கும்பமேளாவில் போலி கோவிட் பரிசோதனைகள்

கும்பமேளாவில் போலி கோவிட் பரிசோதனைகள்

கொரோனா இரண்டாம் அலை உருவாக காரணமாக இருந்த “கும்பமேளாவில்” ஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் நடந்தது அம்பலம் ஆகியுள்ளது!

கோவிட்-19, இரண்டாவது அலை தொற்று பரவத் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 1 முதல் 30-ஆம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார், டெராடூன், தெஹ்ரி, பவுரி ஆகிய மாவட்டங்களில் கும்பமேளா நடத்தப்பட்டது. மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலை மீறி, மோடியின் கோரிக்கையை ஏற்று அம்மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசும் கும்பமேளாவை நடத்தின.

கும்பமேளாவில் பங்கேற்க வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் எனக்கூறியது மாநில அரசு. அதில் கோவிட் பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதித்தது. ஆனால், பெருந்தொற்று குறித்து எந்தவித அச்சமும் இல்லாத பக்தகோடிகளுக்கு பொய்யான பரிசோதனை முடிவுகளை அளித்துவிட்டு, கும்பமேளாவில் பங்கேற்று, அந்நிகழ்வை அதிகமான மக்களுக்கு பரவும் வகையில் செய்து, பல உயிர்கள் பலியாவதற்கு காரணமாகியிருக்கிறார்கள்.

கும்பமேளாவில் பங்கேற்றவர்களில் ஒரு லட்சம் பரிசோதனைகள் எடுக்கப்பட்ட நிலையில், வெறும் 177 பேருக்கு மட்டுமே கோவிட் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்தனையும் பொய் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்க அளிக்கப்பட்ட கோவிட் பரிசோதனை அறிக்கைகளில் சுமார் 1 லட்சம் தொற்று பரிசோதனை அறிக்கைகள் போலியானவை என உத்தரகாண்ட் அரசாங்கம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரகாண்ட் அரசாங்கம் தானாக முன்வந்து இந்த விசாரணையை செய்யவில்லை.

பஞ்சாப்பைச் சேர்ந்த ஒருவர் பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தியைப் ஏப்ரல் 22 தேதி பெற்றுள்ளார். அவர் கும்பமேளாவுக்கு செல்லவும் இல்லை. இந்த நிலையில், தன்னுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்கள் திருடப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆருக்கு இமெயில் வழியாக புகார் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் கும்பமேளாவில் பல பரிசோதனைகள் முறைகேடுகள் நடந்தது அம்பலமானது.

முன்னதாக கும்பமேளாவுக்கு வருபவர்களை பரிசோதிக்க, உத்தரகாண்ட் அரசாங்கம், 24 தனியார் பரிசோதனை மையங்கள், 14 மாவட்ட நிர்வாகங்கள், 10 கும்பமேளா நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பரிசோதனை மையங்கள் என மொத்தம்48 மையங்களை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இந்த மையங்களில் எடுக்கப்பட்ட பரிசோதனைகள் பெரும்பகுதி போலியானது என உத்தரகாண்ட் அரசாங்கத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

இதில் குறிப்பாக

  • 50 நபர்கள் ஒரே ஒரு செல்போன் எண்ணை தங்களுடைய எண்ணாகக் கொடுத்துள்ளனர்.
  • ஒரேயொரு ஆண்டிஜென் பரிசோதனை முடிவு 700 பேருக்கு தரப்பட்டுள்ளது.
  • மேலும் முகவரிகளும், பெயர்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.
  • ஹரித்துவாரின் எண்:5 என்ற முகவரியில் 530 மாதிரிகள் பரிசோதனைக்கு தரப்பட்டுள்ளன.
  • கான்பூர், மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 18 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தோர் ஒரே தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளனர்.
  • அவர்களில் 200 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள், அதில் பலர் மாணவர்கள். இன்னும் பலர் ஹரித்வாரில் இருந்ததில்லை என்கிறது அந்த செய்தி அறிக்கை.

“கோவிட் சோதனைகளுக்கு, மாதிரி சேகரிப்பாளர்கள் மாதிரிகளை நேரடியாக சென்று சேகரிக்க வேண்டும்.” ஆனால் மாதிரி சேகரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டபோது, இதில் ஒவ்வொரு பரிசோதனை முடிவுக்கும் 350 ரூபாயை அம்மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது எனில், 1 லட்சம் போலி பரிசோதனைக்கு கிட்டத்தட்ட 3.5 கோடி மோசடி நடந்துள்ளது.

அதே நேரத்தில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அரசு அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்காக தனியார் ஆய்வகத்திற்கு அளித்தால், ஒரு பரிசோதனைக்கு 400 ரூபாய் செலுத்தப்படும். கோவிட் சோதனைக்கான மாதிரியை தனியார் ஆய்வகமே சேகரித்தால் அதற்கு 700 ரூபாய் செலுத்தப்படும். வீட்டிற்குச் சென்று மாதிரிகளை சேகரித்தால் 900 ரூபாய் கட்டணம் செலுத்தப்படும். இந்த விலை விவரங்கள்அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டு நிகழும்.

உத்தரகாண்ட்டில் மொத்தம் 13 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில், கும்பமேளா நடந்த காலகட்டத்தில் ஹரித்வார் மாவட்டத்தில் 6,00,291 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 17,335 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே காலகட்டத்தில் மற்ற 12 மாவட்டங்களில் 4,42,432 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், 62,775 பேருக்குத் தொற்று உறுதியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 12 மாவட்டங்களையும் விட ஹரித்வார் மாவட்டத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், மற்ற மாவட்டங்களில் ஏற்பட்ட தொற்று எண்ணிக்கைகளை விட 80 சதவிகிதம் குறைவாகவே ஹரித்வார் மாவட்டத்தில் ஏற்பட்டிருப்பது சந்தேகத்தைக் கிளப்பியது. இந்த ஆண்டு நடந்த கும்பமேளாவில் 70 லட்சம் பேர் கலந்துகொண்டதாகக் கும்பமேளா நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்படியிருக்கையில் மிகக் குறைந்த அளவிலேயே கொரோனா தொற்று எண்ணிக்கைக் காட்டப்பட்டிருப்பது, அம்மாநில மக்களின் உயிரை பற்றி கவலைபடாமல் கும்பமேளாவை பற்றி தான் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் கவனம் செலுத்தியிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

இது தொடர்பாக, சமூக ஆர்வலர் சச்சிதானந்த் என்பவர் நைனிட்டால் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கின் மனுவில், தனியார் கொரோனா பரிசோதனை மையத்தில் பணிபுரிந்த இளைஞர்கள் சிலர், மாவட்ட அதிகாரிகளுக்கு எழுதியிருந்த கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதில்,

“ஹரித்வாரின் நுழைவுப் பகுதியான ராய்வாலா வாயிலில் நாங்கள் ராபிட் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுவந்தோம். அப்போது அங்கு பரிசோதனைக்கு வருபவர்களில் போலீஸ் அதிகாரிகள் உட்பட சில நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மற்றவர்களுக்குப் பரிசோதனை செய்யாமலேயே `கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் எங்களுக்கு அழுத்தம் தரப்பட்டது. இதை நாங்கள் செய்ய மறுத்த காரணத்தால், வேலையைவிட்டு நிறுத்தப்பட்டோம்.” என்று சொல்லப்பட்டிருந்தது.

கும்பமேளாவை நடத்துவதற்கு எதிராக பல மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர். கும்பமேளாவில் சமூக விலகல் சாத்தியமற்றது, அது ஒரு அதிவேக நோய் பரவ காரணமாக மாறும் எனவும் அவர்கள் கணித்திருந்தனர். ஆனால், ஒன்றிய, மாநில அரசுகள் அவற்றை புறம்தள்ளிவிட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் இறக்க காரணம் ஆகியுள்ளன.

கொரோனா முதல் அலையின் போது டெல்லியில் ஒன்றிய அரசின் அனுமதியோடு ஏற்கனவே நடத்த திட்டமிட்டிருந்த தப்ளிக் ஜாமத் மாநாட்டை இந்தியா முழுக்க கொரொனா பரவக்காரணமாக காட்டியே தனது தவறை மறைத்தது மோடி அரசு. இப்போது அப்பட்டமாக மனிதர்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை தூக்கிபிடித்ததால் கும்பமேளாவை நடக்கவிட்டு அங்கே ஒரே இடத்தில் 70 லட்சம் பேரை கூட்டி, கொரோனா இரண்டாம் அலை இந்திய ஒன்றியம் முழுக்க பரவ முக்கிய காரணகர்த்தாகவே மாறியதற்கு யார் மோடிக்கு தண்டனை தருவது?

வழக்கம்போல, பரிசோதனைக் கூடங்கள் மீது இந்த பழியை போட்டுவிட்டு மோடி அரசும் மாநில பாஜக அரசும் தப்பித்துக் கொள்வார்கள். மக்களும் இதை மறந்துவிட்டு மோடி அரசின் அடுத்த பொய்களுக்கு எப்படி பலியாகலாமென்று காத்துகிடப்பார்கள். இதை மூலதனமாகக்கொண்டு மற்றொரு மதவாத படுகொலைக்குத் மோடி கூட்டம் தயாராகிவிடுவார்கள். கொரோனா காலத்தில் அயோத்தியில் 1100 கோடி ஒதுக்கி கோவில் கட்ட தெரிந்த மோடி அரசாங்கத்துக்கு தடுப்பூசி ஆலையோ/ மருந்துவமனையோ / ஆக்சிசன் சுத்திகரிப்பு ஆலையையோ கட்ட மனம் வரவில்லை. இந்துத்துவ சிந்தனையில் இருக்கும் அரசிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இந்ததுத்துவ பாசிசம் என்பது தனது சொந்த மக்களையே பலிகொடுக்கும் என்பதெற்கு கும்பமேளா கொண்டாட்டமும் அதில் போலியாக கொடுக்கப்பட்ட சான்றிதழுமே சான்று. மக்கள் ஒவ்வொரு முறையும் அறிவியலை புறந்தள்ளி ஆன்மீகத்தை முன்னெடுக்கும் போது பல அழிவுகளை சந்தித்து கடைசியில் அறிவியலே வெற்றிக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »