
மின் தகனமேடையை தன்னலமற்று பணி செய்யும் பல தொண்டு நிறுவனங்களை நிராகரித்து ஈஷா மையத்திற்கு இவற்றை தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை நீதிமன்றம் முதல் திமுக அரசு வரையில் நாம் எழுப்ப வேண்டி வருகிறது என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சனவரி 10, 2026 அன்று பதிவு செய்தது.
குற்றவழக்குகளை எதிர்கொள்ளும் ஜக்கி எனும் கிரிமினல் நபரிடம் ‘மயானம் அமைத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறது’ நீதிமன்றம்.
என்ன நடக்கிறது நாட்டில்? நீதிமன்றங்கள் யாருக்காக நடக்கிறது அல்லது நீதிமன்றம் எந்த கும்பலுக்கு சேவை செய்கிறது?
ஆறு மாதங்களுக்கு முன் என் பெரியப்பா இயற்கை எய்திய போது, அவரது சடலத்தை எரியூட்ட கோவையில் உள்ள தகனமேடைக்கு (மின்மயான சுடுகாடு) எடுத்துச் சென்றோம். அங்கே பதிவாளர் என்பவர் ஜக்கி நிறுவனத்தவர் என்பதை அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக மின் தகனமேடை இடங்களில் தமிழில் இயற்கை எய்துயவருக்கான பாடல் பாடப்படும். சைவ பாடல்கள், தத்துவ பாடல்கள் அல்லது சித்தர் பாடல்கள், சிவவாக்கியர் பாடல்கள் போன்றவை தமிழிலேயே பாடப்படும்.
ஈரோட்டில் ரோட்டரி க்ளப் சேவையாக எடுத்துச் செய்யும் மின்மயானத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் பாடலை எழுதிப்பெற்று அதை பாடலாக இசைத்து பாடப்படுகிறது.
ஆனால், ஈஷா மையமையத்தால் நடத்தப்படும் தகனமேடைக்கு சம்ஸ்கிருத-வைதீக பெயரான ‘கயந்த ஸ்தனம்ஸ்’ (Isha’s Kayanta Sthanams) எனும் பெயர் வைக்கப்பட்டு சம்ஸ்கிருத முறைப்படை நடத்தப்படுகிறது. இதன் அர்த்தம் எவருக்கும் புரியாது.
மேலும், அங்கு ஒலிக்கும் பாடலானது சமஸ்கிருத வேத வழக்கப்படியான பாடலே ஒலிக்கிறது. இதன் அர்த்தமும், தேவையும் எவருக்கும் புரியாது. அரசு நடத்தும் தகனமேடைகளில் எவ்வித கடவுளரும் வைக்கப்படாமல், அனைத்துவகையான தமிழ்ச் சமூக இடுகாட்டு முறையிலே அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஈஷா மையம் இந்த நிலையங்களை பார்ப்பன-சமஸ்கிருத முறையில் மாற்றி அமைத்து தமிழ் இறுதிச்சடங்கு முறையை வெளியேற்றியுள்ளது. இந்த தகனமேடைகளில் வசூலிக்கப்படும் நிதி கணக்குகள் தனியார் நிதியாக செல்கின்றன. சைக்கிள்-இருசக்கர ஸ்டாண்ட் கான்ட்ராக்ட் போல, சுடுகாட்டையும் ஒப்பந்தத்திற்கு கொடுத்துவிட்டிருக்கிறார்கள். இது கடந்த திமுக ஆட்சிக்காலத்திலேயே நடந்த தனியார்மயம்.

ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை, வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மயானங்களை பராமரித்து வருகிறது.
ஈஷா கும்பல் இந்திய அளவில் 3000 தகனமேடைகளை நிர்வகிக்கும் தொழிலை தனது இலக்காக வைத்துள்ளது. இந்த தகனமேடையை முறைப்படுத்தி, எரிமேடையை உருவாக்குவதற்கான நிதியை தனியார் நிறுவனங்களிடமிருந்து CSR Funds – corporate social responsibility வழியாக தொண்டு நிறுவனம் எனும் வகையில் பெற்றுக்கொண்டு, இந்திய மோடி அரசு உருவாக்கிய விதிகளில் ஒன்றான, பாரம்பரிய முறைகளை பாதுகாத்தல் எனும் விதியினை மேற்கோள்காட்டி நன்கொடை பெற்றுக்கொண்டு இயங்குகிறது. இதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்பந்ததாரராக தன்னை இணைத்துக்கொண்டு
இயங்குகிறது. ஆனால் அனைத்து சடலப்பணிகளுக்கும் கட்டணத்தை பெற்றுக்கொள்கிறது. இறுதிச்சடங்குகளுக்கு அதிகப்படியாக ரூ 30,000.00 வரை ஈஷா வசூலிக்கிறது. நேரடியாக சொர்க்கத்திற்கு அனுப்பும் மந்திரத்தை சொல்லி வாங்கிவிடுவார்கள்.

மின்மயானங்களின் வழியே இப்படியான சம்பாத்தியம் சாத்தியப்படுத்தியுள்ளது ஈஷா கும்பல். இவையனைத்தையும் வணிகமாகவும், அதேநேரம் சமஸ்கிருத ஆரிய மயமாகவும் மாற்றுவதை செய்கிறார்கள். மிக முக்கியமாக அரசு மயானங்களில் கிடைக்கும் பணியை அரசுப்பணியாக இல்லாமல் ஒப்பந்த கூலிகளாக மாற்றி வைக்க இந்த முறை பயன்படுகிறது.
சென்னையின் பெசண்ட் நகர் மின்மயானம் ஈஷா மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் யாராக இருந்தாலும் காலபைரவர், அல்லது லிங்க பைரவி என வைதீக கடவுளின் முன்னிலையிலேயே இறுதிச்சடங்கு செய்யப்படும். அரசு மின் மயானத்தில் இதுபோன்ற சமஸ்கிருத சடங்குகள் அற்ற, சித்தர், அய்யனார், சைவ அல்லது தமிழ் வகைப்பட்ட சடங்குகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதை ஈஷா அழித்து வருகிறது. கட்டணமும் உயர்வான கட்டணத்தை கொடுத்து, இறப்பையும் தனியாரிடம் ஒப்படைத்துள்ள அவல நிலையுள்ளது.
மின் தகனமேடையை கூட தனியாருக்கு தாரைவார்க்கும் நிலை மிகமோசமானது. திமுக அரசின் தனியார்-ஒப்பந்த ஊழியர் கொள்கை என்பது பாசிசத்திற்கு தீனிபோடக்கூடியதாகவே அமைகிறது. தன்னலமற்று பணி செய்யும் பல தொண்டு நிறுவனங்களை நிராகரித்து ஈஷா மையத்திற்கு இவற்றை தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியை நீதிமன்றம் முதல் திமுக அரசு வரையில் நாம் எழுப்ப வேண்டி வருகிறது.
நீதிமன்ற நிலைப்பாட்டின் அவலம் குறித்து சி.பி.எம் கட்சியின் தமிழ்மாநில தலைவர் தோழர் சண்முகம் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி கவனத்திற்குரியது. அனைவரும் கேள்வி எழுப்புவோம்.