பிரபாகரன் என்னும் மாவீரர்
“அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்த போது தான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.”
– தமிழீழ தேசியத் தலைவர்.
தன்னியல்பான விதி பிறக்கும் சூழ்நிலையை, உலக விடுதலைப் போராட்டங்களின் மீதும், கடந்த வரலாறுகளின் மீதும் கூர்மையான நுண்ணுணர்வு கொண்டவர்களால் மட்டுமே அவதானிக்க முடியும். அவதானித்தார் பிரபாகரன் என்னும் மாவீரர்.
தங்களின் மூதாதையர்களான திராவிடப் பழங்குடிகள் நிறைந்து வாழ்ந்த இலங்கைத் தீவினை, சிங்களர்களின் தேசம் என்று பெளத்த மதவாத பிக்குகள் நிலை நிறுத்திய வரலாற்றுத் திரிபினை அறிந்த போது தான் தன்னியல்பான விதி முதன் முதலில் தேசியத் தலைவரின் நெஞ்சினில் உருக்கொண்டது.
இலங்கை, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பின்பு சிங்களப் பேரினவாதத்தின் ஆதிக்கம் தமிழர் பகுதிகளை விழுங்கத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் பறிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிலப்பகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும், மறுக்கப்பட்ட உரிமைகள் கோரும் அறவழிப் போராட்டங்கள் தமிழர்களால் தொடர்ந்து நிகழ்ந்தது. சிங்களப் பேரினவாத அடக்குமுறையால் அமைதி வழி வலுவிழந்து போகும் சூழலில் தான் வரலாற்றின் தன்னியல்பான விதிக்கு ஆயுதத்தால் வடிவம் கொடுத்தார் தமிழீழ தேசியத் தலைவர்.
சிங்களக் கட்சிகளிடையே நடந்த ஆட்சி பிடிக்கும் ஆசைகளுக்காக, ஈவிரக்கமற்ற சிங்களப் பயங்கரவாத அரசக் கட்டமைப்புகளாலும், பெளத்த மதவாதிகளாலும் தூண்டி விடப்பட்ட சிங்களப் பேரினவாதத்திற்கு பலியாக்கப்பட்டது தமிழினம். அமைதியே வாழ்வியலாக வரித்து வாழ்ந்திருந்த தமிழினம் அனுபவித்த வலியே வரலாற்றின் தன்னியல்பான விதியான விடுதலை இயக்கத்தை உருவாக்க அவரைத் தூண்டியது.
“கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கும் தூண்கள்” என்கிற குறிக்கோளுடன் விடுதலைப் புலிகளை வழி நடத்திய சீரிய தலைமைப் பண்பாளர் அவர். சிங்கள அரசின் தரப்படுத்துதல் சட்டம் தமிழினத்திடமிருந்து கல்வியை பறித்தது. ஆனால் தமிழீழத்தில் விவசாயத்திலிருந்து விமானத் தொழில்நுட்பம் வரை தன்னிறைவு பெறும் கல்வியாக தேசியத் தலைவரால் தான் வாய்த்தது.
கலை, இலக்கியம், ஊடகம் என எங்கும் தமிழ், எதிலும் தமிழென தமிழ் அங்கு தான் நிறைந்தது. முப்படைகள் வரை தமிழ் பெயர்கள் எங்கும் வியாபித்தது. வெறும் விழாக்களைத் தலைமுறையாக கடத்துவதில் மட்டுமில்லை பண்பாடு. எளிய மக்கள் எந்த வித அச்சமும் கொள்ளாது நிர்வாகத்தை வழி நடத்தும் பொறுப்பில் இருப்பவர்களிடம் அணுக முடிகிறதோ, கேள்விகள் கேட்க முடிகிறதோ அந்த இடத்தில் தான் உண்மையான தமிழர் பண்பாடு நிலை கொண்டிருப்பதாக சொல்ல முடியும். அதனை அங்கு உருவாக்கிக் காட்டினார் தேசியத் தலைவர்.
காவல் துறை, நீதித் துறை, வங்கிகள் என அனைத்து அதிகாரங்களும் மக்கள் அணுகும் வண்ணம் பிரம்மாண்டங்கள் ஏதுமின்றி எளிமையாக செயல்பட்டது. நிலம் தக்க வைத்துக் கொள்ளும் இனமே இறையாண்மை உடைய இனமாக வாழும். இறையாண்மையில் துளியும் சமரசம் கொள்ளாமல் நிலம் மீட்க சமர் புரிந்த மாவீரர்களை வழி நடத்தி, பெரும் ஆயுத பலம் கொண்ட சிங்கள ராணுவத்தை விரட்டிய வெற்றி நாயகன் அவர். இனக் கட்டமைப்பின் தூண்களை தங்கள் உள்ள உறுதியால் தாங்கி நின்ற தீரர்களின் தலைமையாக ஒரு தன்னாட்சிப் பிரதேசத்தை, உலகத்தின் மனித மாண்பாளர்களே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டியவர்.
இந்த தன்னாட்சியைக் கண்டு மனித நேயர்கள் வியந்தார்கள். ஆதிக்கவாதிகள் பயந்தார்கள். இன்று இலங்கையை பங்கு போட்டுக் கொண்டிருக்கும் ஆதிக்க நாடுகள் விதித்த சமரசத்திற்கு துணை போயிருந்தால் தமிழீழம் என்றோ கிடைத்திருக்கும். ஆனால் அதன் உயிர்ப்பான நிலங்களையும், வளங்களையும் வேட்டையாடி இந்த நாடுகள் களித்திருக்கும். தாங்கள் தோற்றாலும் இந்த உயிர்ப்பை தலைமுறைகளுக்கும் கையளித்து விட்டுப் போக வேண்டும் என்று தான் சமரசத்திற்குத் துளியும் இடங்கொடுக்காமல் ஆயுதங்களை மெளனித்தார்கள் புலிகள். சிங்களப் பேரினவாதமும், இந்தியப் பார்ப்பனீய அதிகாரமும் சேர்ந்து நின்றாலும் வெல்ல முடியாத ஆன்ம பலம் கொண்டவர்களை உருவாக்கிய பேருறுதி கொண்டவர் பிரபாகரன் அவர்கள்.
ஆண்களுக்கு வீரம், தீரம் என்றும், பெண்களுக்கு சாந்தம், அமைதி என்றும் நிறுவிய ஆணாதிக்க சமூகத்தில் பெண்களும் வீரத்திற்கும், தீரத்திற்கும் சளைத்தவர்களல்ல என நிரூபித்த பேராண்மையாளர் அவர். பெரும் இலக்கான நாட்டின் விடுதலைக்கு எழுச்சி கொள்ளும் பெண்களின் முன்பு அவர்களின் உடலை இலக்காக வைத்து ஆணாதிக்கவாதிகள் கட்டி வைத்த வரையறைகள், சாதியம், மூடப் பழக்கங்கள் போன்ற அனைத்தும் உதிரும், பெண்களின் உள்ளார்ந்த அச்சங்கள் தூர விலகும் என்கிற தெளிவான கண்ணோட்டம் கொண்டு பெண்களை போராட்டக் களத்தில் ஈடுபடுத்தினார்.
நுகர்வை நோக்கிய பெண்ணியக் கூப்பாடுகளை வளர்த்தெடுக்கும் வலதுசாரித்தனத்திற்கு மாற்றாக இன விடுதலை நகர்வை நோக்கி உழைக்கும் மக்களை அணியப்படுத்தும் இடதுசாரிப் பெண்ணியவாதிகளை வளர்த்தெடுத்து, காலங்காலமாக புரையோடிப் போன பெண்ணிய அடக்குமுறைகளை வேரோடு பிடுங்கியெறிந்தார். ஆதிக்கவாதிகளை ஆட்டம் காண வைக்க பெண்களிடம் உறுதிகளை ஊன்றினார். ஆண்களுக்கு நிகரான பெண்களின் வீரம் சிங்கள ராணுவத்தை விரட்ட வீறு கொண்டு எழுந்தது. பல வெற்றிகளை ஈட்டித் தந்தது. கரும்புலியாகும் தன் துறப்பையும் உவகையுடன் இனத்திற்கு ஈந்தது. வீரம் மட்டுமல்ல கலை, இலக்கியங்களில், கவிதைகள் புனைவதில், ஊடகப் பொறுப்பில், நிர்வாகத் தலைமையில் என விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளெங்கும் பெண்கள் நிறைந்து இருந்தார்கள். மாவீரர்களாக இன்றும் தமிழர்கள் உள்ளமெங்கும் பரவி இருக்கிறார்கள்.
“எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின் அதனை முழு மனதுடனும், நேர்மையுடனும் தயாராக இருக்கிறோம்” என்றவர் அவர் .
நேர்மையான சமாதானம் அவருடையதாக இருந்தது. மேற்பூச்சு சமாதானம் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தியவர்களிடம் இருந்தது. சிங்கள ராணுவம் புலிகளிடம் வீழ்ந்த பொழுதெல்லாம் சமாதானத் தூதுவர்கள் வந்தார்கள். போர் நிறுத்தம் ஏற்பட்டது. புலிகள் போரினால் சீர்குலைந்த பகுதிகளை சீரமைத்தார்கள். மக்கள் வாழ்வியலை மீளக் கட்டமைத்தார்கள். ஆனால் சிங்களப் பேரினவாத அரசு சர்வதேசமெங்கும் பயணித்தது. இலங்கையின் வளங்களை அடகு வைத்து ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. இவற்றை குறித்தெல்லாம் தூதுவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஆயுதங்கள் அளித்த சர்வதேசத்தின் சூழ்ச்சிகளும், பேரினவாதத்தின் வஞ்சகமும் இணைந்து தமிழினத்தைக் கொன்று குவித்தது. போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் இலட்சியங்கள் மாறாது என்ற தங்கள் கொள்கைக்கு உயிர் கொடுத்து விட்டு ஆயுதங்களை மெளனித்தார்கள் புலிகள். எண்ணற்ற புலிகளின் உயிர் ஈகத்தோடு தனது குடும்பத்தையும் தமிழீழத்திற்காக அர்ப்பணிக்கும் தியாகச் சுடரானார் தேசியத் தலைவர்.
தமிழினத்தின் மேல் கொண்ட தீரா அன்பினால், தமிழ் நிலத்தின் மீதான மாறா பற்றினால், பழந்தமிழர் வீர மரபின் தொடர்ச்சியாக அறநெறியும், போர் வழியும் இணையும் இடத்தில் நின்று தமது மக்கள் அனுபவித்த தாங்க இயலாத கொடுமைகளுக்காக ஆயுதம் ஏந்தியவர் அவர்.
“மக்களுக்காக போராடுபவராக ஆயுதம் கொண்டவர்கள் அதிகாரத்தையும் கைக்கொள்கின்றனர். இந்த அதிகாரம் தவறான வழியில் வழிநடத்தப்பட்டால் அது சர்வாதிகாரத்தில் தான் முடியும். அதனால் தான் எங்கள் இயக்கத்தை மிகவும் கட்டுப்பாடும், ஒழுக்கமும் கொண்டதாக வைத்திருக்கிறோம். இரக்கமற்றவர்களுக்கு எதிராகவே நாங்கள் இரக்கமற்றத் தன்மையை கடைப்பிடிக்கிறோம்.” – மக்களுக்காக ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டத்திற்கும், மக்களுக்கு அச்சம் தருவதற்கு ஆயுதம் ஏந்திய தீவிரவாதத்திற்கும் இடையினில் உள்ள வித்தியாசம் தேசியத் தலைவரின் கூற்றுகள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இதனை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள், விளங்கினாலும் சர்வாதிகாரத்தையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள் புலிகளைத் தீவிரவாதிகள் என்று தங்கள் வலுவான கட்டமைப்புத் தளத்தில் நின்று பரப்புகிறார்கள். இந்தியாவில் பார்ப்பனிய அதிகார மட்டங்கள் செய்து கொண்டிருந்த இந்த இழிவான வேலையை இன்று வேறொரு கும்பல் கடனாகப் பெற்றிருக்கிறது. இந்தக் கும்பல் பாதிக்கப்படும் மக்களுக்கு என்றும் துணையாக நின்ற திராவிடக் கருத்தியலின் வழி வந்தவைகளாக சொல்லிக் கொள்வது தான் மிகவும் வேதனையான ஒன்று.
இளம் வயதிலேயே வல்வெட்டித் துறை நுலகத்தில் நாளிதழ்களும், புத்தகங்களும் படிக்கும் பழக்கம் கொண்டவர் அவர். அவற்றிலிருந்த தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, சிங்கள காவல் துறையால் தமிழர்கள் சித்திரவதை என்கிற செய்திகள் ஒவ்வொன்றும் இரத்தத்தை கொதிக்கச் செய்தன என்றும், சாகும் முன்பு இரண்டு சிங்கள ராணுவத்தினரையோ, காவலர்களையோ சுட்டு விட வேண்டும் என்ற அந்த மிகச் சிறிய லட்சியமே வீட்டை விட்டு கிளம்ப காரணம் என்றும், அதற்கான வழியும், பயணமும் தான் தன்னினத்தின் விடிவு தமிழீழம் பிறப்பதில் தான் இருக்கிறது என்கிற முடிவெடுக்கச் செய்ததாகவும் நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
குடிமக்களை எந்த வித வேறுபாடும் பார்க்காமல் காக்க வேண்டிய ஒரு அரசின் கட்டமைப்பே இனப்பாகுபாடு பார்த்து ஒரு இனத்தை ஒடுக்குமானால் அந்தக் கட்டமைப்பின் மீது ஒடுக்கப்பட்ட இனம் சீற்றம் கொள்வது இயல்பு. அந்த சீற்றத்தை ஒருமுகப்படுத்தும் வடிவமாக ஒரு தலைவன் முன் வருவான் என்பதே உலகப் போராட்ட வரலாறுகளின் விதியாக இருக்கிறது. தன்னினத்தின் மீது அளவிலா பற்று கொண்ட அவர் உணர்விலும் இந்த இயல்பான விதி பொருந்தியது. அந்த பயங்கரவாத அரசக் கட்டமைப்பின் மீது தன்னால் இயன்ற அளவு ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டியது. அவர் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டது. அந்த ஆயுதங்களையும் சிங்கள அரசக் கட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்தினாரேத் தவிர சிங்கள மக்கள் மீது பிரயோகிப்பதைக் குறித்து எந்த நிலையிலும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
“பிரபாகரன் பிறப்பிலேயே வீரனென்றும், பதினைந்து வயதிலேயே தமிழீழக் கனவு பிறந்தது என்றும் கதையளக்கிறார்கள். ஆனால் எனக்கு அந்த வயதில் தமிழீழம் என்பது கூட தெரியாது. நாங்கள் தொடர்ந்த பாதையே இனி தமிழர்களுக்கான நிரந்தர விடியலாக தனித் தமிழீழமே அமையும் என்கிற லட்சியத்தை தந்தது.” என்று படிப்படியான தங்கள் வளர்நிலைகள் தந்த லட்சியத்தைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இன்று கதையளப்பவர்களின் முகமூடிகளை நாம் அவிழ்ப்பதற்கு ஏதுவான கருத்துக்களை முன்பே பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு தமிழ் சமூகத்தினிடையே வளரும் நச்சுக்களை போன்றவர்களின் குணங்களைக் கூட அறிந்த தீர்க்கமான அரசியல் பார்வை அவருடையது.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று முழங்கினார் பாரதிதாசன். அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் தேசியத் தலைவர். மக்கள் மீது பேரன்புடைய மனிதனே ஆயுதம் ஏந்துவான். அமைதியான, கட்டுப்பாடான குடும்பத்தில், வறுமை என்பதையும் அறியாத வீட்டினில் பிறந்து தன்னினம் உரிமையுடனும், நிம்மதியுடனும் வாழ அந்த மனிதன் ஆயுதம் ஏந்தினார். வெள்ளையரை எதிர்த்து தீரத்துடன் நின்ற பாளையக்காரர்களும் ஆயுதம் ஏந்தினார்கள். இந்திய தேசியப் படையை கட்டியமைத்து விடுதலைக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசும் ஆயுதம் ஏந்தினார். அவர்களும் இறுதியில் வெள்ளையரிடம் தோல்வியையேத் தழுவினார்கள். தோல்வியைத் தழுவியதால் ஆயுதம் ஏந்திய அவர்களை தீவிரவாதிகள் என்று நமக்கு வரலாறு சொல்லித் தரப்படவில்லை. தியாகிகள் என்றே அழைக்கிறோம். ஆனால் சிங்களப் பேரினவாத வெறியாட்டத்திற்கு எதிராக, மக்களுக்காக ஆயுதம் ஏந்தியவரை, இன்று அனைவருடைய குரலையும் பதிவாக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்த செயலிகளில் புகுந்து கொண்டு நச்சுத் தன்மையுடன் பேசித் திரிகிறார்கள். ஆதிக்க விதிகளுக்குள் அடங்கி நீர்த்துப் போய் பெயரளவில் மட்டுமே தமிழர்களாக இருப்பவர்கள் வரலாற்றின் தன்னியல்பான விதியை வரித்து வாழ்ந்தவரை கொச்சைப்படுத்துகிறார்கள். இவர்களின் மட்டகரமான இந்த செயலினால் எள்ளளவும் அவரின் புகழ் குன்றாது. தமிழினம் தலைவராகக் காணும் தன்மையையும் இழக்காது. அவரின் இலட்சியம் ஒரு நாள் வெல்லும். அவரின் உருவம் என்றும் இன உணர்வாளர்களின் இதயத்தை ஆளும்.