’தமிழ்நாடு விடுதலையே’ தமிழ்த்தேசியமென சொல்ல முடியாத கோழைகள் தான், தனது இறுதி மூச்சுவரை ‘தமிழ்நாடு விடுதலை’ என முழங்கிய பெரியாரை கொச்சைப்படுத்துகின்றன. ஆனால், பெரியாரின் இயக்கத் தொண்டர்கள் தமிழ்நாடு விடுதலை கோரிக்கையை முழங்குகிறவர்களே. சீமானை ஆதரிக்கும் பிற தமிழ்த்தேசிய இயக்கத்தவரால் மே17 இயக்கத்தை ஆதரிக்க இயலாமல் போனதன் காரணமென்ன? சீமான் பேசும் சாதிவழி தமிழ்த்தேசியம் என்பதை சிணுங்கிக்கொண்டே மறுத்துவிட்டு அவரோடு கைகோர்க்கும் அரசியலின் பின்னனி என்ன? என்பதை குறிப்பிட்டுள்ளார் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள், தனது முகநூலில் சனவரி 28, 2025 அன்று பதிவு செய்தது.
ஈழம் குறித்து தமிழ்நாட்டு தமிழர் இயக்கங்களின் பொறுப்பென்பது, ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கிய டில்லி அரசை அம்பலப்படுத்துவதே.
காசுமீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளை ஈழத்தில் சிங்கள அரசை கொண்டு நடத்தியது. பர்மாவில் நடந்த தேசிய இன போராட்டத்தையும் இவ்வாறே முடக்கியது. மாநில கட்சிகள் இந்த வேலைத்திட்டத்திற்குள்ளாக இழுத்துவரப்பட்டன. மாநில கட்சிகளாக இருந்த காசுமீரில் பரூக் அப்துல்லா, அசாமில் அசோம்கணபரிசத், பஞ்சாபில் அகாளிதள் என்பதை போலவே திமுகவும், அதிமுகவும். இக்கட்சிகளை கொண்டு விடுதலை இயக்கத்தினரை அழித்தனர். இந்த வேலைத்திட்டத்திற்கு உடன்படாத கட்சிகள் அழிக்கப்பட்டன அல்லது ஆட்சி நீக்கம் செய்யப்பட்டன. சீமான் ஆட்சி அமைத்தாலும் இதைத்தான் செய்வார் என்பதை அவரது 2016 தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தியது. ஆட்சிக்கு வந்தால் ஈழத்திற்காக மாநாடு நடத்துவேன் என்பதுதான் அவரது அதிகபட்ச வாக்குறுதி. ‘மாநாடு’ நடத்த எதற்கு மாநில பதவி என ஐயா மணியரசன் கேட்கவில்லை. அன்றைய தினம் மே17 மட்டுமே இக்கேள்வியை எழுப்பியது.
திராவிட இயக்க போராட்டத்தை அறுவடை செய்தது கழக கட்சிகள், இனப்படுகொலை உருவாக்கிய அரசியலை அறுவடை செய்தார் சீமான். பெரியார் இறுதிக்காலம் வரை ‘தமிழ்நாடு இந்தியாவிலிருந்து விடுதலையடைய வேண்டும்’ என்றார். சிங்கள தேசத்திலிருந்து ‘ஈழ விடுதலை’ கோரிக்கை உயிர்ப்போடு இருக்க தம்மையே கொடையாக கொடுத்தார் மேதகு.
ஈழப்படுகொலை காரணியை திமுகவோடும், திராவிடத்தோடும் நிறுத்திகொள்வது சீமானுக்கு லாபம் தரக்கூடியது. திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காலத்தில், இந்திய அரசை நோக்கி அவர் கேள்வி எழுப்பியிருக்க முடியும். மே17 இயக்கம் இந்தியாவை நோக்கி மட்டுமல்ல, திமுக-அதிமுகவை நோக்கி 16 ஆண்டுகளாக எழுப்பி வருகிறது. இதை செய்யாதவரே சீமான்.
சீமானை ஆதரிக்கும் பிற தமிழ்த்தேசிய இயக்கத்தவரால் மே17 இயக்கத்தை ஆதரிக்க இயலாமல் போனதன் காரணமென்ன? சீமான் பேசும் சாதிவழி தமிழ்த்தேசியம் என்பதை சிணுங்கிக்கொண்டே மறுத்துவிட்டு அவரோடு கைகோர்க்கும் அரசியலின் பின்னனி என்ன?
திமுகவின் சந்தர்ப்பவாதத்தை நோக்கிய கேள்விகளை, ‘தமிழ்நாடு விடுதலை’ கோரிக்கையை வெளிப்படையாக அறிவித்த பெரியாரை நோக்கி திருப்பப்பட காரணமென்ன? தமிழ்த்தேசியமென்று அரசியல் இயக்கம் செய்யும் ஐயா மணியரசனோ, அல்லது திராவிடம் ஏற்காத, திராவிடம் காலாவதியாகிவிட்டதென சொல்பவர்களோ ’தமிழ்நாடு விடுதலை‘ முழக்கத்தை பகிரங்கமாக வைப்பதில்லையே ஏன்? இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு அவர்கள் அச்சப்படுகிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிந்த உண்மையே இதன் காரணம்.
இவ்வாறு ‘தமிழ்நாடு விடுதலையே’ தமிழ்த்தேசியமென சொல்ல முடியாத கோழைகள் தான், ‘தமிழ்நாடு விடுதலை’ என இறுதிமூச்சுவரை முழங்கிய செய்த பெரியாரை கொச்சைப்படுத்துகின்றனர். பெரியாரை காலவதியானவர் என்கின்றனர். ஆனால், பெரியாரின் இயக்கத் தொண்டர்கள் எவரும் தமிழ்நாடு விடுதலை கோரிக்கையை முழங்குகிறவர்களே.
அவர்களது தமிழின விடுதலை உணர்வே, ஈழப்போராட்டத்தில் பங்களிப்பு செய்பவர்களாக மாற்றியது. இதனாலேயே தமிழனுக்காக தனி தேசம் உருவாக்கும் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தினர். ராஜீவ் மரணத்திற்கு பின்னர் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய போதிலும் பின்வாங்காதவர்கள் திராவிட இயக்கத்தினர். இதற்காக பல கொடுமைகளை, ஒடுக்குமுறைகளை சந்தித்தார்கள். இவையெல்லாம் நம் கண்முன்னர் நடந்த வரலாறுகள்.
திராவிட இயக்கத்தார் சந்தித்த ஒடுக்குமுறைகளில் எத்தனை விகிதத்தை ஐயா மணியரசனாரின் இயக்கம் சந்தித்திருக்கும்? சீமான் சந்தித்திருப்பார்? 2009க்கு பின்னர் திராவிட இயக்கத்தவர் ஈழத்திற்காக வாங்கிய வழக்குகளில் எத்தனை வீதம் ஐயா மணியரசன் அமைப்பும், சீமான் கட்சியும் வாங்கியது? காவிரி உரிமை மீட்பு, மீனவர் கொலை, எழுவர் விடுதலை முதல் ஸ்டெர்லைட் வரையான தமிழ்நாட்டு கோரிக்கைகளுக்காக மே17 இயக்கமும், திராவிட இயக்கத்தாரும் வாங்கிய வழக்குகளை இவர்கள் பெற்றிருக்கிறார்களா? கணக்கீட்டுப் பாருங்கள்.
இந்திய அரசால் ஒடுக்குமுறைக்குள்ளாகாத இயக்கத்திற்கும், அடக்குமுறையை எதிர்கொள்ளும் இயக்கத்தாருக்கும் உள்ள வேறுபாடுகளே இரு அணிகளுக்குமான அரசியல் வேறுபாட்டை காட்டும்.
பெரியாரை, திராவிட கொள்கையை எதிர்த்தால் டில்லி ஆட்சி அடக்குமுறை செய்யாது. ஏன்?
மோடி அரசின் மாநில உரிமையை பறிக்கும் சட்டங்களை வீதியில் எதிர்க்காமல், அதிகபட்சம் கண்டன அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளும் இவர்கள், வீதியில் இறங்கி பெரியாருக்கு எதிரான அவதூறு பரப்புகிறார்கள். சீமான் ஆட்சிக்கு வந்தால் மாநில உரிமைகளை மோடி திரும்ப கொடுத்து விடுவாரா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை சுட்டிக்காட்டி தப்பித்துக்கொள்வதை தவிர வேறு வழிகளை இவர்களால் காட்ட இயலாது.
2016 வரை திமுகவை தேர்தல் களத்தில் எதிர்த்த பெரியாரிஸ்டுகள், ஏன் 2019ல் திமுக ஆதரவாக மாறினார்கள்? திமுக-அதிமுகவிற்கு மாற்றான தமிழர் உரிமை கூட்டியக்கத்தை உருவாக்கவிடாமல் சீமானும், ஐயா மணியரசனும் தடுத்தார்கள். எடப்பாடி-பாஜக கூட்டு அரசியலை எதிர்த்து கூட்டணி அமைக்க மறுத்தார்கள். இச்சமயத்தில் காவிரி உரிமை போராட்ட குழுவிலிருந்து மே17 இயக்கத்தை சனநாயகமின்றி நீக்கினார் ஐயா மணியரசன். திமுக-அதிமுக மாற்றான தேர்தல் அரசியல் கூட்டணியை நிராகரித்து அதிமுகவிற்கு வாக்குகேட்டார் சீமான். 2016 செயலலிதா மறைவிற்கு பின் மோடி ஆடிய கொடுமையான அடக்குமுறைக்கு எதிராக போராட்ட கூட்டணியில் பங்குகொள்ளாமல் இருந்தார்கள் ஐயா மணியரசனும், சீமானும். 2016ல் கர்நாடக தமிழருக்கு எதிரான வன்முறையின் பின்னனியில் இயங்கிய ஆர்.எஸ்.எஸ் அலுவலக முற்றுகையில் பங்கேற்கபோவதில்லை என்று அறிவித்தார் ஐயா மணியரசன். அக்காலத்தில் திமுக ஆட்சியில் இல்லை, செயலலிதா, கலைஞர் போன்றோர் மருத்துவமனைகளில் இருந்தனர். இந்த வெற்றிடத்தை மாற்று அரசியலை கொண்டு நிரப்ப இவர்கள் தயாரில்லை. 2009-2019 வரை திமுக-அதிமுக அல்லாத கூட்டணி உருவாகாமல்/பங்கேற்காமல் தடுத்தவர்கள் இவர்களே.
அதிமுக-பாஜக கூட்டணி அப்பட்டமாக இந்துத்துவ அரசியலை திணித்த போது ஐயா.மணியரசன் நடத்திய போராட்டங்கள் எத்தனை? திராவிடத்தின் மீதான வன்மத்தை கொட்டிவிட்டு அமைதிகாத்துவிடுவார். ஆனால் களத்தில் போராடியது மே17 இயக்கமும், பெரியாரிய இயக்கங்களும். அதிமுக-பாஜகவிற்கு எதிரான தேர்தல் கூட்டணியை உருவாக்காமல் பெரியாரிஸ்டுகளை தாக்கிக்கொண்டிருந்தனர் இருவரும். பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென எச்.ராஜா பேசியபோது, சீமான் கட்சியினரும் இதை பேசினர். தமிழின போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக மே17 மீது விசாரணை கமிசனை அதிமுக அரசு அமைத்த போது, அதை எதிர்த்து நிற்க இருவரும் வரவில்லை.
2016 தேர்தலில் கூட திமுகவை ஆதரிக்கவில்லை என்று அறிவித்த பெரியாரிய அமைப்புகள், 2019ல் திமுகவை நோக்கி நகர்ந்ததற்கான காரணம், மூன்றாவது அணி அமையவிடாமல் சீமானும், மணியரசனும் மேற்கொண்ட அரசியல்களே. எடப்பாடி ஆட்சி நடத்திய படுகொலைகள், அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் சீமானுக்கோ, ஐயா.மணியரசனுக்கோ இல்லை. அதிமுக-பாஜக காலத்தில் நாங்கள் எதிர்கொண்ட அடக்குமுறையில் சிறுவிகிதத்தை கூட எதிர்கொண்டதில்லை இவர்கள். ஆனால் மற்ற இயக்கத்தினருக்கு அடக்குமுறைகள் ஏராளம் இருந்தன.
இவ்வாறான சூழலிலேயே பெரியாரிய அமைப்புகள் அதிமுக-பாஜக கூட்டணியை எதிர்கொள்ள திமுகவை ஆதரிக்கும் நிலை பெரியாரிய அமைப்புகளுக்கு ஏற்பட்டது. அச்சமயத்திலும் மே17 இயக்கம் திமுகவை ஆதரிக்காத தனித்த மக்கள் இயக்க கூட்டமைப்பு உருவாக வேண்டுமென்றது. இதுவே இன்றும் எங்கள் அரசியல் நிலைப்பாடு. இதையும் ஐயா மணியரசன் அல்லது அவரது அரசியலில் இருக்கும் தமிழ்த்தேசியத்தினர் ஆதரிக்கவில்லை.
ஆக போலியாக பாஜகவை எதிர்ப்பதாக நாடகமாடிக்கொண்டு, தமிழக கோரிக்கைகளுக்காக போராடிக்கொண்டிருந்த பெரியாரிஸ்டுகளை எதிர்த்தவர்கள் ஐயா மணியரசனும், சீமானும் இவர்கள். இவர்களது அரசியலை நோக்கி வெளிப்படையான கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது நமக்கு.
திமுக-அதிமுக-திக அழிந்துவிட்டால் தனித்தமிழ்நாட்டை ஐயா மணியரசன் பெற்றுவிடுவாரா? அல்லது பெரியார் திடலில் நின்று அவர் அறிவித்த ‘தமிழ்நாடு தன்னுரிமையை’ பெற்றுவிடுவார்களா? சீமான் ஆட்சி அமைந்தால் தன்னுரிமை கோரிக்கை நிறைவேறுமா? அல்லது தன்னுரிமை கோரிக்கையை தனது கொள்கை திட்டத்தில் சீமான் வைத்துள்ளார் என நம்புகிறாரா?
திராவிட கட்சிகளை எதிர்ப்பதால் மட்டுமே தமிழ்நாட்டுரிமை கிடைத்துவிடும் என்பது முதன்மை எதிரியை அடையாளம் காட்டாமல் தப்பிக்கும் தந்திரம் மட்டுமே.
தோழர் தமிழரசன் அரசியல் முழக்கங்களை மக்களிடத்தில் சொன்னவர்கள் அல்ல இவர்கள். அவரது கருத்துகளை புத்தகமாக கூட ஐயா மணியரசனோ, சீமானோ வெளியிட்டவர்கள் அல்ல. ஆக தமிழ்நாடு விடுதலைக்கு போராடிய தோழர் தமிழரசனோ, இக்கோரிக்கையை மக்கள் மயப்படுத்திய பெரியாரோ முக்கியமல்ல இவர்களுக்கு. ‘தமிழரசன் தேங்காய்சில்லுக்கு ஆசைப்பட்டவர், தான் பாரதநாட்டிற்கே ஆசைப்படுபவன்’ என்ற சீமானை கைதட்டி ரசித்தவர்கள் இவர்கள்.
தோழர் தமிழரசனையும் ஏற்காதவர்கள், அவர் முன்வைத்த சாதி ஒழிப்பையும் ஏற்காதவர்கள். பெரியார் முவைத்த தமிழ்நாடு விடுதலையை, சாதி ஒழிப்பை ஏற்காதவர்கள் சீமானும், ஐயா மணியரசனும். இந்தியாவிற்குள்ளாக, ஆரியத்திற்குள்ளாக திமுக-அதிமுகவை போன்று அமைச்சராகும் ஆசை கொண்ட சீமானுக்கு குருநாதர்களாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளக்கூடியவர்கள் இவர்கள்.
‘..தமிழ்நாடு விடுதலை கோரிக்கை என்பது தமிழரல்லாத பெரியாரின் கோரிக்கை, எங்களை போன்ற சாதிவழி பச்சை தமிழர்களின் கோரிக்கையல்ல..’ என முடித்துக் கொள்ளக்கூடியவர்கள் இவர்கள்..