
போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வலியுறுத்துகின்றோம்! மேலும் 58 கிராம கால்வாய் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக ஆண்டுதோறும் நிரந்தரமாக நீர் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்டகால போராட்டத்தின் பலனாக உசிலம்பட்டி வட்டத்திலுள்ள 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில், 2018ம் ஆண்டு உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. சில குறைபாடுகளோடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், கடந்த 2 ஆண்டுகளாக வைகை அணையிலிருந்து கால்வாயில் நீர் திறந்துவிடப்படாததால் மீண்டும் உசிலம்பட்டி பகுதி வறட்சியை சந்தித்து வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக 58 கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
உசிலம்பட்டி பகுதியில் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து நீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 1975ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டது. தொடர் போராட்டத்தின் காரணமாக உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டம் 1996ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 33.81 கோடி மதிப்பீட்டில் 1999ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் 2018ம் ஆண்டு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முல்லைப் பெரியாறு நீர் மற்றும் வைகை ஆற்றின் நீரை வைகை அணையில் சேமித்து, அதன் உபரி நீரை கால்வாய் மூலம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 35 கண்மாய்-குளங்கள் மூலம் பகிர்ந்து, 58 கிராமங்களை சேர்ந்த 2285 ஏக்கர் பாசனப் பரப்பு பயனடைவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. எனினும், அரசாணையை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. மேலும் தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாணை தடையாக உள்ளது என்பது புலப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டமான 71 அடியில் 68 அடிக்கு மேல் அணையில் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏற்கனவே பயன்பெறும் பாசனப்பகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில், இராமநாதபுரம் பெரிய கண்மாயும் வைகை அணையும் ஒருசேர நிரம்பும் போது தான் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்கிறது அரசாணை. மேலும், உயர்மட்ட கால்வாயின் மதகு 68 அடியில் அமைந்துள்ளதால், அதற்கு மேல் அணை நீர் உயரும் போது மட்டுமே கால்வாய்க்கு நீர் திறந்து விட முடியும் என்ற நிலை உள்ளது. 2018 முதல் 2023 வரை வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால், வெள்ளோட்டத்திற்காகவும், மக்களின் போராட்டத்தின் காரணமாகவும் குறிப்பாணையின் மூலம் திறந்தவிடப்பட்ட நீர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அணையில் போதுமான இருப்பு இருந்த போதும் அரசாணையை காரணம் காட்டி திறந்துவிடப்படாததே தற்போது மக்கள் போராட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
2018 முதல் 5 ஆண்டுகள் தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக, உசிலம்பட்டி பகுதியில் இருபோகம் நெல் விளைவிக்கும் வகையில் பாசனம் முழுமையாக நடைபெற்றது. மேலும் நிலத்தடி நீர் அதிகரித்து குடிநீர் சிக்கல்கள் தீர்ந்ததோடு, கிணறுகளில் நீரிருப்பு உயர்ந்து விவசாயம் செழிப்படைந்தது. இதன் காரணமாக உசிலம்பட்டி பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததோடு அப்பகுதியில் நிலவி வரும் சமூக சிக்கல்கள் குறைந்தது. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டதால், உசிலம்பட்டி பகுதியில் பாசனம் பாதிக்கப்பட்டு மீண்டும் வறட்சி தலைதூக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தடுத்துநிறுத்த உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.
வைகை அணையின் நீர் பங்கீட்டு முறையானது அதன் தொடக்க காலத்தில் இருந்த பாசனப்பரப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. அதன் பின்பு மதுரை மாவட்டத்தில் மட்டுமே 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது வைகை பாசனப் பகுதிகளின் நகரமயமாக்கலை கருத்தில் கொண்டு வைகை அணையின் நீர் பங்கீட்டு முறையை மறுசீரமைப்பு செய்து, அதில் 58 கிராம கால்வாய் திட்டத்தையும் இணைத்திட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், அணையில் 68 அடியில் அமைந்துள்ள உயர்மட்ட கால்வாயின் மதகு 60 அடிக்கு மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே பெற்றுவந்த பலனை தொடர்ந்து பெற, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவு நீரை நிரந்தரமாக திறந்துவிட வேண்டும். இதனை செயல்படுத்திடும் வகையில் 58 கிராம கால்வாய் திட்டத்தை சீராய்வு செய்து புதிய அரசாணை வெளியிடப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றது.
போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற மே பதினேழு இயக்கம் வாழ்த்துகிறது. கோரிக்கைகள் வெல்லும் வரை போராடும் மக்களுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருப்பதோடு, மக்கள் துணையோடு ஒரு மாபெரும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
22/09/2025