ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்

தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ தளத்தை நீக்கிய சீனா

தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த குவாட் (Quad) எனப்படும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சீனாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை கடந்த சில வருடங்களாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவத் தளமாக இருந்த ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தது. அல்லது அப்படி ஒரு சூழல் உருவாயிற்று. இன்று இன்னும் மோசமாக அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு  வெளியேறத் துவங்கியவுடன், தாலிபான்களின் கை ஓங்கத் துவங்கியது. ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு நகரங்களாக பிடித்து வந்த தலிபான்கள், அமெரிக்க ராணுவம் மற்றும் ஆப்கான் ராணுவனத்தின் எதிர்ப்பு ஏதுமின்றி, இன்று ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் முழுமையாக சென்றிருக்கிறது.

மத்திய ஆசிய நாடுகள்

இந்த மாற்றம் சீனா-இரஷ்யா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியாகவே அமைத்திருக்கிறது. ஏனென்றால் மத்திய ஆசிய நாடுகளான கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், தஜிகிஸ்தான் துர்பெகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளோடு சீனா செய்து கொண்ட உடன்படிக்கையை இனி சீனா இலகுவாக செயல்படுத்த முடியும். ஏனென்றால், மத்திய ஆசிய நாடுகளுடன் சீனாவின் ‘ஒரு பட்டி ஒரு பாதை (One Belt One Road)’ திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தானின் தயவு அதற்கு மிக அவசியம். அங்கு அமெரிக்காவின் கைப்பாவை அரசு இருக்கும் வரை சீனாவிற்கு அது சாத்தியமில்ல்லாமல் இருந்தது. தற்போது அமெரிக்க கைப்பாவை அரசு நீங்கி தலிபான்கள் வந்தவுடன் அது மிக இலகுவாக முடியும் என்று சீனா நினைக்கிறது. அதற்கேற்றார் போல் தலிபான்களின் தலைவர்களை சீன அதிகாரிகள் சந்திப்பதும், தலிபான்களோடு சமூக உறவை சீனா மேற்கொள்ளும் என்று சீனா வெளியுறவுத்துறை அதிகாரிகள் சொல்வதும் நடக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 17 அன்று தலிபான்களை ஆப்கானிஸ்தானுக்கான இரஷ்யாவின் தூதர் டிமிட்ரி செர்நோவ் சந்திக்க இருப்பதும் தலிபான்களின் இந்த வெற்றியை ஈரான் அரசு வரவேற்று இருப்பதும் இதை மிக எளிதாக உறுதி செய்கிறது.

வெளியேறும் அமெரிக்க படையினர்

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்று வெளியேறி இருப்பதும், பொருளாதார ரீதியாக ஆதிக்கத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்த சீனா மேற்கொள்ளும் ‘ஒரு பட்டி ஒரு பாதை’ திட்டத்தை தலிபான்களின் வழியாக நிறைவேற்று வலிமை இன்று சீனாவுக்கு கிடைத்திருக்கிறது. நாளை இப்போது வலிமை பெற்றிருக்கிற சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் கூட்டணியை உடைப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி வேறு ஏதாவது முயற்சியை முன்னெடுக்கும். இப்படி மாறி மாறி ஏகாதிபத்தியங்களின் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அரசியல் காய்களை நகர்த்துவார்கள். அதுவல்ல நமக்கு பிரச்சனை.

2009 க்கு முன்பாக இப்படித்தான் ஏகாதிபத்தியங்கள் தங்களது நலனை முன்வைத்து இலங்கையை தன் வயப்படுத்த ஈழத்தமிழர்கள் ஒரு லட்சம் பேரை இனப்படுகொலை செய்ய சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு உதவி செய்தார்கள். இன்றளவும் ஈழத்தமிழர்களுக்கு உரிய குறைந்தபட்ச நியாயம் கூட சர்வதேசரீதியில் கிடைத்துவிடாதபடி தடுத்து நிற்பதும் இதே ஏகாதிபத்தியங்கள் தான். 2009 இல் இருந்து இன்று வரை இந்த அரசியலை தான் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களாகிய நான் பார்த்து வருகிறோம்.

தலிபான் தலைவர்கள்

அந்த வகையிலேயே இன்று ஏகாதிபத்தியங்களில் ஒரு தரப்பு தங்களது படைத்தளத்தை இழந்திருப்பதும், இன்னொரு ஏகாதிபத்தியம் வலிமை பெறுவதுமான அரசியல் நடைபெற்றிருக்கிறது ஒழிய, உண்மையில் ஆப்கானிஸ்தான் மக்களின் சுதந்திர அரசியல் வெற்றி பெறவில்லை என்பது தான் நமக்குள்ள கவலை.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக 2009 இல் இருந்து இன்றுவரை நடைபெறுகிற ஏகாதிபத்தியத்தின் அரசியலை புரிந்து கொண்டால் இப்போது ஆப்கானிஸ்தானில் நடக்கும் இந்த அரசியலை எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஈழத்தமிழர் பிரச்சினை ஆகட்டும் தற்போது ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை ஆகட்டும் இந்த இரண்டு பிரச்சனைகளிலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு கேவலமாக தோற்று இருக்கிறது என்பது குறித்து விரிவாக பேச வேண்டியது இருக்கிறது.

அமெரிக்காவை நம்பி தனது அரசியலை அடமானம் வைத்த இந்தியா இன்று நடுத்தெருவில் நிற்கிறது. “ஆப்கானில் தோல்வியடைந்த இந்திய வெளியுறவுக் கொள்கை” குறித்து விரிவாக இங்கே வாசிக்கவும்.

மக்களின் சுதந்திர தாகத்தை எந்த ஒரு ஏகாதிபத்தியமும் கொடுத்துவிடாது என்பது தான் ஈழம் முதல் ஆப்கானிஸ்தான் வரை நடக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.

மேலும் வாசிக்க, “ஆப்கனை கைவிடுவது” அமெரிக்காவின் தீர்வுகளில் இடம்பெறுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »