கல்வியை கனவாக்கும் மோடி

கல்வியை கனவாக்கும் மோடி

“வணிகம் செய்வது அரசின் வேலையில்லை.பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது” என்று வெளிப்படையாக பேசுகிறார் மோடி.

கல்வியிலும் இந்த உறுதியை பின்பற்றவே ஒரே கல்வி என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. கல்வித் துறையில் தங்களது மதவாத நோக்கங்களைப் புகுத்தவும், நவீன காலனிய வகையிலான அடிமைத்தன கல்விமுறையை வளர்க்கவும் இதனை நடைமுறைப்படுத்த துடிக்கிறது மோடி அரசு.

உலக வர்த்தக நிறுவனத்தின் “காட்ஸ்” (GATTs) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம்  கல்வித் துறையை பன்னாட்டு வணிகச்சந்தைக்கு ஏற்கனவே திறந்து விட்டது  இந்திய ஒன்றிய அரசு. காட்ஸ் ஒப்பந்தம் என்பது  மேற்குலக பணக்கார நாடுகளின் பொருட்களை இந்தியா போன்ற வளரும், மற்றும் ஏழை நாடுகளில் தடையின்றி விற்க சந்தைப்படுத்த  ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும். உலகவர்த்தகக் கழக ஒப்பந்தங்களில் சேவைத்துறை எனும் கல்வியும் அடக்கம். இந்த ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுக்கவே புதிய கல்விக் கொள்கை.

உயர்கல்வித் துறைகளில் தனியார் மயத்திற்கு சாதகமாகும் வகையில் பல திருத்தங்கள் மோடி அரசால் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்திய ஒன்றியத்தில் 2017-18 கணக்கெடுப்பின் படி, 900 பல்கலைக்கழகங்களும், 40,000 கல்லூரிகளும் உள்ளன. இந்தக் கல்விக் கொள்கையானது, ஒவ்வொரு உயர்கல்வி  நிறுவனங்களையும் தனித்தனியாக நிர்வகித்த, குறிப்பாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC), மருத்துவம் (MCI), பொறியியல் (AICTE ), ஆசிரியர் பயிற்சி (NCTE ), சட்டம், வேளாண்மை போன்ற பல அமைப்புகளின் மேலாண்மைகளையும் இனி கட்டுப்படுத்தும் ஒரே அமைப்பாக  “தேசிய உயர்கல்வி கட்டுப்பாட்டு ஆணையம் (NHERA)” உருவாக்கப்படும் என தெரிவிக்கிறது.

புதிதாக உருவாகும் கல்லூரிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பீடும் வழங்க “தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு குழு” (NAAC)  உருவாக்கப்படுகிறது. தன்னாட்சி அமைப்பாக செயல்படும் இந்தக் குழுவானது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு கல்லூரிக்கும் மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் பணியை செய்ய பல நிறுவனங்களை நியமிக்கும். ஒரு தன்னாட்சி அமைப்பிற்கும் அதன் கீழமைந்த நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் கல்வி அதிகாரக் குவிப்பு என்பது தரமற்ற, சமனற்ற, சமூகநீதியற்ற தனியார் கல்லூரிகள் பலவற்றை உருவாக்கவே காரணமாயிருக்கும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே 2012 ல் ஹரியானாவில் தனியார் பல்கலைக்கழகம் துவங்க ஏழை விவசாயிகளிடமிருந்து ஒரு கோடி மதிப்புடைய ஒரு ஏக்கர் நிலத்திற்கு 12.6 லட்சம் மட்டும் இழப்பீடாக கொடுத்து 2006 ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டு தனியாருக்கு வழங்கப்பட்டது.  “ராஜிவ் காந்தி கல்வி நகரம்” (Rajiv Gandhi Education City) என நிறுவப்பட்ட இந்த தனியார் பல்கலைக்கழகம் இப்பொழுது வசதி படைத்தவர்களுக்கானதாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெளிப்படையாகவே தனியார் மயத்தை ஆதரிக்கும் கொள்கையைக் கொண்டு வரும்  மோடி அரசால் இனி  மக்களின் விவசாய  நிலங்கள் குறைவான இழப்பீட்டுடன் பறிக்கப்பட்டு தனியாருக்கும், பன்னாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் சொந்தமாக்கும் வேலைகள் வேகமெடுக்கவே துவங்கும் .

அடிக்கல் கூட அமைக்காத அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழக (Institute of Eminence) தகுதியும் வழங்கி 1000 கோடி நிதியும் ஒதுக்கியது மோடி அரசு. தனியார் நிறுவனங்கள் நிதி பெற முடியாது என்கிற விதியிருந்தும் அம்பானிக்காக விதியை மாற்றினார் மோடி. இந்தத் தகுதி பெற்ற 6 பல்கலைக்கழகங்களிலும் தங்கள் விருப்பம் போல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு 30% வெளிநாட்டு மாணவர்களையும் 20% வெளிநாட்டு ஆசிரியர்களையும் சேர்க்கலாம் என்றும் இந்த அரசு முடிவெடுத்தது. இப்போது துவங்கப்பட இருக்கும் அம்பானியின் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் வாசலில் கூட ஏழை, எளிய மாணவர்களும், சமூக நீதியின் அடிப்படையான இடஒதுக்கீடும் நுழையவே முடியாது.

ஐ.நாவின் நிறுவனமாக யுனெஸ்கோவும், உலக வங்கியும் இணைந்து தயாரித்த கூட்டு ஆவணத்தில், “வளர்ந்த நாடுகளின் பெயர்பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களின் புகழின் பெயரால் சமனற்ற, தரம் குறைந்த கல்வியையே ஏழை, வளரும் நாடுகளில் அளிக்கின்றன’ என கூறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் பல்கலைக்கழகங்களின் கல்வி தரத்தையே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். சுயசார்பு பொருளாதாரம் என பேசும் மோடி அரசு, இப்படியான பன்னாட்டு நிறுவனங்களையும், அவர்களின் இரண்டாம் தர கல்வியையும் தன் சொந்த நாட்டு மக்கள் மீது திணிக்கின்றது.

சமூக மற்றும் கல்வி ரீதியான ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைத்திடும் சமூகநீதி உரிமைகளை தட்டிப் பறிப்பதற்கு கல்வியை தனியார் மயமாக்குவது தான் வழி என்று கருதுபவர்களின் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இதையையே மோடி நிறைவேற்றுகிறார்.

பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய மோடி, பட்டியலின மக்கள் உயர் கல்வி பெறுவதை முடக்கும் பணிகளை தொடர்ந்து செய்கிறார். அம்மாணவர்களின் உயர்கல்வி உதவித் தொகையை (Post Metric Scholarship) 10% குறைத்து சுமார் 60 லட்சம் பட்டியலின மாணவர்களின் உயர்படிப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை மறுத்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ உயர்கல்வி வாய்ப்பை மறுத்து அந்த இடங்களை உயர்சாதிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் தாரை வார்த்தார்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்களை அனுமதிப்பதிலும், ஆசிரியர் நியமானத்திலும் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதே இல்லை என்பது அவ்வப்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிக்கொண்டு வரப்படுவதன் அறிந்துகொள்ள முடிகிறது. நீட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படும் மருத்துவத்திற்கான மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு கிடையாது என்று வெளிப்படையாகவே மோடி அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்விற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து, ஒன்றிரண்டு ஆண்டுகளையும் செலவு செய்து பயிற்சி வகுப்பில், அதுவும் குறிப்பிட்ட ஒன்றிரண்டு பயிற்சி நிறுவனங்களில் பயின்றவர்கள் மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் பயில தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட-பட்டியலின மாணவர்கள் இது போன்ற ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் நுழைவது மிகவும் கடினமான செயலாக உள்ளது. அரசின் கட்டுப்பாட்டிலேயே இப்படியான சூழல் நிலவும் போது, இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை இல்லாத, மாணவர் சேர்க்கைக்கு, கல்வி கட்டனத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லாத வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுமேயானால், அது ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட-பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை அடியோடு மறுத்து, உயர்சாதி பணக்கார மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு தகுதியானவர்கள் என்ற நிலையை உருவாக்கும். இது, நவீன குலகல்வியை திணித்து சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.

அடித்தட்டு மக்களின் கல்வி உரிமையை மறுப்பதன் மூலம் அவர்களின் உலகம் விரிவடைவது இந்துத்துவ அரசியலுக்கும், சனாதனக் கொள்கைக்கும் ஆபத்தானது என பாஜக-ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது என்பதையே இந்த நகர்வுகள் சொல்லுகின்றன.

கல்வியும், வேலை வாய்ப்பும் முழுக்க தனியார் மயமானால் அரசியலமைப்பு சட்டத்தில் நிலைபெற்ற இட ஒதுக்கீட்டினையும், கல்வி உதவித் தொகைகளையும் கிடைக்காமல் செய்து விடலாம். அதனால் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட-பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுத்து விடலாம் என்னும்  நோக்கம் கொண்டவர்களின் முயற்சியே புதிய கல்விக் கொள்கை.

தனியார்மயத்திற்கும், பெரும் கல்வி நிறுவனங்களின் நலனுக்கும், பன்னாட்டுக் கல்வி சந்தைக்குமாக உருவாக்கப்பட்ட புதியக் கல்விக் கொள்கையை நிராகரிக்கும் வகையில் விழிப்புணர்வு மக்களிடம் பரப்பப்பட வேண்டும். ஏனெனில் நாஜி கல்வியின் மூலமாகவே இட்லர் தமக்கான இனவெறியர்களை லட்சக்கணக்கில் உருவாக்க முடிந்தது. இளைஞர்கள் மனதில் வன்மத்தை பதிப்பதைவிட சிறுவர்களிடத்தில் நாஜி கருத்துக்களை விதைப்பது எளிமையாக அமைந்தது. இதே யுக்தியை காவி பயங்கரவாதிகள் செய்கிறார்கள். காவிமயப்படுத்தல் தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று வலுப்படுத்துகிறது என்பதால் இரண்டையும் வீழ்த்தும் பொறுப்பு நம்முடையதாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »