
சென்னை மதுராந்தகத்தில் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசிச் சென்றிருக்கிறார். ஒரிசா தேர்தலில் போது தமிழர்கள் திருடர்கள் எனவும், பீகார் தேர்தலில் போது, பீகார் தொழிலாளர்களை தமிழர்கள் அடித்து துரத்துகிறார்கள் எனவும் பொய்ப்பரப்புரை செய்து இனப்பாகுபாட்டை வளர்த்தவர் மோடி. இந்திய ஒன்றியத்தின் எந்த தலைமை அமைச்சரும் இதுவரை செய்யாத வகையில், தமிழர்கள் மீதான அவதூறுகளால் மற்ற இனங்களிடையே வெறுப்பைக் கட்டமைத்த முதல் பிரதமர் மோடி.
மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழ், தமிழர்கள் மீது அளவற்ற அன்புடையவர் போல நடித்து விட்டுச் செல்வதை மே 17 இயக்கம் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது. மோடியின் உரையில் நிறைந்திருக்கும் பொய்யையும், போலித்தனத்தையும் மக்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அவ்வகையில் அவரின் மதுராந்தக உரை குறித்தும், பின்னணி குறித்தும் தெளிவுபடுத்தவே இக்கட்டுரை.

நேதாஜியின் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் உரையைத் துவங்கினார் மோடி. “நேதாஜியுடன் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பல தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டு மக்களின் ரத்தத்தில் – நாடி நரம்பில், வீரமும், நாட்டுப்பற்றும் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழக மக்களிடம் வீரமும், தேசபக்தியும் ஆழமாக வேரூன்றியுள்ளது” எனத் தமிழர்களைப் போற்றியிருக்கிறது. இவ்வரிகள் உண்மைதான் என்றாலும், மோடி இந்த வரிகளை சொல்வதற்கு தகுதியுடையவரா என்கிற கேள்வியே முக்கியமானது.
ஏனென்றால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வெள்ளையர்களை எதிர்த்து படை திரட்டிக் கொண்டிருந்த வேளையில், இங்கு முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் பல தமிழர்கள் NIA எனப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் கூட்டம் கூட்டமாக சேர்ந்த சமயத்தில், வெள்ளையர்களுக்கு ஆதரவாக இந்து மகா சபை சார்பில் படைகளை திரட்டிக் கொண்டிருந்தார் சாவர்க்கர். வெள்ளையர்களை எதிர்த்து நின்ற சுபாஷ் சந்திர போஸின் படைகளும், வெள்ளையர்களுக்கு ஆதரவாக நின்ற சாவர்க்கர் திரட்டிய படைகளும் மோதிக் கொண்டதில் தமிழர்கள் முதற்கொண்ட பல இந்தியர்களே உயிரிழந்தனர். சாவர்க்கரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர் மோடி. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தவரை போற்றும் மோடி, நேதாஜியையும் போற்றுவது, அவர் உரையின் போலித்தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சாவர்க்கர் நேதாஜிக்கு செய்த துரோகத்தை பல முறை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தி, இந்துத்துவவாதிகளை விவாதத்திற்கும் அழைத்திருக்கிறது. ஆனால் இதுவரை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள் எவரும் பதிலளிக்கவில்லை. இது குறித்து மே 17 இயக்கக்குரலில் வெளிவந்த கட்டுரை:
அதைப் போல, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்று குற்றம்சாட்டி, அதை தங்கள் அரசே மீட்டெடுத்ததாக பெருமிதமாக தெரிவித்தார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதன்மை அமைப்பே தேசிய விலங்கு நல வாரியம் (AWBI). அதன் பிறகே அந்த வழக்கில் பீட்டா (PETA) தன்னையும் இணைத்துக் கொண்டது. மோடி அரசினால் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்தே லட்சக்கணக்கான மக்களும், இளைஞர்களும் வீதியில் திரண்டனர், வென்றனர். மெரினா புரட்சி என்றழைக்கட்ட இப்புரட்சியினால், இனி ஜல்லிக்கட்டை கட்டுப்படுத்துவது சாத்தியம் இல்லை என்கிற நிலை ஏற்பட்டது. இதனால் மோடி அரசு பின்வாங்கியது. மக்கள் போராட்டத்தினால் பெற்ற வெற்றியை பாஜகவின் சலுகையாக கூறுகிறார் மோடி..
தேசிய விலங்குகள் நல வாரியத்தை வழக்கு தொடுக்கச் செய்யாமல் விலக்கியிருந்தாலே, இப்புரட்சி எழுந்திருக்காது. ஆனால் இக்கட்டான நிலையை ஏற்படுத்திய மக்களின் வெற்றியை தனது அரசின் சாதனையாகக் கூறிக் கொண்டிருக்கிறார் மோடி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மே 17 இயக்கம் கலந்து கொண்டதோடு கருத்தரங்கம், பொதுக்கூட்டங்கள் நடத்தி மோடி அரசின் இரட்டைத்தன்மையை அம்பலப்படுத்தியது. ஜல்லிக்கட்டு குறித்து மே 17 இயக்கக் குரலில் வெளிவந்த கட்டுரை :
மேலும், திருப்பரங்குன்ற பிரச்சனை பற்றியும் பேசினார். “முருகப் பெருமானுக்கு விளக்கு ஏற்றுவது விவாதமாக்கப்பட்ட போது கூட, நமது தலைவர்கள் பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால் சிலர் அதை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள்” என்றார். பாஜக கூட்டணி தவிர்த்த தமிழ்நாட்டின் தலைவர்கள், மக்கள், ஜனநாயக அமைப்புகள், கோவில் நிர்வாகம் என அனைவரும் காலம் காலமாக பின்பற்றப்படும் வழிமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது என்று எடுத்துக் கூறியும், பிரதமர் முதற்கொண்டு பாஜகவின் தலைவர் அவர்கள் மீண்டும் மீண்டும் மக்களின் தெய்வபக்தியை பகடைக்காயாகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க மெனக்கெடுகின்றனர்.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறிய உண்மைக்கு மாறான தீர்ப்பு மூலமாக இந்த தீபப் பிரச்சினை பற்றி எறியத் தொடங்கியது. திருப்பரங்குன்ற மலையில் உள்ள தர்காவை அகற்றி திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பாஜகவின் தலைவர்கள் முதற்கொண்டு இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்தப் பிரச்சினையை ஊதி பெரிதாக்கிக் கொண்டே இருக்கின்றனர். காலம் காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக வழிபட்டு வந்த நிலையை மாற்ற இந்துத்துவ அமைப்புகள் மதவெறியூட்டும் போக்குகளே தொடர்ந்து மே 17 இயக்கம் எதிர்த்து வருகிறது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் எனத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் உண்மை நிலையை மக்களிடம் கூறி வருகிறது. இதுகுறித்து மே 17 இயக்கக்குரலில் வெளிவந்த கட்டுரை :
“கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு அதிகாரப் பகிர்வு மூலம் மட்டும் ரூ.3 லட்சம் கோடி நிதி, விவசாய நிதி உதவி திட்டம் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.4 லட்சம் கோடி அளவு நிதி என மொத்தத்தில் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு தமிழ்நாட்டிற்கு திட்டங்கள், உதவிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் எப்போதும் சிலர் அழுது கொண்டிருக்கிறார்கள்” என்றும் ஏளனமாக பேசியிருக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசின் மொத்த வரி பங்களிப்பு (நேரடி வரி, மறைமுக வரி, GST) GDP-யில் சுமார் 8-9% பங்கு வகிக்கிறது, ஆனால் சுமார் 4-5% மட்டுமே பெறுகிறது. சுமார் பத்து லட்சம் கோடி அளித்து 6 லட்சம் கோடி மட்டுமே பெற்று இருக்கிறது.
இவ்வாறு, அதிக உற்பத்தியை தென் மாநிலங்கள் அளித்து குறைவான நிதிப் பகிர்வை பெறுகின்றனர். ஆனால் பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு அவர்கள் பங்களிப்புக்கும் அதிகமான நிதிப்பகிர்வு நடக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து 1 ரூபாய் வரி பெற்றால், 29 பைசா தான் திரும்புவதும், உ.பி 1 ரூபாய் கொடுத்தால் 2 ரூபாய்க்கு மேல் பெறுவதும் நடக்கிறது. செஸ் வரி, கூடுதல் வரி என எதுவும் தென் மாநிலங்களுக்கு பகிரப்படுவதில்லை. நிதிக்குழு பரிந்துரைத்த வரி விகிதத்திலும் நிதிப்பகிர்வு 5% பதில் 4% மட்டும் பகிரப்படுகிறது. மறைமுக வரிகளை குறித்து தகவலை இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு முன்வைக்கிறது.

இப்படி பல பொய்களைக் கூறிவிட்டு சென்றிருக்கிறார் மோடி. கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் புறக்கணிப்பு, சென்னை மெட்ரோ வேலைகளுக்கும் நிதி மறுப்பு, தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் கீழடி அறிக்கையை முடக்கும் வேலை, பாஜக ஆளும் வட மாநிலங்களில் பாராளுமன்ற இருக்கையைக் கூட்டி தென் மாநிலங்களின் குரலை ஒடுக்கு முயற்சி, தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுப்பு, நீட் தேர்வுத் திணிப்பு, மகாத்மா ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை முடக்கும் பயிற்சி, வெள்ளம், புயல் நிவாரண நிதி மறுப்பு, மத்திய அரசின் பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு, மீனவர்கள் பிரச்சனை புறக்கணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, ஆளுநரைக் கொண்டு நெருக்கடி என தமிழர் விரோத செயல்பாடுகளை மோடி அரசு செய்து வருகிறது. இதன் காரணமாகவே மதுராந்தகத்திற்கு வருகை தந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை மே 17 இயக்கம் நடத்தியது..