ஸ்டேன் சாமி அவர்கள் மரணம் எங்களை கவலையடைய செய்துள்ளது – ஐநா மனித உரிமைகள் ஆணையம்
ஜார்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்த தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தோழர் ஸ்டேன் சுவாமி (Stan Swami) அவர்கள், மும்பையில் விசாரணை சிறைவாசியாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் உடல்நிலை மோசமடைந்து 05-07-2021, தனது 84 வயதில் காலமானார். தோழர் ஸ்டேன் சாமி அவர்கள், கடந்த 2018 புத்தாண்டு அன்று மராட்டிய மாநிலம் பீமா கோரேகான் நினைவிடத்தில் நடைபெற்ற வன்முறையை தூண்டியதாக UAPA வழக்கில் 2020 அக்டோபர் 30 அன்று தேசிய புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டார். சிறையில் உடல்நிலை மோசமடைந்த நிலையில், விரும்பிய சிகிச்சை பெற மறுக்கப்பட்டதோடு, பார்க்கின்சன் என்னும் நரம்பு மண்டல நோயால் ஏற்படும் கை நடுக்கம் காரணமாக தண்ணீர் அருந்த உறிஞ்சு குழல் கேட்ட போதும் மறுக்கப்பட்டது. இதனால் அவர் உயிரிழக்க நேரிட்டது.
தோழர் ஸ்டேன் சாமி அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்தும், அவரைப் போல் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரியும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, சர்வதேச மனித உரிமை காப்பாளர்களை உலுக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் UAPA போன்ற கருப்பு சட்டங்கள் சர்வதேச மனித உரிமை சாசனங்களுக்கு எதிரானதாக உள்ளது. இந்தியாவில் கருத்துரிமையின் நிலையை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
84 வயது மனித உரிமைகள் காப்பாளாரான அருட்தந்தை ஸ்டேன் சாமி அவர்கள் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், நீண்டகாலமாக விசாரணை சிறைவாசியாக வைக்கப்பட்டு உயிரிழந்தது எங்களை கவலையடையச் செய்தது மட்டுமல்லாமல் கலங்கடித்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் லிஸ் த்ரோசெல் (Liz Throssell) அவர்கள் 06-07-2021 செவ்வாய் அன்று வெளியிட்டுள்ள ஊடக செய்தியறிக்கை:
மும்பையில் இந்திய ஊபா (UAPA – Unlawful Activities (Prevention) Act) சட்டத்தில் அக்டோபர் 2020 போது கைது செய்யப்பட்ட 84 வயதுடைய மனித உரிமை பாதுகாவலரும், பாதிரியாருமான அருட்தந்தை ஸ்டேன் சாமி (Father Stan Swamy) அவர்களின் மரணத்தின் காரணமாக நாங்கள் மிகுந்த கவலைக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளோம்.
அருட்தந்தை ஸ்டேன் சாமி அவர்கள் 2018 ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போராட்டம் தொடர்பாக தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதிலிருந்து பிணை தரப்படாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் நீண்ட நாளாக சமூக செயலபாட்டாளராக, குறிப்பாக பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, செயல்பட்டு வந்தவர். மும்பை தலோஜா மத்திய சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்த போது, அவரது உடல் நிலை படிப்படியாகச் சீர்கெடு அடைந்தது மட்டுமல்லாமல், கோவிட்-19 பாதிப்பும் இருந்து வந்துள்ளது. பிணை கேட்டு அவரால் தரப்பட்ட மனுக்கள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுள்ளன. மும்பை உயர் நீதிமன்றம் அவரது பிணை மனுவை மறுக்கும் வேளையில் அவர் மரணமடைந்துள்ளார்.
அருட்தந்தை ஸ்டேன் சாமி மற்றும் அதே போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 15 மனித உரிமை போராளிகளையும் பற்றி மேல்நிலை ஆணையர் மிச்செல் பாச்சிலேட் மற்றும் ஐநாவின் தன்னாட்சி வல்லுனர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக இந்திய அரசிடம் முறையிட்டும், அவர்களை தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கக் கோரியும் வலியுறுத்தி வந்தனர். அருட்தந்தை ஸ்டேன் சாமி அவர்கள் தனது மரணத்திற்கு முன்பாக நீதிமன்றத்தில் போராடிய தருணத்தில், ஐநா மனித உரிமை ஆணைய உயர் ஆணையர் ஊபா (UAPA) சட்டம் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனது கவலையை வெளிப்படுத்தினார்.
கோவிட்-19 பாதிப்புகள் கடுமையாக தொடரும் இந்த நேரத்தில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அரசுக்கு எதிராக விமர்சித்த மற்றும் மாற்றுக் கருத்து கூறியவர்கள் உட்பட போதிய சட்ட முகாந்திரம் இல்லாமல் சிறைபடுத்தப் பட்டிருக்கும் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டியது மிக அவசியம். இது இந்திய நீதித்துறையின் முடிவான ‘சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும்’ முடிவை ஒத்ததாக இருக்கும்.
மேலும் கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் கூடுதல் போன்ற அடைப்படை உரிமைகளை முன்னெடுக்கும் யாரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்பதை இந்தியா அரசு உறுதி செய்யவேண்டும் என்று ஐநா மனித உரிமை ஆணைய மேல்நிலை ஆணையர் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தோழர் ஸ்டேன் சாமி, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, இயற்கை வளங்களை சூறையாட அரசின் நிழலில் நுழைந்த கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தவர். பழங்குடி மக்களுக்காக தன் வாழ்வையே அற்பணித்தவர். மோடியின் இந்துத்துவ அரசிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். பழங்குடி மக்களின் வாழ்விடத்தை அழித்து இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க மோடி அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கிறது. அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நினைக்கிறது. தோழர் ஸ்டேன் சாமி அவர்களின் கைதும் மரணமும் அதைத் தான் நமக்கு உணர்த்துகிறது.