பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும்

சிறு வயதில் போகி, பொங்கல், தீபாவளி, புது வருடப் பிறப்பு ஆகிய பண்டிகை நாட்கள் வரும் போதெல்லாம் நமக்குப் பிடித்த நடிகரின் புது படம், பிடித்த நடிகையின் பேட்டி, புது பாட்டு, அம்மாவுக்குப் பிடித்த சீரியல் நடிகர்களின் விளையாட்டு போட்டி என்று, ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் புதிது புதிதாக நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். எதைப் பார்ப்பதென்று தெரியாமல், அக்கா, தம்பியிடம் சண்டை போட்டு கொண்டு, விளம்பரத்துக்கு விளம்பரம் ஒவ்வொன்றாக மாற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது, “எப்போ பார்த்தாலும் படம், பாட்டு, ஆட்டம்னு குட்டிச்சுவர் ஆகுறதுக்குன்னு தான் இதெல்லாம் போடுறாங்க பாருங்க. பட்டிமன்றத்துல எவ்ளோ அழகா கருத்தா பேசுராங்க, அதையெல்லாம் பார்த்து உருப்பட்டுற கூடாதா” என திட்டிக்கொண்டே ஒரு குரல் ரீமோட்டை எடுத்து சேனலை மாத்தி பட்டிமன்றம் வைத்து “இதைப் பாருங்க, பொது அறிவை வளத்துக்கோங்க” என்று சொல்லும். நாமும் உட்காரவும் முடியாமல் எழுந்து போகவும் முடியாமல், ஏதோ புரிந்தது போல எல்லோரும் சிரிக்கும் போது நாமும் சிரித்துவிட்டு ஒரு வழியாகப் பட்டிமன்றத்தைப் பார்த்து முடிப்போம்.

இந்த அனுபவம் கண்டிப்பாக நம் எல்லோருக்குமே இருக்கும். கொஞ்சம் வளர வளர நம்மில் சிலர் பட்டிமன்றம் பார்ப்பதை வழக்கமாகக் கூட மாற்றியும் இருப்போம். “ஆமால்ல, நல்லா தான் பேசுறாங்க. நமக்கு தான் இத பத்தி புரியலை” என்று பின்னர் யோசித்திருப்போம். பட்டிமன்றங்கள் பார்க்க ஆரம்பித்ததும் தன்னை ஒரு அறிவார்ந்த மனிதனாகவும் நினைத்து பெருமைப் பட்டிருப்போம்.

வருடா வருடம் ஒளிபரப்பாவதைப் போல சமீபத்தில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பட்டிமன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. அதில் ஒன்று, ராஜ் தொலைக்காட்சியில், நகைச்சுவையாளர் மதுரை முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு சிறப்புப் பட்டிமன்றம். அதில் ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் தங்கள் வாதங்களை வைத்துக்கொண்டிருந்தனர். அதில் பேசிய பெண் ஒருவர், “திருமணத்தின் போது கட்டப்படும் தாலி, ‘நாய் கழுத்தில் இருக்கும் சங்கிலி’யை போல் இருக்கு, இது அடிமை தனம்” என்ற ஒரு கருத்தை முன்வைத்தார். இது தந்தை பெரியார் அவர்கள் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய உரையின் ஒரு வரி.

இதைக் கேட்ட பிறகு பெண்கள் முற்போக்காக யோசிக்கிறார்கள் என்று ஒரு வித மகிழ்ச்சியை முழுமையாக உணர்வதற்குள், அதற்குப் பிறகு பேச வந்த ஒருவர் நிறையக் கருத்துக்களைப் பேசிவிட்டு (பேசிய அனைத்துமே பிற்போக்குத் தனமான கருத்துக்கள்) தன் உரையின் முடிவாக (பஞ்ச் டையலாக் என்று தனக்கு தானே எண்ணிக்கொண்டார் போல) “அம்மா நீங்க பேசும் போது சொன்னீங்க தாலி நாய் கழுத்துல மாட்டுன சங்கிலி மாதிரினு, ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க ஊருக்கு நாய் புடிக்குற வண்டி வந்தா எல்லா நாயையும் புடிப்பாங்க கழுத்துல சங்கிலி இருந்தா அது யாருக்கோ சொந்தமான நாய்னு விட்டுட்டு போயிடுவாங்க, அதுக்கு தான் இதுவும்” என்று கூறி விடைபெற்றுக்கொண்டார். உடனே அந்த அரங்கம் முழுவதும் இருந்த அனைவரும், பெண்கள் உட்பட, கைதட்டி ரசித்துச் சிரித்தனர்.

இது தான் பட்டிமன்றங்களின் தரமாக என்றுமே இருந்திருக்கிறது. இது ஒரு விடயம் தான். இப்படி அந்த பட்டிமன்றத்தை எடுத்து பார்த்தோமெனில், இப்படி பேசப்படுபவற்றில் இருக்கும் பிற்போக்குத் தனத்தை, குறிப்பாக பெண்களுக்கு எதிரானவற்றை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

இது அந்த பட்டிமன்றத்தில் பங்கெடுத்தவர்களுடைய, அதைக் கேட்டு ஆரவாரம் செய்தவர்களின் மனநிலை மட்டுமல்ல. சமூகத்தின் பெரும்பான்மையோரின் மனநிலை இதுதான்.

இது ஒரு நகைச்சுவை பட்டிமன்றம் இதற்கு இவ்வளவோ பேச வேண்டுமா என்றால், இதையெல்லாம் நகைச்சுவையாகப் பார்க்கின்ற மனநிலை ஒரு ஆபத்தான மனநிலை என்பதைப் புரிந்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. மேலும், இது எதுவோ சின்ன சின்ன பேச்சாளர்கள் பங்கு பெரும் நகைச்சுவை பட்டிமன்றங்களில் மட்டும் நடப்பது இல்லை. மிகப் பிரபல பேச்சாளர்கள் அனுபவம் வாய்ந்த நடுவர்கள், பேராசிரியர்கள் பங்குபெறும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களிலும் இதே பேன்ற கருத்துகளும், பிற்போக்குத் தனங்களும் தான் இடம்பெறுகின்றன. அதில் சாலமன் பாப்பையா, ராஜா, திண்டுக்கல் லியோனி ஆகியோரின் பட்டிமன்றங்களும் அடங்கும். சில பிரபல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பதின்பருவ வயதினருடைய பிற்போக்குதனமே இவர்களிடத்திலும் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த சீர்கேட்டினை முழு வீச்சில் பெரிய தொலைக் காட்சிகளின் மூலம் மக்களுக்குக் கொண்டு சென்றவர்கள் அவர்கள் என்ற குற்றச் சாட்டை தாராளமாக வைக்கலாம்.

உதாரணமாக கடந்த 22-08-22 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறப்பு பட்டிமன்றத்தில் வீடுகளில் அதிக சுதந்திரமாக வளர்பவர்கள் மகளே! மகனே! என்ற தலைப்பில் பேசிய திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள், “பெண்கள் என்ன சுதந்திரமாக இருந்தாலும் திருமணம் என்ற பிறகு தன் சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்பது எவ்வளவு வருத்தத்திற்குறிய விடயம், இதில் என்ன சுதந்திரம் இருக்கிறது என்று கருத்தை முன்வைத்துப் பேசினார். அதற்கு எதிராக பேசிய திரு.ராஜா அவர்கள், “தந்தை வாங்கும் கடன்களை எல்லாம் அடைக்கும் பொறுப்பு ஆண்களுடையது, அதனால் அவர்கள் தங்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் திருமணத்தின் போது வரதட்சணையாக நிறைய அள்ளிக்கொண்டு போவதோடு தந்தை வாங்கும் கடன்களை கண்டுகொள்வதே இல்லை, அதனால் அவர்கள் தன் வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்வது வருத்தப்பட வேண்டிய அளவிற்கு பெரிய விடயம் இல்லை” என்று கூறும் பதில் கருத்திலேயே, ஒரு பெண் பிறந்ததில் இருந்து தந்தைக்கு அடிமை, திருமணமான பிறகு கணவனுக்கு அடிமை, வயதான பின் மகனுக்கு அடிமை எனும் மனுதர்ம கோட்பாட்டை வெவ்வேறு வடிவத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த பிற்போக்கான மனநிலையிலேயை அறிவார்ந்தவர்கள் எனும் நிலையில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது.

ஆசிரியர், சொற்பொழிவாளர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தமிழ் இலக்கிய மன்றத்தில் உரையாற்றும் போது “மஞ்சள் முகமே வருக, மங்கள விளக்கே வருக” என ஆரம்பிக்கும் திரையிசை பாடல் ஒன்றை பாடி “அந்த காலத்தில் எல்லாம் பெண்கள் மஞ்சள் பூசிய முகத்துடன் மங்களகரமாக பார்க்க லட்சனமாக இருந்தார்கள். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் அழகுப்படுத்தி கொள்கிறேன் என்ற பெயரில் குரங்கு மாதிரி மாறுகிறார்கள்” என்று பேசுகிறார். முகத்திற்கு மஞ்சள் பூசுவதற்கு முன்பெல்லாம் சொன்ன கட்டுக் கதைகளை இன்றைய கால பெண்கள் நம்பவில்லை என்பதால், மஞ்சள் கிருமிநாசினி என்று ஒரு அறிவியல் காரணத்தை முன்வைக்கிறார்கள். சரிதான், ஆனால் கிருமி நாசினி என்பது இருபாலருக்கும் பொதுவானது தானே? பின்பு ஏன் அதை ஆண்கள் பயபடுத்தாமல் இருக்கிறார்கள்? ஏன் அதை ஒரு பெண் பயன்படுத்தாமல் இருக்கும் போது மட்டும் இவ்வளவு பேச்சுக்கள் கிண்டல் கேலிகள் என்பது புரியமால் இல்லை.

அதுமட்டும் இல்லாமல் புராண பாடல்கள் முதல் இன்றையகால பாடல்கள் வரை ஒரு பெண்ணை பற்றி எழுதும் போது பெண்களின் கூந்தலுக்கு மனம் உண்டா இல்லையா என்பதில் தொடங்கி அவள் மென்மையானவள், பூவை போன்றவள், அமைதியானவள், அடக்கமானவள், இப்படி நடந்து வந்தாள், இப்படி வெட்கப்பட்டாள், என்று பாடி பெண்களுக்கு என்று ஒரு இலக்கனத்தை அவர்களே வடிவமைத்து வைத்து இருக்கிறார்களே தவிற பெண்ணின் கல்வி, அறிவு, திறமை, அவர்களின் எண்ணம், தேவை இவற்றை பற்றி எந்த கேள்வியோ கருத்தோ இவர்களிடம் இருந்ததே இல்லை. ஆண்களை பொறுத்த வரையில் ஒரு சமையல்காரியாகவும், வீட்டு வேலைகளை செய்ய ஒரு வேலைக்காரியாகவும், அவர்களின் கண்ணுக்கும், மனதிற்கும் தேவைக்காக ஒரு அழகு பதுமையாகவும் (அந்த அழகும் ஆண்கள் ஏற்ப்படுத்திய இலக்கணத்தின் படி இருக்கவேண்டும்) மட்டுமே ஒரு பெண் தேவை என்ற அடிப்படையில் தான் இன்று வரை இவர்கள் அனைவரின் பேச்சுக்களுமே இருக்கிறது. இப்படியான சிந்தனையை கொண்ட ஐயா ஐ.லியோனி அவர்கள் கடந்த வருடம் ஜூலை 7, 2021 அன்று, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக எதனடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வளர்ந்த பிறகு கொஞ்சம் பகுத்தறிவுடன் இந்த பட்டிமன்றங்களை எல்லாம் பார்க்கும் போது, நாம் இன்னும் உளவியலாகப் பிற்படுத்தப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் இருப்பதால், அனைத்தையும் அந்த நொடியே மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடிகிறது. மக்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள், கருத்துச் சொல்கிறார்கள். தவறு எனில் அதற்கு குரல் கொடுக்கவும் செய்கிறார்கள். ஆனாலும் இந்த மாதிரி பட்டிமன்றங்கள் இன்னும் தொடர்ச்சியாக நடக்க காரணம் பெண்களும் இந்த ஆணாதிக்க மனநிலையில் மங்கிக் கிடப்பது தான். இது எல்லாம் தவறு என்று கூட யோசிக்க முடியாத அளவுக்கு அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணை நாயா தான் பாக்குறாங்க எனும் அர்த்தத்தில் பேசுவது கூட தெரியாமல் பெண்களும் இதற்கு சிரிப்பது, என்ன மாதிரி சமுகத்தில் நாம வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்கிற பயம் தொற்றிக் கொள்கிறது.

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை, பெரியவர்கள் பேசினால் சரியாகத் தான் இருக்கும், அவர்கள் பேசும் போது குறுக்கே கேள்வி கேட்பது, மறுத்து பேசுவது எல்லாம் அநாகாரிகமான செயல் என்று அவர்கள் பின்பற்றிய பிற்போக்கு தனத்தை கலாச்சாரம் என்ற பெயரில் அதை கடைப்பிடித்துக் கொண்டு இருக்கும் பிற்பட்ட சமுகத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

பட்டிமன்றங்கள் மட்டும் இல்லை பெரும்பான்மையான நிகழ்ச்சியில் பெண்ணை தாழ்த்தி பேசுவது, மாமியார்– மருமகள், மனைவி-நாத்தனார் உறவுகளை வைத்தும், மனைவி, காதலி, பெஸ்டி என்றும் தாயை தவிர ஒரு பெண் எந்த உறவாக இருந்தாலும் அதை வைத்து, அதில் மிக பிற்போக்குத்தனமான நகைச்சுவைகள் செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு எந்த நிகழ்ச்சியும் விதிவிலக்கில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாது சமூக வலைதலங்களிலும் இதே நிலைதான். முற்போக்குவாதிகள், பெண்ணியவாதிகளிமிருந்து எதிர்ப்பு குரல்களும், விவாதங்களும் தோன்றினாலும் இதைபற்றிய ஒரு தீவிரமான விவாதம் மக்களிடத்தில் பொதுவாக பெண்களிடத்தில் எழ வேண்டும்.

3 thoughts on “பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும்

  1. தரமானதொரு கருத்து தோழர்.. சிறப்பு.. பட்டி மன்ற கருத்துகளை வெறும் நகைச்சுவைக்கென எடுத்துக் கொள்ளாமல் நகைச்சுவையுள்ளும் சிந்திக்கத் தூண்டும் இப்பதிவு இன்றே தேவையே..

  2. ஐ.லியோனி அவர்களின் பாடவேலையை மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.அறிவார்ந்த நகைச்சுவையோடு பாடம் நடத்தக்கூடியவர்.மனிதர்கள் தவறுவது சகஜம்.அவரைப் பாடநூல் கழக தலைவராக ஆக்கியபோது சங்கிகள் குதித்தார்கள் பெண்களின் இடையைப் பற்றி பேசியவர் என்று.அது ஒரு நகைச்சுவையான பேச்சு.சரி இதற்கு முன் பாடநூல் கழக தலைவரின் கல்வியறிவும் பொது வெளி நாகரீகமும் தங்களுக்கு தெரியும் தானே??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »