
25 பிப்ரவரி 2026 அன்று மறைந்த மூத்த பொதுவுடைமைவாதி, மக்கள் போராளி, இந்திய விடுதலை போராட்ட வீரர், மார்க்சிய சிந்தனையாளர், எளிமையின் அடையாளம், அருந்திறல் தமிழர் அய்யா. இரா.நல்லகண்ணு அவர்களுக்கு மே 17 இயக்கத் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.
இறுதி வணக்கம் செலுத்திய பின் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது:
“தன்னுடைய உடல் கூட தனக்கு சொந்தமில்லை, இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் பயன்படுகின்ற வகையிலே அவருடைய உடலை கூட தானமாக இந்த சமூகத்திற்கு கொடையாக கொடுத்திருக்கிறார். ஐயா நல்லகண்ணு அவர்களைப் பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு 100 ஆண்டுகால வரலாறை பேச வேண்டி இருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தன்னலமற்ற போராட்டத்தினுடைய அடையாளமாக ஐயா நல்லகண்ணு அவர்கள் தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டி இருக்கின்றார். ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பது, பொருளுக்காகவோ பொன்னுக்காகவோ பதவிக்காகவோ ஆசைப்படாத ஒரு வாழ்க்கை ஒரு கம்யூனிஸ்டினுடைய வாழ்க்கை. இதை ஏட்டில் அல்ல நடைமுறையில் நம் கண்முன்னால், நாமெல்லாம் வாழ்கின்ற இந்த காலகட்டத்தில், தன்னலமே அரசியல் என்று இன்றைக்கு பேசி கொண்டிருக்கூடிய காலகட்டத்தில் இப்படியான ஒரு மாமனிதர் நம் கண்முன்னே வாழ்ந்து எடுத்துக்காட்டாக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார். இதைவிட ஒரு பெரிய பாடத்தை வேறு எது கற்பித்து கொடுத்துவிடும்!
ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களது முன்னேற்றத்திற்காகவும் வளத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைப்பதுதான் கம்யூனிஸ்ட் என்கின்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்தி காட்டி இருக்கின்றார். ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் கொண்டவர். எந்த புத்தகத்தை அவருக்கு கொடுத்தாலும் அன்றைய தினத்திலே அவர் வாசித்து முடித்து விடக்கூடிய பழக்கத்திற்கு சொந்தமானவர்.
கடந்த ஆண்டு எங்களது மாநாட்டிற்காக அவரை அழைத்த பொழுது அதில் இருக்கக்கூடிய தலைப்புகளை குறித்தெல்லாம் எங்களிடத்திலே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார், பேசிக் கொண்டிருந்தார். எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்து நம்மிடத்தில் கொடுத்து படிக்க சொல்லுவார், வாசிக்க சொல்லுவார். எப்பொழுது அவரது வீட்டை கடந்து சென்றாலும் அவர் வாசித்துக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். இத்தனை வயதிலும் கூட வாசிப்பதை அவர் நிறுத்தவில்லை. தனக்கு நினைவிருக்கக்கூடிய காலகட்டம் வரை வாசிப்பை தொடர்ந்திருக்கிறார் என்றால் இந்த சமூகத்தை பற்றியான அனைத்து அறிவுகளையும் தொகுத்து மக்களுக்கு பயனுற வாழ வேண்டும் என்கின்ற உந்துதல் சக்தியை தவிர வேறு என்ன இருந்துவிட முடியும்!

நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தை செழுமைப்படுத்தி, பல்வேறு தலைப்புகளை இன்றைய சமூகம் படிப்பதற்குரிய வகையிலே கொடுத்தவர். தொழிற்சங்க போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். உழவர்களினுடைய போராட்டத்திலே அயராத பங்களிப்பை செய்தவர். விடுதலை போராட்ட வீரராக வாழ்ந்தவர். வெள்ளையருக்கு எந்த இடத்திலும் மண்டியிடாத, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்காத ஒரு மரபுக்கு சொந்தக்காரர்.
அவரை சித்திரவதை செய்த பொழுதிலும் கூட “விடுதலை முழக்கத்தை நான் கைவிட மாட்டேன்” என்று முழங்கி, உறுதியாய் எழுந்து நின்ற ஒரு மாமனிதர். இந்த காலகட்டத்திலும், தனிப்பட்ட முறையில் நாங்கள் சொல்ல வேண்டும் என்றால், மே 17 இயக்கத்தின் மீது 2018 /19 காலகட்டத்தில் நடத்தப்பட்ட கடுமையான ஒடுக்குமுறை சமயத்தில், எங்களை எல்லாம் அழைத்து, எங்களுக்கு ஆதரவு கொடுத்து, என் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை கட்சிகளிடத்தில் கொண்டு போய் சேர்த்த ஒரு பெருமகனார்.
நாங்கள் எல்லாம் இன்றைக்கு சுதந்திரமாக போராட்ட களத்தில் இயங்குகிறோம் என்றால், ஐயா நல்லகண்ணு அவர்களுடைய அன்பும் அரவணைப்பும் தோழமை உணர்வும் தான் எங்களை இன்றுவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அவரது மறைவு எங்களுக்கு மறைவுறாத ஒரு துயரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எங்களோடு அவர் இருப்பது போல, பேசுவது போலத்தான் எங்களுக்கு இருக்கிறது.

நகைச்சுவை உணர்வு மிக்கவர். எந்த நெருக்கடியையும் எளிதாக கையாளுகின்ற ஒரு மனப்பக்குவம் கொண்டவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர், எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர். மக்கள் நலனை முன்னிறுத்தி எதற்கும் சமரசம் செய்து கொள்ளாதவர். எங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடியவர். அப்பேர்பட்ட ஒரு மாமமனிதனை இழந்திருப்பது என்பது இதுவரை நாம் சந்தித்த பேரிழப்பிலே வரலாற்று பேரிழப்பாக ஐயா நல்லகண்ணு அவர்களுடைய இழப்பை பார்க்கின்றோம்.
அவருக்கு கொடுக்கப்பட்ட விருதுகளை குறித்து அவர் கவலைப்பட்டதில்லை. விருதுகளோடு சேர்ந்து வந்த பரிசு பொருளை அவர் துச்சமாக மதித்திருக்கிறார். அதையும் மக்களுக்கே அவர் தாரை வார்த்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் வாழ்ந்த காலத்தில், அவரது வாழ்க்கையை எடுத்துக்காட்டாக எடுத்து, நாமும் வாழ வேண்டும் என்ற உறுதியை இந்த சமயத்தில் எடுத்துக் கொள்கின்றோம்.
அவரது மறைவை எங்களால் ஏற்க முடியாத ஒரு மறைவாக, தனிப்பட்ட ஒரு இழப்பாக நாங்கள் பார்க்கின்றோம். ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எங்களது செவ்வணக்கத்தை நாங்கள் பதிவு செய்கிறோம்.”
குறிப்பு: மூத்த மொதுவுடைமைவாதியான அய்யா. நல்லக்கண்ணு அவர்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மே பதினேழு இயக்கத்தோழர்கள் மரியாதை செலுத்தினர்.