தென்னக இரயில்வேயில் இந்தித் திணிப்பை எதிர்த்து மே 17 இயக்கம் முன்னெடுத்த இந்தி அழிப்பு போராட்டம்

பிப்ரவரி 21, 2026 உலக தாய்மொழி நாளை முன்னிட்டு ஒன்றிய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக, சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இந்திப்பெயர் அழிப்பு போராட்டத்தை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்தது. ஆதிக்க இந்திக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்களோடு தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் தொடக்கமாக இந்தித் திணிப்பிற்கு எதிரான முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர். தமிழ்நாட்டின் 100 ஆண்டு கால வரலாற்றை புரட்சிகர முழக்கங்களின் மூலம்  மக்களிடையே கொண்டு சேர்த்தனர். மேலும் தமிழ்நாட்டில் இந்திக்கு எதிரான மொழிப்போரில் உயிரீந்த தாளமுத்து மற்றும் நடராசன் உள்ளிட்ட எண்ணற்ற ஈகியர்களின் தியாகத்தையும் போற்றினர்.

இதன்பிறகு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர்களிடையே பேசிய உரை பின்வருமாறு:

“இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போராட்டம் என்பது தமிழ்நாட்டில் 100 ஆண்டுகள் பழமையானது. தமிழ் மொழி இருக்கும் இந்த மாநிலத்திலே, 5000 ஆண்டுகளாக இந்த மண்ணை ஆண்டு கொண்டிருக்கும் தமிழ் மொழிக்கான முன்னுரிமையை நீக்கிவிட்டு, இந்தியை திணிக்கக்கூடிய முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு 100 ஆண்டுகளாக போராடி வந்திருக்கிறது. இப்பொழுதும் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்தியை முன்னிலைப்படுத்துகின்ற வேலையை பாஜக செய்கிறது. தென்னக ரயில்வேயில் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ரயில்வே நிலையங்களில், தமிழ் மொழியில் இருந்த பெயர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் இந்தியில் எழுதி இருக்கின்றார்கள். மோடி எங்கே சென்றாலும் ‘தமிழ் மொழி சிறந்தது என்று சொல்கிறார்’ என்று பாஜகவினர் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு முன்னிலை கொடுக்காமல் இந்திக்கு முன்னிலை கொடுக்கிறது மோடி அரசு. உத்தரப் பிரதேசத்திலும் குஜராத்திலும் தமிழ் மொழியை மையத்தில் எழுதுவார்களா?அத்தகைய தைரியம் இருக்கிறதா? பிஜேபியில் ஒருவருக்கு கூட இதைக் கேட்க துப்பு இல்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ரயில்வே நிலையங்களில் இந்தியை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது? இது இந்தி நாடா? அனைவரும் தான் வரி கட்டுகிறோம். பின் எதற்கு ஒரு மொழியை எங்கள் மீது திணிக்கிறார்கள்?

பாஜக தமிழை வளர்ப்பதாக நாடகம் ஆடுகிறது. பாஜகவின் தலைவர் தமிழிசை தன் பெயரை ‘இந்தியிசை’ என்று மாற்றிக்கொள்ளட்டும். அண்ணாமலை ‘இந்திமலை’ என்றும் நைனார் நாகேந்திரன் ‘இந்தி நைனார் நாகேந்திரன்’ என்றும் மாற்றிக்கொள்ளட்டும். நீங்கள் இந்திக்கு அடிமையாக இருந்தால் நாங்கள் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்?

தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களில் இந்தியை முன்னிலைப்படுத்தும் போக்கை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒன்றிய அரசு உடனடியாக ரயில் நிலையங்களில் முன்பு இருந்தது போல (தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தி) எழுத வேண்டும். பாஜக இதைச் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம். 

பாஜகவிற்கு தமிழ் மொழி மீது அக்கறை இருக்கிறதென்றால் தில்லியில் உள்ள சாலைகளின் பெயர்களை தமிழில் அங்கு எழுதுவார்களா? வட நாட்டில் எல்லா தெருக்களிலும் திருக்குறளை எழுதுவார்களா? கும்பாபிஷேகத்திலோ கணபதி ஹோமத்திலோ சமஸ்கிருதம் தவிர்த்து தமிழில் பேசுவார்களா என்று குருமூர்த்தியைப் பார்த்து கேட்கின்றேன். தமிழ்நாட்டு கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டுமென்று குருமூர்த்தியால் சொல்ல முடியுமா? சீதாவைப் பற்றி பேசும் இவர்கள் கண்ணகியைப் பற்றி பேசியிருக்கிறார்களா? எப்பொழுதும் ராமாயணம் பற்றி பேசும் பார்ப்பனரோ சனாதனியோ பாஜகவினரோ சிலப்பதிகாரம் பற்றியோ கண்ணகி பற்றியோ பேசியிருக்கிறார்களா? இல்லை. ஆனால் தமிழ் மீது அக்கறை இருப்பது போல் நடிக்கிறார்கள்.

தமிழை ’நீசமொழி’ என்று சொன்னது காஞ்சி சங்கராச்சாரியார். பெரியாரை விமர்சனம் செய்யும் சீமான் சங்கராச்சாரியாரை எதிர்த்து பேசியிருக்கிறாரா? பாஜக செய்யும் இந்தித் திணிப்பை விமர்சித்து பேசியிருக்கிறாரா? ஊடகத்தின் முன் நாடகம் நடிக்கக்கூடிய சீமான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செய்திருக்கிறாரா?

இந்தித் திணிப்பை ஏன் சீமான் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறார்? அதேபோல நடிகர் விஜய் அவர்களையும் கேட்கின்றோம். இந்தித் திணிப்பு என்பது தமிழ் இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். இது ஒரு கட்சி பிரச்சனை அல்ல. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. தமிழ் இனத்தை அவமானப்படுத்தக்கூடிய வகையில் பிஜேபி வேலை செய்கிறது. உங்கள் (விஜய்) கட்சி தொண்டர்கள் தயவு செய்து வீதியில் இறங்குங்கள். இந்திக்கு எதிரான  போராட்டத்தை கூர்மைப்படுத்துங்கள்.

ஓட்டுக்காக மட்டும்தான் இந்த கட்சிகள் பேசுமா? ஒரு கட்சிக்கு எதிராக பேசுவது மட்டும்தான் அரசியலா? அல்லது இனத்துக்காக பேசுவது  அரசியலா? மக்களுக்காக பேசுவதுதான் அரசியல். இன்னொரு கட்சியை எதிர்த்து பேசுவது மட்டும் அரசியல் அல்ல. அது ஓட்டுக்காக பேசுவது. இனத்துக்காக பேசுங்கள். இனம் உங்களுடன் நிற்கும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை விஜய் முன்னெடுத்தால் தமிழினம் விஜயுடன் நிற்கும்.

சீமான் கட்சியைப் போல நாடகம் நடிக்கக்கூடிய செயலை இந்த மண் ஒரு போதும் அனுமதிக்காது. மே 17 இயக்கம் இருக்கின்ற வரை தமிழினத்தின் மீது நடத்தப்படுகின்ற இந்த தாக்குதலை, தமிழர்களை தமிழ் மொழியை அவமானப்படுத்துகின்ற எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் நாம் தமிழர் கட்சியைப் போல வாய்சவடால் கிடையாது. விஜய் கட்சியைப் போல நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கவில்லை.

திமுக அரசு இந்தித் திணிப்பிற்கு எதிராக தன் கட்சித் தொண்டர்களை களமிறக்கி இருக்க வேண்டும். அதிமுக தன் கூட்டணிக் கட்சியான பாஜகவை எதிர்த்து ஏன் பேசவில்லை? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஏன் பேசவில்லை? இது கட்சிப் பிரச்சனை அல்ல. எல்லா ரயில்வே நிலையங்களிலும் இந்தியை முன்னிலைப்படுத்தியதை திமுகவினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வரைக்கும் டிவிட்டரில் பதிவு செய்தீர்கள். உங்கள் தொண்டர்களை களத்தில் இறக்குங்கள்.

இன்றைக்கு இனத்திற்கான அரசியலுக்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று நாங்கள் வேண்டுகொள் வைக்கிறோம். தமிழ்நாட்டினுடைய மாநில கட்சிகளை நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை. ஆனால் தமிழினத்துக்கு சிக்கல் எழுந்தால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து அதை எதிர்க்க வேண்டுமென்று நாங்கள் வேண்டுகொள் வைக்கின்றோம். இந்தி அழிப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் மே 17 இயக்கத்தால் முன்னெடுக்கப்படும். தமிழ்நாட்டினுடைய ரயில்வே நிலையங்களில் இருக்கக்கூடிய இந்தி எழுத்துக்கள் நீக்கப்படவில்லை என்றால் அதை அழிக்கின்ற போராட்டத்தை வரும் நாட்களில் நாங்கள் தீவிரப்படுத்துவோம், கூர்மைப்படுத்துவோம். நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை. வழக்கிற்கோ சிறைக்கோ அஞ்சுகின்ற கூட்டம் மே 17  இயக்கம் அல்ல. நாங்கள் இனத்திற்காக போராடுகின்ற கூட்டம். இந்தித் திணிப்பை அழிக்கின்ற போராட்டத்தை தொடங்கக்கூடிய ஒரு அறிவிப்பாக இந்த போராட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கின்றோம்.

தமிழ்நாட்டினுடைய பிஜேபி தலைவர் நைனார் நாகேந்திரனிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன்- உத்திர பிரதேசத்திற்கு பட்ஜெட்டில் 19000 கோடி ரூபாய், பீகாருக்கு 10000 கோடி ரூபாய், மத்திய பிரதேசத்திற்கு 15000 கோடி ரூபாய் ஒதுக்கிய மோடி சர்க்கார், பெருத்த லாபத்தை ரயில்வேக்கு கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு வெறும் 6700 கோடி ரூபாய் மட்டும்தான் ஒதுக்கி இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் ரயிலில் பயணிக்கும் பாதி பேர் டிக்கெட் எடுப்பது இல்லை, முன் பதிவு பெட்டிகளில் கூட நமக்கு இடம் கிடைப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் சட்டத்திற்கு உட்பட்டு இங்கே மக்கள் இந்த ரயில்வேதுறையை லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி லாபகரமாக நடத்தும் எங்கள் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கிறீர்கள். உத்திரப் பிரதேசத்திற்கு 19000 கோடி ரூபாயும் தமிழ்நாட்டிற்கு வெறும் 6000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறது மோடி சர்க்கார்.

தேசிய நெடுஞ்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து மிரட்டி நிலத்தைப் பிடுங்குகிறது பாஜக. ஆனால் ரயில்வேதுறைக்கு நிலத்தை எடுப்பதில் என்ன பிரச்சனை? நெடுஞ்சாலையில் நிலத்தைப் பிடுங்கி டோல்கேட் போட்டால் வடநாட்டான் நன்றாக சம்பாதிக்க முடியும், கொள்ளை அடிக்க முடியும். ஆனால் ரயில் நிலையத்திற்கு தேவைப்படுகின்ற நிலத்தை எடுத்தால் அது இந்த மக்களுக்கு பயனுள்ளதாக மாறிப் போகும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயனுள்ளதாகிப் போகும். அதனால்தான் அதைச் செய்யாமல் பிஜேபி அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக சதி செய்கிறது.

தமிழ்நாட்டின் மீது ஒரு பொருளாதார தடையை கொண்டு வந்திருக்கிறது மோடி சர்க்கார். வேறொரு நாட்டின் மீது பொருளாதார தடையை கொண்டு வருவது போல தமிழ்நாட்டின் மேல் ஒரு பொருளாதார தடையை வெட்கம் இல்லாமல் கொண்டு வந்திருக்கிறது. பிஜேபிக்கு யாராவது ஓட்டு போட்டால் அதை தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகத்தான் நாங்கள் பார்க்க முடியும்.

நாங்கள் இந்தித் திணிப்பை எதிர்க்கக் கூடியவர்கள். இந்தி மொழியை அல்ல. ஆனால் தமிழை நாசப்படுத்திவிட்டு இந்தியைத் திணிக்கிற வேலையை பாஜக செய்தால் அதைப் பார்த்துக்கொண்டு மாணவர் சமூகம் அமைதியாக இருக்காது. இளையோர் சமூகம் அமைதியாக இருக்காது. நாங்கள் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், தேர்தலுக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடத்துவோம் என்று கூறினோம், அதை இப்பொழுது நடத்தியிருக்கிறோம். இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் இந்தியைத் திணித்தால் தமிழன் சும்மா இருக்க மாட்டான். ரயில்வே மட்டும் அல்ல, அஞ்சல் அலுவலகம், வங்கி என்று எங்கெல்லாம் இந்தியைத் திணிக்கின்றார்களோ அங்கெல்லாம்  இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்கும் என்பதை இச்சமயத்தில் கூறிக் கொள்கிறோம். எனவே தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களில் இந்தியை திணித்ததை உடனடியாக நீக்க வேண்டும்” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இந்தித்திணிப்பிற்கு எதிரான எதிர்ப்புக்குரலை பதிவு செய்த அனைவரையும் கைது செய்த காவல்துறை அவர்களை மண்டபத்தில் தடுத்து வைத்தனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பேரறிவாளன் உள்ளிட்ட வடமாவட்ட செயலாளர்கள் பங்கெடுத்து கைதாகினர். மேலும் தஞ்சையில் இருந்து போராட்ட செய்தியை கேள்விப்பட்டு, தோழர் மெலட்டூர் கார்த்திக் தனது 13 வயது மகனோடு போராட்டத்தில் பங்கெடுத்து கைதாகினார்.

கைது செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்டு அரங்கிற்கு வந்து தோழர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் மதிமுக தோழர்கள். மதிமுகவின் வடசென்னை பகுதியை சார்ந்த மாமன்ற உறுப்பினர் தோழர் ஜீவன், தோழர் தென்றல் நிசார், தோழர் சாகுல்ஹமீது உள்ளிட்ட மதிமுக தோழர்கள் பங்கெடுத்து வாழ்த்தினர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பாஜகவின் இந்தித் திணிப்பை எதிர்க்க வேண்டிய இன்றியமையாத பணியின் தொடக்கப்புள்ளியாக இப்போராட்டம் நிகழ்ந்தது.

காணொளி: https://www.youtube.com/watch?v=8wc4B7Gxb2I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »