இட ஒதுக்கீடு போராட்டத்தில் பெரியாரும் பார்ப்பனியமும்

“கன்னியாகுமரி பார்ப்பனனுக்கு தேள் கொட்டினால் காஷ்மீர் பார்ப்பானுக்கு நெறிகட்டும்” என்று பெரியார் சொன்னார். அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் தங்கள் நலனிலும் அதற்கான சிந்தனை போக்கிலும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். பார்ப்பனர்களின் நலன் என்பது பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக தான் வரலாற்றில் இருக்கிறது. தங்களின் அதிகார பலத்தினாலும் வஞ்சக சூழ்ச்சியாலும் இன்று வரை அதை சாத்தியப்படுத்தி வருகிறார்கள் பார்ப்பனர்கள்.

மொழி, அரசியல், சமூகம் மற்றும் பண்பாடு என பல்வேறு தளங்களில் அவர்களின் ஆதிக்கம் நீடித்து நிற்பதற்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வலைப்பின்னல் தான் காரணம். நினைத்து பார்த்தாலே ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரக்கூடிய பார்ப்பனிய வலைப்பின்னல் நம் இட ஒதுக்கீடு வரலாற்றில் தொடர்ந்து நடந்து இருக்கிறது.

1925-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பெரியாரும், எஸ்.இராமநாதனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கைத் தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்து அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அப்போதே மாநாட்டை விட்டு வெளியேறினார் பெரியார். 1927-ஆம் ஆண்டு டாக்டர் சுப்பராயன் தலைமையிலான மந்திரி சபையின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் (அரசாணை எண் 1071, பொதுத்துறை 04-11-1927) வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டது. இவை பெரும்பாலும் நாம் அறிந்த செய்திகளே. ஆனால் இதன் பின்புலத்தில் 1920-ஆம் ஆண்டு திருநெல்வேலி காங்கிரசு கட்சி மாநாட்டில் இன்று நாம் பார்க்கும் இட ஒதுக்கீடு வடிவத்திற்கான வஞ்சக வலையை விரிக்க தொடங்கினார்கள் பார்ப்பனர்கள்.

எப்படியும் காங்கிரசு கட்சியின் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வருவது என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்த பெரியார், திருநெல்வேலி மாநாட்டிலும் முயற்சி செய்தார். காங்கிரசு மாநாட்டின் அலுவல் ஆலோசனை குழுவிடம் வகுப்புரிமைத் தீர்மானத்தை கொடுத்தார் பெரியார். அந்த தீர்மானத்தில் முக்கியமான செய்தி மக்களின் விகிதாச்சாரத்திற்கு (Proportionate or Percentage) ஏற்ப அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பது தான். அன்றைய பார்ப்பனர் அல்லாத தலைவர்களின் கோரிக்கையும் அதுவே.

இந்த தீர்மானத்தை இராமசாமி என்பவர் முன்மொழிய வ.உ.சியும் தண்டபாணியும் வழி மொழிந்தனர். உடனே கஸ்தூரி ரெங்கய்யர் எழுந்து விகிதாச்சாரம் (Proportionate or Percentage) என்கிற வார்த்தைக்கு பதிலாக போதுமான என்னும் பொருள் தரும் Adequately என்ற சொல்லை போட்டுக் கொள்ளும் படி தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளார். அம்மாநாட்டின் தலைவராக இருந்த எஸ்.சீனிவாசய்யங்கார், இரண்டும் ஒரே அர்த்தம் தரக்கூடியது தான் மேலும் Percentage என்பதை விட Adequately என்பது நல்ல வார்த்தை என்று சொல்லி தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் அந்த தீர்மானம் மாநாடு விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்படவும் இல்லை. (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 3, பகுதி 1, பக்கம் 1386)

இந்த நிகழ்வு நடந்து சரியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(4) ல் Proportionate என்பதற்கு பதிலாக Adequately என்னும் சொல் தான் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் தெற்கில் திருநெல்வேலியில் நடந்த அதே வஞ்சகம் அரசியல் அமைப்பு சட்டத்திலும் நடந்தேறியது என்பது பார்ப்பனர்களின் வலைப்பின்னலுக்கும், ஒத்திசைந்த சிந்தனை போக்கிற்கும் சான்று. அது மட்டுமல்ல அன்றைய நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த வகுப்புவாரி இடப்பங்கீடு (Distribution of Seats) முறையை கைவிட்டு விட்டு இன்றைய இட ஒதுக்கீடு (Reservation) முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.

நீதிக்கட்சியின் தலைவர்களும் பெரியாரும் பெரும் முயற்சி செய்து ஆங்கில அரசிடம் முறையிட்டு வகுப்புவாரி இட பங்கீட்டு உரிமை பெற்றனர். அதன்படி சென்னை மாகாண மக்கள் 6 பிரிவுகளாக பிரிக்கபட்டு, 1935-ஆம் ஆண்டில் இருந்து சென்னை மாகாணத்தில் இருந்த மத்திய அரசு அலுவலக வேலைகளில் இடப்பங்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடப்பங்கீடு முறையில் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர் அல்லாத மக்கள் என அனைவருக்கும் அவரவர் மக்கள் தொகை அடிப்படையில் இடங்கள் பங்கீடு செய்யப்பட்டது. இது உண்மையில் எல்லா வகுப்பினர்களின் வாய்ப்புகளையும் உறுதி செய்யக்கூடிய சிறந்த முறையாகும். இதை சுதந்திர இந்தியாவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தாதது மட்டும் அல்ல மிக கவனமாக அரசியல் அமைப்பு சட்டத்தில் Distribution of Seats என்று வராமல் Reservation என்பதை சேர்த்து மக்கள் தொகைக்கு ஏற்ப இடப்பங்கீடு என்பதை மறுத்தது பார்ப்பனிய வலைப்பின்னல்.

இது எல்லாவற்றையும் விட உச்சம் அன்றைய சென்னை மாகாணத்தின் மத்திய அரசு வேலைகளில் நாம் பெற்று வந்த இந்த இடப்பங்கீடு உரிமையை இந்தியா சுதந்திரமடைந்த 45-வது நாளில் பிரதமர் நேரு பறித்தார் என்பது தான். அதாவது அடிமை இந்தியாவில் நாம் பெற்ற நம் உரிமை, சுதந்திர இந்தியாவில் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதற்கு பிறகு 1950-இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் இடப்பங்கீடு இடஒதுக்கீடாக மாற்றப்பட்டைதையும் நாம் இதனோடு பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழ் நாடு தொடர்ந்து இட ஒதுக்கீடு உரிமைக்கான குரலை உரத்து எழுப்ப ஒரு நீண்ட போராட்ட வரலாறும் அதன் மூலம் ஏற்பட்ட தற்காப்பு உணர்வும் தான் காரணம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே சென்னை மாகாணத்தில் 1927 முதல் வேலையிலும் 1940 முதல் கல்வியிலும் எல்லா வகுப்பினருக்கும் இடப்பங்கீடு அளிக்கும் ஆணை நடைமுறையில் இருந்து வந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது அதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதற்கும் சட்டத்தில் பார்ப்பனர்கள் கையாண்ட வார்த்தை விளையாட்டு தான் காரணம்.

ஆம், அரசியல் அமைப்பு சட்டத்தில் உயர் சாதியினரை தவிர மற்ற அனைத்து சாதியினரும் பிற்படுத்தப்பட்டோராக தான் கருதப்படுகிறது. அதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய பிரிவினர் அட்டவணை படுத்தப்பட்டதால் அவர்கள் அட்டவணை சாதிகள் (Scheduled Caste, Scheduled Tribe) என்று அழைக்கப்படுகிறார்கள். சட்ட பிரிவு 16(4)-இல் அனைத்து பிற்படுத்தப்பட்ட (Any Backward class) மக்களுக்கும் அரசின் வேலைகளில் போதுமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால் 1990-ஆம் ஆண்டு மண்டல் ஆணைய பரிந்துரைகள் ஏற்கப்பட்ட பின்னர் தான் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசின் வேலையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த வார்த்தை விளையாட்டுகள் அரசியல் அமைப்புச் சட்டம் எங்கும் இருந்தாலும் இட ஒதுக்கீடு விவாதங்களில் பெரிய பின்னடைவை நமக்கு கொடுத்துள்ளது. இதில் அட்டவணை சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையே முரண்பாடு வளர்க்கும் வஞ்சகமும் மறைந்து இருக்கிறது.

அதே போல 1940 முதலே கல்வியில் இட பங்கீடு சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. இதற்கும் பார்ப்பனர்கள் சரியான நேரம் பார்த்து காத்திருந்தனர். 1950-இல் அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும் தாங்கள் பார்பனர்கள் என்பதால், மருத்துவப் படிப்பில் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று சென்பகம் துரைராஜன் என்பவரும் பொறியியல் படிப்பில் சி.ஆர்.கிருஷ்னசாமி என்பவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் Writ மனு போடுகிறார்கள்.

அரசமைப்புச் சட்டம் வகுத்தவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்ற பார்ப்பனரே அந்த இரு பார்ப்பனர்களை தூண்டிவிட்டு வழக்குப் போடுமாறு கூறி, மரபுக்கு புறம்பாக அவரே வாதாடி இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். (வழக்கு: சென்பகம் துரைராஜன் vs சென்னை அரசு) அதில் வாதமாக அவர்கள் வைத்தது, அரசியல் சட்டத்தின் 14-வது விதியின்படி யாரையும் சாதி, மதம், இருப்பிடம் இந்த வகையில் பிரிவுபடுத்தக் கூடாது என்பது தான். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு 28-07-1950 அன்று சென்னை மாகாணத்தில் 1927 மற்றும் 1940-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்த வகுப்புவாரி இடப்பங்கீட்டு முறை ஆணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

இடப்பங்கீட்டுக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து பெரியார் பெரியதொரு மக்கள் கிளர்ச்சியை நடத்தினார். 06-08-1950 சென்னை மாகாண மக்கள் மன்றத்தில் பறிக்கப்பட்ட உரிமையை மீட்க பெரியார் அழைப்பு விடுக்கிறார். 14-08-1950 அன்று பெரியார் தலைமையில் சென்னை மாகாணம் தழுவிய பெருந்திரளான மக்கள் அந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். அதிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் மேல் முறையீட்டிலும் உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. உச்சநீதிமன்றத்தில் சென்னை மாகாண அரசு உயர்நீதிமன்றத்தில் சொல்லாத ஒரு வாதத்தை வைத்தது. அது சென்பகம் துரைராஜன் என்பவர் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பமே போடவில்லை என்பது தான். ‘இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்தரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது’ அதில் இதுவும் ஒன்று என்பது போல அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றத்திலேயே இதை சொல்லியிருக்கலாமே எனக் கண்டித்துவிட்டு இருந்தாலும் நாங்கள் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்! என தீர்ப்பளித்தது. பார்ப்பனர்கள் சட்டத்தின் மூலம் நம் உரிமையை பறிக்கும் சூழ்ச்சியை உணர்ந்த பெரியார் தொடர்ச்சியாக மக்கள் போரட்டங்களை நடத்தினார்.

தமிழக நிலைமை டில்லியில் எதிரொலித்தது. இதனால் 18 ஜூன் 1951 அன்று பிரதமர் நேரு மற்றும் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை (சட்ட பிரிவு 15(4)) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினர். இதற்கு 243 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 7 பார்ப்பனர்கள் மட்டும் எதிர்ப்பாகவும் ஓட்டளித்தனர். இந்த திருத்த சட்ட வரைவில் ‘for the educational, economic or social advancement of any backward classes’ என்று பார்ப்பனர்கள் எழுதி தங்கள் சதி வலையை விரித்து வைத்தார்கள். பின்னர் விவாதத்தில் economic என்னும் சொல் நீக்கப்பட்டது.

பிரிவு 15(4) : “சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குடிமக்கள் எவரையும் அல்லது பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரை முன்னேற்றுவதற்காக எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும் செய்வதிலிருந்து அரசை இந்தப் பிரிவு உள்ள எதுவும் அல்லது பிரிவு 29(2) தடுக்காது”

இதனைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசு புது ஆணை (அரசாணை எண்: 2432, பொதுப்பணித்துறை நாள்: 27-09-1951) பிறப்பித்தது. பெரியாரின் வீரியமான போராட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களின் இட ஒதுக்கீடு உரிமைக்கான சட்ட பாதுகாப்பை பெற்று தந்தது.

“பார்ப்பனர்களுக்கு ஒரு அரசியல் சட்டம் தேவைப்பட்டது என்னை பயன்படுத்திக் கொண்டார்கள்” என்றும் “இலட்சியத்திற்கு பயன்படாதெனில் இந்த அரசியல் சட்டத்தை கொளுத்தும் முதல் ஆளாக நானே இருப்பேன்” என்றும் டாக்டர் அம்பேத்கர் சொன்னார். பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக ஆணையம் அமைக்க தாமதித்த நேரு அமைச்சர் அவையில் இருந்து 10-10-1951-இல் அம்பேத்கர் அவர்கள் வெளியேறினார். அதற்கு பிறகு தான் நேரு பிற்படுத்தப்பட்டோருக்கான ‘காகா காலேல்கர்’ ஆணையம் அமைத்தார். ஆனால் 1990-ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான அரசு மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றப் பின்னர் தான் ஒன்றிய அரசின் வேலைகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. கல்வியில் 2007-ஆம் ஆண்டு தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது ஒன்றிய அரசு. இதை ஒரு தலைமுறை சுவைத்து பார்க்கும் முன்னே இட ஒதுக்கீட்டில் 50% உச்ச வரம்பு, 10.5% உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்று அதை பறிக்கும் சூழ்ச்சியை தொடர்ந்து செய்கிறார்கள் பார்ப்பனர்கள். இங்கு முன்னர் நீக்கப்பட்ட பொருளாதாரம் (Economic) என்கிற சொல் மீண்டும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பன வலைப்பின்னலில் உச்சமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு வழங்குவது போல வழங்கி அதை பயன்படுத்த முடியாத வகையில் தடுப்பதற்கு சதிகளை சட்ட சரத்துகளாக சேர்த்து இருப்பது தான்.

இதில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 17 உயர் ஆய்வுக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் பட்டியல் பழங்குடி, பட்டியல் வகுப்புகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ST, SC, OBC) ஆகியோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லப்பட்டுள்ளது.

பிரிவு 4(அ): பழங்குடியினர் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள, அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது.

பிரிவு 4(ஆ): இந்த சட்டத்தின் அட்டவணையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய மற்றும் ஆளுமையின் முக்கியத்துவம் உள்ள நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட நிறுவனங்கள்.

பிரிவு 4(ஆ) குறிப்பிடும் அட்டவணைப் படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள்:

1. மும்பையில் உள்ள ஓமிபாபா தேசிய கல்வி நிறுவனமும் அதன் உறுப்பு நிறுவனங்களும்:

அ.) பாபா அணு ஆராய்ச்சி மையம், திராம்பே;

ஆ.) இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்;

இ.) ராசா ராமண்ணா உயர் தொழில்நுட்ப மையம், இந்தூர்.

ஈ.) பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம், காந்தி நகர்;

உ.) மாறும் ஆற்றல் சைக்ளோட்ரான் மையம், கொல்கத்தா;

ஊ.) சாகா அனு இயற்பியல் நிறுவனம், கொல்கத்தா;

எ.) இயற்பியல் நிறுவனம், புவனேஸ்வரம்;

ஏ.) கணித அறிவியல் நிறுவனம், சென்னை;

ஐ.) அரிஷ் சந்திரா ஆராய்ச்சி நிறுவனம், அலகாபாத்;

ஒ.) டாட்டா நினைவு மையம், மும்பை.

2. பாபா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், மும்பை.

3. வடகிழக்கு இந்திரா காந்தி மண்டல சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம், சிலாங்.

4. தேசிய மூலை ஆராய்ச்சி நிறுவனம், மனேசர், குர்கான்.

5. ஜவஹர்லால் நேரு முன்னேறிய அறிவியல் ஆராய்ச்சி மையம், பெங்களூரு.

6. இயற்பியல் ஆராய்ச்சி சோதனைக் கூடம், அகமதாபாத்.

7.விண்வெளி இயற்பியல் சோதனை கூடம், திருவனந்தபுரம்.

8. இந்திய தொலை உணர்வு பயிலகம், தெகராடூன்.

இவைகளில் நமக்கு இடம் கிடையாது என்பதைத்தான் சட்டமாக்கி வைத்துள்ளனர். உணவைக் கொடுத்து அதை சுவைக்க விடாமல் தடுத்து ரசிக்கும் இவர்களின் சிந்தனை தான் எத்தனை கொடூரமானது. பார்ப்பனியத்திற்கு எதிரான நம் வரலாற்று சண்டையை நாம் வீரியமாக நடத்த வேண்டும். நம் உரிமை மீட்கும் போராட்டத்தில் இருக்கும் இந்த பார்ப்பனிய வலைப்பின்னலை அம்பலப்படுத்தும் வரலாற்று கடமையை செய்ய நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »