இந்தியாவின் அனைத்து எழுத்து வடிவங்களுக்கும் தாயாக தமிழி எழுத்து வடிவமே இருக்கிறது என்பதே கீழடி ஆய்வின் முக்கியமான ஆதாரம் என கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகிறார். தொல்லியல் அகழ்வுகளில் எங்கு தோண்டினாலும் ”பிராமி” எனப்படும் பழமையான எழுத்து வடிவம் தோன்றுவதற்கான குறியீடுகள் கிடைப்பதாகவும், இதுவரை 2474 எழுத்து வடிவ குறியீடுகள் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
இதுவரை வரலாறாக கணித்திருந்த, அசோகர் பிராமியிலிருந்தே தமிழ் பிராமி வந்தது என்கிற கருத்து பொய்யாகி, ஆதித் தமிழரின் மொழி தமிழி மொழியே என்னும் ஆய்வு இந்திய வரலாற்றையே புரட்டிப் போடக்கூடியது. ஆனால் அறிவியல் சான்றின்படி, தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் கீழடி ஆய்வுகளை ஏற்க முடியாது என இந்தியத் தொல்லியல் நிறுவனம் மறுத்து வருகிறது.
கீழடி ஆய்வறிக்கையில் முக்கியமானது அதன் காலகட்டம். இதுவரை சங்ககாலம் கிமு 300 – கிபி 300 என்பதே வரலாறாக இருந்தது. இப்போது கண்டறியப்பட்ட கீழடி ஆய்வின் படி 500 ஆண்டு காலம் முன்னோக்கி சென்று கிமு 800 என்றாகிறது. அதாவது இன்றிலிருந்து 2300 ஆண்டுகளே சங்க காலம் என அறியப்பட்டது, இப்போது 2800 ஆண்டுகள் என முன்னோக்கி செல்கிறது. கீழடியில் கிடைத்த பொருட்கள் யாவும் உலகத் தரமான ஆய்வகங்களில் கொண்டு செல்லப்பட்டு, அவற்றின் அறிவியல் சான்றின் படி நிரூபிக்கப்பட்டது. உலகத்தரமான ஆய்வுகளை முன்வைத்து எழுதிய கீழடி அறிக்கை இருக்கும் போது, அதன் முடிவுகளை புறக்கணிப்பது குறித்த கேள்வி சாமானிய தமிழர்களிடமும் எழுந்திருக்கிறது.
தொல்லியல் ஆய்வில், தமிழி அசோகர் பிராமி காலத்திற்கு முற்பட்டது எனக் கண்டறிந்ததைப் போல, தமிழர் மெய்யியல் ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது, ‘ஆசிவகமும், ஐயனார் வரலாறும்’ நூலில் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்கள் கூறும் போது,
‘இந்திய எழுத்தியல் வரலாற்றில் அசோகனின் பிராமியே முதன்முதலாக எழுதப்பெற்ற எழுத்து வடிவம் என ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனால் தான் தமிழகத்தில் காணப்படும் கற்படுக்கைகளிலும், படுக்கைகள் உள்ள குகைத்தளங்களிலும் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்களைத் தமிழ் பிராமி என அவர்கள் அழைத்தனர். மேலும் அவை சமண சமயத்திற்கு உரியன என நம்பியும், எழுதியும் வருகின்றனர். இச்சூழலில் அக்கற்படுக்கைகளை ஒட்டி பொறிக்கப்பட்டுள்ள சில கல்வெட்டுகள் அசோகனுக்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் காலத்திற்கு முற்பட்டவை என்பதையும் ஆசிவகம் குறித்தான ஆய்வில் கண்டுணர முடிந்தது’ என எழுதுகிறார்.
தமிழர் மெய்யியல் தேடலில் கிடைத்த ஆதாரமும், தொல்லியல் ஆதாரமும் இணையும் புள்ளியில் தமிழர்களின் மொழியியல் வரலாற்றின் விடை கிடைக்கிறது. அசோகர் பிராமியிலிருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை என்னும் தெளிவு பிறக்கிறது. இந்தியாவின் முதல் எழுத்து வடிவத்திலிருந்தே மற்ற எழுத்துக்களும் தோன்றியிருக்கும் என்பது உறுதி. அப்படியெனில் அசோகர் பிராமி எழுத்தே தமிழி எழுத்திலிருந்து உருவாகியுள்ளதா என்னும் கேள்வியே, இதுவரை எழுதப்பட்ட வரலாறுகளை எல்லாம் புரட்டிப் போடும் தன்மை உடையதாக இருக்கிறது. இது மேலதிகமான ஆய்வின்பாற்பட்டது.
கிட்டத்தட்ட 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் இருப்பதாகவும், சுமார் 5% தோண்டிய இடங்களில் மட்டுமே இவ்வளவு சான்றுகள் கிடைத்ததாகவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த சான்றுகள் எல்லாம் காலகட்டத்தை நிரூபிக்க போதாது என இந்தியத் தொல்லியல் துறை மறுக்கிறது. இதன் காலகட்டத்தை மாற்றித் தருமாறு அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
இதுவரை இந்தியாவில் அறிவியல் சான்றுகள் படி, கண்டறியப்பட்ட அகழ்வுகளிலே, தழிழர்களின் நாகரிகமே தொன்மையானது, தமிழியே முதன்மையானது என்பதை அதன் காலகட்டம் நிரூபிக்கிறது.
காலகட்டமே கீழடி ஆய்வின் முக்கியமான உயிர்நாடி. ஆனால் காலகட்டத்தை மாற்றினால் அதன் உயிர்ப்பை சிதைத்து விடலாம் என்ற எண்ணத்துடன், அதனை மாற்ற கீழடி ஆய்வாளர்களை இந்தியத் தொல்லியல் துறை நிர்ப்பந்திக்கிறது என்பதே தமிழ் துறைகள் சார்ந்த பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்தியத் தொல்லியல் துறை கீழடி ஆய்வறிக்கையை மறுப்பது ஒரு புறம் என்றால், மறுபுறம் இங்குள்ள பார்ப்பனர்களின் வன்மம் கீழடி ஆய்வை மலினப்படுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருவதும் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 2800 ஆண்டுகளுக்கு முன்பு சாமானிய தமிழர்களும் படிப்பறிவு கொண்டிருந்தார்கள் என்பதை கீழடியில் கிடைத்த மண்பாண்டத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்கள் காட்டுகின்றன. மண்பானை வனையும் குயவர்களிடத்தும் கல்விப் பரவலாக்கம் இருந்தது என்பது இந்த எழுத்துக்கள் மூலமாக தெரிய வருகிறது.
ஆனால் கிழக்குப் பதிப்பகத்தின் நிறுவனரான பத்ரி என்னும் பார்ப்பனர், குயவர்கள் செய்த பானைகளில் குயவர்கள் தான் எழுதினார்கள் என எப்படி சொல்ல முடியும், இன்றுள்ள உலோகப் பாத்திரங்களில் உலோகம் செய்பவரா எழுதுகிறார் என மலிவான வாதத்தை வைக்கிறார்.
மண்பாண்டத்தில் ஈரப்பசை இருக்கும் போது மட்டுமே எழுத முடியும், காய்ந்த பின் கிறுக்குவது உடைவதற்கு வாய்ப்பாகி விடும் என்பது சாமானியர்களே அறிந்த ஒன்று. ஒரு பெரிய பதிப்பகத்தை நடத்துபவருக்கு இது தெரிய வாய்ப்பில்லை என்று கடந்து விட முடியாது, இது அவர்களின் தமிழர்கள் மீதான ஈராயிரம் ஆண்டு கால வன்மத்தின் வெளிப்பாடு என்கின்றனர் தமிழறிஞர்கள். கொடுமணல் அகழாய்வு தளத்தில் கண்டறியப்பட்ட பானை ஓடுகளில் பலவும் ஈரப் பசையாக இருக்கும்போதே எழுதப்பட்டவை என ஆய்வகங்களில் உறுதி செய்துள்ளன.
கல்வி பரவலாக்கப்பட்ட தொழிற் சமூகமாக அன்றைய தமிழ் சமூகம் இருந்திருக்கிறது என்பதை, குயவர்களின் மண்பாண்ட எழுத்துக்கள் புலப்படுத்துகின்றன. மேலும் குயவர் சமூகத்தில் பிறந்த வெண்ணிக் குயத்தியார் என்கிற பெண்பாற்புலவர் சங்ககாலத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் இயற்றிய சங்கப்பாடலும் இருக்கிறது. ஒரு பதிப்பகம் வைத்திருப்பவருக்கு சங்ககாலத்தில் வாழ்ந்த இந்த பெண்பால் புலவர் பற்றி அறியாமல் இருக்க முடியாது. இருப்பினும், தமிழர்களின் தொன்மையை கூறும் தொல்லியல் ஆய்வறிக்கையின் மீதான காழ்ப்புணர்வே, அவர் இவ்வாறு பேசுவதற்கு காரணமாக பார்க்க வேண்டியிருக்கிறது
பூமியை பாயாக சுருட்டிய கதைகள், பாற்கடலைக் கடைந்த கதைகள் என கற்பனைப் புராணங்கள், 25 லட்சம் வருடத்திற்கு முன் தோன்றிய ராமாயணக் கதைகள், யானைத் தலையை மனிதத் தலையில் பொருத்திய கதைகள், இல்லாத ஒரு ஆற்றைக் கொண்டு சரஸ்வதி நாகரிகம் என்று நிரூபிக்க பல்லாயிரம் கோடிகளை செலவழிக்கும் தொல்லியல் ஆய்வுகள் என இவையெல்லாம் குறித்துக் கேள்வி எழும்பாதவர்களுக்கு, அறிவியல் சான்றின்படி நிருபிக்கப்பட்ட தமிழர்களின் நாகரீகம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதே இவ்வகையான பேச்சாக வெளிப்பட்டிருக்கிறது.
பார்ப்பன உதிரிகளின் பேச்சே இவ்வாறு இருக்கும் போது, பார்ப்பனர்களின் குழுமமாக இருக்கும் இந்தியத் தொல்லியல் நிறுவனத்திற்கு இந்திய வரலாற்றையே புரட்டிப் போடும் ஆய்வு முடிவுகள் அச்சத்தைத் தரும் என்பது ஆச்சரியமில்லை.
மக்கள் மயப்பட்ட ஆய்வாக கீழடி ஆய்வை நிகழ்த்திக் காட்டினார் அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடியை பார்வையிட வந்த அனைவருக்கும் எழும் கேள்விகளை நிவர்த்தி செய்து பரவலாக கீழடி ஆய்வு குறித்து தெரிய வைத்தார். இந்தியத் தொல்லியல் நிறுவனம் இதன் அறிக்கையை மறுத்தாலும் தமிழர்களிடம் இந்த உண்மைகள் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுவிட்டது. மண்பாண்டத்தில் குயவர்கள் தான் எழுதியிருக்க முடியுமா என்கிற பத்ரியின் கேள்வி, வரலாற்று ரீதியாக ஆரியம் செய்து வரும் வரலற்றுத் திரிவுகளில் ஒன்றேயாகும்.
அறிவு சார் தமிழர் மரபின் அறிஞர்களை செரிக்கும் கதையாடலை திறம்பட செய்தவர்கள் பார்ப்பனர்கள். திருவள்ளுவரையே ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பனருக்கும் பிறந்தவர் என்று புனைந்தவர்கள். அகத்தியரே தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்று திரித்தவர்கள் பார்ப்பனர்கள். இவர்கள், குயவர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதைக் கண்டு எரிச்சலடைவதில் வியப்பில்லை.
இந்தியப் பார்ப்பனிய அதிகார மட்டமும், தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக் கொண்டு தமிழர்களுக்கு, தமிழுக்கு எதிராகவே பேசும் இங்குள்ள பார்ப்பனர்களும் கீழடி நாகரிகத்தை ஏற்க மாட்டார்கள். சாதி, மத, கடவுள் அடையாளமற்று வாழ்ந்த மக்களின் தொன்மை, பத்ரி போன்ற பார்ப்பனர்களால் எக்காலமும் ஏற்க இயலாது. ஆனால் கீழடி ஆய்வை ஒவ்வொரு தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை நமக்குண்டு. தமிழர் நாகரிகத்தை உலகுக்கு அறிவியல் சான்றுகளின்படி எடுத்துரைக்கும் அறிஞர் பெருமக்களையும், இலக்கிய சான்றுகளின் வழி ஆய்ந்து எடுத்துரைக்கும் தமிழ் சான்றோர்களையும் போற்றி அவர்களின் ஆய்வுகளை மக்கள் அரங்கில் கொண்டு செல்லவே மே 17 இயக்கம் அறிஞர் அவையமாக தமிழ்த் தேசியப் பெருவிழாவை நடத்துகிறது. இந்த ஆண்டும் கூடிய விரைவில் நடத்தப் போகிறது. தமிழர் வரலாற்றைத் திரிக்கும், மறுக்கும் பார்ப்பனியத்தைப் புரிந்து கொள்வோம். ஆய்வறிஞர்கள் வழியில் தமிழர் வரலாறை மீட்போம்.