பொதுவுடமை சித்தாந்தத்தை பகடி செய்யும் மற்றுமொரு படைப்பா “PLURIBUS”?

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு, சுமார் 600 ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருந்து ஒரு சமிக்ஞை பூமியை நோக்கி வருவதைக் கணினியில் காண்கின்றார்கள். ஒரு வித கிருமிக்கான மரபணு தகவல் அந்த சமிக்ஞையில் இருப்பதை கண்டறிகின்றனர். அதனை எலிகளுக்கு செலுத்தி சோதிக்கும் ஆராய்ச்சியின் போது நடக்கும் சிறு தவறால் அந்தக் கிருமி ஒரு பெண்ணுக்கு தொற்றிவிடுகிறது. அது மற்றவர்களுக்குப் பரவியதா? அந்த கிருமியால் பாதிக்கப்பட்டால் என்னவாகும் என்பதே “பிரேக்கிங் பேட்” (Breaking Bad) புகழ் இயக்குநர் வின்ஸ் கில்லிகன் (Vince Gilligan) அவர்களின் அடுத்த வலைத்தொடரான “ப்ளூரிபஸ்” (Pluribus). இதனை ஆப்பிள் டிவி தயாரித்து வெளியிட்டுள்ளது.

அது என்ன மாதிரியான கிருமி?, அது மனிதர்களை என்ன செய்யும்?, இரத்தவெறிப் பிடித்து ஓடச் செய்யுமா?, அல்லது நோயுற்று சாக செய்யுமா?, என்றால், இவை எதுவும் இல்லை, அது உங்களை என்றுமே புன்னகையுடன் வைத்திருக்கும். அது மட்டுமல்லாமல் கிருமியால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அனைவருமே குழு மனப்பாங்கு (Hive Mentality) முறையில் இயங்கத் தொடங்கி விடுவார்கள். ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள்; ஆனால் அனைவர் நினைப்பதும் அனைவருக்கும் தெரியும். மின்காந்த அலைகள் மூலம் அனைவரும் தங்களது எண்ணங்களை மற்றவர்களுக்குக் கடத்தி செயல்படுவார்கள். அவர்கள் உயிர்களைக் கொன்று உண்ண மாட்டார்கள், மரத்திலிருந்து ஒரு கனியைப் பறித்து உண்பதைக் கூட கொலைக் குற்றமாக கருதுவார்கள். அவர்களுக்கு என்று தனியான ஆசைகள் எதுவும் கிடையாது. இப்படி வினோத பாதிப்புகளுக்கு மனிதனை மாற்றக் கூடிய  கிருமி, பதினொரு நபர்களைத் தவிர்த்து உலகில் உள்ள எட்டு பில்லியன் மக்களுக்கும் தொற்றி விடுகிறது.

பாதிப்புக்குள்ளாகாத நபர்கள் கிருமி தாக்கப்பட்டவர்களைப் போல் மாறினார்களா? அல்லது அந்த பதினொரு பேரும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களைக்  காப்பாற்றினார்களா? இத்தகைய சுவாரசியங்களுடன் இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளே இந்த வலைத்தொடரின் கதைக்களம்.

உலகப்போர்கள் காலம் தொட்டு, இன்னும் சொல்லப்போனால் அதற்கு முந்தைய காலனிய காலம் முதல் இன்று வரை அமெரிக்க சினிமாவின் பிரச்சாரம் ஒன்றுதான். மேற்குலகத்தவர்கள் தான் பூமியைக் காக்கவந்த இரட்சகர்கள் போலவும் இலத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு மற்றும் பொதுவுடைமை சித்தாந்தத்தை பின்பற்றும் நாடுகள் அனைத்தும் மனிதகுலத்திற்கு எதிரானவை என்பதுதான் அந்தப் பிரச்சாரம். இவற்றை நிறுவும் விதமாக மட்டுமே இவர்களின் கதைக்களங்கள் அமையும். 

ப்ளூரிபஸ்-ன் (Pluribus) கதைக்களம் மற்றும் அதன் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், இதுவும் இவர்களின் பிரச்சார வடிவத்தின் மற்றுமொரு படைப்பு தானோ என்கிற சந்தேகத்தை  எழுப்புகிறது. 

கதையின்படி பாதிக்கப்பட்ட எட்டு பில்லியன் மக்களுமே அந்த பதினொரு பேரை பார்த்துக் கொள்வதும், அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதுமே தங்களின் கடமையாக நினைப்பார்கள். பதினொரு பேரில் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்ட ஒரு நபர் மீது கோவப்பட்டால் அவர்களுக்கு வலிப்பு ஏற்பட்டு துடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதே துடிப்பு மீதுமுள்ள 8 பில்லியன் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நடக்கும். இது நடந்து முடிந்து சில நொடிகளில் உலக அளவில் உடல் வலுவற்ற நிலையிலும், வயது முதிர்ச்சி அடைந்த நிலையிலும் இருக்கும் மனிதர்கள் உயிரிழப்பார்கள். இப்படி பல மில்லியன் மனிதர்கள் ஒரே நேரத்தில் உயிரிழக்க நேரிடும். அப்படி கதையின் நாயகி “கேரல்” (Carol) ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரிடம் கோபித்துக் கொள்ள அதனால் பாதிப்படைந்து பல மில்லியன் மனிதர்கள் உயிரிழப்பார்கள்.

இந்த நிகழ்வைக் குறிப்பிடும் பொழுது கதாநாயகி கேரல் “I’m the biggest mass murderer since Stalin”, (ஸ்டாலினுக்கு பிறகு நான் தான் மாபெரும் கொலையாளி) என்று கூறுவார். ஹிட்லரின் நாஜி படைகளிடமிருந்தும், மானுட குலத்திற்கு ஏற்படவிருந்த மாபெரும் ஆபத்திலிருந்தும் மக்களைக் காப்பாற்றியவர் சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஜே.வி. ஸ்டாலின். மேற்குலகத்தின் மாபெரும் சதிகளுக்கு மத்தியில் முற்போக்கு சோசலிச சமூகமாக சோவியத் யூனியனை வளர்த்தெடுத்த அவரைத் தனது பிரச்சார எந்திரம் மூலம் சர்வாதிகாரி, கொடுங்கோலன் என சித்தரிக்க பல முயற்சிகள் நடந்து இருக்கிறது.

தோழர் ஜே.வி. ஸ்டாலின் அவர்களை சிறு வயதில் “கோபா” (Koba) என்று அழைப்பார்கள். கோபா என்றால் ஜார்ஜியா மொழியில் “மக்களின் பாதுகாவலன் என்று பொருள்”. பின்னாளில் “பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்” எனும் திரைப்படத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியால் வெறிபிடித்து களேபரம் செய்யும் குரங்குத் தலைவனின் பெயர் “கோபா” (Koba) என்று வைக்கப்படட்து.

ப்ளூரிபஸ்-ன் இயக்குநர் வின்ஸ் கில்லிகனின் முந்தைய படைப்பான “பிரேக்கிங் பேட்-ல்” அருங்காட்சியகத்தில் காதாபத்திரங்கள் பேசிக் கொண்டிருப்பதாக இடம்பெறும் காட்சியில் துளியும் சம்பந்தம் இல்லாமல் அவர்கள் பின்னால் “Fall of Communism” (பொதுவுடைமை சித்தாந்தத்தின் வீழ்ச்சி) என்று ஒரு புகைப்படம் இருக்கும். இப்படியாகத்தான் மேற்குலகம் தரம் தாழ்ந்த காட்சிப்படுத்தலை காலந்தோறும் செய்து கொண்டிருக்கிறது.

2019-ம் ஆண்டு வெளியான செர்னோபில் (Chernobyl) எனும் வலைத்தொடரில் ஒரு காட்சியில், கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களைக் காட்டிலும் பல மைல்களை வேகமாக கடந்து கதிர்வீச்சீனை பரப்பும். அக்காட்சியின் இறுதியில் அந்த பகுதியில் இருக்கும் தெருநாய்களைக் கொன்று விடலாம் என முடிவெடுத்து, தேடித்தேடி தெருநாய்களை சுட்டுக் கொள்வது போல் ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும். இதன் நோக்கம் சோவியத் யூனியனை சேர்ந்தவர்கள் இரக்கமற்றவர்கள், அவர்கள் ஒரு தெரு நாய்க்குகூட இரக்கம் காட்டமாட்டார்கள் என்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு நிறுவுவதே ஆகும். ஆனால் உண்மை என்னவெனில் பாதிக்கப்பட்ட நாய்கள், பாதிக்கப்படாத மற்ற நாய்களுக்கு கதிர்வீச்சினை பரப்பிவிட்டு, மற்ற நாய்களும் மேலும் அதிகமாக கதிர்வீச்சினை பரப்பத் தொடங்கி விடும் என்பதற்காகவே அவற்றைக் கொல்ல முடிவெடுத்திருப்பார்கள். பாதிக்கப்பட்ட நாய்களைத் தேடி அறியும் முயற்சியில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இறந்த சோவியத் படையினர் ஏராளம்.

இதன் பின்னணியில் இருந்து ப்ளூரிபஸ்-யை பார்க்கையில் இதுவும் ஒரு மேற்கத்திய பிரச்சாரத் திரைப்படம் தான் எனும் சந்தேகம் மேலும் வலுவடைகிறது.

இவற்றைத் தாண்டி மிக முக்கியமானது ப்ளூரிபஸ்-ன் கதைக்களம். அந்தக் கிருமி மக்களை என்னவாக மாற்றுகிறது?

தவறு செய்வதுதான் மனித இயல்பு, ஆனால் ஒரு ஆப்பிளைக் கூட மரத்திலிருந்து பறிக்க மாட்டேன், அதுவாகவே கிழே விழுந்தால் அதனை எடுத்து உண்ணுவேன் எனும் இயற்கையின் உணவுச் சங்கிலியிலிருந்து விலகும் அளவிற்கு அவர்கள் மாறிப் போகிறார்கள்.

இதற்குப் பிறகுதான் கவனிக்கப்பட வேண்டிய சித்தரிப்புகள் வருகின்றன. அவர்கள் அனைவரும் “கூட்டு வாழ்க்கை”(Communal life style)முறையை மேற்கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் பகுதி வாரியாக ஒரு பெரிய அரங்கத்தில் வசிக்கிறார்கள், தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பங்கிட்டு மீதத்தைச் சேமித்து வைக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் இடம் போக மற்ற இடங்களின் மின் பயன்பாட்டை துண்டித்து மின்சாரத்தை சேமிக்கிறார்கள். கிருமியால் பாதிக்கப்பட்டதால் இப்பொழுது அனைவரும் ஒருவர் தான். இதில் பணக்காரர் – ஏழை, தலைவன் – தொண்டன் என எந்தப் பாகுபாடும் கிடையாது. இவர்களுக்குக் கோவம், பாசம் என எதுவுமே கிடையாது. இவர்களை என்ன செய்தாலும் இவர்கள் புன் முகத்துடனேயே இருப்பார்கள். மனித உணர்ச்சிகளில் மகிழ்ச்சி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.

இந்த தூய்மைவாதம் எப்படி மனிதத் தன்மையாக இருக்க முடியும் என்று கதாநாயகி இவர்களை இயல்பு நிலைக்கு மாற்றத் துடிக்கிறார். ஆனால் பாதிக்கப்படாத பதினொரு பேரை தங்களில் ஒருவராக மாற்ற இவர்களும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

கிருமியால் பாதிக்கப்படாமல் இருக்கும் பதினொரு மனிதர்களில் ஒருவர் செயற்கை முறையில் தன்னை அவர்களுள் ஒருவராக மாற்றிக்கொள்ள விரும்புவார். அவர் அந்தக் கிருமியை உட்கொள்வதற்கு முன்னால் அவரின் ஆட்டுக்குட்டியை மடியில் வைத்துக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பார். அந்தக் கிருமியை உட்கொண்ட ஒரு சில நிமிடங்களிலேயே அவர்களுள் ஒருவராக அந்த பெண் மாறிவிடுகிறார். அந்த ஊரில் உள்ள அனைவரும் அந்த பகுதியை காலி செய்து கிளம்பிக் கொண்டிருக்கையில் அந்த ஆடு ஆவரின் பின்னால் ஓட அவர் அந்த ஆட்டினைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது போல எடுக்கப்பட்ட காட்சியின் மூலம் அவர்களுக்கு எந்த உயிரிடத்திலும் அன்பு கிடையாது என்பதைக் கடத்துகின்றார். அதே போல அந்த பெண் அவர்களுள் ஒருவராக மாறும் வரையில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பாட்டுப்பாடி அவளை மகிழ்விப்பார்கள். அந்த கிருமியை அவள் உட்கொண்டபின் அவர்களுள் ஒருவராக மாறத் தொடங்கிய நொடியே அவர்கள் பாடுவதை நிறுத்தி விட்டு கிளம்பி விடுவார்கள். ஏனெனில் அவர்களின் நோக்கம் மற்றவர்களின் மகிழ்ச்சி அல்ல. அவர்களின் நோக்கம் அனைவரையும் அவர்களைப் போலவே மாற்றுவதுதான்.

பொதுவுடமை சித்தாந்தத்தின் அடிப்படை என்பது உலகில் உள்ள அனைத்தும்  அனைவருக்கும் சமம் என்பதாகும். இதன் அடிப்படையில் இயங்கும் ஒரு குழுவோ அல்லது ஒரு நாடோ எப்படி இயங்குமோ அதே போலத்தான் வேற்று கிரக கிருமியால் பாதிக்கப்பட்ட மக்களும் இயங்குகிறார்கள். ஆனால் தொடரை பார்க்கும் நமக்கே  இது எப்படி சரியாக இருக்க முடியும் என்று வெறுப்படைந்து அந்த கதையின் நாயகி “கேரல்” (Carol) பக்கம் நிற்க வைத்துவிடும் அளவிற்குதான் கதைகளம் இருக்கும். 

ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த கதையின் வில்லன்கள். அவர்கள் பின்பற்றும் வாழ்வியல் முறை, பொதுவுடமை சித்தாந்தத்தின் அடிப்படையைக் கொண்டது. நேரடியாக இல்லாமல் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால் இதைவிட நேரடியாக யாராலும் காட்சிப்படுத்தியிருக்க முடியாது.

வின்ஸ் கிலிகனின் முந்தையத் தொடரான “பிரேக்கிங் பேட்-ல்” மெக்சிக்கோ, சிலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை வில்லன்களாக காட்சிப்படுத்திய விதம் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே தொடரில் லத்தீன், தென் அமெரிக்க நாடுகளை காட்சிப்படுத்தும் பொழுது அந்த நாடே குற்றப்பின்னணியை கொண்டவர்கள் வாழும் இடம் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க அந்த காட்சிகளின் வண்ணத்தை தொழில்நுட்பம் மூலம் (Colour Correction) மஞ்சள் நிறத்திற்கு மாற்றியிருப்பார்கள். இதனைத் தொடர்ந்து உலக அளவில் பல படங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை மஞ்சள் நிறத்தில் காட்சிப்படுத்தத் தொடங்கியது.

பதினொரு பேர் பாதிப்படையாமல் இருந்தாலும் ஒரிரு நபர்களை மையப்படுத்தியே கதைக்களம் இருக்கும். இந்தத் தொடரில், மற்றுமொரு பாதிக்கப்படாத மனிதனாக தென் அமெரிக்க நாடான பராகுவேவை (Paraguay) சேர்ந்த ஒருவர் (கதைப்படி) அமெரிக்காவை சேர்ந்த கதாநாயகிக்கு உதவும் கதாபாத்திரமாக உருவாக்கியதன் மூலம் தன் முந்தைய தொடரில் அவர் செய்த பிழையை சரி செய்ய எடுத்த முயற்சியாக இருக்குமா என்கிற சந்தேகம் தோன்றுகிறது. ஒருவேளை அப்படி இருப்பின் அடுத்த தொடரில் அவர் நிச்சயம் பல நூறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும்.

ஒரு சாதாரண நிகழ்ச்சி தானே, இதில் இவ்வளவு ஆராய்ச்சி தேவையா என தோன்றும் நேரத்தில் “Pluribus” எனும் வார்த்தையின் அர்த்தம் மற்றும் அது பயன்படுத்தப்படும் இடத்தினை நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

“PLURIBUS” என்றால் “பலவற்றிலிருந்து ஒன்று” (Out of many, One). “E PLURIBUS Unum” என்பது 1956 வரை அமெரிக்க ஒன்றியத்தின் கொள்கை (Motto) வாசகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »