
தூத்துக்குடியில் பதினைந்து பேரை சுட்டுக் கொல்வதற்கு காரணமான வேதாந்தா ஸ்டர்லைட் நிறுவனம் ஒடிசாவின் வளங்களுக்காக அங்குள்ள பழங்குடிகளை தற்போது வேட்டையாடி வருகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் கால் பாதிக்க முடியாமல் விரட்டியடிக்கப்பட்ட ஒரு குஜராத்தி மார்வாடி நிறுவனம் தன்னுடைய இலாப வெறிக்காக ஒடிசாவின் பழங்குடிகளை மட்டுமல்ல, அவர்களுக்காக போராடும் சமூக ஆர்வலர்களையும் குறி வைத்திருக்கிறது.
ஒடிசாவின் ’ரேயகாடா’ மாவட்டத்தில் உள்ள ’சிஜிமலி’ கிராமம் பல மலைத்தொடர்களைக் கொண்ட இயற்கை வளங்கள் நிறைந்த கிராமம். 1,549 ஹெக்டேர் பரப்பளவில் 311 மில்லியன் டன் பாக்சைட் இருப்பு கொண்ட ஒரு பல்லுயிர்ப் பகுதி. இங்கு கிடைக்கும் பாக்சைட் கனிமத்திற்காக 2023 ஆம் ஆண்டில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி கேட்டிருந்தது. பாஜகவிற்கு அதிகளவில் நன்கொடை கொடுக்கும் மார்வாடி நிறுவனத்திற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக அமைதியான இயற்கை வளமிக்க சிஜிமலி கிராமம் இன்று அனில் அகர்வால் எனும் கனிமவளக் கொள்ளையனால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பாக்சைட் சுரங்க திட்டத்தை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றிய உடனே சிஜிமலி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் போராட்டத்தீ பற்றிக் கொண்டது. கடந்த இரு ஆண்டுகளாக அங்குள்ள பழங்குடி மக்கள் மலைகளில் கூடாரங்களை அமைத்து வேதாந்தாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். இதில் பெரும்பான்மையானோர் பெண்கள்.
தங்கள் நீர் வளத்தையும் இயற்கை வளத்தையும் அழிக்கும் வேதாந்தாவை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்துள்ளனர். மேலும் பாக்சைட் சுரங்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். வேதாந்தா நிறுவன அதிகாரிகள் ரகசியமாக மலைகளுக்குள் நுழைவதையும் தடுத்தனர்.

ஆனால் தனது கார்ப்பரேட் வெறியை அடக்குமுறை மூலம் வெளிப்படுத்தி விட்டது வேதாந்தா. சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்து சிறையில் அடைத்தது. அண்மையில் (ஏப்ரல் 8, 2026) காவல்துறை மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறது வேதாந்தா. இதில் பல பழங்குடியினர் படுகாயமடைந்திருக்கிறார்கள். (காயமுற்றவர்களின் அதிராப்பூர்வ எண்ணிக்கை இன்னும் வெளி வரவில்லை.) போராட்டத்தை கலைக்க லத்தி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை காவல்துறை பயன்படுத்தியதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒடிசாவில் வேதாந்தா நிறுவனம் இவ்வாறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறை அல்ல. 2003இல் நியாம்கிரி மலைப்பகுதியில் இதே போன்ற அடக்குமுறையை செய்தது வேதாந்தா. அலுமினியம் சுத்திகரிப்பிற்காக நியாம்கிரி மலைப்பகுதியில் இருந்து 72 மில்லியன் டன் பாக்சைட்டை எடுக்க முயன்றது. அப்போது வேதாந்தாவிற்கு எதிராக டோங்ரியா, கோந்த் போன்ற பழங்குடியினர் கடுமையாகப் போராடினர்.

அங்குள்ள பழங்குடி மக்களுக்கு நியாம்கிரி மலை வாழ்வாதாரமாக மட்டுமல்ல நாட்டுப்புற தெய்வங்களின் வழிபட்டுத் தளமாகவும் விளங்கியது. எனவே வேதாந்தாவின் சுரங்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த பழங்குடிகள் தீவிரமான எதிர்ப்புக்குரலை எழுப்பினர்.
போராட்டத்தின் விளைவாக 2013இல் ‘பழங்குடி சமூகங்களின் பண்பாட்டு மற்றும் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் வேதாந்தா சுரங்கங்கள் அமைக்கலாம் வேண்டாமா? என்பது குறித்து தீர்மானிக்க உள்ளூர் கிராம சபைகளுக்கு அனுமதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக 2014இல் பன்னிரண்டு கிராம சபைகள் சுரங்கத்திற்கு எதிராக ஒருமனதாக வாக்களித்தன. இதன் காரணமாகவே நியாம்கிரியில் சுரங்கம் அமைக்கும் திட்டம் தடைபட்டது.
இப்போது சிஜிமலி கிராமத்தை குறி வைத்திருக்கிறது வேதாந்தா. பழங்குடிகளின் நிலங்களில் கனரக இயந்திரங்களை இயக்குவது, நிறுவனத்திற்கு ஆதரவாக கிராம சபை கூட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவது என்று அத்துமீறல்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை எதிர்த்துப் போராடிய சமூக ஆர்வலர்களான லிங்கராஜ் ஆசாத், சுரேஷ் சாங்ரம் போன்றோர் கைது செய்யப்பட்டனர். தற்போது பெண்கள் உட்பட 23 பழங்குடியினர் சிறையில் உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம், ஆனால் எங்களை அச்சுறுத்துவதற்காக வழக்குகள் போடப்படுகின்றன. என் மீதும் என் மகன் மீதும் வழக்குகள் பதிந்துள்ளனர். ஆனால் நாங்கள் போராட்டத்தை நிறுத்த முடியாது. இந்த போராட்டம் எங்கள் நிலம், எங்கள் மரங்கள், எங்கள் மலைகள் மற்றும் எங்கள் வாழ்க்கைக்கானது” என்று கூறுகிறார் ஒரு சிஜிமலி கிராமவாசி.

(போராடும் சிஜிமலி கிராமவாசி)
ஒடிசாவில் தேர்தலுக்கு முன் பழங்குடிகளுக்கு ஆதாரவாகப் பேசி அங்கு ஆட்சி அமைத்தது பாஜக. இப்போது தனது மார்வாடி விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டும் அதிகார வர்க்கமும் இணையும்போது அதை எதிர்த்துப் போரிடுவது எளிய மக்களாகவே இருக்கின்றார்கள். வேதாந்தா நிறுவனம் கொடுக்கும் துன்பங்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் பழங்குடி மக்கள். மீண்டும் ஒருமுறை தூத்துக்குடியை கண் முன் நிறுத்துகிறது சிஜிமலி கிராமம்.

தூத்துக்குடி ஆனாலும் சரி அல்லது ஒடிசாவின் சிஜிமலி ஆனாலும் சரி, ஒன்றிய அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டணிக்கு முன் மக்கள் தடையாகவே பார்க்கப்படுகிறார்கள். அதனால்தான் ‘நேற்று தூத்துக்குடி இன்று ஒடிசா நாளை யார்?’ என்ற கேள்வி எழுகிறது. இந்த கார்ப்பரேட் காவி கூட்டணியின் மென்னியை முறிக்கின்ற வேலையை ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களின் கூட்டமைப்பே சாத்தியப்படுத்தும்.