![](https://i0.wp.com/may17kural.com/wp/wp-content/uploads/2025/02/Honorary-lectures-protest.jpg?resize=819%2C1024&ssl=1)
அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லட்டும்! ஜனநாயாக ரீதியிலான போராட்டத்தை நசுக்க வேண்டாம்! யுஜிசி பரிந்துரைகளின்படி தீர்வு வழங்கிடு! – மே பதினேழு இயக்கம்
தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது பணிப் பாதுகாப்பிற்காக நீண்டகாலமாக போராடி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டிய அரசு, கௌரவ விரிவுரையாளர்களை உழைப்புச் சுரண்டல் செய்து வருகிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய தமிழ்நாடு திமுக அரசு அதனை புறக்கணித்து வருகிறது. இதனால் தற்போது வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் இந்த போராட்டத்தை மே பதினேழு இயக்கம் முழுமையாக ஆதரிக்கின்றது. அவர்களது நியாயமான கோரிக்கைகள் வெல்ல வாழ்த்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என 171 கல்லூரிகளில் 7300க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கத்தில் ரூ.7500 என்றளவில் இருந்த மதிப்பூதியம் பலகட்ட போராட்டடத்திற்கு பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.20,000 மதிப்பூதியம் பெறுகின்றனர். பிற அரசுப் பணியாளர்களுக்கு உள்ளது போன்ற பணிப் பாதுகாப்பு, பணிக்கொடை, ஊதிய உயர்வு போன்ற எதுவும் இல்லை. 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம். கல்லூரி விடுமுறை காலமான மே மாதத்திற்கு ஊதியம் கிடையாது. நாள்தோறும் விலைவாசி உயர்ந்துவரும் நிலையில் குறைந்த ஊதியத்தை கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளனர் கௌரவ விரிவுரையாளர்கள்.
கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுத்த சென்னை உயர்நீதிமன்றம், யுஜிசி பரிந்துரைகளின்படி 2019 முதல் ரூ.50,000 சம்பளம் என நிர்ணயித்து நிலுவைத் தொகையுடன் வழங்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு இதனை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகிறது. இதுவரை இறந்து போன கௌரவ விரிவுரையாளர்களுக்கு இழப்பீடு என்று எதுவும் வழங்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு, பெண்களுக்கு, ஓய்வு பெற்றவர்களுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் இல்லை. தன் சொந்த குடிமக்களிடமே அரசு இவ்வாறு பாரபட்சமாக நடந்துகொள்வது அப்பட்டமான உழைப்புச் சுரண்டல். திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இச்சூழலில்,யுஜிசி பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கிடுக, படிப்படியாக கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக என்ற இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு மேலாக அந்தந்த கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடுபவர்களை ஒடுக்கும் விதமாக அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நெருக்கடி கொடுப்பதும், மெமோ அளிப்பதும் என மனிதாபிமானற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராடும் நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்கின்றனர்.
கடந்த அதிமுக அரசு கௌரவ விரிவுரையாளர்களை கைவிட்ட நிலையில், தற்போதைய திமுக அரசு அவர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. முதற்கட்டமாக போராடுபவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, யுஜிசி பரிந்துரைகள் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், போராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து, ஊதியப் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டுமெனவும், பிடித்தம் செய்த ஊதியத்தை அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. போராடும் கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் என்றென்றும் துணை நிற்கும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
02/02/2025