மொழிப்போர் ஈகியர், மே பதினேழு இயக்கப் போராளி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் ஈகியராக இந்தி அழிப்புப் போராட்டத்தில் தன்னுயிரைக் கொடையாக அளித்த மே 17 இயக்கத் தோழர் சிவா திலீபன் (சிவக்குமார்) அவர்களின் வீரவணக்க நிகழ்வு தோழர்களின் வீர முழக்கத்துடனும், தலைவர்களின உணர்ச்சி உரையுடனும் மார்ச் 19, 2026 அன்று நடைபெற்றது. மே 17 இயக்க பெண் தோழர்கள் அவரின் உடலை சுமந்து சென்று வீரமுழக்கமிட்டனர். அவருடைய உடல் மொழிப்போர் ஈகியர்களான தாளமுத்து, நடராசன் ஆகியோர் விதைக்கப்பட்ட மூலக்கொத்தளம் மயானத்தில் விதைக்கப்பட்டது.

கடந்த மார்ச் 11-ம் நாளன்று இந்திய இரயில்வே பலகைகளில் தமிழைப் பின்னுக்குத் தள்ளி, இந்திக்கு முன்னுரிமை கொடுத்து, எழுதப்பட்ட இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில், ஆதிக்க இந்தியை துடிப்புடன் அழித்துக் கொண்டிருந்த சிவா திலீபன் அவர்கள், ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’வென்று முழக்கமிட்டவாறே உயிரைத் துச்சமென மதித்து இரயில் முன் பாய்ந்தார். எவரும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்நிகழ்வு, உடனிருந்த மே 17 இயக்கத் தோழர்களை உறைய வைத்தது. இரயிலுக்கு அடியில் சிக்கிய சிவா திலீபனைப் போராடி மீட்டனர். உடல் முழுவதும் கடுமையான காயங்களுடன் அடிபட்டிருந்த அவரை அருகிருந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தோழர்கள் விரைந்து கொண்டு சென்றனர். உடல் முழுதும் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்த போதிலும், அரை மயக்க நினைவிலும் ‘தமிழ் வாழ்க’ என்ற அவரது குரல் ஓயவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 8 நாட்கள் வரை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிவா திலீடன் அவர்கள், சிகிச்சைப் பலனின்று மார்ச் 18, 2026 அன்று இயற்கை எய்தி மொழிப்போர் ஈகியரானார். 

மே 17 இயக்கப் போராளி சிவா திலீபனுக்கு மே 17 இயக்கக் கொடியை, இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் வீரவணக்க முழக்கமிட்டு போர்த்தினர். தோழர்களும் கண்ணீர் பெருக்குடன் வீரவணக்க முழுக்கிட்டனர். பின்னர் அவரின் உடல் வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலி செலுத்த கொண்டு செல்லப்பட்டது. சிவா திலீபன் அவர்களின் இல்லத்திற்கு வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் திருமாவளவன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார். பல்வேறு கட்சி இயக்கத் தோழர்களும், உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்திய பின்னர் விடுதலைப் புலிகளின் புலிக்கொடி போர்த்திய  வாகனத்தில் மூலக்கொத்தளம் மயானத்திற்கு அவரது வித்துடல் கொண்டு வரப்பட்டது.

சிவா திலீபன் அவர்களின் இணையர் மே 17 இயக்கத் தோழர் கீதா, மகள் கோகிலா மற்றும் கோமதி ஆகியோர் முன்னணியில் நின்று வீர முழக்கமிட்டுச் செல்ல,  அவர்களைப் பின்தொடர்ந்து மே 17 இயக்கத் தோழர்கள், ஐயா வைகோ உள்ளிட்ட கட்சி, இயக்கத் தலைமைகள், தோழர்கள் முழக்கமிட்டுச் சென்றனர். தோழமைகளின் வீரவணக்க முழக்கத்துடன் திலீபன் அவர்களின் உடல் மூலக்கொத்தளம் மயானத்தில் வைக்கப்பட்டது. தலைவர்கள், ஆளுமைகள் வீரவணக்க உரை நிகழ்த்தினர்..

பேரன்பான துணைவரை இழந்த இக்கட்டான நேரத்திலும், சிவா திலீபன் இணையர் தோழர் கீதா அவர்கள் இறுதி வரை கொள்கை உரத்தோடு உறுதியாக இருந்ததும், மே 17 இயக்க குணத்தோடு துணிவாகப் பேசியதும் ஆளுமைகளை ஆச்சரியப்பட வைத்தது. இயக்கத்தின் மீது வைக்கும் அவதூறுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவரது உரை இருந்தது. இயக்கம் ஊட்டிய நெஞ்சுரமும், கணவர் கற்றுக் கொடுத்த அரசியலும் தன்னை உறுதியாக்கியதாகப் பேசினார். இந்தித் திணிப்பும், வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு இடமில்லாத வகையில் இந்திக்காரர்கள் திணிப்பும் எதிர்த்து போராட்டக் களத்தில் மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

மே 17 இயக்கத்தில் ஒவ்வொருவராக இணைந்த பெண்களின் அரசியல் உணர்வு எந்த சூழலையும் எதிர்கொள்ளும் அளவிற்கு எந்தளவிற்கு வளப்பட்டிருக்கிறது என்பது குறித்து எடுத்துக்காட்டி, பெண்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய தேவையைப் பேசினார். எந்த உடல்நலக் குறைவும் இல்லாத, தன்னை தந்தை மாதிரி கவனித்துக் கொண்ட இணையர் சிவா திலீபனின் போராட்டத் தீ அணைந்து விடக் கூடாது என கொள்கை முழக்கம் செய்தார். சிவா திலீபன் மகள் தோழர் கோகிலா, இந்த துயரம் போலித் தமிழ்த்தேசியவாதிகளின் முகமூடிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது, பாசிசத்தின் அரியணையைக் கொளுத்தும் வரைப் போராடுவோம் எனும் முழக்கத்தை பேச்சினில் பதிவு செய்தார். அவரின் பேச்சு சிவா திலீபன் அவர்கள் ஊட்டிய அரசியல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.  

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஐயா வைகோ அவர்கள் பேசும்போது, இதுவரை தான் கலந்து கொண்ட எந்த துயர நிகழ்விலும், உயிர் நீத்தவரின் மனைவி மேடையில் இருந்து அஞ்சலி செலுத்தியதாகவோ, வீரவணக்கம் செலுத்தியதாகவோ, சூளுரை எடுப்பதாகவோ கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. ஆனால் அருமை மகள் கீதா அவர்களிடம் முதன்முதலாக இதைக் கண்டிருக்கிறேன் என வியந்தார். மே 17 இயக்கம் லட்சிய தாகம் கொண்ட இயக்கம், செந்தமிழ் நாட்டுக்கு தேவைப்படும் இயக்கம் வீறு கொண்டு போராடுகிறது என்பதை உலகத் தமிழர்களிடையே சிவா திலீபனின் ஈகம் பரப்பியிருப்பியிருக்கிறது என்றார்.  ஈழப் போராட்டங்கள் பற்றியும், டெல்லி ஆதிக்கவாதிகள் சதிகளைப் பற்றியும் விரிவாக உரையாற்றினார். தியாகம், துணிவு, ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் மே 17 இயக்கத்தில் இருப்பதால்தான், ஒவ்வொரு மேடைகளிலும் இளைஞர்கள் மே 17 இயக்கத்தில் சேர வேண்டுமெனச் சொல்லி வருவதாக புகழ்ந்தார். உரையின் இறுதியில் சிவா திலீபன் அவர்களுக்கு வீரவணக்க முழக்கமிட்டார். தோழர்களும் இணைந்து முழங்கினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் வேல்முருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் துறைகளெங்கும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடி வருவதைக் குறிப்பிட்டு, துணைவரை இழந்த இந்த நிலையிலும் தமிழர்களின், தமிழின் உரிமைக்காகப் பேசும் கீதா அவர்களின் உறுதி வியக்க வைக்கிறது என்றார். போராட்டக் களத்தில் நிற்கும் ஆளுமைகளை உருவாக்கிய சிவா திலீபனும், இப்படியான கள புரிதலுள்ள, அறிவு சார்ந்த தளத்தில் சிந்திக்கக் கூடிய அரசியல் உறுதியுள்ள தோழர்களை உருவாக்கியிருக்கும் மே 17 இயக்கமும், தமிழ்நாட்டையும், இந்தி தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்றைப் படைத்திருக்கிறது எனப் போற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் உரையில், சிவா திலீபனின் மனைவி கீதா அவர்கள், இந்நிலையிலும் கண்ணீரை உகுக்காமல் ‘போராட்டக் களத்திற்கு வா’ என்று அழைத்ததை அதிசயமாகப் பார்ப்பதாகக் கூறினார். ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதும், பரிணமிக்கப்படுவதும், அதனை அரசியல்படுத்துவதும் கடினமானப் பணி. அந்தக் கடினமானப் பணியை தோழர் திருமுருகன் காந்தி செம்மையாக சிறப்பாக செய்கிறார் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தோழர் சண்முகம் அவர்களின் உரையில், சிவா திலீபனைக் காண மருத்துவமனைக்கு வேதனையுடன் சென்ற போது அவரின் இணையர் தைரியத்துடன் நின்று எங்களுக்கு ஆறுதலைக் கூறியது நெகிழ வைத்துது. நாம் ஆதிக்கவாதிகளை எதிர்க்க. இருந்து போராட வேண்டும் என்று பேசினார். 

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஐயா சுப. வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றுகையில், இனி நாம் யாரையும் சுமந்து வரக் கூடாது, சிவா திலீபன் அவர்களின் உணர்வுகளைச் சுமந்து பேராடுவோம் என்றார். தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் தோழர் ஐயா தியாகு அவர்கள் இந்திய வல்லாதிக்கத்தின் மூர்க்கத்தோடு மோதிக் கொள்ளப்பட்டார் என்பதே குறியீடாக எடுத்துக் கொள்ளக் கூடியது என பேசினார். தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மே 17 இயக்கம் முன்னெடுத்திருக்கும் இந்திய அதிகார எதிர்ப்புப் போராட்டம் தீயாகப் பரவட்டும், சிவா திலீபன் அவர்களின் தியாகமும் தீயாகப் பரவட்டும் என்றார். மூத்தப் பெரியாரியவாதியும், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமை கட்சியின் தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் பேசும் போது, 1938-ல் வரலாற்றில் படித்த செய்தியை இன்று கண்ணெதிரே பார்க்கின்றோம், பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உரையாற்றிய முழக்கம், இன்று சிவா திலீபன் வீரவணக்க நிகழ்வில் ஒலித்ததாக நினைவு கூர்ந்தார்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய விளக்க உரையில்,

முத்துக்குமாரும், செங்கொடியும் தற்கொடையாக உயிரை ஈந்த சமயத்திலும்கூட, களத்தில் நின்று போராட வேண்டுமே தவிர, தற்கொடை தீர்வல்ல என்று இளம் தோழர்களுக்கு வழிகாட்டியவர் தோழர் சிவா திலீபன். அவர் எடுத்த முடிவு உணர்ச்சிப் பெருக்கால் என்று பலர் சொல்லுகிறார்கள். அரசியல் வயப்பட்ட உணர்வு அரசியல் படித்தவனுக்குத்தான் வரும். மொழிக்காக, இனத்துக்காக, நிலத்துக்காக, சூழலியலுக்காக உயிரை தற்கொடையாக கொடுக்கும் முடிவு எங்கிருந்து வருகிறது? செங்கொடி, முத்துகுமார் ஈகைக்குப் பிறகு பெரும் எழுச்சியான போராட்டங்கள் நடந்த போதெல்லாம் உயிர்கொடைகள் இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சக்கணக்கான பேர் திரண்டு நின்றோம். யாரும் உயிர் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரவில்லை. தன் உயிர் கொடுத்தாவது மக்கள் வருவார்களா என்ற நிலைக்கு தள்ளப்படும் போதுதான் இந்த முடிவு எடுக்கிறார்கள். தன் அன்பான குடும்பத்தை விடுத்து, சுகமான வாழ்வை விடுத்து, தன்னுயிரைத் துச்சமாக விடுகின்றார்கள். அந்த தியாகத்தை நினைத்தாவது தமிழன் எழ மாட்டானா, இனத்திற்கு விடிவு கிடைக்காதா என்று நினைக்கிறார்கள். இப்படியாக, மாவீரன் முத்துக்குமாரிலிருந்து நாம் தோழர்களை இழந்திருக்கின்றோம். 

நாம் பல கட்சிகளாக, அமைப்புகளாக இருந்த போதும் நமது கொள்கை ஒன்றேதான். இந்த நிலம் விடுதலை பெற வேண்டும் என்பதுதான்.

பூங்கா நிலையத்தில் உள்ள அத்தனை இந்திய எழுத்துக்களில் தேடித் தேடி அழித்த பிறகு, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்லலாம் என்ற நினைத்த போதுதான், சிவா திலீபன் ரயில் முன் பாய்கிறார். எங்களால் நம்ப முடியவில்லை, இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

தயவுசெய்து எவரும் அந்த முடிவை எடுத்து விடாதீர்கள். ஏனென்றால் நமக்கு முன்பெல்லாம் நேரடியாக எதிரிகள் இருந்தார்கள், கண்ணுக்குத் தெரியாத அதிகார கட்டமைப்பும் முகம் தெரியாத எதிரியும் இன்று நம்முன் நின்று கொண்டிருக்கின்றான். இவர்களை எதிர்க்க போராட்டத்தை இறுதி நாள் வரை நடத்த வேண்டும். 101 வயது வரை வாழ்ந்த ஐயா நல்லக்கண்ணு அவர்களோ, இங்கு இருக்கும் தலைமைகளோ அதைத்தான் நமக்கு சொல்கிறார்கள். ஆகவே ஒருநாளும் இந்த முடிவை எடுத்து விடாதீர்கள். இரத்த சகதியுடன் அவரை தூக்கி வந்த நிகழ்வை எங்களால் வாழ்வில் ஒரு நாளும் மறக்க முடியாது. அவர் மருத்துவமனையிலிருந்த எட்டு நாட்களும் கண்களில் உறக்கம் இல்லை. அவர் நினைவு திரும்பி விடாதா என்ற எதிர்பார்ப்புடனே கடந்தோம்..

இந்த நேரத்தில் மருத்துவ உதவிகள் அனைத்தும் செய்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தோழர் எழிலன் அவர்களுக்கும், தோழர் மருத்துவர் இரவீந்தரநாத் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை எடுத்துரைத்து உடனடியாக மருத்துவ உதவிகளை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர் இளங்கோ அவர்கள், இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருக்கிறது, தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். அதன் பிறகு உடனடியாக முதல்வர் வந்தார். ஐயா வைகோ அவர்கள் உடனே வந்து பார்த்தும், நாள்தோறும்  தொடர்பு கொண்டு திலீபன் உடல்நிலையைத் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்தார். இந்த நன்றிக்கு என்ன கடன் செய்வது? பெயர் சொல்ல வேண்டும் என்றால் நீண்ட பட்டியல் இருக்கிறது. பல்வேறு கட்சி, இயக்கத் தோழமைகள் உடன் நின்றார்கள். தமிழினம் துணையாக நின்றது.

நாங்கள் இப்போராட்டத்தை இரண்டு நாட்கள் நடத்திய பின்பு, தேர்தலுக்கு அப்பால் வலிமையான கோரிக்கையாக முன்னர்த்தலாம் என்றிருந்தோம். ஆனால் சிவா திலீபன் அவர்கள், எங்களுக்கு போராட்டத்தை நிறுத்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 30 நகரங்களில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. எங்கள் தோழர்கள் அழித்தார்கள். பூங்கா நிலையத்தில், மக்களுக்கு தொந்தரவாக இருக்குமே என்று நாங்கள் ஒதுங்கி நின்று முழக்கமிட்டோம். ஆனால் அங்கிருந்த மக்கள் எங்களுடன் இணைந்து முழக்கமிட்டார்கள். ஒரு தம்பதி எங்கள் பதாகையை வாங்கிப் பிடித்துக் கொண்டு முழக்கமிட்டனர். பேசப் பேச கரவொலி எழுப்பினார்கள். நாங்கள் இந்தியை அழிப்பது, அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால், அந்த மக்கள் எங்களுக்கு துணை நின்றிருக்க மாட்டார்கள். மக்கள் துணை இருந்ததால் தான் எங்கள் தோழர்கள் 30 நகரங்களில் இந்தி அழிப்பை செய்து முடித்தார்கள்.

மக்களுக்குப் புரியும் அரசியலை நமக்குச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் போராட்டத்தை, அதன் நோக்கத்தை புரிந்து கொள்கிறார்கள்.

நாம் வட இந்திய தொழிலாளர்களை எதிர்க்கவில்லை. வட இந்திய தொழிலாளிக்கும், வட இந்தியாவில் இருந்து வரும் அதிகாரிக்கும் வேறுபாடு இருக்கிறது. தொழிலாளி பணி செய்வான். ஆனால் அதிகாரி உத்தரவிடுவான். அவன் தான் இந்தியை முதன்மைப்படுத்துகின்ற உத்தரவை இட்டிருக்கின்றான். அந்த ஆணவத்துக்கு எதிரான போராட்டம் தான் இந்தி அழிப்பு போராட்டம். இந்தி அழிப்பு என்பது இந்தி அதிகாரிகளின் முகத்தில் கரியைப் பூசுகின்ற போராட்டம்.

தோழர் கீதா அவர்கள், இந்த எட்டு நாட்களும் எங்களிடத்தில் ‘சிவா திலீபன் அவர்கள் எதற்காக இந்த உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தாரோ, அந்தப் போராட்டத்தில் இருந்து ஒரு அடி கூட ஒரு பின்னகராதீர்கள், முன்னகருங்கள்’ என்று சொன்னார். அவரது மகள் முதல்வரை ‘தோழர்’ என்றழைத்து உறுதியாகப் பேசினார். ‘என் அப்பா தமிழ் மொழிக்காக உயிர் விடத் துணிந்திருக்கிறார், இது எனக்குப் பெருமை’ என்று துணிச்சலுடன் சொன்னார். தங்களுக்கு இவையெல்லாம் தேவை என்று கேட்கவில்லை அவர். இந்த இனத்தின் விடுதலையைப் பேசினார் அந்த மகள்.

தமிழ்நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் முதல்வரிடத்தில், மொழிக்காக உயிரை விடத் துணிந்து போராடிக் கொண்டிருக்கும் தந்தையின் தலைமாட்டில் நின்று கொண்டு, ஒரு பொழுதும் நாங்கள் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றார். அந்தக் குடும்பம் நமக்கு உத்தரவிட்டிருக்கிறது, தோழர்களே.. அதை செய்வோம். இந்தியின், இந்தி அதிகாரக் கட்டமைப்பின் ஆதிக்கத்தை முடித்துக் கட்டுவோம். வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இந்திய பிரதமர்களாக இருந்த நேரு, இந்திரா காந்தி, சாஸ்திரி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் வரை இந்தியை எதிர்த்து நின்றோம். நரேந்திர மோடி என்ன?, சுண்டைக்காய்.

நூறாண்டு கால வரலாறு நமக்கு இருக்கிறது. 5000 ஆண்டு கால மொழி இருக்கிறது. எங்களுக்கு உயிர் துச்சம். சிவா திலீபன் சொல்லிச் சென்றிருக்கிறார். இந்தி அழிப்பைத் தொடர்வோம்.

இனி ஒரு உயிர் கூட இந்த மண்ணில் இருந்து போகக்கூடாது. ஒவ்வொரு தோழரையும் நாம் மணி மணியாக சேகரித்து வைத்திருக்கிறோம். ஏழு கோடி தமிழரும் எழுந்து நின்றால் ஒருபோதும் இங்கே திணித்து விட முடியாது.. ஆனால் குறைவான எண்ணிக்கையில் தான் தோழர்கள் இருக்கிறோம். நீங்கள் எல்லாம் விதைநெல். காட்டை உருவாக்குவதற்காக இருக்கக்கூடியவர்கள் . அவன் களைச்செடி, மிதித்து விட்டுப் போய்விடலாம். ஒரு பொழுதும் உயிரைக் கொடுக்கும் எண்ணத்திற்கு வராதீர்கள்.

எல்லாக் கடன்களையும் முடித்து மகள்கள் வாங்கிக் கொடுத்த வீட்டில், இனி நிம்மதியாக ஓய்வுடன் இருக்கலாம் என்று சிவா திலீபன் சொன்னதாக தோழர் கீதா சொன்னார்கள். அப்படிப்பட்ட மகிழ்ச்சியான வாழ்வில் இருந்து தான் இந்த இனத்திற்காக இம்முடிவை எடுத்திருக்கிறார் தோழர் சிவா திலீபன்.

எங்கள் தமிழ் வணக்கப் பாடலில் பாரதிதாசனின இரு வரிகள் வரும், ‘தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும், தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும்’ என்று பாடப்படும். அதனை தனது முகநூல் பதிவில் எழுதியிருக்கிறார். பிறகு ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க‘ என எழுதி விட்டு, ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்று எழுதியிருக்கிறார்.

தோழர்களே, நமக்கு நீண்ட பயணம் இருக்கிறது. தயவுசெய்து உயிரைக் கொடுத்து விடாதீர்கள். மக்கள் மீது நேசம் இல்லாதவனுக்கு உயிர் மதிப்பானதல்ல. ஆனால் மானுட நேசிப்பாளனுக்கு உயிர் விலைமதிப்பற்றது. ஆகவே பாதுகாத்திடுங்கள். சிவா திலீபன் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவோம். சிவா திலீபன் குடும்பம் கொடுத்திருக்கின்ற அந்தப் பணியை முன்னகர்த்துவோம். கட்சி அமைப்பு கடந்து, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற விடுதலை முழக்கத்தை முழங்கிடுவோம்.. என விரிவான, அரசியல் உணர்வெழுச்சியான உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பேசுகையில், தாளமுத்துவை, நடராசனை, முத்துக்குமாரை, செங்கொடியை, அனிதாவை, சிவா திலீபனைக் கொன்றது இந்தியப் பார்ப்பனியமே. ஆதிக்க இந்தியை அழிப்போம், சிவா திலீபன் கையளித்துச் சென்ற பணிகளை முன்னகர்த்துவோம் என்று பேசினார்.

மேலும், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள், தமிழர் ஆட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் எஸ்.ஆர். பாண்டியன் அவர்கள், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் அவர்கள், ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் தோழர் வசீகரன் அவர்கள், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் தமிழினியன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தோழர் புழல் ஷேக் முகம்மது அலி அவர்கள், தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி அவர்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை தலைவர் தோழர் குமரன் அவர்கள், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி அவர்கள், இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் சையத் அலி அவர்கள், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவைத் தலைவர் டைமன்ட் ராஜா அவர்கள், மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் சீராளன் அவர்கள், மருதநாட்டு மக்கள் கட்சியின் தோழர் பழனி ராஜ்குமார், இயக்குனர் லெனின் பாரதி அவர்கள், நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் ஆகியோர் சிவா திலீபன் அவர்களுக்கு வீரவணக்க உரையை நிகழ்த்தினர்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள், கட்சித் தோழர்களுடன் மூலக்கொத்தளம் இடுகாட்டிற்கு வந்து சிவா திலீபன் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தினார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு அவர்கள், மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தோழர் செந்திலதிபன் அவர்கள், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் ஏ.கே. கரீம் அவர்கள், அற்புதம்மாள் அவர்கள், தோழர் பேரறிவாளன் அவர்கள்,  பேராசிரியர் வீ. அரசு அவர்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் காஞ்சி அமுதன் அவர்கள் ஆகியோர் உடன் வந்திருந்து சிவா திலீபனுக்கு வீரவணக்க முழக்கமிட்டனர். 

மேலும் பல்வேறு கட்சி, இயக்க தோழமைகளும், பொதுமக்களும் பங்கேற்றனர். தமிழகமெங்கும் பல்வேறு  இயக்கங்கள் சிவா திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடத்தியுள்ளனர். இறுதியாக பெண் தோழர்கள் சிவா திலீபன் அவர்களின் உடலை வீர வணக்க முழக்கமிட்டு புதைவிடம் வரை சுமந்து சென்றனர். தோழர்கள் கண்ணீருடனும், வீர முழக்கத்துடனும் சிவா திலீபன் அவர்களின் உடலை வித்துடலாக்கினர். இந்தி அழிப்புப் போராட்டத்தை முன்னகர்த்துவோம் என உறுதியேற்றுக் கொண்டனர். 

1938 களில் மொழிப்போர் ஈகியர்களான தாளமுத்து, நடராசன் ஆகியோர் விதைக்கப்பட்டிருக்கும் மூலக்கொத்தளம் மயானத்தில் மொழிப்போர் ஈகியர் சிவா திலீபன் உடலும் விதைக்கப்பட்டிருக்கிறது.  மொழிப்போர் ஈகியர் மே 17 இயக்கப் போராளி சிவா திலீபன் அவர்கள் மே 17 இயக்கத் தோழர்களின் முகமானார். அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.. அவர் கையளித்துச் சென்ற இந்தி அழிப்புப் பணிகளை முன்னகர்த்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »