மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி ஊடக சந்திப்பு

மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வுரிமை, நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மே 17  இயக்கம் நடத்திய ஊடக சந்திப்பு பிப்ரவரி 20, 2026 அன்று சென்னை பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரையின் தொகுப்பு:

“மாஞ்சோலை குறித்தும், தொடர்ச்சியாக அந்த மக்களுக்கு ஆதரவாகவும்  எழுதி வருகின்ற ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கின்றோம். இந்த ஊடக சந்திப்பு மாஞ்சோலை தொழிலாளர்களுடைய வாழ்வுரிமை தொடர்பாகவும், நான்கு தலைமுறையாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளராக உழைத்தவர்களினுடைய உரிமைகளை தமிழ்நாடு அரசு திமுக அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வருவதும், எதிர்கட்சியாக இயங்கி கொண்டிருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கவனத்திற்கும் இந்த கோரிக்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் இந்த ஊடக சந்திப்பு நடத்தப்படுகிறது.

மாஞ்சோலை நிறுவனத்தை நடத்தும் பாம்பே பர்மா கார்ப்பரேஷன் நிறுவனம் சட்ட விரோதமாக தேயிலை தோட்டத்தை மூடுகின்ற பணியை செய்து வருகிறது. மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி என்பது தமிழ்நாட்டிலே காலனிய காலத்திலிருந்து இன்றைக்கு வரை, வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இன்றைக்கு வரை, தொழிலாளர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதடைய சாட்சியாக இருந்து வருகிறது. இந்த தொழிலாளர்கள் நான்கு தலைமுறையாக உழைத்திருக்கிறார்கள். அந்த காடை திருத்தி தேயிலை தோட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். உலகத்தினுடைய புகழ் பெற்ற தேயிலை நிறுவனமாக மாஞ்சோலை தேயிலை என்பது கொண்டாடப்படுகிறது.

இப்படியாக பெருமளவிலே வருமானத்தை ஈட்டிய அந்த நிறுவனம், கிட்டத்தட்ட ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வணிகத்தை பார்த்த நிறுவனம், இந்த 90 ஆண்டு கால அளவிலே அந்த நிலத்திலே தங்களுக்கு லாபத்தை பார்த்துவிட்டு, அந்த தொழிலாளர்களுக்கு சொற்ப பணத்தை நட்டயீடாக கொடுத்து, அந்த தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களிடத்திலே பொய்யாக கையெழுத்தை வாங்கிக்கொண்டு, அவர்கள் தாங்களாகவே ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்கின்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கின்றது. இன்று நெருக்கடியை கொடுத்து அந்த தொழிலாளர்களை மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியிலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு துணையாக மாவட்ட நிர்வாகமும் திமுக அரசும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் இந்த சமயத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு முறையான நட்டஈடு அந்த நிறுவனத்திடமிருந்து வாங்கி தரப்பட வேண்டும். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 200 நாட்கள் என்கின்ற விகிதத்தில், எத்தனை ஆண்டு காலம் அந்த தொழிலாளர்கள் அந்த தேயிலை தோட்டத்திலே உழைத்தார்களோ அந்த அளவிற்கான நட்டஈட்டை கொடுக்க வேண்டும். இது புதிய கோரிக்கை அல்ல. ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இயங்கி வந்த ’போர்டு நிறுவனம்’ (Ford company) மூடப்பட்ட பொழுது 147 நாட்கள் என்கின்ற விகிதத்தில் ஒரு தொழிலாளர் எத்தனை ஆண்டு காலம் உழைத்தாரோ அத்தனை ஆண்டு காலத்திற்கான நட்டயீட்டை அவர்கள் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் என்கின்ற அளவிலே போர்டு நிறுவனத்திலே தொழிலாளர்களுக்கு நட்டயீடு கிடைத்தது.

ஆனால் மாஞ்சோலை நிறுவனம் நான்கு தலைமுறையாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெறும் 15 நாள் என்கின்ற விகிதத்தில் மட்டுமே நட்டயீட்டை கொடுத்திருக்கிறார்கள். அதுவும் 52 வயதுக்கு மேல், 58 வயதுக்கு மேல், 52 வயதுக்கு கீழ் என்று மூன்றாக பிரித்து (2 லட்ச ரூபாய், இரண்டரை லட்ச ரூபாய், 3 லட்ச ரூபாய் என்கிற வீதத்திலே) சொற்ப பணத்தை கொடுத்து, அந்த மக்களை வஞ்சித்திருக்கிறார்கள். இதில் மிக கொடுமையான விடயம் என்னவென்றால், ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் சம்பாதிக்கக்கூடிய அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான ’பிரிட்டானியா கார்ப்பரேஷன்’ ஆண்டுக்கு 13000 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

அப்பேர்பட்ட ஒரு நிறுவனம் இந்த தொழிலாளர்களுக்கு 2 லட்ச ரூபாயை மட்டும் கொடுத்து, நான்கு தலைமுறையாக அவர்கள் உழைப்பை சுரண்டி விட்டு, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கியை வைத்திருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு வரி கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்கள். அந்த வரி கொடுக்காமல் இருப்பதற்கு தடையையும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு குற்றப்பின்னணி கொண்ட ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றோம். ஆயிரம் கோடி ரூபாய் வரிபாக்கியை தராத ஒரு கம்பெனியிடமிருந்து தொழிலாளருக்கு தேவைப்படுகின்ற நட்டயீட்டை வாங்கித் தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சனை?

போர்டு நிறுவனத்தில 147 நாள் என்கிற வீதத்தில் நட்டயீடு வேண்டும் என்று தொழிலாளர் போராடிய போது, இதே திமுக அரசினுடைய அமைச்சர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்து நட்டயீட்டை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் இன்று இந்த தொழிலாளர்களுக்கு இதே போல நட்டயீட்டை வாங்கித் தருவதற்கு திமுக அரசுக்கும், திமுக அமைச்சர்களுக்கு என்ன பிரச்சனை? அவர்கள் தமிழ்நாடு அரசினுடைய வரிவருவாயிலிருந்தோ அல்ல வருமானத்திலிருந்தோ கேட்கவில்லை. அவர்கள் உழைத்து கொடுத்த அந்த நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டை கேட்கிறார்கள்? இதை அந்த நிறுவனத்திடமிருந்து வாங்கித் தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சனை என்று பகிரங்கமாகக் கேட்கிறோம்.

அந்த தொழிலாளர்களுக்கு எதிராக, அந்த நிறுவனத்திற்கு சாதகமாக (தமிழ்நாட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரிபாக்கி தராத நிறுவனத்திற்கு சாதகமாக) திமுக அரசு ஏன் இயங்குகிறது? தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர் இந்த விடயத்தில் என்ன செய்கிறார்கள்?

மாஞ்சோலை தொழிலாளர் மீது இவ்வளவு வெறுப்பை காட்டுவதற்கான மற்றும் நிராகரிப்பதற்கான காரணம் என்ன? அதற்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கொள்ளை அடிக்கிறது. தமிழ்நாடு அரசை ஏமாற்றுகிறது. ஆனால் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக, தொழிலாளர்கள் வாழ்வதற்கான எல்லா வசதிகளையும் நீங்கள் துண்டித்துவிட்டு அவர்களை நிராதரவாக வீதியிலே ஏன் விடுகிறீர்கள்?

இந்த தொழிலாளர்கள் காலனிய காலத்திலே கிட்டத்தட்ட ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சாதகமாக இருப்பதுதான் திராவிடம். அதுதான் திராவிட கொள்கை. அறிஞர் அண்ணா காலத்தில் இந்த தொழிலாளர்களுக்கு சாதகமாக திமுகவினுடைய வழக்கறிஞர்கள் போராடி இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் போராடி இருக்கிறார்கள். அறிஞர் அண்ணா காலத்தில் அவர்கள் போராடி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு பிறகு திமுகவிற்கு என்ன ஆனது? ஏன் இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கு கடைப்பிடிக்கிறார்கள்?

இந்த மாஞ்சோலை தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக நாங்கள் பேசி வருகின்றோம். என் அருகில்அமர்ந்து இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் அந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட ஊத்து கிராமத்தினுடைய திமுக கவுன்சிலர். அம்மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள், அவர்களுக்கு ஆதரவாக திமுக அரசு ஏன் இல்லை? இன்றைக்கு வாக்காளர் பட்டியலில் அவர்கள் நிரந்தரமாக வெளியேறியவர்கள் என்று நீக்கப்பட்டிருக்கிறார்கள். திமுக இதைக் கேட்காதா? திமுகவின் மாவட்ட செயலாளர் கேட்க மாட்டாரா? அந்த பகுதியினுடைய மாவட்ட பொறுப்பு அமைச்சர் கேட்க மாட்டாரா? உங்களுக்கு வரக்கூடிய 2000 / 3000 வாக்குகள் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் கம்பெனிக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள்.

மாஞ்சோலை தொழிலாளர் பலரின் பெயர் இன்றைக்கு எஸ்ஐஆர்இல்  நீக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசுவதற்கு யாரும் இல்லை. அவர்களின் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கக்கூடிய பொருட்களும் அவர்களுக்கு கிடைக்காமல் நிறுத்தப்பட்டிருக்குது. எந்த நட்டயீட்டையும் தராமல் மாஞ்சோலை தேயிலை தொழிற்சாலையின் உபகரணங்களை  டிஸ்மேண்டில் (பிரித்தெடுத்து) கொண்டு போய் விட்டார்கள்.

வரி பாக்கியை கொடுக்காமல், தொழிலாளர்களுக்கு முறையான நட்ட ஈட்டை கொடுக்காமல் அந்த நிறுவனத்தினுடைய தொழிற்சாலை உபகரணங்களை எடுத்துக்கொண்டு போவதற்கு தமிழ்நாடு அரசு எப்படி அனுமதி கொடுத்தது? அமைச்சர்கள் எப்படி அனுமதி கொடுத்தார்கள்? மாவட்ட ஆட்சியர் எப்படி அனுமதி கொடுத்தார்?

அந்த நிறுவனம் தமிழ்நாடு மக்களையும் வஞ்சிக்கிறது. தொழிலாளர்களையும் வஞ்சிக்கிறது. இந்த நிறுவனத்தின் முதலாளி ’நூஸ்லிவாடியா பிஜேபிக்கு 25 வருடமாக நன்கொடை கொடுத்து’ அந்தக் கட்சியை வளர்த்தவர். பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவினுடைய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவருடைய பேரன். அப்படிப்பட்டவர் பிஜேபியை வளர்த்திருக்கிறார். பிஜேபியை வளர்த்த கம்பெனிக்கு ஆதரவாக திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

நாங்கள் உண்மையை வெளிப்படையாக சொல்லி வருகிறோம். இதற்காக போராட்டம் நடத்தி விட்டோம். ஊடகச் சந்திப்பு நடத்தி விட்டோம். தொழிலாளர்கள் தொடர்ச்சியாக இந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்? இன்னும் என்ன செய்ய வேண்டும்?

எதிர்கட்சித் தலைவர் ’எடப்பாடி பழனிச்சாமி’ அவர்கள் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார். ஆனால் இதுவரைக்கும் பேசவில்லை. ஏன்? திமுகவுக்கு மாற்று என்று கூறும் அதிமுக ஏன் பேசவில்லை?  இதேபோல பாரதிய ஜனதா கட்சி எதுவும் பேசவில்லை.

ஏனென்றால் பாரதி ஜனதா கட்சிக்கு மாஞ்சோலை முதலாளி படியளக்கிறார். அதனால்  அவர்கள் பேச மறுக்கின்றார்கள். தமிழக உரிமைக்கு போராடுகிறேன், நான் பச்சை தமிழன் என்று சொல்லக்கூடிய சீமானோ அவர் கட்சிக்காரர்களோ மார்வாடி கம்பெனிக்காரனை ஏன் எதிர்க்கவில்லை? இந்த நான்கு கட்சிகளுமே செயல்படவில்லை. விஜய் கட்சிக்கு மாஞ்சோலை என்ற ஒரு இடம் குறித்தோ அங்குள்ள தொழிலாளர் பாதிக்கப்படுவது குறித்தோ ஏதேனும் தகவல் தெரியுமா? என்று எங்களுக்குத் தெரியவில்லை.

வெள்ளையர் காலத்தில் இருந்து ஏமாற்றப்பட்ட இந்த மக்கள் 100 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்கள். இவர்களுக்காக நான்கு கட்சிகளும் (திமுக, அதிமுக, பாஜக, நாதக) பேச முன்வரவில்லை. பிற்கு எதற்கு மக்களுக்கான கட்சி என்று வேடம் போடுகிறீர்கள்? கட்சியை கலைத்துவிட்டு போக வேண்டியது தானே! சுதந்திரம் வாங்கிய பிறகும் வெள்ளைக்காரன் என்ன சம்பளம் கொடுத்தானோ, அதே சம்பளத்தை கொடுத்து வஞ்சிக்கக்கூடிய இந்த தொழிற்சாலையை தட்டிக் கேட்டு, இந்த மக்களுக்கு சனநாயக ரீதியான தீர்வை பெற்று தர முடியாத கட்சிகள் இங்கெதற்கு?

நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பொது சமூகத்தில் இதுகுறித்து பேசி வருகிறோம். வெள்ளைக்காரன் காலத்தில் காலனிய தொழிலாளர்களாக இழுத்து செல்லப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்கள், விடுதலை அடைந்ததுக்குப் பிறகும் வஞ்சித்து ஏமாற்றப்பட்டனர். அதற்குப் பிறகு சொற்ப கூலி உயர்வு கிடைத்தது. அந்த சமயத்தில் மட்டும்தான் திமுக கட்சி அவர்களுக்குத் துணையாக நின்றது. அதற்குப் பிறகு சொற்ப கூலி உயர்வுக்காக தாமிரபரணி ஆற்றில் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு நடந்தது. அதற்கும் நீதி கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு அந்த மக்கள் காடுகளுக்குள் சென்று ஒழியும் அளவிற்கு வன்முறை ஏவப்பட்டது. அதற்குப் பிறகு இன்று தொழிற்சாலையை மூடுவதாகச் சொல்லி விரட்டி அனுப்பப் படுகின்றார்கள்.

தன்னார்வ ஓய்வூதியம் (voluntary retirement) படிவம் என்றால் என்னவென்றே தெரியாத  தொழிலாளர்களிடம், நாகர்கோவிலில் இருந்து வந்த ஒரு தோட்ட அதிகாரி (plantation officer) ஏமாற்றி கையெழுத்து வாங்கியிருக்கிறார். இந்த அதிகாரி மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொழிலாளர்கள் கையெழுத்தை பெற்றுக்கொண்டு, இத்தனை பேர் வேலை விட்டுப் போகின்ற காரணத்தினால் நிறுவனத்தை மூடுவதாக ஒரு கேலிக்கூத்தை நடத்தி இருக்கிறார்கள். இதை தமிழ்நாட்டின் தொழிலாளர் நலத்துறை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடான விசயம். ஏன் தொழிலாளர் நலத்துறை இதில் தலையிடவில்லை? மாவட்ட அதிகாரியும் கேட்கவில்லை, அமைச்சரும் கேட்கவில்லை, தொழிலாளர் உரிமை குறித்து பேச முடியவில்லை என்றால் அந்தத் துறையைக் கலைத்து விடலாம். எதற்கு அந்த அதிகாரிக்கு மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக தர வேண்டும்?

முதலமைச்சரை சென்று சந்திக்கவிருந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களை அனுமதிக்காமல் அவர்களை காவல்துறை விரட்டியிருக்கின்றது. இதை திருநெல்வேலி மாவட்ட திமுக அமைச்சர் கேட்க மாட்டாரா? காங்கிரஸ் கட்சியினுடைய மாவட்ட தலைவர் இது குறித்து பேச மாட்டாரா? இது சமூக நீதி அல்ல, சமூக அநீதி என்றுதான் நாங்கள் குறிப்பிடுகின்றோம்.

மாஞ்சோலை தொழிலாளர்கள் சமத்துவபுரத்தில் வீடும், சுயமரியாதையோடு வாழ்வதற்குரிய வேலைவாய்ப்பும் கேட்கிறார்கள். “அந்த நிறுவனத்தில் நான்கு தலைமுறையாக வேலை செய்திருக்கிறோம். எனவே முறையான நட்ட ஈட்டை தாருங்கள்” என்று கேட்கிறார்கள். இதை செய்ய முடியவில்லை என்றால் ஒரு அரசு செயலற்று போயிருக்கிறது, அதிகாரிகள் செயலற்று போயிருக்கிறார்கள். இந்த அதிகாரிகள் தொழிலாளர் விரோதமாக இருக்கிறார்கள். பெரிய கட்சிகள் கண்டு கொள்ளாத போது அங்கு இருக்கக்கூடிய சிறு சிறு அமைப்புகள் மற்றும் கட்சிகள்தான் இந்த தொழிலாளர்களுக்குத் துணையாக இருக்கிறார்கள். அவர்களுக்கான உதவிப் பொருள்களை வழங்கியிருக்கிறார்கள். சிறு சிறு இயக்கங்கள் இந்த உதவிகளை செய்திருக்கின்றார்கள்.

இயக்குனர் தோழர் சாம் அவர்கள் மாஞ்சோலை குறித்து ஒரு ஆவணப் படம் இயக்கியிருக்கிறார். அந்த ஆவணப் படத்தை திரையிட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. மாஞ்சோலை ஆவணப்படத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று நாங்கள் சொன்ன உடனே மதுரையில் காவல்துறை நெருக்கடி கொடுத்தார்கள். அதேபோல சென்னையில் திரையிடவும் காவல்துறை நெருக்கடி கொடுத்தார்கள். எவ்வளவு காலம் அதிகாரிகள் இதை மறைக்க முடியும்? ஆகவே இதற்கான நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். இந்த ஆட்சியினுடைய சட்டமன்ற கூட்டத்தின் கடைசி கூட்டம் தற்போது நடக்கிறது. இந்த சமயத்திலாவது (ஓரிரு வாரங்களுக்குள்ளாக) அவர்களுக்குத் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று திமுக அரசிடம் நாங்கள் வேண்டுகோள் வைக்கின்றோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு, உடனடியாக அவர்களுக்கான தீர்வை பெற்று தரக்கூடிய வகையிலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றோம்.

திமுக கட்சியிலே அறிஞர் அண்ணா காலத்தில் ஆதரிக்கப்பட்ட தொழிலாளர் உரிமை என்பது இன்றும் மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை மீண்டும் நாங்கள் வலியறுத்துகின்றோம். இப்போது மாஞ்சோலை தொழிலாளர்கள் தங்களுக்கு நடந்ததைப் பற்றி இங்கு பேசுவார்கள். அதை ஊடகங்கள் வெளியே கொண்டு சென்று, இந்த 2000 குடும்பங்கள், அவர்கள் குழந்தைகள், அவர்களுடைய கல்வி, எதிர்காலத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களுக்கு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.

இதனைத் தொடர்ந்து மாஞ்சோலை ஊத்து கிராமத்தினுடைய கவுன்சிலர் தோழர் ’ஸ்டாலின்’ மற்றும் தொழிலாளர்கள் சிலர் தங்களின் தற்போதைய நிலை குறித்தும் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்தும் பேசியது:

நாங்கள் நான்கு தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். அந்த பாம்பே பர்மா கம்பெனி ஆயிரத்து நூறு கோடி வரியை கட்டக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் நட்டம் என பொய் சொல்லி கணக்குகள் காட்டி, எங்கள் உழைப்பை எல்லாம் சுரண்டி விட்டு, தற்போது எங்களுக்கே தெரியாமல் கையெழுத்து வாங்கி வேலையை விட்டு நீக்கி உள்ளது. ஒரு சில ஊடகங்கள் மட்டுமே எங்கள் செய்தியை பரப்புகிறார்கள். அரசாங்கம் அந்த நிறுவனத்திடம் இருந்து 200 நாட்கள் சம்பளத்தை நட்டயீடாக வாங்கி தர வேண்டும். நாங்கள் பலமுறை அமைச்சரே சந்தித்திருக்கிறோம். அவர் மாவட்ட ஆட்சியர் முன்பு பேச்சு வார்த்தை வைப்பார்கள், ஆனால் பேசிய பின் ’செய்கிறோம்’ என சொல்லி அமைச்சர் சென்ற பிறகு, எதுவுமே செய்ய முடியாது என்று கூறுவார்கள். அதை மீறி நாங்கள் கேள்வி எழுப்பினால் நடவடிக்கை எடுப்பேன் என்று போலீஸ்காரர்களை வைத்து மிரட்டுவார்கள். மக்களும் பயப்படுவார்கள், ஏனெனில் 1998 இல் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும் நாங்கள் நீதிக்காக காத்திருக்கிறோம்.

எங்களுக்கு 18 மாதமாக வேலை கிடையாது, நாங்கள் எப்படி சாப்பிட முடியும்? எங்கள் பகுதியில் மின்சாரம், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி என அனைத்தையும் நிறுத்திவிட்டார்கள். அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. எங்களுக்காக கடந்த இரண்டு வருடங்களாக திருமுருகன் தோழரும் குரல் கொடுத்துக்கொண்டு வருகிறார் . ரேஷன் கார்டு நிறுத்தி வைத்ததால் அங்கு பொருட்களும் வாங்க முடியவில்லை, கிட்டத்தட்ட 240 குடும்பத்திற்குமேல் பொங்கல் பரிசு 3000 ரூபாயும் கிடைக்கவில்லை. நான்கு தலைமுறையாக வசிப்பதால் எங்களுக்கு வேறு கிராமத்திலோ நகரத்திலோ உறவுக்காரர்கள் இல்லை, இப்பகுதியில் வாழ்ந்ததால் மற்ற இடங்களை பற்றிய அறிமுகம் கூட எங்களுக்கு தெரியாது. திருமுருகன் காந்தி தோழர் எங்கள் கோரிக்கைகளை நிறைய பேசியுள்ளார். எனவே முதலமைச்சர் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.

தொடர்ந்து பேசிய தோழர் திருமுருகன் காந்தி “பிபிடிசி கம்பெனி கடந்த 28, ஜனவரியில் ஒரு அறிக்கை கொடுத்திருக்கின்றது. அதிகாரிகளினுடைய அழுத்தத்தின் காரணமாக தொழிற்சாலைகள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பிற கட்டடங்கள் அடங்கிய நிலங்களை தகுதியான அதிகாரிகளின் உத்தரவின் படி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும்படி நடவடிக்கைகளை பிபிடிசி நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது” என்று அறிக்கை கொடுத்திருக்கின்றது.

அந்த கம்பெனி திமுக அரசு அதிகாரிகளை நேரடியாக குற்றம் சாட்டி அறிக்கை கொடுத்திருக்கின்றது. அந்த மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினாலும் அது பெரியளவில் செய்தியாக வருவதில்லை. ஏனென்றால் அது ஒரு தனித்த பகுதியாக, காட்டுப்பகுதியாக இருக்கின்றது. உள்ளே செல்வதற்கு அதிகாரிகளின் அனுமதி வாங்க வேண்டும். இதனால் அங்கு நடக்கும் விடயங்கள் வெளியுலகிற்குத் தெரிவதில்லை.

மூன்று/ நான்கு ஆண்டுகளாக அந்த மக்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கான உரிய கவனம் பெறாமல், நீதி கிடைக்காமல் போனதிற்குக் காரணம் தமிழ்நாட்டினுடைய பிரதான கட்சிகள் இந்த மக்களை முற்றிலுமாக கைவிட்டு விட்டார்கள் என்பதுதான் முற்றிலும் உண்மை.

அவர்களுக்கான உரிய நட்டஈட்டைக் கொடுத்து, உரிய வாழ்வாதாரத்தை கொடுத்து விட்டால் அவர்கள் மாற்று வேலைத் திட்டங்களுக்குப் போய்விடுவார்கள். அதைக் கொடுக்காமல் ரேஷன் பொருட்களைத் தடுப்பது, மின்சாரம், தண்ணீர், பேருந்து வசதி இவற்றைத் தடுப்பது போன்றவற்றை அதிகாரிகள் செய்கிறார்கள். இவர்களின் ஓட்டுரிமையும் பறிக்கப்பட்டிருக்கின்றது.

வால்பாறை, ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்கள் நிலைமையும் மாஞ்சோலை தொழிலாளர்கள் நிலைமையும் வேறுவேறு. மாஞ்சோலை தனித்த பகுதி. ரிசர்வ் பாரஸ்ட் நடுவில் இருக்கக்கூடிய ஒரு எஸ்டேட். அங்கிருந்து சமவெளிப்பகுதிக்கு சென்று வர மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்கு பேருந்து வசதி கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் அதை நிறுத்தி இருக்கிறார்கள்.

பிற எஸ்டேட் தொழிலாளர்கள் வேறு தொழிற்சாலைக்கு செல்லலாம். சமவெளியில் இருப்பதால் வேறு கம்பெனிக்கு கூட மாறலாம். ஆனால் மாஞ்சோலை தொழிலாளர்கள் அந்த இடத்தை விட்டு வெளிய போக இயலாது. கிட்டத்தட்ட 8000 ஏக்கரில் ஐந்து கிராமங்கள் உள்ளே இருக்கின்றன. இன்னும் அங்கே 500 குடும்பங்களில் 2000 பேர் இருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் மறுக்கப்படும் அவர்களின் துயரங்களை ஊடகங்கள் வெளியுலகிற்கு அறிவிக்க வேண்டும். நன்றி!” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »