‘சம்பை ஊற்று’ எனும் இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்ற போராட்டத்திற்கு த.ம.ஜ.க தோழர்கள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி கேட்டனர். அதற்கு கெ.எம்.சரீப், திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், எஸ்.ஆர்.பாண்டியன் போன்றோர் இறையாண்மைக்கு எதிரானவர்கள் என காரணம் காட்டி அனுமதி மறுத்திருக்கிறது. இதனை கேள்வி எழுப்பி மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் கணக்கில் ஆகத்து 4, 2024 அன்று பதிவு செய்தது.
காரைக்குடியின் பெருமைக்குரிய விடயத்தில் முக்கியமானது ‘சம்பை ஊற்று’. அமுதமாய் நீர்சுரக்கும் இந்த ஊற்றின் நீர் பெருக்கெடுத்து காரைக்குடி மக்களின் நீர் வளமாக இருந்துவருகிறது. காரைக்குடி மக்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் இந்த ஊற்று நீரை, அருகிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை தனது பயன்பாட்டிற்காக லட்சக்கணக்கான லிட்டர் நீரை அன்றாடம் எடுத்துவருகிறது. இதுமட்டுமல்லாமல், அந்நிறுவனம் மிக மோசமான நச்சுக்கழிவுகளை வெளியிட்டு நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருகிறது. இந்த ‘சம்பை ஊற்றை’ பாதுகாக்க காரைக்குடி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இப்போராட்டத்தில் தொடர்ச்சியாக தமிழக மக்கள் சனநாயக கட்சி பங்காற்றி வருகிறது. இதற்காக அவர்கள் நடத்திய போராட்டங்களில் கடந்தவருடம் மே17 தோழர்களும் நானும் பங்கேற்றுள்ளேன்.
பலர் போராடியும் இந்த ஊற்று பாதுகாக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் சம்பை ஊற்று பாதுகாக்க பொதுக்கூட்டம் ஒன்று இன்று மாலை நடக்க த.ம.ஜ.க திட்டமிட்டிருந்தது. அக்கட்சியின் தலைவர் தோழர் கே.எம். சரீப் எங்களை இக்கூட்டத்தில் பங்கேற்க அழைத்திருந்தார். இக்கூட்டத்திற்கு திடீரென காரைக்குடி காவல்நிலையம் அனுமதி மறுத்தது. நீதிமன்றம் சென்று வழக்காடி தீர்ப்பு பெற்றனர் தமஜக தோழர்கள். மீண்டும் அனுமதி கடிதம் தரக்கோரி காவல்துறை தெரிவித்ததை அடுத்து நேற்று கடிதம் கொடுத்தனர். ஆனால் நேற்று (03.08.2024) இரவு மீண்டும் அனுமதி மறுப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான காரணமாக கெ.எம்.சரீப், திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், எஸ்.ஆர்.பாண்டியன் ஆகியோர் தேசவிரோதமாக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவார்கள் என்பதால் அனுமதி மறுத்துள்ளதாக காவல்துறை அனுமதி மறுப்பு கடிதம் கொடுத்துள்ளது.
‘சம்பை ஊற்று’ எனும் இயற்கை வளத்தை பாதுகாக்க குரல் கொடுத்தால் எப்படி அது இறையாண்மைக்கு எதிராக அமையுமென தெரியவில்லை. பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்பது என்பது ஒலிவாங்கிக்கான அனுமதிதானே ஒழிய, பேச்சுரிமைக்கான அனுமதி அல்ல. தமிழ்நாட்டின் காவல்துறை அடிப்படை மனித உரிமைகளை நசுக்குவதில் கைதேர்ந்த காலனிய காலத்து நிறுவனம். கருத்துரிமையை நசுக்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீதிமன்றங்கள் இதுகுறித்து உறுதியான முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டை ஆளும் திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் காவல்துறைக்கு அளவற்ற அதிகாரத்தை கொடுத்ததால் அரசியல் சாசன உரிமைகள் மீறப்படுகின்றன. மனித உரிமை மீறல் குறித்து இரு கட்சிகளுக்கும் என்றுமே அக்கறை இருந்தது கிடையாது.
சம்பை ஊற்றை நாசமாக்கும் நிறுவனமான கோவிலூர் TCPL நிறுவனத்தினால் லாபமடைவது முதலாளிகள் மட்டுமா? அல்லது காவல்துறைக்கும் பங்குள்ளதா? எனும் கேள்வியை எழுப்ப வேண்டிய நிலையை அனுமதி மறுப்பு கடிதம் உருவாக்கியுள்ளது. சம்பை ஊற்று மடிந்து போகும் நிலை உருவாகியுள்ளது. இந்த மக்கள் சொத்தை சூறையாடும் நிறுவனமும், அதற்கு துணையாக நிற்கும் அதிகாரிகளும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களே மக்களின் இறையாண்மைக்கு எதிரானவர்கள். சம்பை ஊற்று இந்தியா உருவாவதற்கு முன்பிருந்தே தமிழர்களை காக்கும் இயற்கை வளம். இதை காப்பது நம் கடமை. தொடர்ந்து போராடுவோம்.