பெரியாரின் வடவர் ஆதிக்க எதிர்ப்பு

“தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழ்நாடு தமிழருக்கே!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!”

“என் நாட்டிலே உனக்கு எதற்காக அதிகாரம், ஆட்சி? நீ ஏன் எங்களைச் சுரண்ட வேண்டும்?”

வடவர் ஆட்சியை எதிர்த்த தந்தை பெரியாரின் இந்த உரிமைக் குரலே தமிழ்நாட்டை பெரியார் மண் என்று அழைப்பதற்கு காரணமாக இருக்கிறது.

ஆதிக்கமும், அதிகாரமும் எந்த வழியில் சுரண்ட வந்தாலும் அந்த இடத்தில் இன உணர்வை உந்தித் தள்ளும் எதிர்ப்புணர்வு உருவாக பிடிமானமாய் தமிழர்களுக்கு கிடைத்தவர் தான் நம் பெரியார். தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதாரம், பண்பாடு மீது பல வகைகளிலும் படையெடுப்பு நடத்திய வடவர் கூட்டத்தையும், இந்தியப் பார்ப்பனியத்தையும் நோக்கிய அவரின் சீற்றங்களும், வடவர் ஆதிக்கத்திற்கு எதிரான சாடல்களும் தமிழர்களை ஒவ்வொரு முறையும் கிளர்ந்தெழச் செய்தன.

தென்னாடுகளுக்கு டெல்லி ஆதிக்கவாதிகள் பகிர்ந்தளித்த நாடாளுமன்ற பதவி இடங்களை அன்றே கேள்விக்குட்படுத்தினார் பெரியார். “பார்லிமெண்டில் உள்ள 506 பேரில் 400 பேர் ஒரு பக்கம். அதாவது வடநாட்டை சேர்ந்தவர்கள். தென்னாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து சுமார் 100 பேர்கள்! இந்த 100 பேர் சேர்ந்து 400 பேர் அவர்களாக உள்ள அங்கு என்ன செய்ய முடியும்? நம் அதிகாரத்தை எல்லாம் பிடுங்கிக்கொண்டு சும்மா நமக்கு எலும்புத் துண்டு போடுகிறான்.” என சாமானியரும் புரிந்து கொள்ளும் வகையில் டெல்லி அரசியலை அம்பலப்படுத்தினார்.

தமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழ தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் சிந்தித்த பெரியார் டெல்லி ஆதிக்கவாதிகள் மீது தனது சீற்றத்தை 1938-ல் குடியரசு தலையங்கத்தில் வெளிப்படுத்தினார். “நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள்தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது, அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை, இழிதன்மை, வேறு என்ன என சிந்தியுங்கள்!” என்று தமிழர்களை சிந்திக்க வைத்தார்.

மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் கலக்கி இதுதான் பஞ்சகவ்யம் என்பதைப் போல ஒரு பித்தலாட்டம் தான் இந்த பச்சைப் பார்ப்பன ஆட்சியை ஜனநாயக ஆட்சி என்று அழைப்பதும்” – இப்படி அன்றைய டெல்லி பார்ப்பனியத்தின் நாற்றத்தை எளிமையாக உணர வைத்து விடும் இலக்கிய நடையில் அரசியல் சொற்றொடர்களை எழுதியவர் தான் நம் பெரியார்.

இராணுவத்திற்கு கொட்டும் நிதிகள் சரிபாதியாக இருப்பதை அன்றே சாடினார். “ஆண்டு ஒன்றுக்கு ராணுவத்திற்கு 250 கோடி (அன்றைய அளவு) செலவு செய்கிறோம் என்றால் ஆண்டு ஒன்றுக்கு நாம் தருகிற 70 கோடியில் சரி பங்கு 35 கோடி ராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. எதற்காக நமக்கு 35 கோடி செலவழித்து ராணுவம்? இந்த ராணுவத்தை வைத்துக்கொண்டு நம்மை உதைக்கின்றானே தவிர வேறு என்ன லாபம்?” என டெல்லி அரசியல்வாதிகளை இடித்துரைத்தார்

இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விடமாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்.” என 1950-இல் சென்னை சைதாப்பேட்டையில் ஆற்றிய உரையில் தொலைநோக்கு தமிழ்த்தேசிய அரசியலை தமிழக இளைஞர்களிடம் ஆழமாக விதைத்தார் பெரியார்.

தேசிய இன எழுச்சியின் வடிவமாக அமைந்த மொழி உரிமைப் போராட்டத்தின் ஊடாக வடவர் எதிர்ப்பை வலுவாக தமிழ்நாட்டில் வேரூன்றச் செய்த கருத்தியல் வழிகாட்டி பெரியார். “இந்தி மொழியால் தமிழ் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை. இந்தி மொழியால் மட்டுமல்ல, வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியால் நம்முடைய கலாச்சாரம் அடியோடு அழிந்துவிடும். இப்போதே வடமொழி நாட்டில் புகுந்து, நம்முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டுவிட்டது. அதற்காக நாம் இந்தியை எதிர்த்துப் போராட வேண்டியதிருக்கிறது.” – இவ்வாறு கூறிய பெரியாரை வந்தேறி என்றும், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறிவிட்டாரென்றும் சில பிறவிகள் கதறுகிறார்கள். ஆனால் தன் உண்மையான ஆதித்தாயான தமிழை இடையில் வந்த எம்மொழியாலும் வீழ்த்த முடியாது என்று இறுமாப்புடன் சொன்னவர் தான் பெரியார்.

1960-இல் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக சட்டத்தில் அமர வைத்த டெல்லி ஆட்சியாளர்களை நோக்கி கடுமையான அறிக்கையை விடுதலை இதழில் வெளியிட்டார். “ஆறுபேர் கொண்ட கமிட்டி அமைத்து அதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும், ஒரு (யாரென்று தெரியாத) முஸ்லீமையும் போட்டு 4 பார்ப்பனர்கள் கூடி, கல்லுப்பிள்ளையார் மாதிரி அமர்ந்து, அசைக்க முடியாத பார்ப்பன நலச்சட்டம் ஒன்றை – நவீன மனுதர்மத்தை – எழுதி அதற்கு இந்திய அரசியல் சட்டம் என்று பெயரிட்டுக் கொண்டது போல், இந்தியக்காரர்களையே போட்டு, பெயருக்கு ஒரு தமிழரைப் போட்டு அவரது ஆட்சேபக் குறிப்புக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல், இந்தி நுழைப்புக்குச் சரியானபடி அடிகோலி ஆணி அடித்து விட்டார்கள்.” என சாடினார்.

வடநாட்டவர்களின் ஆதிக்க பிணைப்பு நம் மாகாணத்தை விட்டு ஒழிந்தால் தான் இந்தியும் நம் மாகாணத்தை விட்டு ஒழியும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்… தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முக்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது. இந்தியில் கலை இல்லை, காவியம் இல்லை, நீதிநூல் இல்லை, நீதிமான்களையும் தோற்றுவிக்கவில்லை, அம்மொழி மூலம் அறிய கிடைக்கும் விஞ்ஞான தத்துவங்களும் இல்லை. ஆகவே 100-க்கு 97 பேர் விரும்பாத மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? காரணம் தெரியுமா? இங்குள்ள வைத்தியநாத ஐயர், வரதாச்சாரிகளின் கோஷ்டியார் இத்திராவிட நாட்டின் கலைகளையும், கலாச்சாரத்தையும் அடியோடு ஒழித்து இந்நாட்டை வடநாட்டுக்கு வால்நாடாக்கப் பார்க்கிறார்கள். அதுதான் மர்மமே ஒழிய, இந்தி தேசிய மொழி, ஆகவே எல்லோரும் படிக்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் முழுப் பித்தலாட்ட வார்த்தைகள்.” – இவ்வாறு, 1948-இல், இரண்டாவது முறையாக இந்தித் திணிப்பு முயற்சியை டெல்லி ஆதிக்கவாதிகள் கையிலெடுத்த போது, சென்னையில் நடந்த மாநாட்டில் பார்ப்பனியமும், வடவரும் தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் எதிராக செய்யும் சூழ்ச்சிகளை சினம் பொங்க போட்டுடைத்தார் பெரியார். ஒரு தகுதியும் இல்லாத மொழியை கொண்டு மொழிப் பெருமைகள் பலவும் பொதிந்த நம் மொழியை அடக்கத் திணிப்பதா என தமிழர்கள் சீற்றம் கொண்டனர். இன்று வரை தமிழர்களிடம் அந்தக் கொதிப்பு அடங்கவில்லை. மொழிப் போராட்டத்தின் தணல் இன்றும் ஓயவில்லை. “இந்தி தெரியாது போடா!” என எழுச்சி கொள்ளும் அளவுக்கு கனன்று கொண்டேயிருக்கிறது.

நீதிக்கட்சி காலத்தில் 1928-களில் துவங்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற இட ஒதுக்கீடு முறையை பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் 1950-இல் டெல்லி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. சமூகநீதிப் பாதையே சமத்துவத்தின் வேர் என அறிந்து, அதற்காகவே பதவி சுகங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, காங்கிரசு கட்சியிலிருந்தும் வெளிவந்தவர் விடுவாரா? மக்களை கிளர்ந்தெழச் செய்யும் களங்களைக் கட்டியமைத்தார். தமிழகம் குலுங்கியது. டெல்லி அதிர்ந்தது. நேருவின் காங்கிரசு அரசாங்கம் இறங்கி வந்தது. பெரியார் திரட்டிய மக்கள் திரளால் இந்தியா முழுமைக்கும் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறக் காரணமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ள பெரியார் காரணமாக அமைந்தார்.

எங்களின் விகிதாச்சாரப்படி எங்களுக்கு வகுப்புரிமை பிரதிநிதித்துவம் வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால், மத்திய சர்க்காருக்கு உட்பட்ட, அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட ரயில்வே, தந்தி, தபால், சுங்கம், இன்கம்டேக்ஸ் போன்ற பெரிய வரிகள், இன்னும் வேறு பல சில்லறை இலாக்காக்கள் எல்லாம் நம் கைக்கு வரும் வரையில் நமக்கு விகிதாச்சாரம் கிடைக்க வேண்டும்.” என திருவாரூர் வகுப்புரிமை மாநாட்டில் டெல்லி அரசின் செவியில் உரைக்குமாறு உரையாற்றினார்.

சமூகநீதியை மழுங்கடிக்கச் செய்யவே தகுதி, திறமை என்று சொல்லி முட்டுக்கட்டை போட்ட டெல்லி ஆதிக்கவாதிகள் தகுதியைப் பற்றிப் பேச்செடுக்கும் போதெல்லாம் அவர்களை வாயடைக்க வைத்தவர் பெரியார். “ஒரு மனிதன் தகுதி திறமை பெற பள்ளிக்கு பயிற்சிக்கு வருகிறான் என்றால், அந்தப் பள்ளிக்கு படிக்க வரவும் பயிற்சி பெற வரவும் கூட தகுதித் திறமை வேண்டுமென்றால், இது எத்தனை அயோக்கியத்தனமான கொடுங்கோன்மை என்று கேட்கிறேன்… தகுதித்திறமை மார்க்குகள் வாங்குவதில் தான் என்றால் ராஷ்ட்ரியபதி, கவர்னர், முதல் மந்திரிகளுக்கு எல்லாம் மார்க் பார்த்து தான் அந்த வேலைகள் கொடுக்கப்படுகிறதா? பெறப்படுகிறதா?” எனக் காட்டத்துடன் விளாசினார். இந்தத் தகுதி என்னும் சொல்லை வைத்துக் கொண்டு தான் சமூக அநீதியான நீட் தேர்வை புகுத்தி, நம் திறமையான மாணவர்கள் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு.

நம்மிடமிருந்து நம்மை கசக்கி பிழிந்து பல கோடி வரிப்பணம் வாங்கி அதை அவர்கள் டாட்டா, பிர்லா, முந்திராக்கள் இடம் கோடி கோடியாக தந்து அதற்கு கைமாறாக காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு லட்சம் லட்சமாக பெற்றுக் கொள்கின்றனர்.” என டெல்லி அரசின் பொருளாதாரச் சுரண்டலைப் பற்றியான புரிதலை மக்களிடம் எளிமையாக புகுத்தினார் பெரியார். இன்றும் இந்த வழிமுறையை பின்பற்றியே அம்பானி, அதானிகளிடம் நாட்டின் வளத்தை அள்ளி கொடுத்து அவர்கள் மூலம் ஒன்றிய ஆட்சியாளர்கள் மக்களை சுரண்டுகிறார்கள். மூலதனச் சுரண்டல், மூலவளச் சுரண்டல் என வட இந்திய பெரு நிறுவனங்கள் நடத்தும் பொருளாதார ஆதிக்கமும் ஓயவில்லை. டெல்லி அரசுகள் கைம்மாறு பெறுவதும் நிற்கவில்லை. மக்கள் சொத்துக்களான பொதுத்துறைகளை அள்ளிக் கொடுத்து நிதிக் குவியல்களை பெற்றுக் கொள்கிறது பாஜக அரசு.

பெரியார் 21-02-1950-இல் “வடவர் சுரண்டல் எதிர்ப்பு மாநாடு” நடத்தினார். அதில் போடப்பட்ட தீர்மானங்கள் வடவர் பொருளாதார எதிர்ப்பிற்கு அடித்தளம் அமைத்தவையாக இருந்தன. “நம்முடைய நாட்டில் கிடைக்கக்கூடிய பொருள்களை வடநாட்டாரிடம் வாங்காதிருக்க வேண்டும், வடநாட்டாருடைய பாங்கிகள், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் இவைகளுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.” என மக்களிடம் அந்த மாநாடு முன் வைத்தது.

வியாபாரத்தில் வடநாட்டார் கொள்ளை இனியும் அதிகப்படுமே ஒழிய, சிறுதும் குறையாது. ஆத்மார்த்தத் துறை எனும் மதக் கொடுமை வடநாட்டார் இஷ்டப்படிதான் பெருகுமே தவிர, சமுதாய-சமத்துவம் ஏற்பட வழியில்லை.” என்று விடுதலையில் எழுதிய பெரியாரின் பார்வையின் படியே, இன்று மோடி ஆட்சியில் வணிகத்தில் வடநாட்டு பனியா, மார்வாடி, குஜராத்தி கும்பலின் ஆதிக்கத்தினால் மத மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட இணைப்புச் சங்கிலிகளையும், அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் முன்கூட்டியே நுணுக்கமாக ஆய்ந்தறிந்த ஆய்வாளர் தான் நம் பெரியார்.

ஒவ்வொரு ஆண்டும் 50 கோடி முதல் 100 கோடி வரையில் தமிழ்நாட்டின் செல்வம், வடநாட்டிற்கு அடித்துச் செல்லப்படுகிறது. அதனால், தமிழர்களே மார்வாரிகளின், சேட்டுகளின் சுரண்டலிலிருந்து தப்ப வேண்டுமானால், தமிழர்கள் உற்பத்தி செய்யும், பொருள்களையே பயன்படுத்துங்கள்.” என்று மேடைகளில் தொடர்ந்து பேசி வந்தார். இதனால் உந்தப்பட்ட பெரியாரின் தொண்டர்கள் நடத்திய வடவர் எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழக வரலாற்றில் புதுமையானதாக இருந்தாலும் வீரியமான பலனைத் தந்தது. வடவர்கள் நடத்தும் துணிக்கடைகளில் முன்னால் நின்று, எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், வணக்கம் கூறி “வடவர் கடைகளைப் புறக்கணியுங்கள், தமிழர் கடைகளைப் பயன்படுத்துங்கள்” என்று சொல்வதை ஒரு போராட்ட வடிவமாக 150 நாட்களுக்கு மேலாக நடத்தினார்கள். சென்னை சவுகார்பேட்டை பகுதியிலிருந்த ஆரியபவன் உணவகம் முன்பும், கிஷன்லால் செல்லாராம் துணிக்கடை முன்பும் மறியல் நடைபெற்றது. முதலில் அலட்சியமாக எண்ணிய வடஇந்திய முதலாளிகள், பெரியார் தொண்டர்களை காவலர்கள் கைது செய்தாலும் மீண்டும் மீண்டும் மற்றவர்கள் போராட்டக் களத்தில் கலந்து கொள்வதைப் பார்த்து கதிகலங்கிப் போனார்கள். அவர்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது.

நாங்கள் தானே இந்த சாதி இழிவு, மதம், சாஸ்திரம், புராணம் இவைகளை பற்றியும் இந்த பார்ப்பனர்கள் அக்கிரமங்களை பற்றியும் துணிந்து எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்போது இங்கு இருக்கிற சட்டம் இந்து லா (Hindu Law) என்றால் அது மனுதர்மம் தான். நாங்கள் இருந்து கூப்பாடு போடும்போது மறைவாக உள்ள இவைகள், நாங்கள் இல்லாவிட்டால் வெளிப்படையாக அல்லவா வந்துவிடும்? அப்போது அசல் மனுதர்ம ஆட்சி தானே நடக்கும்?” என அன்றே பார்ப்பனீயத்தின் மனுதர்மப்படி வகுத்த பண்பாட்டினை இந்து சட்டமாக நிலைநிறுத்தி, அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவாக்கிய டெல்லி ஆதிக்கவாதிகளின் பண்பாட்டுப் படையெடுப்பைப் பற்றி எச்சரித்தார் பெரியார்.

நாம் தமிழர்கள் சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே நாகரீகத்தோடு வாழ்ந்தவர்கள், ஆனால் இன்று நாம் ஆரியத்தால் இழிமக்களாக காட்டுமிராண்டிகளாக, கல்வி அறிவற்றவர்களாக, மானம் ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்கின்றோம். தமிழன் என்றால் என்ன? சட்டப்படி, சமுதாயப்படி, சமுதாய அமைப்புப்படி, சாஸ்திரப்படி சூத்திரன். சூத்திரன் என்றால் பார்ப்பானுக்கு தொண்டூழியம் செய்பவன்.” என ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் வந்த கேடுகளால் தான், ஆரிய ஆட்சி நடக்கும் டெல்லி ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

வடவர் எதிர்ப்பை மட்டுமல்ல, பார்ப்பனிய பண்பாட்டினை அப்படியே ஏற்றுக் கொண்ட அண்டை மாநிலங்களிடமிருந்தும் பிரிய வேண்டுமென்று மொழிவாரி மாநிலங்கள் பிரியாத காலகட்டத்திலேயே கூறினார்.

பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே, நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால், சீக்கிரம் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது. காரணம், கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றிய இழிவோ வெட்கமோ கிடையாது. மத, மூட நம்பிக்கையில் ஊறிவிட்டார்கள்.” என்று சாடினார்.

வடவர்களின் கடவுளர்களாக இங்கு இறக்குமதியாகிய பிள்ளையார் உடைப்புப் போராட்டம், இராமர் பட எரிப்பு போராட்டம் இவையெல்லாம் வடவர் திணித்த பண்பாடுகளை எதிர்த்து பெரியார் நடத்திய போராட்டங்களே…

வடவர் ஆதிக்கத்தை நோக்கிய சீற்றத்துடன் நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல், 1500 மைல் தூரத்திலே இருக்கிறாய். உன் பேச்சு எனக்குப் புரியாது, என் பேச்சு உனக்குப் புரியாது; உன் பழக்கம் வேறே; என் பழக்கம் வேறே; உன் நடப்பு வேறே… மரியாதையாகப் போய்விடு; ரகளை வேண்டாம். என்னத்துக்காக இவ்வளவு தூரத்தில் இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகணும்? நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்; எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, சமுத்திரம் இல்லையா, மலையில்லையா, காடு இல்லையா? நெல் விளையவில்லையா? கம்பு விளையவில்லையா? என்ன இல்லை எங்களுக்கு? உனக்கு என்னாலே என்ன ஆகிறது? மரியாதையாய்ப் போ…” என தனது இறுதிப்பேருரையில் சீறினார்.

1938-ல் துவங்கிய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கத்திலிருந்து 1973-ல் தனது 96-வது தள்ளாத வயதிலும் சீறிய இந்த தியாகராய நகர் இறுதிப்பேருரை வரை வடவர் எதிர்ப்பில் சிறு சமரசமும் செய்து கொள்ளாதவர் தந்தை பெரியார். நோயின் வலியைப் பொறுத்துக் கொண்டும் தமிழினம் வலிமை பெறும் சொற்களை ஊட்டிக் கொண்டேயிருந்த தாய் தான் நம் தந்தை பெரியார்.

வரலாற்றுப்படி நாம் டெல்லியுடன் இணைந்து கூட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? 56 நாடுகளில் நாம் ஒரு நாடாராய் இருந்து வந்தவர்கள்! டெல்லி எஜமான ஆட்சி பீடக்காரர்களாகிய அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் ஏதாவது உண்டா? வரலாற்றுப்படியும் காரணமில்லை; பூகோளப்படியும் காரணமில்லை; புராணப்படியும் காரணமில்லை; கலாச்சாரப்படியும் காரணமில்லை.” என்று இந்தியா என்பது வெள்ளைக்காரர்கள் ஆட்சி நிர்வாகம் செய்ய ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததே என்னும் சரித்திர உண்மையை விளக்கி, போர்க்களத்தின் முன்கள வீரன் தனது பின்னால் அணிவகுத்து நிற்கும் படைவீரர்களின் உணர்வுகளைத் தூண்டுவது போல, தமிழர்களை டெல்லி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக, பார்ப்பனிய ஆட்சிக்கு எதிராக அணி திரட்டி தமிழர் படைக்கு தளபதியாக வாழ்ந்தவரே பெரியார்.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!! “- பெரியார் முழக்கத்தின் படியே டெல்லி ஆதிக்க ஆட்சியாளர்களும், பார்ப்பனிய அதிகாரமும் மக்களுக்கு உருவாக்கும் இன்னல்களை எடுத்துரைப்போம். இவர்களால் தமிழ்நாட்டை சூழ்ந்து வரும் ஆபத்துகளை பெரியாரின் வழி நின்று தடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »