கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும்

கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும்

தற்பொழுது கொரோனா முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. ஆனால் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு தேசிய இன மக்களுக்கு 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின்னர், பல உயிர்போகும் அலைகளை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பணமதிப்பிழப்பு, GST, தமிழ்நாட்டுக்கான பேரிடர் கால நிதி மறுத்தல் போன்ற தன்னுடைய அரசியல் தெளிவின்மையால் தன்னைத்தானே மக்களிடம் அம்பலப்படுத்திக் கொள்கிறது மதவெறி இந்துத்துவ அரசு. இதன் தொடர்ச்சியாக கொரோனா காலத்திலும் கூட சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் (MOHFW) மூலம் தனியார்மய கொள்கையாக கொரோனா பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வுக் கூடங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (ICMR) தலைமையில் அழைப்பு விடுத்திருக்கிறது.

ICMR மற்றும் National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL) ஆகிய இரு அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் பணிகளை பார்த்தால், இதிலுள்ள ஆபத்து என்னவென்பது தெளிவாக விளங்கும்.

ICMR-ன் முக்கிய பணி மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். NABL-ன் பணி இந்தியாவில் இருக்கும் அரசு, தனியார் மற்றும் தொழிற்சாலை ஆய்வுக் கூடங்களை மேற்பார்வையிட்டு தரக் கட்டுப்பாடு மூலம் அங்கீகாரம் கொடுப்பதே இவர்களின் பணி‌.

ICMRல், RT-PCR பரிசோதனை பண்ணக் கூடிய ஆய்வகங்கள், அதன் மொத்த எண்ணிக்கை மற்றும் NABL தரச்சான்று பெற்றது என்பது போன்ற தகவல்களை அளிக்குமாறு தனியார் ஆய்வகங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த அறிவிப்புக்கு பிறகு கொரோனா பரிசோதனை சந்தையின் மதிப்பு 7,300 கோடியாக உயருகிறது. கொரோனாவை கண்டறிவதற்காக பரிந்துரைக்கப்படுவது RT-PCR பரிசோதனை ஆகும்.இது NABL-ன் வரையறைப்படி Molecular Testing என்று வகைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், தங்களது தரச்சான்று அங்கீகாரத்துடன் இயங்கும் ஆய்வுக்கூடங்களை வெளியிடுவது வழக்கம். இப்படியாக 2019-ல் வெளியான பட்டியலின் அடிப்படையில், “மருத்துவ பரிசோதனை” பிரிவில் மொத்தம் 12 ஆய்வகங்கள் மட்டுமே Molecular Testing இயங்குகிறது என்பது தெரிய வருகிறது.

தரச்சான்று வழங்கும் முறை

பரிசோதனை கூடங்களுக்கு தரச்சான்று அங்கீகாரம் வழிமுறையானது, புதிதாக பல்வேறு கோப்புகளை உருவாக்குதல், செயல்வழிமுறைகள் (SOP) மொத்தம் 2 நாட்கள் வரை கள ஆய்வின் மூலம் அனுமதி வழங்கும் முறையாகவே இருந்துவந்துள்ளது.

ஆனால் இந்த கொரோனா தொற்று காலத்தில் 2 நாட்கள் கள ஆய்வை வெறும் 5 மணி நேர வேலைத்திட்டமாக சுருக்கியுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ளும் ஒரு நபரின் அனுபவத்தின் படி சொன்ன செய்தி, இந்த மேற்பார்வையின் போது, வெறும் கோவிட் 19 பரிசோதனை செய்து காண்பித்தாலே போதும், உடனே NABL அனுமதி அளித்துவிடுகிறது.

மேலும் கூடுதல் செய்தியாக அவர் கூறியதாவது “NABL பணியாளருக்கே இந்த துறை சார்ந்த அனுபவம் இல்லாதவர்கள். அவர்களே ஆய்வகங்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் இந்த கள ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். கொரோனா பரவ ஆரம்பித்திலிருந்தே அந்த உரிய ஆய்வுக்கூடங்களுக்கு நேரில் செல்லாமல், காணொளி காட்சி மூலம் ஆய்வுகளை நடத்தியதாகவும் தெரிந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. NABL 112-வது குறிப்பு (Specific Criteria for Accreditation of Medical labs) கூறுவதாவது, ஒரு தரச்சான்று அளிப்பது என்பது “ஒரு நிறுவனம் பல நகரங்களில்/பகுதிகளில் தங்கள் ஆய்வகங்களை வைத்திருப்பினும் அந்த ஒவ்வொரு ஆய்வகத்திற்கும் தனித்தனியான தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். தரச்சான்று சான்றிதழ்கள் பெறுவதற்காக மட்டுமே, ஒவ்வொரு ஆய்வுக்கூடத்திற்கு ஆகும் செலவு என்பது 1.5 லட்சம்.

ஒரு மும்பை பணியாளர் கூறியது, “எங்கள் ஆய்வகம் மிகச் சிறியது ஆனால் அங்கீகாரம் பெறுவதற்கான தொகை என்பது மிக விலையுயர்ந்த ஒன்று. நாங்கள் NABL முடிவு செய்த தொகையில் சிறு நன்கொடையை அந்த மதிப்பீடு செய்யும் நபருக்கு கொடுத்து விடுவோம்‌.

மதிப்பீட்டின் உண்மை நிலவரங்கள்

அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன.  தரச்சான்று எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து அலசிய போது சில தகவல்கள் கிடைத்துள்ளது. RT-PCR பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ‘Swabbing’ என்பது பற்றிய வார்த்தையே குறிப்பிடவில்லை. மற்றொரு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதில் என்ன வகையான முறைகள் (Swabbing) பின்பற்றப்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி NABL-ன் தலைமை அதிகாரி வெங்கடேஸ்வரன் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கூறப்படவில்லை.

ஹைதராபாத்தில் கொரானா சோதனை கருவி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின்  உரிமையாளர், “எடுக்கப்படும் மாதிரிகளை பொறுத்தே, பரிசோதனையின் முடிவு வரும். ரத்த மாதிரியில் இருந்து வைரஸ் கண்டுபிடிப்பதை விட, மூக்கிலிருந்து Swabbing மூலம் கண்டுபிடிப்பது சற்று சிரமமான ஒன்று. இந்த நபருக்கு ஊடகத்தில் பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள், எளிதாக தவறான முடிவுகளை கொடுக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. அது மாதிரிகளை சேகரிக்கும் வழி, RNA-வை பிரித்தெடுக்கும் உபகரணம் மற்றும் RT-PCR Kit-ன் கண்டறியும் அதிகபட்ச திறன் என இதில் ஒரு முறையில் பிழை செய்துவிட்டால், முடிவுகள் எதிர்மறையாக வருவதற்கு பல சாத்தியக்கூறுகள் உள்ளன. அங்கீகாரம் கொடுக்கும் பொறுப்பில் NABL போன்ற அமைப்பு இந்தளவு மெத்தனமாக இருப்பதை பார்ப்பது எனக்கு இதுவே முதல் முறை.”, என்கிறார் அவர்.

NABL சார்பாக கள ஆய்வு செய்யும் அதிகாரி, “பரிசோதனை எடுக்கும் நபர், ஆய்வகம், இறுதி முடிவு வெளியிடும் நபர் என அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும். அந்த பரிசோதனை முடிவில், கையெழுத்து போடும் நபர் முதற்கொண்டு அனைத்து தகவல்களும் தரவுகளில் ஏற்றப்படும். பரிசோதனை முடிவு வெளியிடும் போது கையெழுத்து போடும் நபரின் வருகை இல்லாத சமயத்தில், நோயாளிகள் அடுத்தக்கட்ட சிகிச்சை பாதிப்படையாமல்  இருக்க, வேறு ஒரு நபரை கொண்டு முடிவுகள் வெளியிடும் அந்த அறிக்கையில் இது தற்காலிகமானது (Interim report) என அச்சிடப்பட்டு வெளிவரும்.”, என்கிறார் அவர்.

மேலும், நிறைய கிளைகள் இருக்கும் “Thyrocare” என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் நபரின் கையெழுத்து அவர்களின் பல்வேறு கிளைகளில், அந்த நபரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கிறது. இதுகுறித்து NABL அதிகாரி கூறியதாவது, “அவர்களுக்கு பல்வேறு இடங்களில் வேலை செய்யும் உரிமை உள்ளது, அதனால் இந்த கையெழுத்து உரிமத்தை நாங்கள் மறுக்க முடியாது என NABL விதிகள் தெளிவாக கூறுகின்றன” என்கிறார். ஆனால் அந்த “Thyrocare” ஊழியரின் கையெழுத்து 1000 கிமீ மேல் இருக்கும் நகரங்களின் கிளைகளிலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கிந்தியாவில் உள்ள ஒரு மூத்த Pathologist கூறுவது “மாதிரிகள் சரியாக எடுக்காத பொழுது, அந்த பரிசோதனை முடிவுகளுக்கான அளவுகள் வேறுபடும். எனவே அந்த கையெழுத்து உரிமம் பெற்ற நபர், மாதிரிகளின் தன்மை மாறாத அளவு பாதுகாத்து அதில் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் பரிசோதனை திரும்ப எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் புதிய மாதிரிகளையும் எடுக்க வேண்டும்.”, என்கிறார். ஆய்வகங்களுக்கு டிஜிட்டல் (Automated report) முறையில் பரிசோதனை முடிவுகள் வெளியிடலாம் என NABLன் வழிமுறைகள் கூறுகின்றது. ஆனால் இதுவரை இந்தியாவில் உள்ள எந்த ஆய்வகத்திலும் அதற்கான மென்பொருள் வசதியில்லை என்பதே ஒரு NABL அதிகாரியின் கூற்று.

மிகவும் முக்கியமான செய்தி, திசம்பர் 2019-இல் இந்திய மருத்துவக் கழகம் (MCI) வெளியிட்ட அறிவிப்பில், அதில் “டிஜிட்டல் கையொப்பம் மற்றும் Remote Authorisation செல்லாது என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை பற்றி தெளிவான நிலைப்பாடு NABL-ல் இடம் தெரியவில்லை. ஒரு வேளை, இப்போதுள்ள வழிமுறைகளில் முரண்பாடுகள் இருப்பின், 112-ன் விதிப்படி உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான விதிமுறைகள் பின்பற்றப்படும் என NABL தரப்பில் கூறப்படுகிறது. கூடுதலாக அதன் தலைமை அதிகாரி கூறுவதாவது,”NABL-க்கு தனியான எந்த ஒரு சட்ட அதிகாரங்களும் இல்லை. ஆய்வகங்களில் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாடு நெறிமுறைகள் என்பது அது முழுக்க முழுக்க நடத்தும் உரிமையாளர்களுக்கே உரிய பொறுப்பு”, என்பதே.

ஆய்வகங்களின் பொறுப்புகள் :

அனைத்து ஆய்வகங்களும் அங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து பரிசோதனைகளும் தரமானவையா என்பதை உறுதி செய்ய, அதற்கான தனியான குழுவை (Quality Control) உருவாக்கி, தனியாக நிபுணத்துவம் பெற்ற மேலாளரை நியமித்து தணிக்கை செய்ய வேண்டும். மேலும் அவ்வப்போது பரிசோதனைகளுக்கான தரவுகளை உறுதி செய்தல், ஊழியர்களின் செயல்திறன் முதலியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்வதே இந்த குழுவின் முதன்மையான பணி.

Practicing Pathologist Society நிறுவனர் ரோஹித் ஜெயின் மே 23, 2021 அன்று ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்கிறார். அதில் இரு பெரிய பரிசோதனை நிறுவனங்கள், Medall என்ற நிறுவனம், வெவ்வேறு இடங்களில் இருக்கும் தங்கள் கிளைகளுக்கு ஒரே ‘Quality Manager’ பணியமர்த்தப்பட்டுள்ளார். இரண்டாவதாக KRSNAA Diagnostics என்ற நிறுவனம், 8 கிளைகளில் ஒரே மேலாளரை பணியமர்த்தியுள்ளது. இது NABL இணையதளத்தில் தரவு எண்.600-இல், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் பட்டியலில் இந்த 2 நிறுவனங்கள் இருப்பது தெரியவருகிறது. ஜுன் 8 வரை NABL-ன் பதில் ஏதும் இல்லை என்பதை பதிவு செய்கிறார் ரோஹித் ஜெயின். அந்த 2  நிறுவனங்களிடமிருந்து மௌனம் தான்  நிலைப்பாடாக இருக்கிறது.

இந்த புகார் குறித்து, NABL CEO வெங்கடேஸ்வரன் அளித்த பதில் என்பது திருப்தி அளிக்க கூடிய வகையில் இல்லை. முதல் இடத்தில் இந்த பிரச்சினை எழும்போது எடுத்த நடவடிக்கை என்னவென்பதை கூறவில்லை. மேலும் இந்த விதிமீறலின் போது அந்த ஆய்வகம் சொன்ன விடயங்களை அடிப்படையாக பேசுகிறதே தவிர, NABL அந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆராயவில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

திறன் சோதனை (Proficiency Testing)

NABL அதன் இணையதளத்தில், திறன் சோதனைக்கான (PT) பொருட்களை விநியோகிக்கும் 49 ஆய்வகங்களை வெளியிட்டுள்ளது‌. இதில் 9 ஆய்வகங்கள் மட்டுமே மருத்துவ துறையில் இந்த பரிசோதனக்கான பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.

இவ்வாறாக கோரிக்கையின் அடிப்படையில் PT மாதிரிகள் அந்த ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும்.‌ அதன்பின்னர் இந்த PT சப்ளையர்கள் தங்கள் வரைமுறைகளை ஒப்பிட்டு, அந்த ஆய்வகங்களின் செயல்திறன் என்னவென்பதை வெளியிடும். உண்மை என்னவெனில், இந்த PT முறையை கொரானா பரிசோதனைக்கு மேற்கொள்ளவில்லை. மேலும், Inter laboratory Quality Control (ILQC) எனும் நிகழ்வை இந்தியளவில் 38 ஆய்வகங்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மூலமாக PT பரிசோதனைகளை செய்து, அந்த தகவல்களை ICMR சேமிக்கிறது‌.

NABL அங்கீகரித்த அந்த ஒன்பது PT சப்ளையர்கள், ICMRன் பட்டியலில் இடம்பெறாதது ஆச்சரியமளிக்கிறது. சனவரி 2021-இல் ICMR ஆய்வகங்களின் பட்டியலை வெளியிட்டாலும், இந்த ILQC குறித்து எந்த தகவலையும் பகிரவில்லை.

மும்பையில் பணிபுரியும் ஆய்வக மேலாளர் தான் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். முன்னதாக மாநிலத்தில் தரக் கட்டுப்பாட்டு மூலம் PT பொருட்கள் அனுப்பபட்டது. இந்த பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அந்த மாதிரிகளின் CT (Cycle Threshold) மதிப்புகளை திருப்பி தெரிவிக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக, அந்த மாதிரிகளின் முடிவு Positive அல்லது Negative என்பதை தெரிவித்தாலே போதும். அதில் எத்தனை மாதிரிகள் மற்றும் எந்த மாதிரியின் முடிவு தவறானது என்பது தெரியாது. அதில் எந்த வகை கருவி பயன்படுத்தியது என்பதும் குறிப்பிடப்படாது.

பரிசோதனை முடிவுகளும் விளைவுகளும்

தவறாக ‘Negative’ என பரிசோதனை முடிவுகள் வரும்பொழுது , அந்த நபர் மேலும் நிறைய பேருக்கு தொற்றை கடத்தும் சாத்தியங்கள் இருப்பது மட்டுமல்லாது அவருக்கு மருத்துவ கண்காணிப்பு தேவையில்லை என அலட்சியம் ஏற்படவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக மே, 2021 ஆஸ்திரேலிய நாட்டினர், இங்கு தவறாக வெளியிடப்பட்ட ஆய்வக முடிவினால் அவர்கள் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் இன்னலுக்கு உள்ளாகினர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட அந்த ஆய்வகம், NABL அங்கீகாரத்தை இழந்துள்ளது என்பது பின்னர்தான் தெரியவருகிறது.

NABL தலைமை அதிகாரி வெங்கடேஸ்வரன் கூறுவதாவது, NABL அங்கீகாரம் என்பது ஆய்வகங்கள் தாமாக விருப்பப்பட்டு முன்வந்து பெற்றுக் கொள்வது. ஆகையால் NABL அவர்களை கட்டாயமாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றும், அங்கீகாரம் பெறாத ஆய்வகங்கள் பரிசோதனைகள் பண்ண கூடாது என்றும் கூறுவதில்லை. NABL அங்கீகாரம் முக்கியமாக கருதப்படுவது பற்றி முக்கியமான இருவேறு சம்பவங்கள் நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒன்று இந்த அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு அரசுத்துறைகளே முன்னுரிமை அளிப்பது. மற்றொன்று அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் (25 பரிசோதனைகளுக்கு மட்டும்), அங்கீகாரம் பெறாத ஆய்வகங்களை விட 15% கூடுதலாக கட்டணம் வசூலிக்க அறிக்கையை வெளியிட்டது சுகாதார & குடும்பநல அமைச்சகம் (MoHFW). இதை மேலும் வலுவூட்டும் விதமாக 2018ல் இமாச்சலப் பிரதேச அரசு, ஒரு இ-டெண்டரை வெளியிட்டுள்ளது. அதில் NABL அங்கீகாரம் பெறப்படாத அரசு ஆய்வகங்கள், பரிசோதனை செய்வது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றது.

ஒரு சில ஆய்வகங்கள், குறிப்பிட்ட பரிசோதனைகளுக்கு மட்டும் அங்கீகாரம் பெறுக் கொண்டு, கட்டணம் கூடுதலாக வசூலிப்பதற்காக அனைத்து பரிசோதனைகளுக்கு இதை உள்ளடக்கி விடுகிறது. பரிசோதனைக்கான தரத்தை முன்னிறுத்தாமல்  லாப நோக்கத்தில் இயங்குவது தெளிவாக புலப்படுகிறது. எனவே ஒரு ஆய்வகம், அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிசோதனைகளுக்கும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைகளை மட்டும் குறிப்பிடாமல், இந்த NABL Accreditation சான்று அளிக்கப்பட்டது என்ற பிம்பத்தை எழுப்ப முயற்சிக்கின்றனர். இது ஆய்வகங்கள் தெரிந்தே செய்யக் கூடிய தவறு.

இவ்வகையான விதிமீறல்களை NABLல் இருக்கும் எந்தவொரு அதிகாரியும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இதன்மூலம் பரிசோதனைகளுக்கான தரச்சான்று தரும் தன்னாட்சி அமைப்பான NABL, கண்துடைப்புக்காக மட்டும் இதை செய்கிறதோ என்ற ஐயம் எழுகின்றது.

பெருந்தொற்று காலத்தில் அனைத்து குளறுபடிகளையும் தீர்க்க வேண்டிய அரசு அமைப்புகளே இத்தனை குளறுபடிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. இதன் பின்னால் அதிகாரிகளின் அலட்சியம் மட்டுமே இருக்கக்கூடும் என்பது நம்பக்கூடியதாக இல்லை. இத்தகைய ஆய்வகங்கள் ஏதோ ஒரு வகையில் அரசிற்கோ அல்லது அரசை, அரசு நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் பிரதிபலன் அளிக்கும் செயலுக்கு ஒத்துழைத்திருக்கக் கூடும் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுகிறது. அரசின் முந்தைய செயல்பாடுகள் அவ்வாறாகவே இருந்துள்ளன. இதன் பின்னணி நம் கற்பனைக்கு எட்டமுடியாத அளவிற்கு கூட இருக்கலாம். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டிய சூழலை மோடி அரசு உருவாக்கியுள்ளது என்பதே நிதர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »