் வேண்டுமானாலும் தடுக்கலாம். அவர்களை இராணுவம் அழிக்கலாம். அதில் ஒன்றும் தவறே கிடையாது என்கிற இடம் வந்துவிடும். இன்னொன்று மிக முக்கியமானது என்னவெனில், அப்படி ஒரு இனப்படுகொலை நடக்கக்கூடிய பகுதிக்கு அண்டையில் இருக்கக்கூடிய நாடு ராணுவத்தை அனுப்பவில்லை என்றால், அந்த நாடும் இனப்படுகொலையில் பங்கேற்ற நாடாக பார்க்கப்படும்.
இந்த விதிப்படிதான் 2013ல் ஜெர்மனியில் ஐ.நாவினுடைய முன்னாள் துணை பொதுச்செயலாளர் தலைமையில் 13 வழக்கறிஞர்கள் (பல்வேறு இனப்படுகொலையை விசாரித்த வழக்கறிஞர்கள்), அவர்கள் நீதிபதிகளாக இருந்தவர்கள். அவர்களுடைய தலைமையில் ஒரு தீர்ப்பாயம் நடந்தது. அதில் ஈழத்தில் நடந்த ஒரு இனப்படுகொலை என்பதை ஆதாரப்பூர்வமாக சட்டரீதியாக நிரூபித்தார்கள். அதில் ’இந்தியாவினுடைய பங்களிப்பு’ பற்றி மே பதினேழு இயக்கம் பங்கெடுத்த போது, நாங்கள் என்ன முன் வைத்தோம் என்றால் “ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை. அதற்கு அண்டை நாடாக இருக்கக்கூடிய இந்தியா, இனப்படுகொலையைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக உதவி செய்தது. தடுக்கவும் முன்வரவில்லை என்றால், இந்தியாவும் அந்த இனப்படுகொலைக்கு குற்றவாளியாக மாறுகிறார்கள்” என்பதை அங்கு வாதமாக வைத்தபொழுது அதை ஏற்றுக்கொண்டார்கள்.
அந்த அடிப்படையில் ”ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் இந்தியாவும் ஒரு கூட்டு குற்றவாளி” என்பதை ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் மீது மேலதிகமான விசாரணை தேவை என்பதையும் தீர்ப்பளித்தார்கள்.
இவர்கள் (பல்வேறு இனப்படுகொலையை விசாரித்த வழக்கறிஞர்கள்) சாதாரண மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என ஒரு சிறு வட்டத்துக்குள் இயங்குபவர்கள் அல்ல. இவர்கள் ருவாண்டா, ஸ்ரெப்ரெனிகா, போஸ்னியா, ஆர்மினிய, நமீபிய இனப்படுகொலைக்காக வழக்கு நடத்தியவர்கள். அரசுகளுக்கு எதிராகவும் அந்த ராணுவ தளபதிகளுக்கு எதிராகவும் வழக்கு நடத்தியவர்கள் சொன்ன முடிவு இது. இதற்காக (ஈழத்திற்கும்) தலைமை தாங்கியர் ஐநாவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர். அவர்தான் இதை நடத்தினார்.
கேள்வி: காசாவில் நடக்கக்கூடிய இனப்படுகொலைக்கு மோடியும் காரணம் என அந்த கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் பேசி இருந்தார். இந்தியா எப்படி பாலஸ்தீன இனப்படுகொலைக்கு ஒரு காரணமாக இருக்க முடியும்?

பதில்: ஏனெனில் இசுரேலுக்கான மிகப்பெரிய பொருளாதார உதவி இந்தியா மற்றும் அதனுடைய ஒப்பந்தங்களின் மூலமாக கிடைக்கிறது. இதைத்தவிர இந்தப் போர்களுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகக்கூடிய ட்ரோன்கள் இங்கிருந்து போயிருக்கிறது. அந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்பதற்கான விசாரணைகள் எதுவுமே கிடையாது.
மேலும் இசுரேலுடன் நெருக்கமான உறவை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இசுரேலினுடைய முக்கியமான துறைமுகம் ’ஹைபா’. அதை அதானிக்காக பெற்றுக் கொடுத்தவர் மோடி. அந்த ஹைபா துறைமுகம் என்பது மத்தியதரைக்கடல் பகுதியில் சூயஸ் கால்வாய்க்கு முன்பாக இருக்கக்கூடிய மிக முக்கியமான துறைமுகம். இசுரேலினுடைய பொருளாதார இதயமாக சொல்லப்படுகின்ற துறைமுகங்களில் ஹைபா துறைமுகம் ஒன்று. அந்த துறைமுகத்துக்கான மொத்த நிர்வாகமும் யார் கையில் இருக்கிறது என்றால் அதானி கையில் இருக்கிறது. அதானிக்கான ஒப்பந்தத்தை பெற்று கொடுத்தவர் யார்? நரேந்திர மோடிதான். இந்தியாவுக்கும் இசுரேலுக்குமான நெருக்கமான உறவு என்பது மோடி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தான் இங்கே மோடியின் மீதான குற்றச்சாட்டு பார்க்கப்படுகிறது.
கேள்வி: ஆனால் ’நியூயார்க் பிரகடனம்’ சமீபத்தில் நடந்தது. அதில் பாலஸ்தீனத்தை இந்தியா அங்கீகரித்தது இல்லையா?
பதில்: இதில் இந்தியா/ மோடி அரசு தனியாக முடிவு எடுக்க முடியாது. இந்த விடயங்களை பொறுத்தவரைக்கும், இந்தியாவினுடைய நீண்ட நாள் கொள்கை 1948ல் எடுக்கப்பட்ட ஒரு நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை நரேந்திர மோடி மாற்றினார் என்றால் மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதைத்தவிர அரபு நாடுகளோடு தொடர்பு/ உறவு இருக்கிறது. அரபு நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து உள்ளார்கள். அது மட்டுமல்ல, ஐநாவில் பாலஸ்தீனத்துக்கு ‘Observer Status’ இருக்கிறது. ஒரு இறையாண்மை உள்ள நாடாக அங்கீகரிக்கப்படுவதற்கான இறுதிக்கட்ட நிலையில்தான் பாலஸ்தீனம் இருக்கிறது. அந்த முழு தேச அங்கீகாரத்தை தடுத்து வைத்திருப்பது ஒரே ஒரு நாடுதான். அது அமெரிக்கா. அமெரிக்காதான் செக்யூரிட்டி கவுன்சிலில் ஒவ்வொரு முறையும் வீட்டோ(VETO) ரத்து செய்துக்கொண்டே இருக்கிறார்கள். மற்றபடி இந்தியாவினுடைய இந்த ஆதரவு என்பது பத்தோடு பதினொன்று போல்தான் இருக்கும் என எல்லாருக்குமே தெரியும்.
கேள்வி: பாலஸ்தீன ஆதரவு என்பது ஒரு தொடர்ச்சிதான் எனக் கூறினீர்கள். இசுரேல் ஆதரவு என்பதும் கூட 1993 காலகட்டத்திலயே இந்தியா இசுரேலை ஆதரித்து விட்டார்கள். அதன் பிறகு நிறைய ஒப்பந்தங்கள் வந்தது. அதன் தொடர்ச்சியாகப் பார்க்காமல், இதில் மட்டும் மோடியை குற்றச்சாட்டு சொல்வதை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?
பதில்: சோவியத்தினுடைய வீழ்ச்சிக்குப் பின்பான காலகட்டத்தில் இசுரேல் உடனான உறவு என்பது பெருமளவில் இல்லாமல் வணிக ரீதியான சிறு அளவில் உறவுகளாக இருக்கிறது. இது ராணுவ உறவுகளாக பெருமளவில் வர்த்த உறவுகளாக மாற்றப்பட்டது. இந்தியாவினுடைய பிரதமர் நேரடியாக இஸ்ரேலுக்கு சென்ற வரலாறு இல்லை. அந்த வரலாறை உருவாக்கியது நரேந்திர மோடிதான்.
பிஜேபி இந்துத்துவ கொள்கை கொண்ட சங்கிகளுக்கு இருக்கக்கூடிய காமெடியானது என்னவெனில், இவன் (பிஜேபி) நாஜியையும் ஆதரிப்பான். நாஜியால் கொல்லப்பட்ட யூதனும் என்னோட ஆள் எனச் சொல்லுவான். ’நாஜியும் நான்தான் யூதனும் நான்தான்’ என்று சொல்லக்கூடிய கோமாளிக் கூட்டம். அப்படிப்பட்ட ஆட்கள் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குவது மூலமாக தாங்கள் யூதர்களுடைய வழித்தோன்றல்கள் என பேசுவார்கள். ஆனால் நாஜிக்களுடைய ஆரியர்கள் எனவும் பேசுவார்கள்.
கேள்வி: ’ஆதரவு’ என்பது இன்றைக்கு இருக்கக்கூடிய உலக சூழலில் எல்லாரையும் ஆதரித்து போகிற ஒரு நிலையில் தானே இருக்கிறது?
பதில்: இன்றைக்கு இருக்கும் உலக சூழலில் எதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று இருக்கிறது. இசுரேலுக்கு எதிரான வழக்கை நடத்துகின்றது தென்னாப்பிரிக்கா. தற்போது அயர்லாந்தும் எதிர்த்து நிற்கிறது, ஸ்பெயின் இவ்வழக்கில் இணைகிறோம் என்று சொல்லியிருக்கிறது. இஸ்ரேல் என்பதே அமெரிக்காவின் அவுட்போஸ்ட்தான் (Outpost). அமெரிக்கா இங்கிலாந்தினுடைய ராணுவ செக் போஸ்ட்தான் (Checkpost). அது எதற்கென்றால் ஆசியாவுக்கான செக்போஸ்ட். ஆசியாவில் வேறு எங்குமே இந்த மேற்குலக நாடுகளினுடைய ராணுவத் தளம் என்பது வலுவான தளங்களாக எங்கேயுமே கிடையாது. அந்தத் தளமாக இஸ்ரேலை வைத்துக்கொண்டு மேற்காசிய நாடுகளை கட்டுப்படுத்துவது, உளவு பார்ப்பது, ஆட்சி கவிழ்ப்பு நடப்பது, படுகொலைகளை செய்வது என்பதற்குத்தான் ஒரு செட்டில்மெண்ட்(settlement) அது. அது ஒரு நாடு அல்ல. பாலஸ்தீன மக்களிடம் இசுரேல் செட்டில்மெண்ட் ஆகி உட்கார்ந்து கொண்டது.
அவனுடைய (இசுரேல்) உறவுகள் எல்லாம் அமெரிக்காவுக்குள், ஐரோப்பாவுக்குள் இருக்கக்கூடியவர்கள். இஸ்ரேலுடைய பிரதமர் நேத்தன்யாகு ஐரோப்பாவோ / போலந்தோ / அல்லது அதுபோன்று இருக்கக்கூடிய அந்த பகுதியை சார்ந்த நாடுகளை சார்ந்தவர்தான் என சொல்கிறார்கள். அங்கிருக்கும் அமைச்சரவையில் இருக்கக்கூடிய அனைத்து நபர்களுமே வேறு ஏதோ ஒரு நாட்டினுடைய குடிமகன்களாக இருக்கக்கூடியவர்கள். இசுரேல்-அது நாடு அல்ல, அது ஒரு செட்டில்மெண்ட் அதாவது குடியேற்ற பகுதியாக உள்ளது.
கேள்வி: இசுரேலை ஆதரிக்க கூடியவர்கள் ஒரு நியாயத்தை சொல்வார்கள்- என்னவெனில் சுற்றியிருக்கும் நாடுகள் எல்லாமே ’இசுரேல் அழியனும்’ என்ற எண்ணம் கொண்டவர்கள். அதனால்தான் இன்றைக்கு அவர்களின் பாதுகாப்புக்காக பாலஸ்தீனமாக இருக்கட்டும் அல்லது ஜோர்டானாக இருக்கட்டும், இந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். அதை எப்படி பார்ப்பது?
பதில்: சம்பந்தம் இல்லாத ஒரு இடத்துக்குள் வந்து இருந்துகொண்டு, அங்கே இருக்கின்ற ஆட்களை எல்லாம் அடிப்பதும், கொல்வதும் என்ன நியாயம்? அது அவர்களின் (இசுரேல்) இடமே கிடையாது. எங்களுக்கு தேவதூதன் சொல்லிவிட்டார், புராணத்தில் சொன்னது என்ற கதை எல்லாம் எத்தனை காலம்? எல்லாருக்கும் புராணத்தை உருவாக்கம் முடியும் தானே! புராணத்தின் அடிப்படையில் வாழ முடியுமா? இன்றைய காலத்தில் யார் இருக்கிறார்களோ அந்த அடிப்படையில்தான் இருக்க முடியும்.
அப்படித்தான் ஈரானில் யூதர்கள் இருக்கிறார்கள், இந்தியாவில் யூதர்கள் இருக்கிறார்கள், அரபு தேசத்தில் யூதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வஞ்சிக்கப்பட்டது இல்லை. ஐரோப்பாவில்தான் யூதர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். இந்த மேற்குலகம்–இஸ்ரேலுக்கான புனித பூமி (வாக்கப்பட்ட பூமி) எல்லாம் கிடையாது. இதெல்லாம் இவர்களே உருவாக்கிக்கொண்ட கதைகள். நம் ஊரில் இந்துத்துவம் உருவாக்கின மாதிரி. அயோத்தியா உருவாக்கின கதை மாதிரி, ராமர் ஜென்ம பூமி மாதிரி இது ஒரு கதை. இந்த கதையின் அடிப்படையில்தான் பாலஸ்தீன நிலத்தை அபகரித்தார்கள். இதனால் பக்கத்து நாடுகளில் பல்வேறு ஆட்சி கவிழ்ப்புகள், ராணுவ நடவடிக்கைகள் செய்கிறார்கள். இசுரேல் என்பது அங்கிருந்து வெளியேற வேண்டும். அவ்வளவுதான். இசுரேல் என்ற நாடு தேவையில்லை, அது பாலஸ்தீனருடைய நாடு.
கேள்வி: ஆனால் நேத்தன்யாகு ’இனி பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே கிடையாது’ என அறிவிக்கிறாரே?
பதில்: இப்படித்தான் ஹிட்லர் சொன்னார், அவரை மக்கள் விரட்டியடித்தனர். இன்றைக்கு ஹிட்லர் எங்கே இருக்கிறார்? ஹிட்லர் வரலாறு என்ன இருக்கிறது? இதெல்லாம் அதிக காலம் நிற்க போவது இல்லை.
மக்களுடைய எழுச்சி நடந்தது எனில், இந்த ராணுவம் இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் கால் தூசிக்கு சமம். தற்போது மக்கள் எழுச்சி நடக்கிறது. பெரிய அளவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வருகிறார்கள். இவனை (நேத்தன்யாகு) அடித்து விரட்டுவார்கள் மக்கள். இன்று இசுரேலுக்குள்ளும் மிகப்பெரிய எழுச்சி நடக்கிறது. இந்தப் போர் நடத்துவதன் அடிப்படை காரணம் நேத்தன்யாகு மீது குற்றவழக்கு இருக்கிறது. அவர் பதவி விலக வேண்டிய சமயம். தேர்தல் நடத்த வேண்டிய கட்டம். அவர் அரசு மைனாரிட்டி அரசு.

நேத்தன்யாகு சிறைக்கு போக வேண்டிய இடத்தில் இருக்கிறார். இப்போது இந்த போரை நிறுத்தினால் ஜெயிலுக்கு போக வேண்டும். போர் நடக்கும் சூழலில் ஒருவர் ஆட்சி அதிகாரத்தை விடவேண்டிய அவசியம் இல்லை. உக்ரைன் போரை வைத்து அவர் (ஜெலன்ஸ்கி) ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். ஜெலன்ஸ்கி போர் நிறுத்துனால், அவர் தேர்தல் நடத்தி ஆக வேண்டும். இவர்கள் தேர்தலில் இருந்து தப்பிப்பதற்காக போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 7, 2023 பிறகு பாலஸ்தீனத்தை தாக்குகிறேன்/ ஹமாசை தாக்குகிறேன் என இசுரேல் சொன்னால், லெபனான், சிரியா, ஏமன், இரான், இராக், கத்தார் போன்ற நாடுகளை இசுரேல் ஏன் தாக்கியது? இதெல்லாம் நாம் கவனத்தில் எடுத்துதான் இஸ்ரேலை கணிக்க வேண்டியிருக்கிறது.
இசுரேல் வெறும் பாலஸ்தீன இஸ்லாமியர்களை கொலை செய்தது என்பதை மட்டுமே பேசுகிறார்கள். அப்படியல்ல, பாலஸ்தீனத்தில் 8 சதவீதத்துக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். உலகத்தில் மிக பழமையான தேவாலயங்களில் ஒன்று, புகழ்பெற்ற மூன்று பழைய தேவாலயங்களில் ஒரு தேவாலயம் பாலஸ்தீனத்தில் இருக்கிறது. அந்த தேவாலயத்தின் மீது குண்டு போட்டார்கள். இன்றும் யூதர்கள் கிறிஸ்தவர்களை பார்த்தாலே கெட்ட வார்த்தையில் பேசுவதும் எச்சில் துப்புவதும் இயல்பாக இசுரேலில் நடக்கும். அந்தமாதிரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வந்திருக்கிறது. அவர்களுக்கு கிறிஸ்தவத்தின் மீது கடுமையான வெறுப்பு உண்டு, இஸ்லாமியர்கள் மீதும் வெறுப்பு உண்டு.
கேள்வி: தோழர்,இந்த இசுரேல் காசா போர் பற்றி நாம் பேசும் பொழுது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அந்த கூட்டத்தில் ஹமாசை ஆதரித்து பேசுவது ஏதாவது ஒரு சிக்கலாக இருக்கிறதா?
பதில்: பொதுவாக ஒரு மனிதாபிமான அடிப்படையில் எல்லாரும் பேசுவது, பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுகிறார்கள், அங்கு சாப்பாடு இல்லை, வாழ்வது கடினம் என பேசுகிறார்கள். ஆனால் இது ஏன் நடக்கிறது எனில், அவர்கள் விடுதலை கேட்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுக்கான ராணுவத்தை தங்களுக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
உதாரணத்திற்கு ”ஈழத்தை ஆதரிக்கிறேன், ஆனால் விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டேன்” என்று சொல்கிற கதை. அது எப்படி விடுதலைப் புலிகளை ஆதரிக்காமல் ஈழத்தை ஆதரிக்க முடியும்? நீ போய் சண்டை போட போகிறாயா? என்ற கேள்வி எழுகிறது. அதேபோல ஹமாசும். இதெல்லாம் அரசுகள் ஒரு அமைப்பை முத்திரை குத்தும் பொழுது, நாம் ஏன் அந்த சிக்கல் பற்றி பேச வேண்டும் என்கிற போதாமைதான். மேலும் அமைப்பை பற்றி முழுமையான தகவல் தெரியாத ஒரு இடத்தில்தான் அப்படிப்பட்ட நிலைப்பாடுகள்.
கேள்வி: ஆனால் நேத்தன்யாகு சொல்கிறார், ”ஹமாசை முழுவதுமாக ஒழிக்காமல் ஓய மாட்டேன்” என, அதுக்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: இன்னும் 100 வருடம் ஆனாலும் நேத்தன்யாகுவால் அது முடியாது.
இந்தக் காணொளியின் தொடர்ச்சி கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது.