இலட்சத்தீவில் என்ன நடக்கிறது?

இலட்சத்தீவில் என்ன நடக்கிறது?

காவிப்பேரலையில் மூழ்கடிக்கப்படும் இலட்சத்தீவின் பூர்வகுடிகள்

மாட்டிறைச்சிக்கு தடை, மதுவிற்கு அனுமதி, இஸ்லாமியர்களின் நிலங்களை கையகப்படுத்துதல், வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை கெடுப்பது… இது ஏதோ ஒரு பாஜக ஆளும் வடஇந்திய மாநிலத்தில் செயல்படுத்தப்படுபவை அல்ல. எந்த செய்திகளிலும் அடிபடாத, அமைதியான இலட்சத்தீவுகளில் ஒன்றிய பாஜக அரசு செய்யும் அடவாடி தான் இது.

96% இஸ்லாமியர்கள் வாழும் இலட்சத்தீவுகள் ஒன்றிய நிலப்பரப்பின் (யூனியன் பிரதேசம்) நிர்வாகியாக கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்ற பிரஃபுல் படேல், அங்கு அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துகின்ற கட்டுப்பாடுகள் இலட்சத்தீவு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இலட்சத்தீவின் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்களை மீது அடக்குமுறைகளை ஏவுகின்ற வகையிலும், வளர்ச்சி என்ற பெயரில் அழகிய கடற்கரைகளை கொண்ட  தீவுகளை அழிக்கும் வகையிலும் கொண்டுவரப்படுகின்ற திட்டங்கள், இலட்சத்தீவை மற்றொரு காஷ்மீராக மாற்றும் முயற்சியாக தெரிகிறது. இதனால் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் தற்போது எழும்பியுள்ளன.

கேரளத்தின் மேற்கே அரபிக்கடலில் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் 12 பவளத்தீவுகள், 3 பவளப்பாறைகள் உட்பட 36  தீவுகளை கொண்ட தீவுகள் கூட்டம் தான் இலட்சத்தீவுகள். கவரத்தி, அகத்தி, மினிக்காய், அமினி போன்றவை முக்கிய தீவுகளாக உள்ளன. அழகிய கடற்கரைகளை கொண்ட இந்த தீவுகள் தற்போது இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய நிலப்பகுதியாக உள்ளது.

இலட்சத்தீவு வரலாற்று ரீதியாக தற்போதைய கேரளாவுடன் அதிகம் நெருக்கம் கொண்டது. இங்குள்ள மக்களும் தங்களை மலையாளிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இங்கு வாழும் மக்கள் பெரும்பான்மையாக மலையாளமும், திவேகி, ஜெசெரி போன்ற வட்டார மொழிகளை பேசுகின்றனர். மீன் பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் ஏற்றுமதி செய்தல், தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் சுற்றுலா தலம் மூலமும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது தான் இலட்சத்தீவுகள். கடல் வணிகத்தின் முக்கிய பகுதியாக இருந்துள்ளதை புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளன. சேர மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்ததை பதிற்றுப்பத்து நூல் சுட்டிக்காட்டுகிறது. கிபி 5-6ம் நூற்றாண்டுகளில் புத்த மதம் இங்கு பரவியிருந்ததை தொல்லியல் ஆராய்ச்சிகளின் மூலம் அறியமுடிகிறது. கிபி 661-ல் உப்பிதாலா என்னும் அரபியரால் இஸ்லாம் இங்கு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் சேர நாட்டு அரசாட்சியின் கீழ் இருந்தன. 18ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் ஆட்சி பகுதியாக இருந்த இத்தீவு கூட்டம், ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு சென்னை மாகாணத்தில் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1956 மொழி வழி மாநில பிரிவினையின் போது, மலபார் மாவட்டத்திலிந்து பிரிந்து இந்திய ஒன்றிய அரசின் பகுதியாக்கப்பட்டது.

மலையாள மொழி பேசும், 96 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை கொண்ட சுமார் 65,000 மக்கள் தொகை கொண்ட இத்தீவுக்கூட்டம் ஒரு மாவட்டமாக ஒன்றிய அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. டில்லி, கோவா, புதுச்சேரி போன்ற ஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி முறை இங்கு கிடையாது. மக்கள் பிரதிநிதிகளாக ஒரு மக்களவை உறுப்பினரும், பஞ்சாயத்து உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மொஹமத் ஃபைசல் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார்.

மற்ற ஒன்றிய பகுதிகளைப் போல் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநரும் இங்கு கிடையாது. மாறாக, ஓய்வு பெற்ற குடிமைப் பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ்) அதிகாரி ஒருவரை நிர்வாகியாக (Administrator) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, இந்திய ஒன்றிய அரசின் பரிந்துரையில் குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கப்படும் ஒரு நிர்வாகியின் தலைமையில் தான் இலட்சத்தீவின் நிர்வாகம் செயல்படுகிறது. இதுவரை குடிமை பணி அதிகாரிகள் இதன் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட போது வராத பிரச்சனைகள் தற்போது ஒரு பாஜக அரசியல்வாதியை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பின்பு தோன்ற துவங்கியுள்ளன.

2020 டிசம்பரில் நிர்வாகியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்வர் சர்மா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் பிரஃபுல் கோடா படேல் பதவியேற்றார். மோடி முதல்வராக இருந்த குஜராத் பாஜக அரசின் முன்னாள் அமைச்சரான இவர், மோடி  மற்றும் அமித்சாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். பாஜகவின் தொடர்ச்சியான இஸ்லாம் விரோத செயல்பாடுகளை, பெரும்பான்மை இஸ்லாமியர்களை கொண்ட இலச்சத்தீவுகளில் நடைமுறைப்படுத்துவதற்காகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கடந்த 5 மாத கால செயல்பாடுகளும் அதனையே காட்டுகின்றன.

பிரஃபுல் படேல் ஏற்கனவே தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டையூ & டாமன் ஒன்றிய பகுதிகளை நிர்வகித்து வருகிறார். தற்போது கூடுதலாக இலட்சத்தீவுகளை நிர்வகிக்கிறார். இலட்சத்தீவுகள் போன்றே ஓய்வு பெற்ற குடிமைப்பணி அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டு வந்த டையூ & டாமன் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி ஒன்றிய பகுதிகளின் நிர்வாகியாக முறையே 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் புதிதாக பதவியேற்ற மோடி அரசினால் நியமிக்கப்பட்டார். மரபார்ந்த ஒரு செயலை தனது அரசியல் நலனுக்காக பாஜக அரசு மாற்றியமைத்ததை எதிர்த்து அப்போதிருந்தே பலர் கண்டித்து வருகின்றனர்.

டையூ & டாமன் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி ஒன்றிய பகுதிகளின் தேர்தலின் போது ஆட்சியர் கண்ணன் கோபிநாதன் அவர்களை அலுவல் வேலைகள் வாங்கியதாக தேர்தல் ஆணையத்திடமிருந்து நோட்டீஸ் பெற்றது, டாமன் பகுதியில் முன் அறிவிப்பின்றி மீனவர்களின் வீடுகளை இடித்து தள்ளியது, 7 முறை மக்களவை உறுப்பினராக இருந்த மோகன் டெல்கர் மும்பை ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டதில் குற்றஞ்சாட்டப்பட்டது போன்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி செய்த குற்றங்கள் பிரஃபுல் படேல் மீது உள்ளது.

பிரஃபுல் படேல் வந்தபின் கொண்டு வரப்பட்ட சில தளர்வுகள், கட்டுப்பாடுகள், புதிய சட்டங்கள், பூர்வகுடி மக்களின் உரிமையை நசுக்குவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

பிரஃபுல் படேல் இலட்சத்தீவு நிர்வாகியாக பொறுப்பேற்றவுடன் செய்த முதல் காரியம் அங்கு இருந்த பஞ்சாயத்து அமைப்பில் உள்ள அதிகாரங்களை தன்வசப்படுத்திக் கொண்டதாகும். முக்கியமாக பஞ்சாயத்துகளின் அதிகாரத்தில் இருந்த கல்வி, மருத்துவம், விவசாயம், மாடுகளை பராமரித்தல் மற்றும் மீன்வளம் போன்ற ஐந்து துறைகளையும் பஞ்சாயத்துகளின் நிர்வாக அதிகாரத்திலிருந்து நீக்கிவிட்டு தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார்.

கொரோனா பரவலே இல்லாதிருந்த லட்சத்தீவில் இவர் வந்தபின் கொண்டுவரப்பட்ட பயணத் தளர்வுகளால் கடந்த ஜனவரி 18-ல் தான் முதல் கொரானா பாதிப்பே கண்டறியப்பட்டது. இன்றுவரை 7100-க்கும் மேற்பட்டோர் கொரானா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கொரானா நோய்த்தொற்றினால் இதுவரை 26 பேர் இறந்துள்ளனர். தற்போது 2300-க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வெறும் 65,000 மக்கள் தொகை கொண்ட தீவுகள் கூட்டத்திற்கு இது மிக மோசமான நோய்த்தொற்று சூழல். தேவையே இல்லாத நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் இருந்திருந்தால் இது தவிர்க்கப்பட்டிருக்கும்.

கடந்த பிப்ரவரி மாதம் விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை (Animal Preservation Regulation, 2021) என்ற பெயரில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டது. மேலும், இச்சட்டத்தின் கீழ், மற்ற இறைச்சிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இச்சட்டத்தின்படி அனுமதிச்சான்று பெறாது இறைச்சிக்காக விலங்குகளை கொன்றாலும் ஓராண்டு சிறைத்தண்டனையுடன் 10,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். ஒருபடி மேலே சென்று அங்கன்வாடிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் நிறுத்தப்பட்டன. மாட்டிறைச்சியை முக்கிய உணவாக கொண்ட பகுதியில் பாஜக தனது செயல்திட்டத்தை புகுத்தும் விதமாக மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது. இது இஸ்லாமியர்களை திட்டமிட்டு வஞ்சிக்கும் செயலாகும்.

அதே பிப்ரவரி மாதம் இலட்சத்தீவு பஞ்சாயத்து ஒழுங்குமுறை (Lakshadweep Panchayat Regulation, 2021) என்னும் வரைவு கொண்டு வரப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சரத்து பலத்த எதிர்ப்பை அம்மக்களிடமிருந்து பெற்றது. வெறும் 1.4% பிறப்பு விகிதம் கொண்ட இலட்சத்தீவு இஸ்லாமியர்களின் மக்கள்தொகையை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கிலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளாட்சி அதிகாரம் பெறுவதை தடுக்கும் நோக்கிலும் கொண்டுவரப்பட்டது.

மேலும், சுற்றுலா வளர்ச்சிக்காக மது விற்பனையை அனைத்து தீவுகளிலும் அனுமதித்துள்ளார் பிரஃபுல் படேல். இஸ்லாமியர் அதிகமுள்ள இத்தீவுக்கூட்டத்தில், பல பத்தாண்டுகளாய் மது விற்பனையே இல்லாதிருந்தது. இது சுற்றுலா வருபவர்களுக்காக பூர்வகுடி இஸ்லாமியர்களின் மரபை சிதைக்கும் செயலாகும். இது இஸ்லாமிய இளைஞர்களை மதுவிற்கு அடிமையாக்கி தவறான வழிக்கு இட்டுச்செல்ல வழிவகை ஏற்படுத்தக்கூடியதாகும்.

சமூக விரோதத் தடுப்புச் சட்டம் (Prevention of Anti-Social Activities Act, 2021) என்றொரு சட்டமும் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம், குற்றம் செய்யாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கைக்காக முன்கூட்டிய கைது செய்து, ஓர் ஆண்டு காலம் சிறைபிடிக்க அதிகாரம் வழங்குவதுடன், சிறைபிடிக்கப்பட்டவரை தீவை தாண்டி இந்தியாவின் முக்கிய நிலப்பரப்பிற்கு கொண்டு செல்லலாம் என்கிறது. இந்தியாவிலே மிகக் குறைந்த குற்றம் நடக்கும் பகுதியான இலட்சத்தீவில் எதற்கு இந்த கடுமையான சட்டம் என்ற கேள்வி அம்மக்களுக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீரத்துடன் போராடிய இஸ்லாமிய மக்களை ஒடுக்கும் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்து மிக முக்கியமானது, ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட இலட்சத்தீவு மேம்பாட்டு அதிகார ஒழுங்குமுறை (Lakshadweep Development Authority Regulation, 2021) வரைவு.  உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவில் எந்நிலத்தையும் கையகப்படுத்தும் உரிமையை நிர்வாகிக்கு, அதாவது ஒன்றிய அரசிற்கு வழங்குகின்றது.  இது எதற்காகவென்றால் கட்டடம், பொறியியல், சுரங்கம், அகழ்வுப்பணி மேலும் சில கட்டுமானத்திற்காக என இச்சட்டம் வரையறுக்கிறது. இது வளர்ச்சி என்ற பெயரில் இஸ்லாமியர்களின் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியே.  காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியன் மூலம் இந்திய அரசால் நிலங்களை கையகப்படுத்த முடியும் என்றாக்கப்பட்டது போன்றதே இதுவும்.

இது குறித்து எழும் கேள்விகளுக்கு சாலைவசதி போன்ற ‘வளர்ச்சித் திட்டங்களை’ செய்யவே இச்சீர்த்திருத்தம் என்கிறது மோடி அரசு. 36 தீவுத்திட்டுகளாலான இலட்சத்தீவின் மொத்த பரப்பளவே 32 சதுர கி.மீ. தான். அதிலும், வெறும் பத்து தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அமைதியாக வாழ்ந்து வரும் மக்களுக்கு என்ன பெரிய கட்டுமான வளர்ச்சி தேவைப்படப் போகிறது? இங்குதான் கடல்வளங்கள் உட்பட நாட்டின் அனைத்து இயற்கை வளங்களையும் குஜராத் பனியா பெருமுதலாளிகளுக்கு விற்றுவரும் மோடி அரசின் மீதான கேள்வி எழுகின்றது. அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுகம் வந்தபின் அதைச் சுற்றியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதை மறந்திட வேண்டாம்.

இத்துடன் உள்ளூர் பால்பண்ணைகளை மூட உத்தரவிட்டது, கடற்பாதுகாப்பு சட்டங்களை சுட்டிக்காட்டி கடற்கரை ஓரங்களில் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் மீன்பிடிச் சாதனங்களை வைப்பதற்கு இருந்த குடிசைகளை நீக்க உத்தரவிட்டது, ஒன்றிய அரசின் கீழ் வேலை செய்த நூற்றுக்கணக்கான ஒப்பந்தப் பணியாளர்களின் வேலைகளைப் பறித்தது என அம்மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்படியான பாஜக அரசின் தொடர் மக்கள் விரோத நடவடிக்கைகள் அம்மக்களை உலுக்கியுள்ளன. மேலும், கேரளத் துறைமுகங்களான பெய்ப்பூர் மற்றும் கொச்சியிலிருந்து வந்துகொண்டிருந்த சரக்குப் போக்குவரத்தை மங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டதன் மூலம் கேரளத்துடனான பல நூற்றாண்டு கால உறவை பாஜக அரசு துண்டித்துள்ளது.

இவர்கள் சொல்லும் சுற்றுலா வளர்ச்சியை தாங்குமளவு பரப்பு கொண்டதல்ல லட்சத்தீவு. அதிகபட்ச உயரமே 0.5 மீட்டரும், மிகப்பெரிய தீவின் அகலமே 4.5 கி.மீ.க்கும் குறைவாகவுள்ள இத்தீவில் கட்டுமானங்கள் நடந்தேறினால், அதன் சுற்றுப்புற சூழலையே குலைக்கும். ஆகையால், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், மோடி அரசு தனது இஸ்லாமியர் விரோத இந்துத்துவ செயல்திட்டங்களை இலட்சத்தீவின் பெரும்பான்மையான  இஸ்லாமியர்கள் மீது திணிக்கும் வேலையை செய்கிறது.

இந்தியப் பெருங்கடலின் கடல் வணிகங்கள் நடைபெறும் முக்கியமான பாதையில் இலட்சத்தீவுகள் அமைந்துள்ளது, புவிசார் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏற்கனவே இங்கு கப்பற்படைக்கு சொந்தமான படைத்தளம் இருக்கும் நிலையில், புவிசார் அரசியலின் முக்கியத்துவம் கருதி படைத்தளத்தை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. இங்குள்ள விமான ஒடுபாதையை போயிங் போன்ற பெரிய விமானங்கள் பயன்படுத்தும் அளவிற்கு விரிவாக்கப்படவிருக்கிறது என்று கூறுவதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இதையடுத்து, இலட்சத்தீவு மக்கள் தங்கள் உரிமைகளை காத்துக் கொள்வதற்காக, பிரஃபுல் படேலின்  மக்கள்விரோத செயல்பாடுகளை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அம்மக்கள் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரசை அணுகியுள்ளதுடன், ஐ.நா.வின் தொல்குடிகளுக்கான நிரந்தர தீர்ப்பாயத்தையும் (United Nation’s Permanent Forum for Indigenous Issues) நாடியுள்ளனர். #SaveLakshadweep எனும் ஹாஷ்டாகில் நாடு முழுவதுமிருந்து பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரையிலும் இலட்சத்தீவு மக்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இலட்சத்தீவு மக்களுக்கான ஆதரவு வலுத்துள்ள நிலையில், பிரஃபுல் படேலை பொறுப்பிலிருந்து திரும்பப் பெறக் கோரி கேரளா உட்பட பல்வேறு மாநில அரசுகளும், காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இலட்சத்தீவின் அமைதியை சீர்குலைக்கும் பிரஃபுல் படேலின் சீர்திருத்தங்களை கண்டித்து இலச்சத்தீவு பாஜக கட்சியின் இளைஞர் அமைப்பை சேர்ந்த 8 முக்கிய பொறுப்பாளர்கள் பதவி விலகியுள்ளனர்.

இலட்சத்தீவுகளின் மக்கள் இதுவரை ஓர் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். பெரிய குற்றங்கள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. இங்கு வாழும் மக்கள் இஸ்லாமியர்கள் என்பதே இந்திய ஒன்றிய அரசிற்கு உறுத்தலாக உள்ளது. தனித்த அரசியலமைப்புடன் செயல்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஆர்டிக்கிள் 370 மட்டுமே இந்தியாவுடன் பிணைத்து வந்த வேளையில் அதனை சிதைத்து இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. அங்குள்ள சட்டமன்றத்தை கலைத்து, இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் கட்சித் தலைவர்களை தடுப்புக்காவலில் வைத்தனர். அப்படியான ஒரு அடக்குமுறை சூழலை தான் தற்போது இலட்சத்தீவு மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு மாநிலங்களின் கூட்டாட்சி. இந்திய ஒன்றியத்திற்கு என்று சொந்தமாக நிலப்பரப்பு இருக்க முடியாது. காலனியாதிக்க நீக்கம் என்பது ஒன்றிய அரசின் வசம் உள்ள நிலப்பரப்பு அதன் காலனியாதிக்கதிற்கு முன்பிருந்த நிலையில் விடுவிக்கப்பட வேண்டும். அதன்படி, மக்களின் சுயநிர்ணய உரிமை வழங்கி, பொதுவாக்கெடுப்பு மூலம் தனி மாநிலமாகவோ, அல்லது கேரளா மாநிலத்துடன் இணையவோ வழிவகை செய்ய வேண்டும். அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே அம்மக்களை ஆட்சி செய்ய வேண்டும். அதுவே மக்களாட்சி.

ஒன்றிய அரசினால் நியமிக்கப்படும் அதிகாரிகள் நிர்வகிக்க வேண்டுமானால் செய்யலாமே ஒழிய ஆட்சி செய்ய முடியாது. ஓர் நிர்வாகி ஆட்சி அதிகாரத்தை கையிலெடுப்பது மக்கள் விரோத செயல். ஜனநாயகத்தை விரும்புவோர் இதனை அனுமதிக்க முடியாது. இது இலட்சத்தீவிற்கு மட்டுமல்ல. இந்திய ஒன்றிய அரசினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். துணை நிலை ஆளுநர் என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை பாஜக அரசு மட்டுப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், இலட்சத்தீவுகள் போன்ற ஒன்றிய பகுதியின் மக்கள், மக்கள் பிரதிநிதிகள் இன்றி பாஜக அரசினால் நசுக்கப்பட்டு வருகின்றன.

நம் ஆதரவுக் குரல் இலட்சத்தீவில் ஜனநாயகத்தினை கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டும். இலட்சத்தீவிற்கான போராட்டம் ஒன்றிய நிலப்பரப்பு அனைத்திலும் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்திய ஒன்றிய பகுதிகள் என்ற நிலப்பரப்பு இருக்கக்கூடாது என்பதே ஜனநாயகம். அதனை முன்மொழிவதே ஜனநாயக செயல்.

Translate »