
சென்னை அனகாபுத்தூரில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அவர்களின் நிலத்தை விட்டு அப்புறப்படுத்தி பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுக்கும் வேலையை அரசு செய்து கொண்டிருக்கிறது. இப்போது அனகாபுத்தூர் துவக்கி இருக்கிறார்கள் இனி மேலும் தீவிரமாக சென்னை பெருநகரங்களில் வாழும் மக்களை வெளியேற்றி சென்னைக்கு வெளியில் குடி அமர்ந்திருக்கிறார்கள். அனகாபுத்தூர் மக்களுடைய பிரச்சனை மற்றும் மேலும் என்ன ஆபத்து இருக்கிறது என்பது குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மே 24, 2025 அன்று முகநூலில் பதிவு செய்தது.
இதை எப்படி புரிந்துகொள்வது?
காயிதேமில்லத் நகரை இடிக்கமாட்டோம், ஆகவே அனகாபுத்தூர் போராட்டத்தில் இணைய வேண்டாம், வீடுகளை பாதுகாத்து தருகிறோமென ஒன்றாக போராடிய மக்களை பிரித்தார்கள். மற்ற நகர்களை இடித்த பின், நாளை(25.05.2025) காயிதேமில்லத் நகரை இடிக்க வருகிறார்கள். கிட்டதட்ட 250 இசுலாமிய வீடுகளும், மசூதியும் இங்குள்ளன. இப்பகுதிகளில் தற்போது அகற்றப்படும் குடும்பங்களின் வாக்குகளே வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக 2026ல் மாறலாம். அதிகாரிகளோ, காசாக்ராண்ட் கம்பெனிக்காரனோ திமுகவிற்கு ஓட்டுபோடப் போவதில்லை.
வீடியோவில் நீங்கள் காணும் முதியவர் ”ஜெயவேலு” தனது வீட்டிற்கான பட்டா, வீடுகட்ட அரசு ஒப்புதல் உள்ளிட்ட ஆவணங்களையும், வீடு இடிக்கப்படக் கூடாது என்பதற்கான வழக்கை வெற்றிகரமாக நடத்தியவர். இவரை போல ஆவணம் வைத்திருக்கும் 5 வீடுகளை இடிக்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட வீட்டினை ஏன் இடிக்கிறீர்கள் என கேட்டதற்கு, இடித்த பின் முறையீடு செய்யுங்கள் என்றார்கள் அதிகாரிகள். இதுபோன்ற அநீதிகளை தடுக்க போராடுகிறோம். .
அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தும் வீடு இடிப்புகளை தடுக்க இயலவில்லையெனில், மக்கள் பிரதிநிதிகளை விட அதிகாரிகளே உயர்வானவர்களா? அதிகாரிகள் ஆட்சி நடத்துகிறார்கள் எனில் தேர்தல், சட்டமன்றம், அமைச்சரவை எதற்கு?
நீதிமன்ற தீர்ப்புகள் என ஆட்சியாளர்கள் சொல்வதன் பின்னால் உள்ள உண்மைகளை பார்ப்போம்.
திடீரென உங்கள் பகுதி ஆக்கிரமிப்பு என அரசிடமிருந்த்து அறிவிப்பு வந்தால், அன்றாடங்காய்ச்சியாக இருக்கும் ஏழை மக்கள் தமக்கு தெரிந்த வழக்கறிஞர், கட்சி பொறுப்பாளரிடம் தெரிவிப்பார்கள்.
வழக்கு நீதிமன்றம் வரும்பொழுது அரசு வழக்கறிஞர்கள் அதிகாரிகள் சொல்வதை வழிமொழிவார்கள். கள நிலவரத்தை அறிய எவ்வித முயற்சியும் எடுக்காத அரசு வழக்கறிஞர்கள் எனும் கட்சிக்காரர்கள் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரிப்பார்கள். அதிகாரிகள் உண்மைக்கு மாறான தகவலை பதிவு செய்வார்கள் அல்லது பாதி உண்மையை/தகவலை தெரிவிப்பார்கள். இவற்றை ஆய்வுசெய்யுமளவு வழக்கு தொடுத்தவர்களுக்கு நேர அவகாசமோ, வசதிகளோ, வாய்ப்போ இருக்காது. எனவே மக்களுக்கு எதிரான தீர்ப்பு வரும். இந்த தீர்ப்பை வைத்துக்கொண்டு ‘நீதிமன்ற உத்தரவுப்படி’ ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என அதிகாரிகள் காவல்துறை படையோடு அராஜகமாக வீடுகளை இடிப்பார்கள். சட்டமன்ற உறுப்பினரும், ‘நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நான் என்ன செய்ய முடியும்?’ என கைவிரிப்பார். ஆளும் கட்சி-எதிர்கட்சி கைவிரித்துவிட வீடுகள் இடிபடும்.
உதாரணமாக நாளை இடிபட இருக்கும் காயிதேமில்லத் நகர் என்பது நீர்நிலை ஆக்கிரமிப்பு என அதிகாரிகள் அறிவிக்கிறார்கள். ஆனால் அரசு சர்வேயின் படி ஆக்கிரமிப்பாக இல்லை. வழக்கறிஞர் இந்த விவரம் தெரியாமல், 50 ஆண்டுகளாக குடியிருக்கிறோம் எனவே நிவாரணம் கொடுங்களென கேட்கிறார். இந்த காயிதேமில்லத் நதிநீர் வரைபடத்தின்படி ஆக்கிரமிப்பா இல்லையா என நிரூபிக்காமலேயே, அதிகாரிகள் நீதிமன்றத்தில் ‘வேறுவீடுகள் தருகிறோம்’ எனச் சொல்லி வீடுகள் இடிக்க உத்தரவு பெறுகிறார்கள்.
திமுக கட்சியிலிருந்து சென்ற அரசு வழக்கறிஞர் எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் ஆமொதிக்க அனைத்தும் முடிகிறது.
தனியார் கம்பெனிகள், நிறுவனங்களுக்கு ஓரிரு நாளில் பட்டா, கட்டிடம் கட்ட அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரிகள் ஏழை மக்களின் நிலத்திற்கு பட்டா கொடுக்காமல் 20-30 ஆண்டுகள் அலைய வைத்திருப்பார்கள். சில வழக்கறிஞர்களும் அதிகாரிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் வகையில் வழக்கு நடத்தியும் உள்ளார்கள். திறமையான மக்கள் சார்பான வழக்கறிஞர்கள் இல்லாததால் பல வழக்குகள் மக்களுக்கு எதிரான தீர்ப்பை பெற்றுள்ளன. அரசு அதிகாரிகள், ‘ஆக்கிரமிப்புகள்’ என நிரூபிக்காமலேயே அரைகுறை ஆவணங்களை கொண்டு வழக்கில் வெற்றிபெறுவார்கள்.

இவ்வாறாக வஞ்சிக்கப்பட்ட மக்களின் வீடுகளை போலீசை கொண்டு இடிக்க முடியவில்லையெனில் ராணுவத்தை கொண்டாவது இடியுங்கள் என தீர்ப்புகளெல்லாம் வந்துள்ளன. இதை வைத்து அதிகாரிகள், ‘நீதிமன்ற அவமதிப்பு வந்துவிடும்’ எனச் சொல்லி முரட்டுத்தனமாக காவல்துறையை வைத்து அகற்றி எறிவார்கள். பத்திரிக்கைகளும் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என செய்தி வெளியிடுவார்கள். நம்மில் பலரும், ஆக்கிரமிப்பை இடிக்கத்தானே வேண்டுமென்பார்கள். ஏழைகள் அரசு கொடுத்த தரங்குறைந்த வீட்டிற்கு மாதமாதம் கட்டிட தொகையை, ஜி.எஸ்.டியை கட்டி வருமானத்தை இழப்பார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடம் அருகே இல்லாததால் கல்வி கற்பதை நிறுத்துவார்கள்.
அனகாபுத்தூரிலும், ‘குடிசைபிரபுக்களாக’ (slum lords) சிலர் ஆற்றுப்பகுதியை ஆக்கிரமித்து லாபம் கொழிக்கிறார்கள் எனும் செய்தியை பத்திரிக்கையில் பார்த்தோம். எனவே இந்த குடிசைபிரபுக்களை அகற்ற உத்தரவிடுகிறோம் என நீதிமன்ற தீர்ப்பொன்று வந்தது. அனகாபுத்தூரில் அப்படியாக யார் இருக்கிறார்கள் என பத்திரிக்கை செய்தி பெயர் குறிப்பிடவில்லை. உண்மையில் அப்படியாரும் அங்கே கிடையாது. ஆனால் ஆங்கில ஊடகம் ஒன்று இப்படி பொய்யான செய்தியை வெளியிட்டது. இப்படியான சட்டவிரோத நடவடிக்கைகள் இருப்பது உண்மையெனில் வருவாய்துறை, காவல்துறை தகவலை பகிர்ந்திருக்க வேண்டும், அல்லது நீதிமன்றத்தில் பதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படியாக ஏதும் நடக்கவில்லை. இந்த பத்திரிக்கையில் காசாக்ராண்ட் விளம்பரங்களும் வந்துள்ளன. எனில் Slum Lords செய்தி எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஆனால் இதைக் கொண்டு தீர்ப்பை வாங்கி வீடுகளை இடிக்கிறார்கள்.

கார்ப்பரேட்கம்பெனி => அதிகாரிகள்=> ஊடகக்கட்டுரை=> ஆளும்-எதிர் கட்சி = தீர்ப்புகள்.
தீர்ப்புகள் => அதிகாரிகள்=> கட்சிகள் => வீடுகள் இடிப்பு
வீடுகள் இடிப்பு=> அரசு நிலமாக்கப்படுதல்=> பூங்கா-சாலைகள்=> கார்ப்பரேட் அபார்ட்மெண்ட்கள் பயன்பாடு.
இவையனைத்தும் எதற்காக?
காசாக்ராண்ட் போன்ற கம்பெனிகளின் ப்ராஜெக்ட்டுகள் வெற்றிபெற, ஆற்றோர பூங்கா-சுத்திகரிப்பு-நடைபாதை அமைக்கும் கான்ராக்ட் சம்பாத்தியத்திற்காக.
இந்த அநீதி அனகாபுத்தூரோடு முடியப்போவதில்லை. இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு.
இந்த நுணுக்கங்களை புரிந்துகொள்ள நாடக நாம்-தமிழர் கட்சிக்காரரிடம் ஆட்கள் கிடையாது. இதை விளக்கி புரியவைக்க முயன்றதையும் புரிந்துகொள்ளாத ‘பிசிறுகள்’ அங்கே நிறைய உள்ளன. அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் உண்மையிலேயே க்ரீஸ்டப்பாக்கள் என்பதைதான் அன்று புரிந்துகொள்ள முடிந்தது.
‘திராவிடம்’ என்பது ஆதிக்கத்திற்கு எதிரான கருத்தியல். திமுக ஆட்சியாளர்கள் நினைப்பதுபோல அதிகார வர்க்கத்திற்கான ஆதிக்க கருத்தியல் அல்ல.
அந்த கருத்தியலை காக்க மக்களோடு நிற்போம், மக்களுக்காக போராடுவோம்.