இந்துத்துவ கும்பலின் கலவர நோக்கத்தை அம்பலப்படுத்தும் திருமுருகன் காந்தி

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை மையமாக வைத்து மதுரையில் மதக் கலவரம் உண்டாக்க முயலும் இந்துத்துவ கும்பல்களின் நோக்கம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ‘தி டிபேட்’ ஊடகத்திற்கு திசம்பர்  5, 2025 அன்று வழங்கிய நேர்காணல்.

பத்திரிக்கையாளரின் கேள்வி: வணக்கம்! கடந்த இரண்டு நாட்களாக மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரமாக நடந்துக்கொண்டு இருக்கிறது. 144 தடை உத்தரவு போட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு போய்கொண்டு இருக்கும் போது, இந்த இந்துத்துவ அமைப்புகள் மக்களுக்கு எதிரான ஒரு சதியை தமிழ்நாடு அரசு செய்கிறது என சொல்கிறது. இதுகுறித்தான உங்களுடைய பார்வை என்ன?

தோழர் திருமுருகன் காந்தி பதில்: ஒரு தீர்ப்பு என்பது எத்தனை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது?, எந்த மக்களுக்கு சாதகமாக இருக்கிறது? என்பதை பொறுத்துதான், அது நீதியா? அநீதியா? நாம் பார்க்க முடியும். அவருடைய(நீதிபதி சுவாமிநாதன்) தீர்ப்பு பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருக்கிறது. அதை நீதியாக பார்க்க முடியாது, வெறும் தீர்ப்பாகதான் பார்க்க முடியும். நீதி இல்லாத தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.

கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவது என்பது வழக்கமாக இருந்திருக்கிறது. கார்த்திகை தீபம் ஏற்றுவதில் அங்கு எந்த தடையும் இல்லை. இந்து முன்னணிக்காரன் இங்குதான் ஏற்றனும் என சொன்னால் எல்லாரும் அங்குதான் ஏற்றனுமா? அதற்கு ஒருத்தர் வந்து தீர்ப்பு தந்து, அங்குதான் போய் ஏற்றனும், இந்த இடம்தான் பண்ண வேண்டும் என சொல்வதற்கு, நீதிபதி இந்து முன்னணிக்கு வேலை பார்க்கிறாரா? அல்லது மக்களுக்கு வேலை பார்க்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அதுவும் அந்த அமைப்பு கலவரம் செய்யக்கூடிய அமைப்பு. கொலை வழக்கில் அதனுடைய பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு அமைப்புக்கு சாதகமாக ஒரு நீதிபதி வேலை செய்கிறார் அல்லது தீர்ப்பு தருகிறார் என்றால் கேள்வி எழத்தான் செய்யும். அந்த கேள்வி எழுப்புகிறோம்.

கேள்வி: ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் போடுகிறாரே, இது அவசியம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

பதில்; அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். ஒரு அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. அதிகார வர்க்கமும் ஒரு அரசியல் சாசன அமைப்பு, நீதிமன்றமும் ஒரு அரசியல் சாசன அமைப்பு. இந்த இரு அமைப்புகள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் நீதிபதி முடிவெடுக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல், அவருடைய தீர்ப்பை திணிக்கிறார். அப்போது நாம் என்ன கேட்கிறோம் எனில், இந்த இடத்தில் ஏற்ற வேண்டியதற்கான அவசியம் என்ன? என்று நீதிபதி விளக்கம் எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகத்தான், இந்த தீர்ப்பு கொடுக்கிறார். ஏற்கனவே முன்பு கொடுக்கப்பட்ட தீர்ப்பில், பழைய முறையில் எங்கு தீபத்தை ஏற்றுகிறார்களோ, அங்குதான் அனுமதிக்கப்பட்டதாக இருக்கிறது. அதுதான் இறுதிப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது. அந்த வழக்கத்தை மீறி வேறு இடத்தில் வழிந்து தீர்ப்பு கொடுத்து, ”இந்த இடத்தில் செய்” என்று சொல்லி நீதிபதி திணிக்கிறார்.

இது எந்த மக்களின் கோரிக்கையும் அல்ல, இந்து அறநிலைத் துறையினுடைய கோரிக்கையும் அல்ல, பக்தர்களினுடைய கோரிக்கையும் அல்ல, அந்த பகுதி மக்களின் கோரிக்கையும் அல்ல, அரசினுடைய கோரிக்கையும் அல்ல, ஒரு அமைப்பினுடைய கோரிக்கை.

கேள்வி: ஒரு அமைப்பினுடைய கோரிக்கைக்கு ஏற்ப நீதிபதி உத்தரவிடுகிறார். அது எப்படி திணிப்பாக மாறும்?

பதில்: அந்த அமைப்பு யார் என்று பார்க்க வேண்டும். இந்து முன்னணி என்கின்ற அமைப்பு கோயம்புத்தூரில் கலவரத்தை கொண்டு வந்த அமைப்பு. கோயம்புத்தூரில் ஆறு/ ஏழு வருடங்களுக்கு முன்பாக, இந்த அமைப்பில் சதீஷ் ஒரு இளைஞன் சேர்கிறார். அந்த இளைஞர் இந்து முன்னணி அமைப்பு தவறாக இருக்கிறது என்று புரிந்து கொண்டு, இந்த அமைப்பிலிருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறார். அப்போது அவர் வயது 20. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்பதற்காக, அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்து மிக மோசமாக சதிஷை கூறு கூறாக வெட்டி கொலை செய்கிறார்கள். இது இந்து முன்னணி அமைப்பிலுள்ள பொறுப்பாளர்கள் செய்த பச்சைப் படுகொலை. அதற்காக அமைப்பின் பொறுப்பாளர்கள் இப்பொழுது சிறையில் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு சமூக விரோத செயல்கள் (கலவர வழக்குகள்/ குற்றச் செயல்கள்) தான் அந்த அமைப்பினுடைய பொறுப்பாளர்கள் மீது வழக்குகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பு திருப்பூரில் பிள்ளையார் சதுர்த்தி வரும்பொழுதெல்லாம் கடைகளில் கலவரம் செய்து மிரட்டி, அங்கு கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை பிடுங்குவது வழக்கம். இதுவும் வழக்காக உள்ளது. இது சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல அவர்கள் கோயம்புத்தூரில் செய்திருக்கிறார்கள். அங்கும் வழக்குகளாக இருந்திருக்கிறது. இந்த அமைப்பு தான் தீபத்தை இங்கு ஏற்றுகிறேன் என சொல்வதற்கு இவர்கள் வைத்த எந்த கோரிக்கைக்கும் எந்த தர்க்கமும் கிடையாது என்பதை நாம் கேட்கிறோம், எல்லா முருகன் கோவில்களிலும் தீபம் ஏற்றுக்கிறார்கள் தானே, இந்த இடத்தில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டிய அக்கரை ஏன் இந்து முன்னணிக்கு வருகிறது?

கேள்வி; என்னவாக இருக்கும் நினைக்கிறீர்கள்?

பதில்: ஒன்றுதான். திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என சொல்வறதற்கான காரணம், அதன் அருகில் தர்கா இருக்கிறது. உனக்கு தீபம் ஏற்றுவது தான் முக்கியம். அதுவும் முருகனை வழிபடுவதற்கு தீபம் ஏற்றவது முக்கியம் நினைத்தால், மருதமலையில் ஏற்றலாம். அதுவும் ஆறுபடை வீடுதானே! அல்லது திருத்தணி, திருச்செந்தூர் ஏற்றலாம். எங்கேயுமே இல்லாமல் திருப்பரங்குன்றத்தில் தான் தீபத்தை ஏற்றவேண்டும் என திடீர் அக்கரை வருவதன் நோக்கம்: அங்கே முஸ்லிம்களுடைய வழிபாட்டு தளம் இருக்கிறது. அங்கு ஒரு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறானே ஒழிய, அவனுக்கு முருகன் மேல பக்தியும் கிடையாது.

கேள்வி: நீதிபதியின் உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு செயல்படுத்தி இருந்தால், அந்த உச்சியிலிருக்கக்கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால், இவ்வளவு கலவரமோ, பிரச்சனையோ, போராட்டமோ வந்திருக்காது என்பதை அவங்களுடைய வாதமாக இருக்கிறதே?

பதில்: இந்த இடத்தில் ஏன் ஏற்றவேண்டும் என விளக்கமோ, புனிதமான இடமோ, தனிச்சிறப்பு இடமோ என ஏதாவது சொன்னார்களா? திருப்பரங்குன்ற மலை அரசுக்கு சொந்தமானது. அது சமணர் மலை. அங்கு சமணர் படுகைகள் இருக்கிறது. இது இந்துக்களுக்கே சொந்தம் என்று ஒரு கலவரத்தை செய்ய வேண்டும். அங்கே தர்கா இருப்பதால் பிரச்சனை செய்ய நினைக்கிறார்கள். வேறு ஒன்றும் காரணம் கிடையாது.

அயோத்தியில் பாபர் மசூதி இடித்து ராமர் கோவில் கட்டினார்கள் அல்லவா!, அங்கு பல கிலோமீட்டர் தொலைவில்தான் ராமர் கோவில் கட்டியிருக்கிறார்கள். அதற்கு எதற்கு பாபர் மசூதியை இடித்தீர்கள் என கேட்டால், இவங்களுக்கு இஸ்லாமியர்களுடைய வழிபாட்டு தளங்களை இடிக்க வேண்டும் என்கிற நோக்கம். தமிழ்நாட்டிலும் இடித்து காண்பிப்போம் என்பதற்காக அந்த வேலையை செய்கிறார்கள்.

ஆனால் அடிப்படையில் தர்கா என்பது தமிழர் வழிபாட்டு முறைகளில் வந்தது. இஸ்லாமிய மதகுருமார்களில் இருக்கக்கூடிய அடக்கம் தளம். அவர்கள் மக்களுக்கு உதவி செய்தவர்கள். அது மக்களுக்கு பங்களிப்பு செய்தவர்களை வணங்குகின்ற முறை. தமிழர்கள் இன்றைக்கும் இறந்தவர்களை வழிபடக்கூடிய முறை. நமது முன்னோர்கள் வழிபடக்கூடிய முறையில் தர்கா வழிபாட்டு முறையும் உண்டு. எந்த தர்காவுக்கும் போனாலும் இந்துக்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அது வேண்டுதலுக்கு உள்ளான இடம்.

இதே மதுரை வைகை ஆற்றங்கரையில் இருக்கக்கூடிய தர்காவுக்கு பாண்டிய மன்னன் கொடை கொடுத்திருக்கின்றான். அது கல்வெட்டுகளாக இருக்கிறது. திருப்பத்தூரில் இருக்கக்கூடிய தர்காவிற்கு மருதுபாண்டியர்கள் கொடை கொடுத்திருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கு சரபோஜி அரசர் மினார் கட்டி கொடுத்திருக்கிறார். ஏர்வாடி தர்காவுக்கு சந்தனக்கூடு அமைப்பதற்கு அங்கு இருக்கக்கூடிய இடைநிலை சாதிகளை சார்ந்தவர்கள் தான், அந்த சந்தன கூடு எடுத்துக் கொண்டு வரக்கூடிய பாரம்பரியத்தை வைத்திருக்கிறார்கள். சந்தன கூடுலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு எல்லாரும் வீட்டுக்கு போவது ஒரு வழக்கம்.

’தர்கா வழிபாடு என்பது இங்கே தமிழர்களுடைய பண்பாடும் இஸ்லாமிய பண்பாடும் சேர்ந்த ஒன்று’.

இதில் சமஸ்கிருத பண்பாட்டுக்கு இடம் கிடையாது. அங்கு ஐயருக்கு வேலை கிடையாது. ஐயரை மணியாட்டி, உண்டியல் குழுக்கி சோறு திண்பதற்கு வழி இருந்திருந்தால் எல்லாம் எல்லாம் சரி என இருந்திருப்பான், ஒன்று அந்த வருமானம் கிடைக்கவில்லை என்ற பிரச்சனையாக இருக்கும் அல்லது  ஐயர் போய் உட்கார முடியவில்லையே என்பது பிரச்சனையாக இருக்கும். மற்றபடி இந்து முன்னணிக்கு வேறு பிரச்சனை கிடையாது.

கேள்வி: ஒரு புரிதலுக்காக கேட்கிறேன். தமிழ்நாட்டில் வேறு எந்த மலையிலும் தர்காவோ/மசூதியோ இருந்ததே கிடையாதா? ஏன் திருப்பரங்குன்றத்தை மட்டும் குறி வைக்கிறார்கள்?

பதில்: திருப்பரங்குன்றம் கோவில் முருகன் கோவில் கீழ் இருக்கிறது. தர்கா மேலே இருக்கிறது. நம் ஊரில் பல தெருவில் கோயிலும் மசூதியும் இருக்கிறது. தற்போது திருப்பரங்குன்றத்தில் ஆரம்பிக்கிறார்கள், இதை இப்படியே விட்டால், தண்டுமாரியம்மன் கோவில் ஆரம்பிப்பார்கள். கோயம்புத்தூரில் கோனியம்மன் கோவில் பக்கத்தில் மசூதி இருக்கிறது. அத்தர் ஜமாத் இருக்கிறது அங்கே போய் இடிக்கிறேன் எனச் சொல்லி உட்காருவான்.

இந்த கலவர வேலைகளை செய்கிறவர்களிடம் நான் கேட்கிறேன்: இந்து முன்னணி நபர்கள், தமிழ்நாட்டுக்கு நல்லதுக்காக ஏதாவது ஒரு விசயத்துக்கு போராடி இருக்கிறார்களா? காவேரியில் தண்ணீர் வரவில்லை அதற்கு எதாவது போராட்டம் பண்ணியிருக்கார்களா?, முல்லை பெரியார் அணையை காப்பாற்ற வேண்டும் என போராடி இருக்கிறார்களா?, தமிழ் மீனவன் அந்நிய நாடு கொலை செய்கிறது, அந்த இந்து மீனவனை காப்பாற்றுவதற்காக போராட்டம் நடத்தி இருக்கிறார்களா?, கஜா புயலில் இறந்தவர்களுக்கும் பேசியது இல்லை. எதுக்குமே பண்ணாத இந்த கும்பல் எதற்கு தமிழ்நாட்டில் இருக்கிறது? என்பதுதான் எங்களுடைய கேள்வி.

கேள்வி: 100 ஆண்டு காலமாக இருக்கக்கூடிய ஒரு வழக்கை மாற்றி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் கொடுக்கிறார் என்பதுதான் பலரும் வைக்கக்கூடிய ஒரு வாதமாக இருக்கிறது. ஆனால் 2014 /2016 காலகட்டத்தில் வழக்கு மாற்றி இருக்கிறார்கள் என சொல்றார்களே? இது ஒரு குழப்பமாக இருக்கிறதே?

பதில்: இதில் ஒரு குழப்பமும் இல்லை. 2014/ 2016-ல் யார் இந்த கோரிக்கை யார் கேட்கிறார்கள்? இந்த கோரிக்கை முருகன் வைத்தாரா?, முருகனின் அம்மாவும் அப்பாவும் வைத்தார்களா? முருகனின் அண்ணன் பிள்ளையார் என சொல்கிறார்களே அவர் கோரிக்கை வைத்தாரா? முருகனுடைய அண்ணன் உச்சி பிள்ளையார் கோவிலில் தானே தீபம் ஏற்றினார்கள். அதனால் இந்த அமைப்புகளுக்கு என்ன பிரச்சனை?, அப்போது பிள்ளையார் வேண்டாம் என சொல்கிறார்களா? இந்த கலவர வேலை எல்லாம் சென்ற ஆண்டிலிருந்தே நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை இவர்களை முதலிலே உள்ளே தூக்கி போட்டிருந்தால் ஒரு பிரச்சனையும் வந்திருக்காது. தற்போது பிரச்சனையில் கூட தர்காவில் முஸ்லிம்கள் கறி சாப்பிடுகிறார்கள் என்று. முஸ்லிம்கள் எப்படி பழி கொடுக்கற வேலையை செய்வார்கள். அது தமிழர் பண்பாட்டில் தான் பலி கொடுக்கக்கூடிய மரபு இருக்கிறது. முனியாண்டி, கருப்புராயன் கோவிலில் பலி கொடுக்கிறோம் அல்லவா.

எச் ராஜா என்றாவது அலகு குத்தியுள்ளாரா? காவடி தூக்கி இருக்கிறாரா? எங்கள் வீட்டில் குற்றி இருக்கிறார்கள். காவடி தூக்கி இருக்கிறார்கள். எச்.ராஜா இவங்களுக்குல்லாம் என்ன திடீர் என முருகன் மேல் பக்தி. முருக வழிபாடு என்னவென்றே தெரியாது. ஆனால் உள்ளே திடீர் எனஉள்ளே நுழைக்கிறான், கலவரத்தை உருவாக்கிறான்.

நாங்கள் மதுரை ஊரில் இருந்திருக்கிறோம். அந்த மக்களை பார்த்திருக்கிறோம். எங்கள் வீட்டில் அந்த வழிபாட்டு முறைகள் இருந்திருக்கிறது. எனக்கும் என் தங்கைக்கும் மொட்டை அடித்தது முதல், என் குடும்பங்களில் இருக்கக்கூடிய உறவினர்கள் மொட்டை அடிக்கிறது எல்லாம் முருகன் கோவிலில்தான். ஒரு நல்ல விசயத்தை ஆரம்பிக்கிறது என்றால் அங்கேதான். சென்ற வருடம் கூட என் தம்பிக்கு திருமணம் திருப்பரங்குன்ற மலையில்தான் நடந்தது. எங்களுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு கோவில். இங்கு நடக்கக்கூடிய பாரம்பரியத்தை பற்றியும் கோவில் சம்பந்தமே இல்லாத இவர்கள்(இந்து அமைப்புகள்) எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வி: ஆரம்பத்தில் இந்து முன்னணியினர், இந்து மக்கள் கட்சியினர் போன்ற அமைப்புகள் தான் சேர்ந்து தொடங்கினார்கள். ஆனால் இடையில் பாஜக வருகிறது. அதன் மூத்த தலைவர்கள் எல்லாரும் கைது செய்யப்படுகிறார்கள். இதை ஒட்டுமொத்தமாவே எப்படிதான் புரிந்துக்கொள்ளனுமா?

பதில்: அதாவது கண்ணத்தில் மறு வைத்திருப்பவன் ஆர்எஸ்எஸ் காரன், அதே மறு நெற்றியில் வைத்திருப்பவன் பிஜேபிக்காரன், மூக்கில் வைத்திருப்பவன் இந்து முன்னணிக்காரன், பின்னாடி வைத்திருப்பவன் இந்து மக்கள் கட்சிக்காரன், எல்லாம் ஒரே டிக்கெட் தான். இந்த கும்பல்கள் கலவரம் பண்ணுவதற்காக மாறி மாறி மறு வைத்து வேசம் கட்டிக்கொண்டு இருப்பவர்கள். வேறு ஒன்றும் கிடையாது. இவர்கள் சமூக விரோதிகள் தான். இவர்கள் எல்லாருக்கும் குற்ற வழக்கு இருக்கிறது. எங்களுக்கு(சமூக போராளிகள்) போராட்ட வழக்குகள் இருக்கிறது. அந்த கும்பல்களுக்கு  வழக்கு பட்டியிலை எடுத்துப்பார்த்தால், எல்லாம் கிரிமினல் வழக்காக இருக்கும். கஞ்சா விற்ற வழக்கு இருக்கும், கொலை செய்த வழக்கு இருக்கும், கொலை முயற்சி வழக்கு இருக்கும், அடிதடி வழக்கு இருக்கும், சாராய வழக்கு இருக்கும். அடுத்தவனிடம் அடித்து பிடுங்கிய வழக்கு இருக்கும். இந்த மாதிரி வழக்குதான் வைத்திருப்பார்கள். போராட்ட வழக்கு எனஎதுவுமே இருக்காது. இவைதான் இரண்டு பேருக்கும் உள்ள வேறுபாடுகள். மதக்கலவரத்தை தூண்டுகின்ற வகையில் செயல்படுகிறார்கள்.

கேள்வி: அப்போது இவர்களை உபா சட்டத்தில் கைது செய்யனும்  என்கிற வாதம் எல்லாம் சரிதானா? இந்த எல்லைவரை போக வேண்டிய அவசியம் இருக்கிறதா?

பதில்: நாங்கள் உபா சட்டங்களை ஏற்றுக் கொள்வது இல்லை. உபா சட்டங்கள் என்பது பொதுவாக ஆளும் கட்சி அப்பாவிகள் மீது போடுகிறது. அவங்களை முடக்குகிறது. இப்படி வேண்டுமானால் கேட்கலாம். அப்பாவிகள் மேலெல்லாம் உபா வழக்கு போடுகிறீகளே, இந்த கலவர கும்பல்கள் மேல் ஏன் போடவில்லை? என கேட்கலாம். உபா வழக்கு தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அப்பாவி மேல் உபா வழக்கு பாயும் போது, கலவரம் செய்பவர்கள் மேல் உபா வழக்கு பாயவில்லையே?, அப்போது அந்த வழக்கினுடைய நோக்கம் என்ன? என கேட்க விரும்புகிறோம்.

கேள்வி: இன்றைக்கு தமிழ்நாடு அரசு எடுத்திருக்கக்கூடிய இந்த நிலைப்பாடு உச்சநீதிமன்றம் வரைக்கும் போயுள்ளது. மேல்முறையீடு செய்து டிசம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு கொண்டுவரப்படும் என்கிறார்கள். அவசர கால வழக்கால எடுத்துக்கொள்ள முடியாது என சொல்கிறார்கள். ஆனால் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அவசர வழக்காக எடுத்து விசாரித்து ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார். இது முரணாக என்பதை தாண்டி எல்லாரும் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் மேல் ஒரு தனிப்பட்ட தாக்குதலை கொண்டு செல்கிறார்களா?

பதில்: ஜி.ஆர். சுவாமிநாதன் மீது எல்லாத்துக்கும் பயங்கர அன்புதான். அவர் பண்ணக்கூடிய கலவரத்தால் வரக்கூடிய பிரச்சனைகள் எல்லாம், பெரிதாக மக்களிடம் போகக்கூடாது என்கிற அடிப்படையில்தான் ஜிஆர்.சாமிநாதன் அவர்கள் கொஞ்சம் கவனம் எடுக்க எல்லாரும் வேண்டுகோள் வைக்கிறார்கள். இது தலைப் போகிற காரியமா என்ன? இப்போது தீபம் ஏற்றவில்லை எனில் என்ன ஆக போகும் இந்த நாட்டில்? ஏதாவது பிரச்சனை ஆகிவிட்டதா? மதுரை மக்கள் அமைதியாக கடக்கிறார்கள், தமிழ்நாட்டு மக்களும் அமைதியாக கடக்கிறார்கள் அவர்களெல்லாம் இந்து தானே, இவர்களுக்கெல்லாம் இல்லாத உணர்வு, இந்த கும்பல்களுக்கு மட்டும் வருகிறது என்றால், உங்கள் வீட்டில போய் ஏற்றிக்கொள்ள வேண்டியது தானே!

அதாவது மலை மேலே தீபம் ஏற்றுவது என்பது ஒரு அடையாளம். தூரத்தில் பார்த்து வணங்குவான். கருவரைக்கு எல்லாம் வர வேண்டாம் என்பதற்காக கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என சொன்னான். அதனால் தூரத்திலிருந்து பார்த்து வணங்குவான். அறிவியலாக பார்த்தால், அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது. மாலை பொழுதில் வீட்டில் ஆறு மணிக்கு விளக்கு ஏற்றும் வழக்கம் இருக்கிறது. என்னெனில் இருட்டான பொழுது விளக்கு ஏற்றினால் பூச்சி பொட்டு வராமல் இருக்கும். இப்பொழுது  ஊர் முழுக்க ஒளி (Light) இருக்கிறதே வேண்டுமெனில், தர்காவில் பக்கத்தில் நல்ல விளக்கு இரவு முழுக்க எரிய மாதிரி மின்சாரம் போட்டு ஏற்றி வைக்கலாம். எதற்காக இங்கிருந்து எண்ணெய் தூக்கிட்டு போய், அங்கே ஊற்றி அதை எரிக்கவிடனும், அதுவே முட்டாள்தனம் தான். காலம் கடந்து மாறி போனது.

தேவையில்லாத ஒரு பழக்கத்தை கொண்டு வந்து தேவையில்லாமல் கலவரத்தை கொண்டு வருவதற்கான வேலைகளை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. அது நீதிபதி சொன்னால் என்ன? ஜனாதிபதி சொன்னால் என்ன? பிரதமர் சொன்னால் என்ன? யார் சொன்னாலும் தமிழ்நாட்டிற்குள்ளாக கலவரம் வரக்கூடிய சூழலை அனுமதிக்க முடியாது.

இது ஒரு மலையோட நின்று இருக்காது. பாபர் மசூதி இடித்துவிட்டு அடுத்து தாஜ்மகால் இடிக்கிறேன் என கிளம்புவார்கள். தற்போது ஞானவாபி மசூதியை இடிக்கிறேன் என கிளம்புகிறார்கள். அதே மாதிரி இங்கு ஒவ்வொரு ஊராக கிளம்பி முழுக்க கலவரம் பண்ணுவது வேலை.

கேள்வி: திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களோ, அல்லது தர்காவுக்கு சம்பந்தப்பட்ட ஆட்கள் யாருமே இது குறித்து எந்த ஆட்சியபனையும் தெரிவிக்காமல், அரசு தனிச்சையாக இப்படி ஒரு முடிவெடுத்து தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறதே?

பதில்: அந்த தர்கா நிர்வாகிகளுக்கு பொறுப்பு இருக்கிறது. இது மத பிரச்சனையாக மாறிவிட கூடாது என்கிற பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பு இந்துத்துவ அமைப்புகளுக்கு கிடையாது.

கேள்வி: இரண்டு விசயம்: ஒன்று மத அரசியல பாஜக இந்து அமைப்பினர் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள், இன்னொன்று சிறுபான்மையினர் வாக்குகளை கவருவதற்காக திமுகவினுடைய ஒரு சதி திட்டம், என்கிற ஒரு வாதம் இருக்கிறதே, இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் தேர்தலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள். நாங்கள் எதற்கு எதிர்க்கிறோம்? மத கலவரம் ஏற்பட கூடாது என்பதற்காக தான். இந்த சமூக விரோதிக்கு(இந்துத்துவ கும்பல்) ஒரு அங்கீகாரத்தை கொடுத்துவிட்டால், பெரிய பிரச்சனையாக மாறும். நாளைக்கு தமிழ்நாட்டுக்குள் அமைதி நிலவ முடியாது. தொழில் வளர்ச்சி சாத்தியம் இல்லாம போகும். ஒன்னுமில்லாத பிரச்சனையை பெரிதாக்கி கலவரமாக மாற்றி கோயம்புத்தூர் நகரம் 20 ஆண்டுகளாக முடக்கப்பட்டு, அதனுடைய பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது. இதே மாதிரி ஒரு நெருக்கடி இனி நடக்கக்கூடாது என்கிற ஒரு நோக்கம்தான். அதனால் இது வாக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. ஒரு தேவையற்ற ஒரு கலவரத்தை கொண்டு வருவதற்காக மக்களுக்குள்ளாக பிரிவினை கொண்டு வரக்கூடிய எந்த முயற்சியும் எதிர்த்துதான் ஆக வேண்டும். அதைதான் எதிர்க்கிறோம்.

கேள்வி: தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தை எப்படி கையாண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?

பதில்: இந்த விசயத்தை பொறுத்தவரைக்கும் கையாண்டதை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இதில் உறுதியாக நின்று இந்த கலவரக்காரர்களுக்கு இடம் கொடுக்காமல், கலவரக்காரர்களை ஆதரிக்கக்கூடிய நீதிபதியாக இருந்தாலும் கூட இடம் கொடுக்காமல் நிற்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். இதில் திமுகவின் நிலைப்பாடு என்பது வரவேற்புக்குரியதாக இருக்கிறது. இந்த இடத்தில் எல்லாரும் ஒன்றுபட்டு நிற்கும் என நினைக்கிறோம்.

’தமிழர்களிடத்தில சாதி மதமாக பிரிக்க வேண்டும் என்பதற்கான வேலையை பார்க்கிறார்கள். அதனால் கட்சியை கடந்து நின்று நாம் இதை பேசுவோம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு’.

கேள்வி: ஆனால் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்துகி கொண்டே இருப்பது சரியா?

பதில்: யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. நீதிபதியாக இருந்தால் கடவுள் கிடையாது. நீங்கள் வெகு மக்களுக்கு பலன் வகிக்கக்கூடிய/ நலன் தரக்கூடிய வகையில் தீர்ப்பு இருக்கும் என்றால், வரவேற்கப்படக்கூடியது. வெகு மக்களுக்கு எதிராக ஒரு தீர்ப்பு இருக்கும் என்றால், அது விமர்சிக்கப்படக்கூடியது. அதில் எந்த தவறுமே கிடையாது. அதுக்கு தண்டனை வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.

“நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே” எனநக்கீரனை இன்றைக்கு வரைக்கும் போற்றுகிறோம். கடவுளையே எதிர்த்து கேள்வி கேட்பது ஒரு மரபு என சொல்லியிருக்கிறது. இவர்கள்(நீதிபதி) மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவர்களை பற்றி கேட்க மாட்டோமா என்ன? அதெல்லாம் கேட்கலாம்.

இறுதியாக என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தொடர்ந்து போராடுங்கள் ஐயா, உங்கள் நேரத்திற்கும் பதில் அளித்தமைக்கும் நன்றி.

முழு காணொளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »