
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த சனவரி 23, 2026 அன்று நடைபெற்ற ‘ஆரிய அடிவருடிகளும் திராவிடக் கோட்டையும்’ மாநாட்டில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:
“ஏன் இந்த மாநாட்டை நடத்த வேண்டிய தேவை வந்தது என்றால், ஆரியர்களினுடைய, டெல்லியினுடைய ஆதிக்கம் அனைத்து மட்டங்களிலும் தமிழ்நாட்டை சீரழிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும் கலவரங்களையும் கொண்டு வந்திருக்கக்கூடிய காலகட்டத்தில், ‘தமிழ்நாட்டிற்கென்று நாங்கள் சிறப்பாக கவனம் செலுத்தி கலவரம் செய்வோம்’ என்று கூறி, திருப்பரங்குன்றத்தை வைத்து இந்துத்துவ அமைப்பும் நீதிமன்றமும் இணைந்து நடத்துகின்ற ஒரு மிகப்பெரும் தாக்குதலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
திருப்பரங்குன்றத்தில் தேவையில்லாத ஒரு பிரச்சினையை எடுத்து, அதை ஒரு மத பிரச்சனையாக நம்பிக்கை சார்ந்த பிரச்சனையாக மாற்றி, அதன் மூலமாக ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று பாரதி ஜனதா கட்சியும், சங்கி கும்பல்களும், ஆர்எஸ்எஸ் இந்துத்துவ கும்பலும் முயற்சி செய்து கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில், ஒரு நபர் ஆர்எஸ்எஸ்-சினுடைய மேடையில் ஏறி ”நான் திராவிட கோட்டையை பிராமண கடப்பாரையை வைத்து இடிப்பேன்” என்று பேசுகின்ற அந்த துணிச்சல், அந்த திமிரை கழுத்தோடு சேர்த்து மிதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கின்றோம்.
அவர்(சீமான்) பார்ப்பனர் என்று சொல்ல மாட்டாராம், பிராமணர் என்று சொல்லுவாராம். இந்த ’பிராமணர்’ என்கின்ற வார்த்தையை ஏன் தந்தை பெரியார் எதிர்த்தார்? பொதுவாக சாதி என்று கேட்டால் சாதி பெயரை சொல்லுவார்கள். பிராமணன் என்பது சாதி பெயரா? பிராமணன் என்பது சாதி பெயர் அல்ல, அது வர்ண பெயர். ஐயர் அல்லது ஐயங்கார் என்று சொன்னால் அது சாதிப்பெயர். கவுண்டர், வன்னியர், பறையர், பள்ளர் போன்ற இவையெல்லாம் சாதிப்பெயர்கள். அவன் சாதியைப் பற்றி பேசினாலோ அல்லது சாதியைக் கேட்டாலோ நாம் சாதியை சொல்வோம். ஆனால் அவன் (பார்ப்பனர்) பதிலுக்கு சாதியை சொல்ல மாட்டான், அவன் வர்ணத்தைத்தான் சொல்கின்றான். ’நான் பிராமணன்’ என்று பேசுகிறான். ’பிராமின்ஸ் ஒன்லி’ (Brahmins only) என்றுதான் அவன் வீட்டை வாடகை கொடுப்பதற்கு பலகையில் எழுதி தொங்க விடுகிறான். ‘ஐம் பிரவுடு பிராமின்’ (I am proud Brahmin) என்று பேசுகின்றான்.
பிராமணன் என்பது சாதியிலே எது மேல்? எது கீழ்? என்று நிர்ணயிக்க கூடிய வர்ண பேதமே ஒழிய, அது சாதி அல்ல.
நீங்கள் சாதியை பற்றி பேசும்பொழுது நாம் நம் சாதியை சொல்லக்கூடிய சூழலில் சாதிப் பெயரை சொல்கிறோம். பதிலுக்கு அவனும் சாதிப் பெயரை ஐயர்/ஐயங்கார் என்று சொல்லணும். அது நம்பிக்கை சார்ந்தது. சைவத்தை நம்பினால் ஐயர், வைணவத்தை நம்பினால் ஐயங்கார் என்று இருக்கிறது. அதை சொல்லாமல் அவன் வர்ணத்தை சொல்கிறான். பிராமணன் என்றால் ஐயரா? ஐயாங்காரா? தெரியாது. ஆனால் அவன்(பார்ப்பனன்) சாதி பெயரை சொல்லாமல் வர்ணப் பெயரை சொல்கிறானே! ஏன் அப்படி சொல்கிறான்?
அவன் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் என்று நேராக நம்மை பார்த்து சொன்னான் எனில், நாமும் பதிலுக்கு நம் சாதி பெயரை சொல்ல முடியாது. நாமும் நம் வர்ணத்தை சொல்ல வேண்டும். நாம் பிரம்மாவில் எங்கிருந்து பிறந்தோம் என்று வரையறை வைத்திருக்கிறான், அந்த வரையறையில் நாம் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தோம் என்று அவன் சொல்லுகின்றான். அந்த அடிப்படையிலே நாம் நம்மை ’சூத்திரன்’ என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறான்.
சாதியைப் பற்றி பேசும் போதோ அல்லது கேட்கும் போதோ பதிலுக்கு பிராமணன் என்று சொன்னால் நாம் ஓங்கி அறைய வேண்டும். தன்னை ’பிராமணன் பிராமணன் பிராமணன்’ என்று பேசுவது திமிரின் அடையாளம். அவன் பிரம்மாவின் தலையிலிருந்து வந்தவன் என்று சொல்லுகின்ற அந்த திமிரின் அடையாளம்தான் பிராமணன் என்ற சொல். அதை ஏற்க முடியாது.
நாம் ஐயங்கார் பேக்கரியை எதிர்த்திருக்கிறோமா? ஐயர் சொல்வதை எதிர்த்திருக்கிறோமா? அல்லது சாதி பெயரில் எத்தனையோ உணவகம் வைத்திருக்கிறான், அதையெல்லாம் எதிர்த்ததில்லை. ஆனால் வர்ண பெயரை நாம் ஏற்பதில்லை. அதனால்தான் ’பிராமணாள் கபே’ பெயர் அழிக்கின்ற போராட்டத்தை எழுச்சியோடு தந்தை பெரியார் நடத்தினார்.
இந்த வர்ண பாகுபாடு பற்றி அந்த சூத்திர கூமுட்டைகளுக்குத் தெரியவில்லை. அதனால்தான் ‘பிராமண கடப்பாரையை தூக்கிட்டு வரேன்‘ என்று சொல்கிறான். அப்படியெனில் அந்த மேடையிலே சீமான் சொன்னது என்னவென்றால், ‘பிராமணர்கள் கொடுக்கின்ற கடப்பாரையை நான் எடுக்கின்றேன். காரணம்: நான் உங்களுக்கு வேலை செய்யக்கூடிய சூத்திரன்‘ என்று சீமான் அந்த மேடையில் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறான். அது ஆரிய அடிமை. அவன் வெளிப்படையாக மேடையில் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வந்திருக்கிறான் வெக்கம் கெட்டவன். அவனுக்கு அதைப் பற்றி கவலை கிடையாது.
’தமிழர்கள் எல்லாம் குடிகளாக இருக்கிறார்கள்’ என்று பேசும் சீமான், அங்கே (பார்ப்பனர் கூட்டத்தில்) போய் பிராமண குடி என்று பேச முடியாது. ஏனென்றால் பிராமணன் என்பது குடி அல்ல, பிராமணன் என்பது வர்ணம். குடி என்பதும் சாதி என்பதும் வேறு வேறு. குடி என்பதிலே வர்ணபேதம் கிடையாது.
பழங்குடி என்பதிலே ஏழை பணக்காரன் கிடையாது. சாதி வேறுபாடு கிடையாது. அதனால்தான் குடி என்று சொல்வார்கள். இவன் (சீமான்) என்ன பேசுகிறான் எனில், சாதி எல்லாம் குடி என்று பேசிக்கொண்டு இருக்கிறான். குடியிலே வர்க்க பேதம் கிடையாது. வர்ண பேதம் கிடையாது. சாதியிலே வர்க்க பேதமும் இருக்கிறது. வர்ண பேதமும் இருக்கிறது. இரண்டுமே இருக்கிறது. ஆக குடி வேறு, சாதி வேறு, வர்ணம் வேறு. இவன் வர்ணத்தை வைத்துக்கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சொல்கிறான்.
திராவிடம் என்கின்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் மிக முதன்மையான அர்த்தம்: வர்ணத்தை ஒழிக்கின்ற அரசியல் சொல்தான் திராவிடம்.
நான் வர்ண பேதத்தை ஏற்கமாட்டேன் என்று சொல்கின்றவன் தான் திராவிட அரசியலை ஏற்றுக்கொண்டவன். எவன் ஒருவன் திராவிடத்தை ஏற்கவில்லை, திராவிட கோட்பாட்டை ஏற்கவில்லை என்று சொன்னால், அவன் வர்ண பேதத்தை ஏற்கிறான் என்று அர்த்தம். அதைத்தான் சீமான் அங்கே பேசியிருக்கிறான். சீமான் வர்ண பேதத்தை ஏற்றிருப்பதால்தான் பிராமணர்கள் கொடுக்கின்ற கடப்பாரையை எடுத்துக் கொண்டு ‘நான் திராவிடத்தை இடிக்கிறேன்’ என்று கிளம்பி இருக்கிறான். அதுதான் அர்த்தம். அதனால்தான் சொல்கின்றோம். இந்த கும்பலை ஒழித்து கட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

பிராமண திமிரோடு ‘நான் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன்’ என்று வந்தால் அதை எதிர்த்து நிற்கலாம். ஆனால் நம்மோடு இருக்கக்கூடிய, பார்ப்பனரால் இழிவுபடுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வரக்கூடிய (சீமான்), அவனுக்கு அடிமைவேலைகளை பார்த்து ‘உன்னை ஒழிப்பேன்’ என்று நம்மை நோக்கி ஆயுதத்தை நீட்டினால், அதை எதிர்த்து ஒழிக்க வேண்டும்.
அன்பானவர்களே! இன்றைக்கு மிக நெருக்கடியான காலகட்டம் இது. ஒன்று நம்மில் ஒருவனை பிரித்து நமக்கு எதிராக நிறுத்துகின்ற வேலை செய்திருக்கிறார்கள். இன்னொன்று பணபலத்தையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அனைத்தையும் நெருக்குகிறார்கள்.
தந்தை பெரியார் “1935 வரைக்கும் ’தனிநாடு’ என்பதைப் பற்றியான ஒரு யோசனை இல்லாமல் இருந்தேன். என்றைக்கு டெல்லியில் இருந்து நம்மை ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதை புரிந்து கொண்டேனோ, அப்பொழுது நமக்கான நாடு வேண்டும் என்கின்ற கோரிக்கையை நான் உணர்ந்து கொண்டேன்” என்று 1937ல் பேசுகிறார்.
இன்று போலி தமிழ் தேசியவாதிகள் என்கின்ற நபர்களிடத்தில் எந்த கொள்கை தெளிவும் கிடையாது. தனிநாடு கோரிக்கை கேட்கிறாயா என்றால் அதற்கு பேச மாட்டான். அதற்கு அச்சம் இருக்கும். போலீசை கண்டால் வழக்கு வரும் என்கின்ற கவலை கொள்பவர்கள். அவர்களுக்குத் துணிவு கிடையாது.
தந்தை பெரியாரினுடைய காலகட்டம் நீண்டது. 1930-ல் பெரியார் பேசும் பொழுது உலக ஒழுங்கு வேறாக இருந்தது. முதலாம் உலகப் போர் முடிந்த பிறகு இருந்த உலக ஒழுங்குகள் வேறு. அப்பொழுதுதான் தேசங்கள் என்பது உருவாகிக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டம். மூன்றாம் உலக நாடுகளில் தனிநாடு கோரிக்கை என்பதெல்லாம் அப்பொழுது வரவில்லை. தேசிய இன கோரிக்கை வரவில்லை. ஆனால் அந்த காலகட்டத்திலேயே தேசிய இன கோரிக்கை என்கின்ற அடிப்படையில் திராவிட நாடு கோரிக்கையை தந்தை பெரியார் முன்வைத்தார்.
ஏன் தமிழ்நாடு கேட்கவில்லை என்றெல்லாம் கேட்கிறார்கள். அன்றைக்கு உலகம் முழுவதும் ஆதிக்கத்திற்கு எதிரான பறந்துபட்ட ஒற்றுமை வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் கேட்டார்கள். அரபு தேசியம் பேசினார்கள். இன்றைக்கு நாம் பார்க்கிறோம்: ஈரான், ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீனம் போன்ற நாடுகளை எல்லாம் இணைத்து அரபு தேசியம் பேசினார்கள். அன்று ஏன் சிரியாவுக்கு தனியாக நாடு கேட்கவில்லை? ஈராக்குக்கு வேண்டும் என்று கேட்கவில்லை?
அன்றைய காலகட்டத்திலே, ஆதிக்கத்திற்கு எதிராக பறந்துபட்ட ஒற்றுமையின் கீழ் தான் விடுதலை கேட்டார்கள். அந்த அடிப்படையில் தந்தை பெரியார் திராவிட நாடு கோரிக்கையை கேட்டார். அது யாருடைய காலகட்டத்தில் என்றால் வெள்ளையர் காலகட்டத்தில்.
வெள்ளையர் காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறை வருகிறது. அந்த இரட்டை ஆட்சி முறைகளிலே ஒரு அரசியல் சாசனத்தை டெல்லியிலே வைத்துக்கொண்டு, டெல்லியில் இருந்து ஆட்சி செய்யக்கூடிய முறை வருகிறது. 1920ல் இருந்த ஆட்சி முறை வேறு, 1930/37ல் இருந்த ஆட்சி முறை வேறு. அந்த ஆட்சி முறையின் போதுதான் “டெல்லியில் இருந்து கொண்டு இவன் அதிகாரம் செலுத்துகிறான் என்றால், நான் தமிழ்நாட்டிலே இங்கே இருக்கக்கூடிய மெட்ராஸ் மாகாணத்திற்குள்ளாக இருக்கக்கூடிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறினார் தந்தை பெரியார்.
அவர் சொன்னதின் அர்த்தம் என்னவெனில், “என்னுடைய சண்டை மெட்ராஸ் மாகாணத்திற்குள் மட்டும் தான் இருந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்றைக்கு இவன் டெல்லி அளவில் அரசியல் சாசனத்தை வைத்துக்கொண்டு என்னை ஆட்சி செய்யலாம் என்று, அதிகாரத்தை டெல்லிக்கு கொண்டு சென்ற பார்ப்பான் தன்னுடைய அதிகாரத்தை காத்து கொண்டானோ, அதற்குப் பிறகு அவனை எதிர்க்கும் அரசியலை நான் செய்ய வேண்டும்” என்கின்ற அடிப்படையில் தான் தனிநாடு கோரிக்கை என்று தெளிவாக சொல்கிறார்.
இங்கே வரலாறு மாறுகிறது. ஒவ்வொரு பத்தாண்டு காலகட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் நடைபெறுகிறது! முதல் உலக போருக்கும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்துக்கும் நடுவில் மாற்றங்கள் எத்தனையோ நடந்துள்ளது. போலித் தமிழ்தேசியவாதிகள் மணியரசன் ஐயாவைப் போலவோ அல்லது சீமானைப் போலவோ நாம் கிணற்று தவளை அல்ல. உலக வரலாறு எப்படி மாறி கொண்டிருக்கிறது என்பதை சேர்த்துதான் நாம் தந்தை பெரியாரை புரிந்து கொண்டிருக்கின்றோம்.
1930 காலகட்டத்தில் தான் பர்மா தனிநாடாக பிரிகிறது. அவர்கள் இனவெறியால் பர்மாவை பிரிக்கிறார்கள். அன்றைக்கு பர்மாவில் வேலை செய்து கொண்டிருந்த தமிழர்களை அடித்து விரட்டினார்கள், கொலை செய்தார்கள். அப்படியாக பர்மாவில் இருக்கக்கூடிய பௌத்த தேசியவாதிகள் தமிழர்களை கொலை செய்த பொழுது, அந்த பௌத்த இன வெறியர்களுக்கு ஆதரவுக் கடிதம் எழுதிய கும்பல் தான் இந்து மகாசபை கும்பலும் ஆர்எஸ்எஸ் கும்பலும். அன்றிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அவன் (பார்ப்பான்) நமக்கு எதிரியாகத்தான் இருந்திருக்கிறான். அவனுடைய மேடையில் ஏறி சீமான் நம்மை எதிர்க்கிறான் என்றால், அந்த கோடாரிக் காம்பை வெட்டி புதைப்பதை தவிர வேறு என்ன நிலை எடுக்க முடியும்?
அன்றைக்கு ஆர்எஸ்எஸ் முளைவிட்ட செடி. அந்த செடி விஷ செடியாக தமிழனுடைய கழுத்தை சுருக்கி கொலை செய்த காலம். அங்கே பர்மாவில் ரங்கூன் துறைமுகத்தில் தமிழன் கொலை செய்யப்பட்ட பொழுது, பர்மாவினுடைய வயல்வெளியில் கொலை செய்யப்பட்ட பொழுது, தமிழனுக்கு ஆதரவாக இந்து மகாசபை அறிக்கை கொடுக்கவில்லை. ஆர்எஸ்எஸ் அறிக்கை கொடுக்கவில்லை. மாறாக பௌத்த பேரினவாதிகளோடு கைகோர்த்து அறிக்கைவிட்ட ’இந்து மகாசபையை’ இன்றைக்கு சீமான் ஆதரித்து நிற்கிறான் என்றால், இந்த கோடாரிக் காம்பை நாம் புதைப்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்?
இது வரலாற்று சண்டை. இந்த வரலாற்று சண்டையில் எவன் எங்கே நிற்கிறான் என்பதை பொறுத்துதான், நமக்கான சண்டையையும் நமக்கான வழிமுறையையும் முடிவு செய்தாக வேண்டும். 1930-ல் பர்மாக்காரன் தனியாக நாடு பிரிக்கக்கூடிய சமயத்தில் தான் தந்தை பெரியார் கேட்கின்றார். இந்தியாவில் அன்றைக்கு வேறு யார் தேசிய இன விடுதலை குறித்து பேசினார்கள்? வேறு யாராவது பேசினார்களா? இன்றைக்கு வரைக்கும் யாராவது பேசி இருக்கிறார்களா? சொல்லுங்கள்.
வடகிழக்கு மாகாணத்தில் விடுதலை குறித்து பேசினார்கள், காஷ்மீரில் போராட்டம் நடத்தினார்கள் என்றால், அன்று அவர்கள் இந்திய அரசோடோ காங்கிரசோடோ கொண்ட முரண்பாட்டினால் அல்ல, அவர்கள் ஆங்கில அரசோடு கொண்ட முரண்பாட்டினால் சண்டை நடத்திக் கொண்டிருந்தவர்கள். அதுதான் வரலாறு. ஆனால் ஆங்கில ஆட்சிக்கு கீழாக இருந்து கொண்டு எங்களுக்கென்று தனித்த சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற குரல் கொடுக்கக்கூடிய துணிவு தந்தைப் பெரியாருக்கு மட்டும் தான் இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் அத்தகைய தனிநாடு கோரிக்கையைப் பேசுகிறார். அதற்குப் பிறகு இந்தியாவினுடைய விடுதலை காலகட்டம் வருகிறது. வெள்ளைக்காரன் வெளியேறிய பிறகு டெல்லியினுடைய ஏகாதிபத்தியம் வருகிறது. அந்த டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அவர் பேசுகின்றார்.

குடியரசு தினத்திற்கு ஓரிரு நாட்கள் முன்-பின் அளவில் அவர் பேசுகின்ற அந்த உரைகள் மிக முக்கியமானவை. அதில் அவர் சொல்கிறார்: “மொழிப்போராட்டம் என்பது ஒரு பண்பாட்டு போராட்டம். அந்த பண்பாட்டு போராட்டம் என்பது தேசிய விடுதலை போராட்டம். ஆகவே இந்தியை ஒழித்து தமிழை காக்க வேண்டிய போராட்டம் நமது போராட்டம்” என்று தெளிவாக தந்தை பெரியார் பேசுகிறார்.
சிலர் சொல்லுகிறார்கள்- தந்தை பெரியார் மொழிப் போராட்டத்தை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தனக்காக பயன்படுத்திக் கொண்டார் என்று. நாம் ஒன்றை சொல்ல வேண்டும்: ஒவ்வொரு போராட்ட இயக்கங்களுக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. ஒவ்வொரு கொள்கைக்கும் ஒரு கோட்பாட்டுக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கில் இருந்து கொண்டுதான் மற்ற விடயங்களைப் பார்ப்பார்கள். பிற போராட்டங்கள் /பிற கோரிக்கைகள் தங்களுடைய கோரிக்கையையும் கொள்கையையும் வலுப்படுத்துமா என்று பார்த்து அந்த போராட்டத்தையும் வலுப்படுத்துவார்கள். இப்படித்தான் நடக்கும்.
அந்த வகையிலேயே “1935-ல் டெல்லியில் அதிகாரம் இருந்த காரணத்தினால் அதிலிருந்து தமிழ்நாட்டை கட்டுப்படுத்துகின்றான் என்று புரிந்துகொண்டு தனிநாடு கோரிக்கை என்கின்ற இடத்திற்கு வந்தடைந்தேன்” என்றார் பெரியார். அப்பொழுது இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது மிக முக்கியமான போராட்டமாக, அவரது கோரிக்கைக்கான போராட்டமாக இருந்த காரணத்தினால்தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.
காலகட்டம் அதன்பின் மாறுகிறது. 1952-ல் காலக்கட்டம் வேறு. எனவே இந்திய அரசியல் சூழலுக்குள்ளாக தந்தை பெரியார் எடுக்கும் நிலைப்பாடு வேறு. 1960களின் காலகட்டம் வேறு. சீனப் போருக்கு பிறகு இந்தியாவினுடைய சூழல் வேறாக இருக்கிறது. அப்பொழுது எடுக்கின்ற கோரிக்கைகள் வேறு. ஆனால் எந்த இடத்திலும் டெல்லி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதிலே ஒரு அடி கூட தந்தை பெரியார் பின்வாங்கவில்லை.
1937-38 இலிருந்து பெரியார் இறக்கின்ற கடைசி காலம் வரை தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால், டெல்லி ஆதிக்கத்தில் இருக்க கூடாது என்று தெளிவாக வரையறுத்து சொல்லிவிட்டார்.
இன்றைக்கு என்ன பிரச்சனை? அன்றைக்கு தந்தை பெரியார் சொன்னதுதான் இறுதி தீர்வாக இருக்கக்கூடிய வகையில் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் டெல்லியில் இருக்கக்கூடியவன் வந்து பிரச்சனை செய்கிறான். நாம் என்ன கேட்கிறோம் எனில், எச் ராஜாவுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? மோடிக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அமித்ஷாவுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் ஏன் இன்றைக்கு பிரச்சனை செய்துகொண்டு இருக்கிறார்கள்? என்றைக்காவது இவர்கள் முருகனுக்கு காவடி தூக்கி இருக்கிறார்களா? அலகு குத்தியிருக்கிறார்களா? மொட்டை அடித்துள்ளார்களா? பிறகு இவன் ஏன் தமிழ்நாட்டுக்குள் என்ன அடிப்படையில் பிரச்சனை செய்கிறான்? மிக நுணுக்கமாக புரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன.
முருகனுக்கு தீபம் ஏற்ற வேண்டும், எங்கே ஏற்றினார்கள்? பிள்ளையார் கோவிலில் ஏற்றினார்கள். அதில் என்ன தவறு? ஆனால் தர்கா அருகில் தான் ஏற்றவேண்டும் என சொல்கிறான். தர்கா என்பது இஸ்லாமியருடைய சமாதி. இதுபோல ராமருக்கு சமாதி அருகில் தீபம் ஏற்றுவதற்கு ஒப்புக்கொள்வார்களா? எங்காவது சுடுகாட்டில் ஏற்றுவார்களா? இஸ்லாமியர்களினுடைய தர்காவின் (ஒரு சமாதியின்) வாசலிலே தீபம் ஏற்று என்று சொல்கிறான். அவனின் உள்நோக்கம் ஒன்றுதான். முருகனுக்கு பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கான தகுதி கிடையாது என்பதைத்தான் அவன் (இந்துத்துவ அமைப்பு) கூற வருகின்றான். இதை வேறு எப்படி புரிந்துகொள்வது? பிள்ளையார் இந்துசாமி என்று சொல்கிறாய். முருகனும் இந்துசாமி என்று சொல்கிறாய். பிள்ளையார் கோவிலில் தான் கடந்த 100 வருடமாக ஏற்றுகிறார்கள். அதில் ஆர்.எஸ்.எஸ். & பாஜகவிற்கு என்ன பிரச்சனை?
நமக்கென்று பெரிய வேலைகள் இருக்கின்றன. இன்றைக்கு தமிழ்நாட்டில் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நீண்ட கால போராட்டம் தேவை. அருள்மொழி அம்மா சொன்னது போல, இன்றைக்கு நம் பிள்ளைகளை அரசியல் படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. நாம் பிள்ளைகளிடத்தில் பேச வேண்டிய தேவை இருக்கிறது. நம் அப்பாக்கள் சொல்வார்கள், “நான் அந்த காலத்தில் 5 கிலோமீட்டர் அல்லது 10 கிலோமீட்டர் நடந்து சென்று / சைக்கிளில் சென்று படித்தேன்” என்று.
நாம் நம் பிள்ளைகளிடம் “நாங்கள் அந்த காலத்தில் எவ்வளவு கடினப்பட்டு படித்தோம் தெரியுமா? உங்களுக்கு இருக்கக்கூடிய கணினி (கம்ப்யூட்டர்) வசதி எங்களுக்கு இல்லை. நாங்களாகத்தான் படித்தோம்” என்று பேசுகிறோம்.
இந்த தலைமுறையில் இருக்கிறவர்களுக்கு அந்த கடினங்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்களுக்கு, அவர்களுடைய நெருக்கடிகள் தான் பெரும் பிரச்சனையாக இருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையினுடைய சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது. அந்தந்த தலைமுறையில் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடியில் இருந்துதான் உலகத்தை புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய, கடந்த காலத்து நெருக்கடியில் இருந்து சமகாலத்தை எந்த குழந்தைகளும் புரிந்து கொள்ளாது.
இன்றைக்கு சமகாலத்தில் இருக்கக்கூடிய இந்த குழந்தைகளுக்கு இந்த பிரச்சினையைப் பற்றி இவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலே நாம் பேச வேண்டி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நாம் அமைப்பை உருவாக்க வேண்டி இருக்கிறது, வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஆர்எஸ்எஸ்-னுடைய பத்திரிகையில் தெளிவாக, எத்தனை இடத்தில் அவர்கள் அமைப்பை வைத்திருக்கிறார்கள்? எத்தனை கிளை பிரிவுகளை வைத்திருக்கிறார்கள்? ஒவ்வொரு கிளைப்பிரிவிலும் எத்தனை பேர் உறுப்பினர் இருக்கிறார்கள்? என்று விஜய பாரதத்தில் தெளிவாக போடுகின்றான். எப்படி ஆட்களை கூப்பிட வேண்டும்? எப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும்? என்று வெளிப்படையாக பத்திரிக்கையில் போடுகின்றான்.
சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு ராணுவ பயிற்சியை (military drill) இந்து முன்னணி கும்பல் நடத்தி இருக்கிறது. ஏழு நாள் பயிற்சியை நடத்தி இருக்கிறார்கள். எதற்கு? சண்டைக்கு போகப் போகிறானா? ஒரு கலவரத்தை எப்படி நடத்துவது என்பதற்கான பயிற்சியும் அதில் இருக்கிறது. ஒரு கலவரத்தைக் கட்டுப்படுத்த கூடியவனுக்கு கலவரத்தை எப்படி நடத்த வேண்டும் என்று தெரியும். ஜனநாயக வகைப்பட்ட ஒரு மனிதனால் ஒரு கலவரத்தை நடத்தி விட முடியாது. ஒரு சராசரி மனிதனால் ஒரு கல்லை எடுத்து ஒரு கண்ணாடி வீட்டின் மீது எறிந்து விட முடியாது. அதற்கென்று ஒரு பயிற்சி ஒரு கோட்பாடு தேவை. அந்த பயிற்சியை இந்து முன்னணியும் ஆர்எஸ்எஸ்-சும் கொடுத்துக் கொண்டு, இவர்களை வன்முறையாளராக மாற்றிக் கொண்டிருக்கிறது. இது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில்தான் சீமானுடைய அரசியலை குறித்து நாம் அம்பலப்படுத்த வேண்டி இருக்கிறது. நாம் சீமானைப் பற்றி கவலைப்படவில்லை, அவரை நம்பி போயிருக்கக்கூடிய அந்த இளைஞர்களை பார்த்துதான் கவலைப்படுகின்றோம்.
‘ஈழப் பிரச்சனைக்காக அமைப்பை நடத்துகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு, இந்த 16 வருடத்தில் ஒரு போராட்டத்தைக் கூட செய்யாத, முதுகெலும்பற்ற ஒரு கோழைதான் சீமான். இந்த 16 வருடத்தில் தமிழீழத்திற்காக ஒரு போராட்டத்தைக் கூட சீமான் நடத்தவில்லை. இவனையெல்லாம் ஒரு வீரன் என நம்பி, இவன் பின்னாடி இத்தனை ஆயிரம் பேர் போகிறானே, அவனைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன்.
அமெரிக்க அரசாங்கம் ஜெனிவாவில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது. அது ஒன்றரை பக்கம் தீர்மானம். அந்த ஒன்றரை பக்கத் தீர்மானத்தை கூட படிக்க துப்பு இல்லாமல், அந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன் என்று ஊர்வலம் போன சீமானிடம், நான் கேட்டேன்: “அந்த தீர்மானம் விடுதலை புலிகளுக்கு எதிராக இருக்கிறது. எப்படி அதை ஆதரித்து ஊர்வலம் போகிறாய்?” என்று கேட்டேன். ஒன்றரை பக்க தீர்மானத்தை படிக்க முடியாத ஒருவன் முதலமைச்சராக வந்து எதை கழட்டுவான்?

ஆனால் நமது பிள்ளைகள் குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று துணிச்சலாக பேசுகிறான் சீமான். நாம் என்ன கேட்கிறோம் எனில், “சீமான் உன்னுடைய குலத்தொழில் என்ன? 60 வயதாகும் நீ பனைமரம் ஏறுவாயா?” என வெளிப்படையாக கேட்கிறேன். நீ ’குடிப்பெருமை’ பேசுகிறாய், ‘குலப்பெருமை’ பேசுகிறாய், ’குலத்தொழில்’ பேசுகிறாய், ’குலதெய்வம்’ பற்றி பேசுகிறாய். இதற்கும் தொழிலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று பெருமை பேசுகிறாயே, முதலில் நீ (சீமான்) போய் பனைமரம் ஏறு. உன் சாதிக்கு என தொழில் கொடுத்துள்ளானே, அதை செய்வாயா? அப்புறம் எதற்கு இங்கே இருக்கக்கூடிய இளைஞர்களை குழப்புகிறாய்?
தமிழ்நாட்டில் குலக்கல்வி அரசியலை ஆர்எஸ்எஸ்-காரன் பேசுவதற்கு பயப்படுகிறான். ஆனால் அவனுக்கு அடிமை வேலை செய்யக்கூடிய சீமான் தற்போது பேசுகிறான்.
”விவசாயத்துக்கு வா விவசாயத்துக்கு வா” என்று கூறுகிறான், விவசாயத்தினால் தமிழ்நாட்டினுடைய உற்பத்தியில் எத்தனை பங்களிப்பு செய்ய முடியும்? தமிழ்நாட்டுடைய ஜிடிபி-யில் விவசாயத்தினுடைய பங்களிப்பு என்ன? நான் விவசாயத்தை மறுக்கவில்லை, விவசாயத்தைப் போற்றுகிறோம், விவசாயம் முக்கியமானது, உழவு முக்கியமானது. விவசாயத்தை ஒரு முக்கிய தொழிலாக மாற்றுவேன் என்று சீமான் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் விவசாயத்தினுடைய பங்களிப்பு ஜிடிபி-யில் 25% கூட கிடையாது.
எல்லாரும் விவசாயத்துக்கு வாருங்கள் என்று விவசாயத்தை குறித்து அறிஞர் அண்ணா பேசினார் என்று எழுதுகிறான். அன்றைக்கு புதிய அணைகள் கட்டப்பட்டன. புதிய விவசாய நிலப்பரப்புகள் திறக்கப்பட்டன. அன்றைக்கு தொழிற்சாலைகள் உருவாகிக் கொண்டிருந்தனவே ஒழிய, வளர்ந்த நிலையில் இல்லை. அன்றைக்கு கல்வி ஆரம்ப கட்ட நிலையில் இருந்தது. தொழில் கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் விவசாயம் என்பது 55% தமிழ்நாட்டினுடைய ஜிடிபியில் இருந்தது. அன்றைக்கு 50%-55% இருந்து இன்றைக்கு 20% -25% மாறி இருக்கிறது என்றால், இன்றைக்கு தொழில் துறையில் முன்னேறி இருக்கின்றோம். தொழில் துறைக்கு ஏற்ற கல்வி இங்கே இருக்கிறது.
இப்போது தொழில் துறைக்கு எது தேவையோ, அதை வாசியுங்கள், அதை கல்வியாக கற்றுக்கொள்ளுங்கள், அந்த இடத்துக்கு போங்கள் என்று பேசுவதுதான் வளர்ச்சி நிலையே ஒழிய, விவசாயம் மட்டுமே அனைத்தும் என்பது பின்னுக்கு இழுக்கும் நிலை. நன்கு படித்துவிட்டு வந்தவனை எதற்கு திரும்ப விவசாயத்துக்கு நகர்த்த வேண்டும்?
ஆக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், தமிழ்நாட்டில் உள்ள சாதிகளில் ‘உடல் உழைப்பிலிருந்து விடுதலை பெற்ற முதல் சாதி, ஒரே சாதி பார்ப்பன சாதிதான், வேறு யாரும் கிடையாது’. நாம் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் உடல் உழைப்பின் மூலமாகத்தான் பொருள் ஈட்டினார்கள். ஆனால் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிக்கக்கூடிய ஒரு தொழிலை செய்த கூட்டம்தான் பார்ப்பன கூட்டம்.
நாம் ஏன் கல்வி கற்கிறோம்? உடல் உழைப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தான் கல்வி கற்கிறோம். கல்வி கற்கக்கூடிய யாரும் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டிய தேவையில்லை. அவசியமும் இல்லை. உற்பத்தியை செய்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்டவனை மறுபடியும் உடல் உழைப்புக்குள் தள்ளுகின்ற வேலையை செய்கிறான். திரும்ப திரும்ப செய்கிறான்.
தற்போது வீட்டில் பெண்களுக்கு அரவை இயந்திரங்கள் (மிக்ஸி, கிரைண்டர்) கொடுக்கிறார்கள். ஏன் அது மிக முக்கியம்? அரவை இயந்திரங்கள் மூலம் பெண்களுக்கு உடல் உழைப்பிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் அரசாங்கம் எல்லா வீட்டுக்கும் சலவை இயந்திரம் (வாஷிங் மெஷின்) இலவசமாக கொடுப்பது நல்லது. வீட்டில் ஒரு பெண் கையால் துணி துவைத்தாக வேண்டுமா? அதற்கு இயந்திரம் வந்துவிட்டது அல்லவா! எல்லாருக்கும் அது கிடைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் உடல் உழைப்பில் இருந்து விடுதலை பெற்று, அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகருவார்கள். அதுதான் விடுதலை.
உடனே அனைத்தையும் இலவசமாக (Freebie) தருவீங்களா? என கேட்டு, ஒரு பெரிய கூட்டம் வரும். நாட்டினுடைய பொருளாதார உற்பத்தியை வளர்க்க வேண்டும் என்றால், இது போன்ற தேவையில்லாத உடல் உழைப்பில் இருக்கக்கூடிய இடத்திலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான், அவன் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்வான்.
அதானிக்கும் அம்பானிக்கும் கொடுக்கிறாயே அந்த இலவசத்தை (Freebie) எவன் கேட்பது? வங்கியிலிருந்து அதானிக்கு அம்பானிக்கு பணம் கொடுக்கிறானே, வாராக்கடன் என்று 13 லட்சம் கோடி வைத்துள்ளாயே, அதைப் பற்றி பத்திரிகையில் எழுது. ஆனால் ஏழை எளிய மக்கள் அவர்கள் உடல் உழைப்பிலிருந்து விடுபடுவதற்கு கொடுக்கக்கூடிய இந்த உபகரணங்கள்- இவற்றை இலவசங்கள் என்று சொல்லி ஒருவன் கொச்சைப்படுத்தினால், அவன் சமூக மக்களுக்கு எதிரானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆக தோழர்களே, அறிவியலுக்கு ஒப்பாத ஒரு கூட்டமாக இந்த (சீமான்) கூட்டம் வந்திருக்கிறது.

தந்தை பெரியார் பேசிய காலகட்டம் என்ன? இன்றைக்கு நீங்கள் இந்த கூட்டத்தில் இருக்கக்கூடிய தோழர்களும் 100 சதவீதம் எழுத படிக்கத் தெரிந்தவர்கள். உங்களைப் போன்ற ஒரு படித்து தெளிவடைந்த கூட்டத்திடம் தந்தை பெரியார் பேசியதில்லை. முதன்முதல் இந்த சமூகத்தில் பொது கருத்தை குறித்து, பொது பிரச்சினையை குறித்து, மேடை போட்டு பேசுகின்ற பழக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்னால் தான் வந்தது. அன்றைக்கு தந்தை பெரியார் பேசுகிறார்.
அன்றைக்கு மேடை போட்டு, கூட்டம் போட்டு பேசினவன் எல்லாம் கதா காலட்சேபம் பேசினான், கடவுளின் பெருமையை பேசினான். ஆனால் மக்களின் பிரச்சினையைப் பற்றி பேசிய காலகட்டம்தான் தந்தை பெரியாரினுடைய ஆரம்ப காலகட்டங்கள். அந்த காலகட்டத்தில் அவர் யாரிடம் பேசினார்? 100% எழுத படிக்கத் தெரியாத ஏழை மக்களிடத்தில் பேசினார். அவனுக்கு எழுத படிக்கவே தெரியாது. அவனுக்கு எத்தனை வார்த்தை தெரிந்துவிடும்? அப்போது அவனுக்கு எவ்வளவு வார்த்தைகள் தெரியுமோ, அந்த வார்த்தைகளுக்குள்ளாகத்தான் அவனிடத்தில் பகுத்தறிவை கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
அதில் என்ன விசயத்தை பேசுகிறோமோ, அதற்கு ஏற்ப பேச வேண்டும். ஒருவன் பக்தியை பற்றி பேசுகிறான் என்றால், அவனுடைய நம்பிக்கையை அல்லது அவன் நம்புகின்ற இடத்தில் பக்தியை பற்றி பேசுவான். ஒரு மருத்துவர் பேசுகிறார் என்றால், உன் உடல்நலத்தை பற்றி அக்கறை எடுத்துக்கொள் என்கின்ற கவலையை வைத்து பேசுவார். ஆனால் சுயமரியாதையை பற்றி பேசுகின்றவர்கள், உனக்கே அறியாமல் நீ வைத்திருக்கக்கூடிய இழிவை உன்னிடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், உன்னிடத்தில் ஒரு எழுச்சியை கொண்டு வர வேண்டும் என்று தூண்டி விடுவார்கள். அந்த தூண்டுதல் பேச்சுதான் தந்தை பெரியாரின் பேச்சு. தூண்டுதல் வேண்டும், தூண்டிவிடாமல் வெறும் மத பிரசங்கம் மாதிரி பேச முடியாது.
இன்றைக்கு நாம் பேசலாம். இது புதிதல்ல, இன்றைக்கு நாங்கள் பேசுவது அனைத்தும் புதிய கருத்தாக இருக்காது. இது ஒரு வகையான உரையாடல், விவாதம். ஆனால் தந்தை பெரியார் பேசியது உரையாடலும் கிடையாது, விவாதமும் கிடையாது, அது ஒரு வகுப்பும் கிடையாது. அது சிந்தனையை தூண்டி விடுகின்ற பேச்சு.
அவர் ஏன் தமிழ் மொழியை குறித்து காட்டுமிராண்டி என்று பேசினார்? எல்லா இடத்திலும் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று இருந்து கொண்டே இருக்கிறது. அதற்குள் மாட்டிக்கொண்டு இருக்கின்றோம், அதிலிருந்து வெளியே வா என்ற அர்த்தத்தை, 100 வருடத்திற்கு முன்பு படிக்காத எங்களுடைய பாட்டனுக்கு என்ன வார்த்தை புரியுமோ, அந்த வார்த்தையில் பெரியார் பேசினார். 100 ஆண்டுகள் கழித்து அந்த வார்த்தையை இன்றைக்கு வேறாக சீமான் திரிக்கிறான்.
அவர் திருக்குறளை பற்றி ஏன் பேசினார் என்று ஒரு இடத்தில் பேசும் பொழுது தெளிவாக சொல்கிறார். திருக்குறளை புரிந்து ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நம் மக்கள் பக்குவப்பட வேண்டும். அப்படி பக்குவப்பட வேண்டும் என்றால் மூட நம்பிக்கையில் இருந்து வெளியேற வேண்டும். அந்த மூட நம்பிக்கையில் இருந்து வெளியேறினால் தான் திருக்குறளின் பயன்பாட்டை இவன் புரிந்து கொள்ள முடியும் என்கின்ற காரணத்தினால் தான், மூடநம்பிக்கை ஒழித்துவிட்டு பிறகு திருக்குறளுக்கு வா என்று பேசுகிறார். இவ்வளவு தெளிவாக பேசியிருக்கிறார்.
பெரியாருடைய இலக்கு என்பது சுயமரியாதை. அதை மிகத் தெளிவாக எஸ்வி ராஜதுரை அவர்கள் பேசும்பொழுது சொன்னார்: இந்தியா சுயராஜியத்தை பேசிக் கொண்டிருந்தது, கம்யூனிஸ்ட் கட்சிகள் சமதர்மத்தை பேசிக் கொண்டிருந்தார்கள், ஆனால் தந்தை பெரியார் மட்டும்தான் சுய மரியாதையை பற்றி பேசினார்.
சுய மரியாதை இல்லை என்றால் சம அளவிலே வர்க்கமற்ற சமத்துவம் கொடுத்தாலும் கூட, சுய மரியாதை இல்லாதவன் மறுபடியும் பார்ப்பானுக்கு அடிமையாக மாறி, மறுபடியும் வர்க்கத்தை உருவாக்கி விடுவான் என்று தந்தை பெரியார் தெளிவாக சொன்னார்.
ஆக பார்ப்பனிய சிந்தனை ஒழிப்பு இங்கு தேவை. அது இருந்தால்தான் வர்க்கமற்ற ஒரு நிலையை உருவாக்க முடியும் என்று மிக தெளிவாக பெரியார் பேசிவிட்டார். அதையெல்லாம் படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிய்த்து எடுத்து கொண்டு பேசுகின்றவர்கள் ஒரு காலத்திலும் வெல்ல மாட்டார்கள். ஏனென்றால் இவர்களை விட பெரும் வில்லன்களை எல்லாம் தந்தை பெரியார் சந்தித்துவிட்டார். அதைக் கடந்து பெரியார் நிற்பார். பெரியார் என்றும் வாழ்வார்.
பெரியார் பேசியதுதான் தமிழ் தேசியமே ஒழிய, இவர்கள் (சீமான்) பேசுவது தமிழ் தேசியம் அல்ல. அது இந்து தேசியம். அதை பிராமண தேசியம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஆக சீமான் பேசுவது பிராமண தேசியம். ஆர்எஸ்எஸ் பேசுவதும் பிராமண தேசியம். அந்த பிராமண தேசியத்துக்கு எதிராகத்தான் நாம் இயங்குகின்றோம். அந்த வகையில் நாம் நிச்சயம் வெல்வோம்.

குறிப்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற “ஆரிய அடிவருடிகளும் திராவிடக் கோட்டையும்” சிறப்பு மாநாட்டில் வந்திருந்த தலைவர்கள் அனைவருக்கும் AI தொழில்நுட்பதில் தந்தை பெரியாரோடு அவர்கள் இருக்கும் படங்கள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது!
நன்றி! வணக்கம்!!
காணொளி: