‘பிளாக் மிரர் – காமன் பீப்பிள்’ வலைத் தொடர் – ஒரு பார்வை

மருத்துவத்துறை தனியார்மயமாக்கப்படுவதின் கோர விளைவுகளை கொரோனா காலத்தில் நாம் கண்கூடாகப் பார்த்திருப்போம். நோயாளிகளின் நெருக்கடியைப் பயன்படுத்தி, பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டே ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் படுக்கைகள் கொடுத்த செய்திகள் எல்லாம் அன்றாடம் நம்மைச் சூழ்ந்திருந்தது. மறுபக்கம் நாம் அன்றாடம் காணொளிகள் பார்க்க, பாடல்கள் கேட்க பயன்படுத்தப்படும் செயலிகள், காணொளியின் முன்பகுதி, நடுப்பகுதி மற்றும் சுவாரசியமான பகுதிகளில் விளம்பரங்களும், விளம்பரங்களின்றி இந்த செயலிகளை பயன்படுத்த மாத சந்தா செலுத்துதல் அதிலும் பணத்திற்கு ஏற்ப சந்தா திட்டங்கள் என தொழில்நுட்பம் சார்பானவையும் சூழ்ந்தன.  

எதிர்காலத்தில் இதற்கு சற்றும் குறையாத அளவில், வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கையகப்படுத்திக் கொண்டு முதலாளித்துவம் மருத்துவத் துறையில் நிகழ்த்தப் போகும் பகட்டு நாடகங்களை காட்சிப்படுத்தி இருக்கிறது அண்மையில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிய “பிளாக் மிரர் (Black Mirror)” வலைத் தொடரின் சீசன் 7-ன் “காமன் பீப்பிள் (Common People)” என்கிற முதல் அத்தியாயம்,

‘பிளாக் மிரர்’ என்பது அதிநவீன தொழில்நுட்பத்தை கைகொண்ட முதலாளித்துவத்தின்  கோரமுகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. இந்த தொடரின் ‘காமன் பீப்பிள்’ அத்தியாயம் அமெரிக்காவின் சாமானிய குடிமக்கள், மேம்பட்ட மருத்துவ சிகிச்சையின் பெயரிலும், முதலாளித்துவ அமெரிக்காவில் பெருநிறுவனங்களால் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வக எலிகளாகவும் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுகிறது. இந்த அத்தியாயத்தில் கிரிஸ் ஓ’டவுட், கணவன் கதாபாத்திரத்தில் “மைக்”காகவும், ரஷிதா ஜோன்ஸ் மனைவி கதாபாத்திரத்தில் “அமாண்டா”வாகவும் நடித்திருக்கிறார்கள். அல்லி பான்கிவ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், “மைக்” வெல்டிங் தொழிற்சாலையில் ஊழியராகவும் “அமாண்டா” பள்ளி ஆசிரியையாகவும் தேவைகளை தன்னளவில் நிறைவு செய்து கொண்டும், சிறு சிறு சந்தோஷங்களுக்கு நேரம் அளித்தும், நடுத்தர வர்க்கப் பின்னணியில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

சட்டென்று ஒரு நாள் பாடம் எடுத்துக் கொண்டிருந்த அமாண்டா பள்ளியில் மயங்கி விழுந்து சுயநினைவை இழக்கிறாள். தகவல் அளிக்கப்பட்டு மருத்துவமனையை வந்தடையும் மைக் மனைவியின் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் உரையாடுகையில், “ சில மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் முடியாதென்றிருப்பேன், ஆனால் இப்போது சாத்தியம்தான்” என்பார் மருத்துவர். கதை வருங்காலத்தில் நிகழ்வதை அது நமக்குச் சுட்டிக்காட்டும். மனைவியை மீட்டெடுக்கும் அவாவில் மருத்துவரை உடனே அதற்கு ஏற்பாடு செய்யச் சொல்வார் மைக். பின்பு, ரிவர் மைண்ட் என்கிற நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் அவரைச் சந்திக்கையில் மூளையில் வளர்ந்திருக்கும் கட்டியை நீக்கிவிட்டு செயற்கை திசு நிரப்புவதாகவும், இந்த அறுவை சிகிச்சைக்கு முன் நீக்கப்படவிருக்கும் மூளையின் கட்டி வளர்ந்த பகுதி சேமித்து வைத்திருக்கும் அமாண்டாவின் நினைவுகளை கணினியில் தரவிறக்கம் செய்து பின்னர் அந்த நினைவுகளை செயற்கை திசுக்களில் செலுத்தி அமாண்டாவை உயிருடனும், நினைவுடன் வைத்திருக்கலாம். ஆனால் அதைக் கணினி மூலம் செயல்படுத்த மாதாந்திரம் 300 டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறுவார். இறுதியில், ஆபத்தெதுவும் இல்லையே என்ற மைக்கின் கேள்விக்கு தன்னையே உதாரணம் காட்டி உறுதியளிப்பார் ரிவர்மைண்ட் அதிகாரி. லேசர் அறுவை சிகிச்சை முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார் அமன்டா.

பெரும்பான்மை நடுத்தரவர்க்க மக்கள் அதிநவீன மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை அணுகும்போது முதலாளித்துவ வலையினுள் பக்குவமாக உள்ளிழுக்கப்படுவதை மேற்கூறிய காட்சி விவரிக்கும். எதிர்காலத்தில் அது எவ்வளவு மோசமாக எளிய மக்களை பாதிக்கப்போகிறது என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை இதில் பார்க்கலாம்.

புதிதாகச் செலுத்த வேண்டிய 300 டாலர் பணத்திற்காக கூடுதல் நேரம் வேலை பார்ப்பார் மைக். அமாண்டாவும் பள்ளியில் தன்னுடைய வேலையைத் தொடர்வார். பிறகொரு திருமண நாளில், நகரத்தை விட்டு வெளியேறி ஜுனிப்பர் என்ற இடத்திற்கு செல்கையில் சட்டென அமாண்டா மயங்கி சுயநினைவை இழந்து விடுவார். பதட்டமடைந்து நேரே ரிவர் மைண்ட் அதிகாரியை சந்திக்கச் செல்வார்கள்.”நீங்கள் பயன்படுத்தும் திட்டம் குறிப்பிட்ட பரப்பளவிற்கு உட்பட்டு தான் இயங்கும் என்றும், இன்னும் விரிவான பயன்பாட்டிற்கு மேலும் 500 டாலர் வீதம் மாதம் 800 டாலர் செலுத்தி ரிவர் மைண்ட் பிளஸ் என்ற திட்டத்தை வாங்க வேண்டும்” என்பார் அதிகாரி‌. அங்கு தான் துவங்கும் முதலாளித்துவத்தின் நூதனத் திருட்டு.

கடும் நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் சிகிச்சைக்கான போதிய பணம் இல்லாத போதும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தனியார் மருத்துவமனையை அனுகுகிறார்கள். அங்கோ, நோயாளிகளின் உணர்வுகளை மூலதனமாக்கி தனியார் வங்கிகளும், மருத்துவமனைகளும் தவணைமுறை என்ற பெயரில் கடனளித்து சுமையை மேலும் உயர்த்துவது இங்குள்ள தனியார் மருத்துவமனைகளின் வாடிக்கையாகிவிட்டது.

அதையும் தன் மனைவிக்காகப் பெற்றுக்கொள்வார் மைக்‌. ஆனால் முன்பு போல் கூடுதல் நேர வேலையில் கிடைக்கும் பணத்தை மட்டும் வைத்து சமாளிக்க இயலாத நிலை ஏற்படும். அதை ஈடுகட்ட ஒரு இணைய விளையாட்டை ஆட விழைகிறார் மைக். கேலியான குரூரமான விடயங்களை இணையத்தில் இணைந்திருப்பவர்கள் சொல்ல, அதைச் செய்து முடித்தால் பணம் தருவார்கள் என்பதான விளையாட்டு அது. அதன்படி ஒரு நாள் மைக், தன் சிறுநீரைத் தானே குடிப்பதெல்லாம் கொடூரத்தின் உச்சம்.

நிகழ்காலத்தில் நாம் வைத்திருக்கும் நமது கைபேசியில், இணைய சேவைக்கான திட்டம் என அனைத்தையும் நாம் நம் சொந்த செலவில் பயன்படுத்துவது மட்டுமில்லாமல் ஒரு காணொளியை விளம்பரமில்லாமல் பார்ப்பதற்கு மேலும் ஒரு சந்தாவை நாம் இச்செயலிகளுக்கு செலுத்துகிறோம். செலுத்த முடியாதவர்கள் விளம்பரத்துடனேயே  காணொளிகளைப் பார்க்கின்றனர். இது இல்லாமல் நாம் ஒரு பூவைப்பற்றி பேசினால் கூட அது சம்பந்தமான விளம்பரங்கள் நம் கைப்பேசியில் அடுத்த நொடியே பார்க்கலாம். அந்த அளவிற்கு நம் கைப்பேசிகளை வைத்தே நம்மை உளவு பார்க்கிறது முதலாளித்துவம்.

இது எதிர்காலத்தில் எந்த உச்சத்தைத் தொடப்போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு காட்சி,

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அமாண்டா தான் இப்பொழுது நாம் வைத்திருக்கும் கைபேசி அவரின் காதுகளும், கண்களும் தான் நமது கைப்பேசியின் ஒலிவாங்கி மற்றும் கேமரா. அவர் செல்லும் இடமெல்லாம் பார்க்கும் மற்றும் கேட்கும் விடயங்களை வைத்து ரிவர் மைண்ட் நிறுவனத்தின் மற்ற பொருட்களின் விளம்பரங்களை தன்னை அறியாது எதிர் இருப்பவர்களிடம் ஒப்பித்துக் கொண்டிருப்பார் அமாண்டா. அது மாணவர்களிடத்திலும் சக ஆசிரியர்களிடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவதால் ஆசிரியர் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்படும். ஒரு கட்டத்தில் அமாண்டா அறுவை சிகிச்சைக்கு முன்பு தன் வகுப்பில் பழைய காலணிகள் அணிந்திருக்கும் ஒரு மாணவி கேலிக்குள்ளாக்கப்படுவதை எதிர்த்து பேசும் அமாண்டா, அறுவை சிகிச்சைக்கு பிறகு அதே மாணவியின் காலணிகளை எதேச்சையாக பார்க்கும்போது, ரிவர் மைண்ட் நிறுவனம் அதனை பார்த்து, புதிய காலனிக்கான விளம்பரத்தை அமாண்டாவின் வாயாலேயே அந்த மாணவியிடம் சொல்ல வைக்கிறது முதலாளித்துவம்.

மேலும், 12 மணி நேர உறக்கத்திற்குப் பின்னும் அயர்ச்சியும் தூக்கமின்மை போன்ற உணர்வும் அமாண்டாவிற்கு ஏற்படும்.

இந்த முறை, “உங்கள் அயர்ச்சிக்குக் காரணம் தூக்கத்தின் போது மூளையின் ஆற்றலை ரிவர் மைண்டின் சர்வர் உறிஞ்சிக் கொள்ளும் என்றும் அதைத் தடுக்கவும் விளம்பரங்கள் இல்லா திட்டத்தைப் பெறவும் மேலும் கூடுதலாக 1000 டாலர் செலுத்தி ரிவர்மைண்ட் லக்ஸ் என்கிற விஐபி திட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என்பார் ரிவர் மைண்ட் அதிகாரி. கோபமும் இயலாமையும் ஒரு சேர செய்வதறியாது குழம்பும் தருவாயில் மைக்கின் வேலையும் பறிபோகும்.

மேற்குறிப்பிட்ட இணைய விளையாட்டில் எதிரிருப்பவரை துன்பத்திற்குள்ளாக்கி மகழ்ச்சியடையும் காட்சி, உலகம் முழுதும் உள்ள வலதுசாரி கும்பல் சிறுபான்மையினரை துன்புறுத்தியும், வெற்றுக் கூச்சலிடச் சொல்லி இன்பம் அடையும் நிகழ்வுகளை பிரதிபலிக்கிறது. OTT தளங்களில் நாம் எதிர்கொள்வதைப் போலவே இதிலும் சந்தா செலவும் மாதந்தோறும் அதிகரித்து வருகிறது, அதாவது சேர்ப்புகள் இல்லை, பயனர்களின் எண்ணிக்கை மற்றும் பிற கூடுதல் அம்சங்கள் இருக்கும். இந்த உள்வைப்பு சந்தாவில் சந்தாதாரர் குறைந்த தூக்க நேரம், கூடுதல் விளம்பரங்கள் இல்லை, நீண்ட கவரேஜ் பகுதிகள் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சேவைகளைக் கொண்டிருப்பார்.

முதலில் போதாத அம்சங்களுடன் கூடிய திட்டத்தை பயனர்களை உள்ளிழுக்க குறைந்த கட்டணத்தில் கையளித்து, போகப்போக அத்தியாவசிய அம்சங்களைப் பெறுவதற்கே அதிக கட்டணம் வசூலிக்கும் முதலாளித்துவ மாதிரியையே தனியார் மருத்துவமனைகளும் கையால்கின்றன.

பிறகு, ஒரு வருடம் கழித்து என விரியும் திரையில், பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆசையாக வாங்கி வைத்திருந்த மரத்தொட்டிலை விற்று, அந்தப் பணத்தில் 30 நிமிட ரிவர் மைண்ட் பூஸ்டர் திட்டத்தை அமன்டாவிற்கு அளித்துவிட்டு, அது முடியும் தருவாயில் விளம்பரங்களை ஒப்பிக்கத் தொடங்கும் அமாண்டாவை கட்டிலில் கிடத்தி தலையணையால் முகத்தை அழுத்தி உயிரிழக்கச் செய்துவிட்டு, மைக் தானும் ஒரு கத்தியுடன் கதவை அடைப்பதாக முடிகிறது படம்.

சுகாதாரத்துறையை தனியார் நிறுவனங்களுக்கு அரசு திறந்துவிடுவதன் விளைவே இது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதேயில்லை. அது தனியார் மருத்துவமனைகளுக்குத் தான் செல்கிறது. அது கடைசி வரை உழைக்கும் நடுத்தர வர்க்க மக்களால் அணுகமுடியாத இடத்தையே சென்றடைகிறது. தமிழ்நாடு மாதிரி மருத்துவத்துறையில் சிறந்தோங்கும் மாநிலம் வெறும் கல்லூரி எண்ணிக்கையிலும், நவீன மருத்துவ உபகரணங்களை வாங்கிக் குவிப்பதில் மட்டும் நடந்து விடவில்லை. உழைக்கும் வர்க்கத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து இட ஒதுக்கீடு மூலம் மருத்துவர்களாகும் பெரும்பாலானோர் எளிய மக்கள் . அனைவருக்கும் அனைத்து மருத்துவ உதவிகளும் கிடைக்கவேண்டும் என்று ஒரு கட்டத்தில் சமூக நீதி அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பதை மீறி அது எளிய பின்புலங்களிலிருந்து மருத்துவர்களாக வரும் நபர்களின் குணமாகவே மாறிவிடுகிறது. தமிழ்நாட்டின் மருத்துவத்துறை வளர்ச்சியின் மிகமுக்கிய காரணம் இது.

ஆனால் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் மூலம் எளிய பின்புலத்திலிருந்து மருத்துவர்களாக வேண்டும் என்ற கனவுடன் வருவர்களை கொலை செய்துவிடுகிறது முதலாளித்துவமும், அதன் அடியாளான பாசிச இந்துத்துவ பாஜக அரசாங்கம். மாறாக பணத்தின் மூலமும், வசதி வாய்ப்புகள் நிறைந்த நபர்கள் நீட் தேர்வை வைத்து மருத்துவர்களாக வரும் பட்சத்தில் அவர்களிடத்தல் எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தை காண்பது கேள்விக்குறியைத் தாண்டி சாத்தியமில்லாத ஒன்று.

இங்குள்ள முதலாளித்துவ ஆதரவு ஆட்சியாளர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

கவர்ச்சியாக தோற்றமளிக்கும் முதலாளித்துவ பூதம், சாமானியர்களின் நுகர்வு உணர்வை சிறுகச் சிறுக உந்திப் பெருக்கி, பொருளியலாகவும் உளவியலாகவும் மனிதனை நிர்மூலமாக்கும் செயல்திட்டத்தை அரங்கேற்றும் போக்கை, எதிர்கால மருத்துவத்துறையைக் கொண்டு பாவித்துக் காட்டுகிறது “ காமன் பீப்பிள் ”.

இது போன்று பல கோணங்களில் முதலாளித்துவம், தொழில்நுட்பத்துடன் கைகோர்த்து எளிய மக்களை எப்படி வதைக்கிறது என்று ‘பிளாக் மிரர்’ தொடர் முழுக்க பல கதைகள் சுவாரசியமாகவும், சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனை நாம் அனைவரும் காண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »