மதுரை ஆதீனம் மறைவு செய்தியில் அம்பலமான ‘தி இந்து’
“‘இந்து மதம்’ என்ற ஒன்றே கிடையாது. சைவம்-வைணவம் மதங்கள் மட்டுமே உண்டு” என்று பேசிய 292வது மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 13-08-2021 அன்று இயற்கை எய்தினார். சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீனம் தான் சைவ மதத்தின் மிகப்பழமையான மடம் ஆகும்.
தமிழை நீச பாஷை என புறந்தள்ளி, அந்நிய சமஸ்கிருதத்தை உயர்த்தி பிடிக்கும், சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வை சனாதனத்தை கட்டிக்காக்கும் காஞ்சி சங்கராச்சாரி போலல்லாமல், மதவெறிக்கு எதிராக, சமய நல்லிணக்கத்தை காக்க முயற்சிகளை மேற்கொண்டவர் மதுரை ஆதீனம். மக்கள் ஒற்றுமைக்கும், இறை பணியில் தமிழ் மொழியின் உரிமைக்கும் குரல் கொடுத்து வந்தவர்.
காஞ்சி சங்கர மடம் “சுமார்த்தம்” என்ற தனி பிரிவை சேர்ந்ததாகும். அங்கு சிவனோ, திருமாலோ ஏற்கப்படுவதில்லை. சுமார்த்தர்கள் “உலகம் மாயை – பிரம்மமே உண்மை” என்று நம்புபவர்கள். இதன் காரணமாக, சைவ சமயம் “சுமார்த்த” பிரிவை தனக்கு எதிரான சமயமாகவே கருதுகிறது. சைவ சமய நூலான சிவஞான சித்தியார் சுமார்த்த சமயத்தினரை “மாயாவாதிகள்” என்று கடுமையாக எதிர்க்கிறது.
அதேபோல, சங்கர மடத்தை நிறுவி அத்துவைதம் கருத்தை உருவாக்கிய ஆதிசங்கரர் தனது பிரம்மசூத்திர உரையில் “பாசுபதாதிகரணம்” (பாசுபத மதத்திற்கான கண்டனம்) என்ற பகுதியில் சைவ சமயத்தை விமர்சித்து கண்டித்துள்ளார். இப்படி முரண்பாடுகள் நிறைந்த, தங்களை எதிரிகளாக உணரும், சமயங்களை “இந்து மதம்” என்ற ஒரே குப்பியில் அடைக்கப்படுகிறது. இரு மடாதிபதிகளும் தங்கள் மடத்தின் தலைவர்கள் என்ற அடிப்படையில் சமமான தகுதி கொண்டவர்களே. ஆனால், நடைமுறையில் பார்ப்பனர் தலைமை வகிக்கும் சங்கர மட தலைவர்களை குறிப்பிடும்போது “His Holiness” (புனிதம் மிக்க) என்று ஆங்கில நாளிதழ்கள் “தி இந்து”, “இந்தியன் எக்ஸ்பிரஸ்” அழைக்கின்றன. அதேநேரம், குன்றக்குடி அடிகளார் மற்றும் பிற சைவ மட தலைவர்களை விளிக்கும்போது “திரு” என்றே குறிப்பிடுகின்றன. ஒரே வகையான சமய வாழ்வை கடைபிடிக்கும் தலைவர்களை குறிப்பிடுவதில் ஏன் இந்த வேற்றுமை?
சூத்திரன் எவ்வளவு பெரிய மாகானாகவோ தவயோகியாகவோ இருந்தாலும் அவன் சன்னியாசியாக முடியாது என்ற “வருண ஆசிரம” சிந்தனையே அதற்கான காரணம்!
துறவு மேற்கொண்ட சைவமடாதிபதிகளை வேத பார்ப்பனர்கள் சங்கராச்சாரிக்கு கீழானவர்களாகவே கருதுகிறார்கள். இதற்கு சான்றாக, இன்று (14-08-2021) மதுரை ஆதீனம் மறைவை பற்றிய ‘தி இந்து’வின் நாளிதழ் செய்தியில், மதுரை ஆதீனம் முரசொலியில் பணியாற்றியது என பிற சச்சரவுகளை பற்றி எழுதியுள்ளது. ஆனால், ஆதினத்தின் மறைவை ஒட்டி ’இந்து’ தலைவர்கள் பலர் வெளியிட்ட இரங்கல் செய்தியை வெளியிடாமல் முற்றிலும் தவிர்த்துள்ளது.
அதேசமயம், 2018ல் ஜெயேந்திர சரஸ்வதி சாவு செய்தியை வெளியிட்ட “தி இந்து” நாளிதழ், அவரின் மீதான கொலைவழக்கு, பெண் பாலியல் குற்றச்சாட்டு ஆகியவற்றையெல்லாம் சொல்லாமல தவிர்த்துவிட்டது. ஆனால், பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் ஆகியோரின் இரங்கல் செய்திகளை கவனமாக தொகுத்து எழுதியுள்ளது. சன்னியாசம் மேற்கொண்ட ஆதினம், சங்கராச்சாரி இருவரும் சமமான மத தலைவர்கள் என்ற போதிலும் சங்கராச்சாரி பார்ப்பனர் “இருபிறப்பாளர்” என்ற காரணத்தினால் பார்ப்பன பத்திரிக்கை ‘தி இந்து’ அவரை மட்டும் உயர்த்தியே எழுதுகிறது. சமஸ்கிருதத்தை எதிர்க்கும், தமிழில் இறைபணியை மேற்கொள்ள முயலும் சைவ மட தலைவர்களை திட்டமிட்டு மட்டம் தட்டி எழுதுகின்றன.
துறவு பூண்டாலும், வேதம் கற்றாலும் சன்னியாசியாக, சூத்திரனை அர்ச்சகராக சனாதனம் அங்கீகரிப்பதில்லை. சூத்திரன் துறவறம் மேற்கொள்வது சனாதான நெறியை மீறுவதாகும். இதை செய்ததாலேயே சம்புகனை இராமன் கொன்றான்.
ஏனெனில் சூத்திரர்கள் பிரமச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகியமுறைகளின் மூலம் சன்னியாசமடைய இயலாது என்கிறது சனதானம். இந்த நான்கு வகை ஆசிரமமுறை பார்ப்பனர்களுக்கே உரித்தானது என்பதை புரட்சியாளர்.அம்பேத்கரின் கூற்றிலிருந்து பேரா.நெடுஞ்செழியன் மேற்கோள் காட்டுகிறார். இந்த ஆசிரமமுறையற்ற சூத்திரர்கள் அர்ச்சகர் ஆவதோ, சன்னியாசி ஆவதோ சாத்தியமற்ற நிலையிலேயே இன்றளவும் இந்துமதத்தை வைக்க விரும்புகிறார்கள் உயர்சாதி கூட்டத்தினர்.
முற்போக்கு மரபு கொண்டது என்று சொல்லிக்கொள்ளும் ‘தி இந்து’, மதுரை ஆதீனம் அவர்களின் மறைவை ஒட்டி வெளியிட்டுள்ள செய்தியின் மூலம், தனது இழிவான மனநிலையையே அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது. தமிழர்களுக்கான பிரதிநிதி போன்று காட்டிக்கொள்ளும், முற்போக்கு போர்வையில் சனாதன புராண புரட்டில் திளைக்கும் “தி இந்து” பத்திரிகையை அம்பலப்படுத்துவது அவசியமாகிறது.