உலகப் பரப்பளவில் 69.21% உள்ள கடற்பரப்பு, இன்று உலக வணிகத்தின் அடிப்படையாகி விட்டது. அதனால் தான் இந்தக் கடற்பரப்பை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் வேட்டைக்களமாக மாற்றி வருகின்றனர். தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவதற்காக இந்தக் கடற்பரப்பை இராணுவப்படுத்தவும் செய்கின்றன.
அமெரிக்காவின் போர் வெறியாலும் உலகளாவிய மேலாதிக்கத்தாலும் பல கடற்பரப்புகள் இராணுவமயமாக்கப்படுகின்றன. அவற்றில் அட்லாண்டிக் கடல் மற்றும் தமிழர் கடலாம் இந்திய பெருங்கடலைத் தொடர்ந்து இப்போது அரபிக் கடலை ஆக்கிரமிக்க ‘மேற்கு ஆசிய குவாட்’ எனும் ஒரு புது கூட்டமைப்பு உருவாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 2021-இல் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மன்றத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களில் ‘மேற்கு ஆசிய குவாட் (QUAD)’ என குறிப்பிடப்படும் I2U2 (India, Israel, US, UAE) அமைப்பை உருவாக்கும் முடிவு முக்கியமானதாகக் கருதப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் சென்றிருந்த போது இது உருவானது.
ஏற்கெனவே தெற்காசியாவில் இந்தோ-பசிபிக் குவாட் (ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா) என்ற முறைசாரா அமைப்பு, புவிசார் அரசியல் (Geo-politics) உறவுகளுக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இந்த I2U2 அமைப்பு புவிசார் பொருளாதாரத்தை (Geo-economics) நோக்கமாகக் கொண்டது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனா-தைவான் போர் சூழலில், சீனாவிற்கு எதிரான அதிகார மையமாகும் முயற்சியில் அமெரிக்கா (வணிகம் என்ற பெயரில்) இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடன் ஓரணியில் சேர்ந்துள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் ஆயுத வணிகமும் அரசியலும் இருப்பதே கவனிக்கத்தகுந்த விடயம். தென்கிழக்கு ஆசிய நாடுகளை சென்றடைய மலாக்கா நீரிணை இருப்பது போன்று வளைகுடா நாடுகளை சென்றடைய ஹார்முஸ் நீரிணை இருப்பது குறிப்படத்தக்கது. இந்த நீரினையையும், சூயஸ் கால்வாயையும் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், பாரசீக வளைகுடாவிலிருந்து இஸ்ரேலை இணைக்கும் புதிய கால்வாயை உருவாக்கவும் ஒரு முயற்சி நடைபெறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி இருக்கின்றன. இந்த நாடுகளின் இராணுவ செலவினங்களும் ஆயுத இறக்குமதிக்கு இணையாக அதிகரித்துள்ளன. மேலும் இந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான மோதல்களில் ஆயுதப் போட்டியும் முக்கிய காரணியாக உள்ளது.
அரேபியா வளைகுடா பகுதியை மையமாக கொண்டு அமெரிக்கா சீனா இடையே நடைபெறும் புவிசார் அரசியலின் மற்றொரு பரிணாமம் தான் இஸ்ரேலை கொண்டு அரபு நாடுகளை வளைக்க அமெரிக்கா தீட்டும் திட்டம். அதன் முதல் முயற்சியாக, அமெரிக்காவின் முயற்சியில் பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் (UAE) மற்றும் இஸ்ரேல் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டது தான் ஆபிரகாம் உடன்படிக்கைகள் (Abraham Accords).
ஆபிரகாம் உடன்படிக்கைகள், இந்த நாடுகளிடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுகாதாரம், புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், வேளாண்மை, நீர், வர்த்தகம், சுற்றுலா, வளங்குன்றா அபிவிருத்தி உள்ளிட்டவற்றில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க வகை செய்கிறது. இதன் மூலம் இந்த நாடுகளிடையே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், குறிப்பாக வளைகுடா பகுதியில் வாழும் இந்தியர்கள் பெருதும் பயனடைகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்தியாவையும் இணைத்து ஒரு கூட்டமைப்பு உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டது.
மேலும், வளைகுடா நாடுகள பகுதியில் நடைபெறும் அதிகார மற்றும் ஆயுதப் போட்டியில் ஈரானை பின்னுக்குத் தள்ளி ஐக்கிய அரபு நாடுகள் (UAE) முன்னிலை பெறுவதற்கு பெரும் முனைப்பு காட்டுகிறது. மேலும், மேற்கு ஆசியக் கடற்பகுதியில் சீனாவை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆபிரகாம் உடன்படிக்கைகள் போன்று இஸ்ரேல், இந்தியா, USA, UAE ஆகிய நாடுகளை கொண்டு அமெரிக்கா முன்னகர்த்திய அமைப்புதான் I2U2. மத்திய கிழக்கில் அமெரிக்க கூட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இஸ்ரேலுடன் இணைத்து அமைக்கப்பட்ட இந்த I2U2-வில் இந்தியாவின் பங்கு வெறும் முதலீடுகள் சார்ந்தது மட்டும்தானா என்பது இனி வரும் காலங்களில் தெரிய வரும்.
தற்போதைய சூழலில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கிட்டத்தட்ட 85 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இந்தியாவின் வெளிநாட்டு வருவாயில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை ஆண்டுதோறும் இவர்கள் பங்களிக்கின்றனர். மேலும் இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கும் ஹைட்ரோகார்பன் இறக்குமதிக்கும் வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது.
இப்படிப்பட்ட இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசினார் பாஜகவின் தலைவர் நுபுர் சர்மா. இஸ்லாமியர்களின் நம்பிக்கையான நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி அண்மையில் நுபுர் சர்மா பேசிய விவகாரத்தில் கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஈரான் ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் தங்கள் கண்டனத்தைத் பதிவு செய்தன. 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (GCC-Gulf Cooperation Council) நுபுர் சர்மா குறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. வளைகுடாவில் பணிபுரிந்த பல இந்தியர்கள் வேலையிழக்கும் நிலையும் ஏற்பட்டது. (இப்படி தீவிர எதிர்ப்பு எழுந்தாலும் நுபுர் சர்மா கைது செய்யப்படவில்லை. பாஜக அரசு அவருக்கான பாதுகாப்பை அதிகரித்தது.)
ஆனால் சில நாட்களிலேயே அரபு நாடுகளில் நுபுர் சர்மா குறித்த விடயம் நீர்த்துப் போனது. இதற்குக் காரணம் இந்த I2U2-வினால் செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தங்களாகக் கூட இருக்கலாம். மேலும் அம்பானி, அதானி போன்ற மார்வாடி பனியாக்கள் அங்குள்ள ADNOC, ARAMCO போன்ற எண்ணை நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மதிப்பும் பல லட்சம் கோடிகளைத் தாண்டும்.
இந்தோ-பசிபிக் பகுதிக்கு குவாட் இருப்பது போல, மேற்கு ஆசிய பகுதிக்கு I2U2 “ஒரு முக்கிய விடயமாக” மாற முடியும் என்று அமெரிக்கா அண்மையில் கூறியது. குவாட் அமைப்பில் ஆஸ்திரேலியாவை முன்னிலைப்படுத்தி தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டது போல, இஸ்ரேலை முன்னிலைப்படுத்தி, இந்தியாவை பயன்படுத்தி அமெரிக்கா தனது விருப்பங்களை நிறைவேற்றக்கொள்ள முயற்சிக்கிறது. அமெரிக்காவின் விருப்பங்கள் முதன்மையாக்கப்படும் நிலையில், குவாட் போலவே I2U2-வில் இந்தியாவின் முக்கியத்துவம் கேள்விக்குறியாகவே உள்ளது.
ரசியா உக்ரைன் போர் நீடிக்கும் வேளையில், எண்ணெய் போக்குவரத்து, கடல்சார் பொருளாதாரம், எரிசக்தித் தேவை போன்ற முக்கிய துறைகளில் அமெரிக்கா தனக்கு சாதகமான நிலையை எடுப்பதற்கே இந்த I2U2 அமைப்பு வழிவகை செய்யும். இதில் இஸ்ரேலிய மற்றும் அரபு நாடுகளின் மூலதனத்தையும் இந்தியாவின் சந்தை வர்த்தகத்தையும் ஒன்றிணைப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தி தனது அதிகாரத்தைப் பெருக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த I2U2 கூட்டமைப்பு.
இந்த I2U2 கூட்டமைப்பினால், வளைகுடா, ஆப்பிரிக்கா பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை தடுக்கவும், அதேவேளை, தனக்கான உணவு பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ளவும் அமெரிக்கா முயலுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, இப்பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், ஆசியா, ஆப்பரிக்காவின் தனது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யவும் I2U2 உதவும் என எண்ணுகிறது. இஸ்ரேல் அரேபிய நாடுகளுடன் உறவை மேம்படுத்திக்கொள்ளவதன் மூலம் பாலஸ்தீன விவகாரத்தை முடக்கவும், இந்தியாவின் உதவியுடன் ஆசியாவில் தனது பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யவும் முயற்சிக்கிறது.
இந்த சூழலில், I2U2 மூலம் இந்தியா அடையப்போகும் நன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக் காயாக இந்தியாவை பயன்படுத்தும் நோக்கமே அமெரிக்காவிற்கு உண்டு. குவாட் துவங்கப்பட்ட போது இந்தியாவிற்கு இருந்த முக்கியத்துவம் நாளடைவில் குறைந்தது. இந்த நிலையில், I2U2-வில் இந்தியாவின் முக்கியத்துவம் எந்தவிதத்திலும் மேம்பட்டிருக்காது என்றே தெரிகிறது. அம்பானி, அதானிக்கான திட்டங்களை பெறுவதற்கும், இஸ்ரேல் மூலம் வேளாண்மை திட்டங்களை பெறுவதற்கும் மோடி தலைமையிலான இந்திய பாஜக அரசு முயலும்.
I2U2 அமெரிக்காவின் திட்டம். அதில் இந்தியா ஒரு பகடைக் காய். அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியைக் கட்டுப்படுத்துவதற்காக NATO உருவாக்கப்பட்டது போன்று, தமிழர் கடலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தோ பசிபிக் QUAD உருவாக்கப்பட்டது போன்று, அமெரிக்கா இந்தியாவை ஆட்டுவித்து, அரபிக் கடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் மேற்காசிய குவாட் அமைப்பு.