முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வின் அவசியம்

மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு கடந்த மே 17, 2026 அன்று சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நடந்தது. இந்த நினைவேந்தல் நிகழ்வின்  முக்கியத்துவத்தை பற்றியும், வருங்கால தலைமுறையினர் இவ்வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியும், இக்காணொளியில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் புருசோத்தமன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தோழர் தனியரசு மற்றும் தோழமைகளும் பேசியிருக்கிறார்கள். அதன் விரிவான தொகுப்பு:

தோழர் திருமுருகன் காந்தி:

யானைகள் கூட்டமாகத்தான் இருக்கும். அந்தக் கூட்டத்தில் ஒரு யானை இறந்து போனது என்றால், அந்த யானை இறந்த இடத்தை நினைவில் வைத்து, உடன் இருந்த யானைகள் வந்து அந்த நினைவைப் போற்றும் விதமாக மௌனமாக அந்த இடத்தில் நின்றுவிட்டுப் போவதை நாம் பார்த்திருக்கிறோம். தன்னோடு இருந்து வளர்ந்த சக யானைகள் இறந்து போகும்போது, அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது யானைகளுடைய வழக்கம். யானைக் கூட்டத்தில் இது மிகவும் இயல்பான ஒன்றாக எல்லா இடங்களிலும் பார்க்கலாம். இந்திய யானைகளாக இருந்தாலும் சரி, ஆப்பிரிக்க யானைகளாக இருந்தாலும் சரி, இப்படியான ஒரு உணர்வு இருக்கிறது.

தன்னோடு வாழ்ந்த, தனக்குத் தொடர்பான உறவாக இருக்கக்கூடியவர்களை இழக்கும்போது அதை நினைவேந்துகின்ற அந்த உணர்வு என்பது விலங்குகளுக்கு இருக்கும்போது, மனிதர்களுக்கு இருக்காதா என்ற கேள்வி மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன்.

இயல்பான ஒரு மரணம் என்பது வேறு. ஆனால் வலிந்து மரணம் திணிக்கப்படும்போது அது பெரும் துயரமாக மாறுகிறது. அதிலும் ஒரு விடுதலைக்காக பேசுகின்ற, கேள்வி கேட்கின்ற, அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படும்போது, அவர்களது மரணம் நம்மை அசைத்து விடுகிறது. அதுவரைக்கும் நமக்கு இருந்த பல்வேறு விடயங்களை விட, நம் கண் முன்னால் ஒரு நியாயத்தைக் கேட்டார்கள், இத்தனை பேரை கொலை செய்துவிட்டார்கள் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

சமீபத்தில் நடந்துகொண்டு இருக்கக்கூடிய பாலஸ்தீனத்தினுடைய படுகொலைகள், அன்றாடம் அது காணொளிகளாக, வீடியோவாக நாம் பார்க்கிறோம். அதை பார்க்கும்போது நம்மால் தூங்க முடிவதில்லை. இது ஏனென்றால், அவர்கள் அப்பாவிகள். தங்கள் உரிமைகளுக்காக கேள்வி கேட்டவர்கள். தங்கள் நிலத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்பியவர்கள். ஒரு நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் எழுப்புவதற்காகவே படுகொலை செய்யப்படுகின்ற மக்களை நம்மால் மறக்க முடியாது.

அப்படியாக நமக்கு, தமிழ்நாட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய தமிழீழத்தில், தங்களுடைய நிலத்தில் சுதந்திரமான மனிதர்களாக வாழ வேண்டும் என்று விரும்பியதற்காகவே, தங்கள் மண் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதற்காகவே 1,67,789 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பல்வேறு நாடுகளில் ஏன் இந்த நினைவேந்தலை நடத்துகிறார்கள்? இந்த மக்கள் இங்கே வாழ்ந்தார்கள். இவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? அவர்கள் மரணம் எதற்கானது என்று நாம் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

முன்னோர்களை வழிபடுகின்ற ஒரு மரபில் வந்தவர்கள் நாம். முன்னோர்களினுடைய அந்த நற்செயல்களை, வீரஞ்செறிந்த போராட்ட குணத்தினை அடுத்த தலைமுறையிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்து வந்திருக்கிறோம் நாம்.

அந்த வகையில்தான் இந்த நினைவேந்தல் நிகழ்வு என்பது, இந்த மாவீரர்கள் இந்த மண்ணை நேசித்த காரணத்தினால் மரணத்தை நேசித்தார்கள். மரணம் வந்தாலும் பரவாயில்லை, மண்ணை ஒருபொழுதும் நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்று அவர்கள் உறுதியுடன் நின்றார்கள், போர் புரிந்தார்கள். வீரஞ்செறிந்த வரலாற்றை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றை நாம் அடுத்த தலைமுறையிடத்தில் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது.

உலகெங்கிலும் ஒரு பெரும் அழிப்பு, இன அழிப்பு, இனப்படுகொலை நடந்த மண்ணில் எல்லாம் அந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்து வருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மே 17, மே 18, மே 19 ஆகிய மூன்று நாட்களில் 2009-ஆம் ஆண்டில் 70,000 தமிழர்கள் வெறும் 2 கிலோமீட்டர் கடற்கரை மணலில் கொன்று புதைக்கப்பட்டார்கள்.

மறந்துவிடாதீர்கள்!இந்த 70,000 மக்களை நாம் ஒன்றாக பார்த்ததில்லை தமிழ்நாட்டில். அரசியல் கூட்டத்தில் காண்பது வேறு. போராட்ட உணர்வோடு ஒன்று திரளக்கூடிய மக்களை நாம் சந்திப்பது என்பது வேறு. அவர்கள் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்த அந்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினை அழித்து முடித்தது சிங்கள ராணுவம். இலங்கை அரசு, இந்திய அரசு, அமெரிக்க அரசு, போராட்டக் களத்தில் நின்ற மக்களை இன்னும் ஏகாதிபத்திய நாடுகள் என்று எவற்றையெல்லாம் சொல்கிறோமோ அந்த நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அழித்தார்கள். ஆக அதை நாம் நினைவுகூர வேண்டும். அந்த விடுதலை வேட்கையை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் விட்டுச் சென்ற அந்த தீக்கங்கை நாம் பாதுகாக்க வேண்டியது இருக்கிறது. அந்த தீக்கங்கு ஒரு நாள் பெரு நெருப்பாக மாறும்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு என்பது ஒரு பெரும் நிகழ்வாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும். அப்படியான ஒரு நிகழ்வை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு, இந்த நினைவேந்தல் நிகழ்வை தாமே முன்வந்து நடத்திட வேண்டும். அதுதான் இந்த அரசிற்கான பெருமையாக இருந்திட முடியும். எங்கோ இருக்கக்கூடிய கனடா நாட்டில் நினைவேந்த முடிகிறது. எங்கோ இருக்கக்கூடிய அந்த கனடா நாட்டில் நினைவு சின்னத்தை எழுப்ப முடிகிறது. ஆனால், தாய் மண்ணாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் அதற்கான நினைவு சின்னத்தை எழுப்ப முடியவில்லை, அந்த நினைவேந்தலை நடத்த முடியவில்லை என்பது நமக்கு வரலாற்று அவமானம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இனப்படுகொலை நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நம்மால் நினைவு சின்னத்தை எழுப்ப முடியவில்லை. நினைவேந்தலை நடத்த முடியவில்லை. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. விசாரணையை நாம் முடித்துவிடவில்லை என்கின்ற அந்த அவலப் பட்டியல் என்பது நீளமானது தோழர்களே.

ஆகவே இவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்துவதற்கு நாம் சாதி, மதம், கட்சி கடந்து ஒன்றுபட்டு நின்று, இந்த ஆட்சி காலத்தில், இப்பொழுது பொறுப்பேற்றிருக்கக்கூடிய தவெக அரசு, 2013-2014 காலகட்டத்தில் அன்றைய அதிமுக அரசு, ஜெயலலிதா அம்மையார் தலைமையில் நிறைவேற்றிய தீர்மானங்களை மீண்டும் ஒருமுறை நிறைவேற்றி உலகத்திற்கு நினைவுபடுத்த வேண்டும். இந்த அரசும் அந்த கோரிக்கைகளை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்று உரத்துச் சொல்ல வேண்டும். அப்படியான ஒரு பெரும் முயற்சியை நாம் எல்லாம் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

ஈழத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை. அந்த இனப்படுகொலைக்கான நீதி விசாரணை, சர்வதேச விசாரணை, அதுவும் சுதந்திரமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த மக்களுக்கு நீதி கிடைக்கின்ற வகையில் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு தமிழீழம் மலர வேண்டும். தமிழ் மக்களிடத்தில் நடத்தப்படுகின்ற பொதுவாக்கெடுப்பு உலகெங்கிலும் இருக்கக்கூடிய ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு ஒரு விடியலாக வெளிப்படட்டும் என்கின்ற இந்த மூன்று கோரிக்கைகளையும், இந்த இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை வேண்டும் என்று ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதை வலியுறுத்துகின்ற விதமாக மீண்டும் ஒருமுறை அந்த தீர்மானங்களை எல்லாம் நீங்கள் நிறைவேற்றி, அவர்களுக்கென்று ஒரு நினைவு சின்னத்தை எழுப்பி, நினைவேந்தல் நிகழ்வை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை நாங்கள் 2014, 2015, 2016 ஆண்டு காலகட்டத்தில் வைத்திருக்கிறோம்.

2017-ல் அன்றைய எடப்பாடி அரசு நினைவேந்தல் நிகழ்வை தடை செய்தது. தடையை மீறி நாங்கள் போராட்டம் நடத்தி கைதானோம், சிறைப்பட்டோம், குண்டர் சட்டத்தில் வதைபட்டோம். ஆனாலும் கோரிக்கையை கைவிடவில்லை. அதே கடற்கரையில் நாங்கள் நினைவேந்துவோம் என்று உறுதியுடன் நின்றோம். அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடற்கரையில் நாங்கள் நினைவேந்தி வருகிறோம். இந்த நினைவேந்தல் நிகழ்வு என்பது கட்சி கடந்தது, ஜாதி கடந்தது, மதம் கடந்தது. இதில் எவர் வேண்டுமானாலும் வரலாம், நினைவேந்தலாம், அந்த விடுதலை கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கலாம். அந்த மாவீரர்களை நாம் மறக்கவில்லை என்று உலகிற்கு உரைக்கலாம். அந்த வகையில் உங்கள் அனைவரையும் அழைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி கொள்கின்றேன்.

தோழர் புருசோத்தம்மன்:

நினைவேந்தலை நாம் ஏன் அனுசரிக்க வேண்டும்? தமிழ்ப் பாரம்பரியத்தில் “நடுகல் வழிபாடு” என்பது மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. கிராமப்புறங்களில் இன்றளவும் பல்வேறு இடங்களில் புதிய நடுகற்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நடுகற்களின் தாத்பரியம் என்னவென்று நோக்கும்போது, தன் இனத்திற்காக, தன் மண்ணுக்காக, தன் மக்களுக்காக, அவர்களின் வெற்றிக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவாக, தெய்வநிலையில் வைத்துக் காலங்காலமாக நினைவுகூர்ந்து வழிபடும் மரபு -தமிழர் வாழ்வில் பரவலாகக் காணப்படுகிறது. இது ஒரு சமூகத்தின் பாரம்பரிய நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் இத்தகைய பண்பாட்டு நிகழ்வைக் காணலாம். அந்தக் குடும்பத்தின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் தியாகம் செய்த, உழைத்த பெரியோர்களை இன்றும் இளைய தலைமுறைக்கு நினைவூட்டி வழிபடும் பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் கடைப்பிடித்து வருகிறோம்.

அந்த வகையில், ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் நினைவாகவே இந்த நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. நமக்கு ஒரு பெரிய பாரம்பரியம் உள்ளது.

தமிழ்ச் சமூகம் என்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. மனித குலத்தில் மூத்த குடியாகப் பார்க்கப்படுகிறது. இது கற்பனை அல்ல. வரலாற்றுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும், பண்பாட்டு மானிடவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். எனவே, தமிழினத்திற்கான வரலாற்றையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் ஊடாக, 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சுதந்திரத்திற்காக ஒழுக்கமான கட்டமைப்புடன் கூடிய ராணுவத்தை உருவாக்கி, தன் மக்களுக்காகத் தற்சார்பு வாழ்க்கையுடன் புதிய புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி, மாபெரும் வீரம் செறிந்த போரை நடத்திய அந்தச் சமூகத்தையும், அந்த வீரர்களையும் நினைவுகூர்வது என்பது, இன்று தமிழகத்தின், தமிழரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாக அமைகிறது.

ஈழத் தமிழர்கள் என்று கடல் கடந்து வாழ்பவர்களை வேற்று ஆட்களாகப் பார்க்க முடியாது. ஏனெனில், அவர்களுக்கும் நமக்குமான தொடர்பு வெறும் மொழி மட்டுமல்லாமல், பண்பாட்டு ரீதியாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள பல நகரங்களின் பெயர்கள் அங்கும் உள்ளன. வாழ்வுக்காகச் சென்ற ஒரு சமூகம் அங்கு இருக்கிறது.

ஆகவே, ஓர் இனம் என்ற அடிப்படையில், ஈழத்தின் வீரம் செறிந்த போராட்டத்தை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் நம்மை நாமே தற்காத்துக்கொள்ளவும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்தும் பண்பாட்டு அழுத்தங்களிலிருந்தும் விடுபடவும், இத்தகைய பாரம்பரியமான விடயங்களைத் தேடிப் படிப்பது மட்டுமல்லாமல், இவ்வாறு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளில் பங்கெடுப்பதன் மூலம் அதன் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. புதிய தலைமுறை என்று சொல்லப்படும் நம் குழந்தைகளுக்கும் நம்முடைய வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

தோழர் தனியரசு:

ஒரு தேசிய இனம் தன்னுடைய சொந்த மண்ணில், தனக்கான அரசியல் விடுதலையையும் சுதந்திரத்தையும் நிர்மானிப்பதற்காக நடத்தும் உலகளாவிய போராட்டங்களில், நம்முடைய தமிழ்த் தேசிய இனத்தின் மண் விடுதலைக்காகத் தமிழீழத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம், உலக வரலாற்றில் யாராலும் மறைக்க முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகங்களைக் கொண்டது. பாரிய அரசுகளை எதிர்த்து அறவழியிலும், ஆயுத வழியிலும் போராடி, இன்னும் போராடிக்கொண்டிருக்கும் அந்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் முடிவாக, 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பாரிய இனப்படுகொலை நடந்தேறியது.

லட்சக்கணக்கான நம்முடைய தாய்த் தமிழ் உறவுகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள்.  அந்தத் தியாகத்திலிருந்தும், அந்த இன அழிப்புப் போர்க்களத்திலிருந்தும் எஞ்சி, உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற பத்து கோடி தமிழர்களும், ஈழம் எனும் நமக்கான, தமிழர்களுக்கான தாய்நாட்டை, தாயகத்தை மீட்டெடுப்பதற்காகக் களத்தில் இன்னும் போராட வேண்டும்; போராடிக்கொண்டிருக்கிறோம். அந்தப் போராளிகளும் அப்பாவி மக்களும் லட்சக்கணக்கில் சிந்திய இரத்தத்திலிருந்து இந்த விடுதலையை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது என்பதை உணர்த்தவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் நாம் நினைவில் ஏந்துகிறோம்.  உயிரைத் தந்த நம்முடைய தாய்த் தமிழ் உறவுகளின் கனவைச் சுமந்து, அந்த விடுதலைக்காக நாம் தொடர்ந்து பயணிக்கிறோம், பயணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் நினைவேந்தல் கூட்டத்தை நாம் தொடர்ந்து நடத்துகிறோம்.

வியாசை தோழர் சரத்:

என்றாவது ஒருநாள் தமிழர்களுக்கு விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருக்கிறார்கள். இப்போது நம் பின்னால் இருக்கும் ஒரு கனல், ஒரு நெருப்பு எப்படி எரிந்துகொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்ட கனல் தமிழ் உறவுகள் அனைவரின் மனதிலும் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது அணைந்துவிட்டதாக யார் வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம், ராணுவங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அந்தத் தணல் ஒவ்வொருவருக்குள்ளும் அணையாமல் இருக்கிறது. அது என்றைக்கும் அணையாது என்பதே என்னுடைய கருத்து. 

ஓர் இனத்திற்காக, ஒரு மொழிக்காக, ஒரு இனமே அழிக்கப்பட்டது என்பதை நாம் கதைகளில் கூடக் கேட்டதில்லை. அத்தகைய கொடுமைக்கு உள்ளான தமிழர்களுக்காக, ‘தமிழ்நாடு’ என்ற ஒரு நாடு இருக்கிறது. தமிழ் உறவுகளுக்காக, தமிழ் தொப்புள்கொடி உறவுகள் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கு ஒரு நினைவேந்தல் நடத்தக்கூடத் திராணி இல்லாத ஒரு நாடு, ஒரு அரசு இருக்கிறது என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

தோழர் சுகிர்தா:

ஒரு லட்சத்து 67 ஆயிரம் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்தச் செய்தி எத்தனை பேரைச் சென்றடைந்தது, எத்தனை பேரைப் பாதித்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால், காலம் செல்லச் செல்ல மக்கள் இதை மறந்துவிட்டு, தங்கள் அன்றாட வாழ்க்கையை நோக்கிச் சென்று விடுகிறார்கள். இன்னும் அந்த ஒரு லட்சத்து 67 ஆயிரம் மேற்பட்ட தமிழின மக்களின் இனப்படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நம் இனத்திற்கு நடந்த இனப்படுகொலைக்கு நீதி வாங்கித் தர வேண்டும் என்று இன்று வரை யாரும் போராடுவதில்லை. அத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தப் பெண்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. எத்தனை குழந்தைகளை அவர்கள் கொன்றார்கள்! அந்தக் குழந்தைகளுக்கு நீதி எங்கே?

எங்கோ இருக்கும் இஸ்ரேல்-ஈரானில் நடக்கும் பிரச்சினையை இன்று நாம் பேசுகிறோம். இன்ஸ்டாகிராமில் அது ட்ரெண்ட் ஆகிறது. இன்றைய இளைஞர்கள் அதைப் பேசுகிறார்கள். ஆனால், அன்று நம் இனம், நம் தமிழீழ மக்கள் ஒரு லட்சத்து 67 ஆயிரம் மேற்பட்ட பேர் இறந்தார்களே, அவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையே! அவர்களுக்கு நீதி வாங்கித் தருவது நம் கடமைதானே? அதை நாம் பேச வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லவா?

தோழர் அபிதா:

நான் ஈழத்தமிழர்களின் படுகொலையை எப்படிப் பார்க்கிறேன் என்றால், முதலில் சிங்கள அரசு தமிழர்களை ஒடுக்குவதற்காகத் தமிழ் இனத்தையே அழித்தது. அங்கு மே 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.  ஆனால், தலைவர் பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் எப்படி இருந்தது என்றால், அங்கு நீதிமன்றம், தனிசுயாட்சி எனத் தமிழீழம் இயங்கியது.

நான் பார்த்த வரை, இந்தச் சமூகம் பெண்களைச் சிறுவயதிலிருந்தே பெற்றோர் பேச்சைக் கேட்கவும், பிறகு கணவர் பேச்சைக் கேட்கவும், அதன் பிறகு மகன் பேச்சைக் கேட்கவும் என ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் பெண்களைச் சுருக்கிவிட்டது.

நான் பார்த்து வியந்தவர்களில் கரும்புலிகள் ஒன்று. அதில் கேப்டன் அங்கயற்கண்ணி தான் முதல் பெண் கரும்புலி. அவர் என்ன செய்தார் என்றால், சிங்கள அரசின் ஆயுதக் கப்பலைக் கடலுக்கு அடியில் நீந்தியே சென்று, 30 கடல் மைல் தொலைவில் அந்தக் கப்பலையே வெடிக்க வைத்தார். தன்னையும் அர்ப்பணித்து அந்தக் கப்பலைச் சிதறடித்தார். இப்போது பெண்ணை நீ அடிமைப்படுத்துகிறாய், ஆனால் எங்கள் தலைவர் கண்ட தமிழீழத்தில் பெண்தான் போரை முன்னின்று நடத்தினாள். தலைவர் பிரபாகரன் சொன்னால் அனைவரும் கட்டுப்படுவார்கள், அவருடைய பேச்சை மதிப்பார்கள். ஆனால், ஒருமுறை அவர் “இந்த வேலையைச் செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு, “வேண்டாம், அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொன்னாலும், பெண் கரும்புலிகள் மட்டும் அவர் முதலில் என்ன சொன்னாரோ அதை மறக்காமல் செய்து முடித்துவிட்டு வருவார்கள். ஈழத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருந்தது. 

தமிழர்களிடம் நான் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன். இன்று போலித் தமிழ்த் தேசியவாதிகள் சிலர், “நான் தலைவரைப் பார்த்தேன், அவருடன் அமர்ந்து ஆமைக்கறி சாப்பிட்டேன், முயல்கறி சாப்பிட்டேன்” என்று பொய்யாகப் பேசி, போலி அரசியலைத் தமிழ்த் தேசியமாக மக்களிடம் திணித்து, இளைஞர்களின் சிந்தனையை ஒரு வட்டத்திற்குள் சுருக்குகிறார்கள். நானும் 2K கிட்ஸ்தான். எனக்கு ஈழம் சார்ந்தும், இனம் சார்ந்தும் ஒரு ஆர்வமும் ஈர்ப்பும் இருந்தது. தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் காக்க வேண்டும். தமிழக அரசு ஈழப் படுகொலைக்கு ஒரு நினைவிடத்தை உருவாக்க வேண்டும். ஈழப் படுகொலைகள் சார்ந்த அனைத்து ஆவணப்படங்களையும், விஜய் படமோ அஜித் படமோ எப்படி திரையரங்குகளில் வெளியிடுகிறார்களோ, அதேபோலத் தலைவர் பிரபாகரன் சார்ந்த படங்களையும், கரும்புலிகள் சார்ந்த படங்களையும் திரையரங்குகளில் வெளியிட வேண்டும்.

தோழர் சாய்மணி:

அன்று 2009-இல் அங்கு நடந்த இனப்படுகொலை ஒரு முடிவல்ல, அது ஒரு தொடக்கம்தான். இங்கு தமிழ்நாட்டிலும் அது தொடர்பான பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் பற்றி நாம் பேசவில்லை என்றால், நாளை நமக்கும் இனப்படுகொலை நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சரியான ஒரு தத்துவத்தின் பின்னால் செல்லவில்லை என்றால், நமக்கும் இனப்படுகொலை நடப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, நாம் பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், பிரபாகரன், தமிழீழம் பற்றி, அனைத்து விடுதலை உணர்வைப் பற்றியும் படித்தால் மட்டும்தான் நம் தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க முடியும்.

எனவே, தமிழின மக்களுக்கான ஒரே தீர்வு, தமிழினத்தில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவதுதான். அது மட்டுமல்லாமல், அந்த மக்களுக்கான சர்வதேச விசாரணை நடத்துவதுதான் அந்த மக்களுக்கான ஒரே தீர்வாக இருக்கும். அதற்கு நாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். சாதி, மதம், கட்சி அனைத்தையும் கடந்து, நம் தமிழின மக்களுக்கான நினைவேந்தலை நாம் கூற வேண்டும்.

தோழர் பிரபா:

ஒரு லட்சம் பேரைக் கொன்றிருக்கிறார்கள். இதற்கு ஒரு நினைவிடம் இல்லையா என்பது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. இங்கு பார்த்தால் ஜெயலலிதாவுக்கு, கலைஞருக்கு என எல்லாவற்றுக்கும் நினைவிடம் வைக்கிறார்கள். எல்லாமே செய்கிறார்கள். ஆனால், ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்றதற்கு ஒரு நினைவிடம் இல்லையா என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இப்போது இருக்கும் அரசாங்கம் கண்டிப்பாக ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்ப வேண்டும்.

தோழர் செந்தில்:

தமிழர்களே, நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள், எந்த இயக்கத்தில் வேண்டுமானாலும் இருங்கள், புதிய கட்சியோ புதிய இயக்கமோ வேண்டுமானாலும் ஆரம்பியுங்கள். அது விடயமில்லை. ஆனால், தமிழீழக் கோரிக்கை என்பது தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டிய கோரிக்கை.  நாம் தமிழர்கள் என்ற அடிப்படையில் கட்சி கடந்து இயக்கம் கடந்து ஒன்றாகத் திரண்டுதான் அந்த விடுதலையை வென்றெடுக்க வேண்டும்.

உகாண்டா இனப்படுகொலையைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் தொடர்ச்சியாக அதற்காகக் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதனால்தான் இன்று பல்வேறு நாடுகள் அதை இனப்படுகொலை என்று ஒத்துக்கொண்டுள்ளன. இப்போது தமிழர்களாகிய நாம் தொடர்ச்சியாக அது இனப்படுகொலை என்பதைச் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு சென்று, அதற்கான நீதியைப் பெறுவதற்கு இந்தத் தமிழினம் ஒன்றுபடுவது மிக முக்கியம். கட்சி கடந்து தமிழீழத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஈழ விடுதலைக்கு மிகப்பெரிய அளவில் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »