
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழ்நாடு வெல்லட்டும், பாஜக கூட்டணி வீழட்டும் ‘ எனும் முழக்கத்தோடு, எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் தோழர். முபாரக் அவர்களை ஆதரித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நன்னிலத்தில் ஆற்றிய தேர்தல் பரப்புரை:
“தோழர் முபாரக் அவர்களோடு பல போராட்டக் களங்களைக் கண்டிருக்கின்றோம். கிண்டியிலே ஒரு போராட்டத்தின் போது கடுமையான நெருக்கடிக்கு நடுவிலே தோழர்களை எல்லாம் திரட்டி வைத்திருந்தார்கள். அந்த சமயத்தில் தோழர் முபாரக் அவர்களுடைய தாயார் இயற்கை எய்தி விட்டார் என்று செய்தி வந்தது. எங்களுக்கெல்லாம் மனதுக்குள் மிகப்பெரிய ஒரு துயரம். தோழர் முபாரக் எப்படி இந்த துயரத்தோடு போராட்டத்தில் பங்கெடுப்பார் என்கின்ற கவலை எங்களுக்கு இருந்தது. ஆனால் தன் தாயார் இயற்கை எய்திய செய்தி தெரிந்த பொழுதும் கூட, போராட்டக் களத்தை விட்டு அகலாமல் போராட்டத்தை நடத்திவிட்டுதான் அந்த இடத்தை விட்டு சென்றார். இப்படிப்பட்ட ஒரு போர்க் குணம் யாருக்கு வரும்? இப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு நல்வாய்ப்பு இந்த தேர்தலிலே நன்னிலத்திற்கு கிடைத்திருக்கிறது என்றால், இது உண்மையிலேயே நல்ல நிலம், இந்த நன்னிலம். அந்த நன்னிலத்திற்கு ஒரு நல்ல வேட்பாளர் கிடைத்திருக்கிறார்.
இது மட்டுமல்ல, நாங்கள் கடந்த 17 ஆண்டுகளில் எத்தனையோ போராட்டங்களில் பங்கெடுத்திருக்கின்றோம். இன்றும் நினைவில் இருக்கிறது. காரைக்கால் துறைமுகத்திலிருந்து வரக்கூடிய நிலக்கரி துகள்கள் நாகூரினுடைய தர்காவின் மினாரில் படிந்து அதனால் மக்களுக்கு நோய் ஏற்படுகிறது என்று கேள்விப்பட்டு உடனடியாக அந்த துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தப் போராட்டத்தில் நான் பங்கெடுத்தேன். அன்றைக்கு அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தோழர் முபாரக் அவர்கள். இவ்வாறு போராட்ட குணம் மிக்கவர்கள், நல்லெண்ணம் கொண்டவர்கள், நல்லதே நடக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள் எஸ்டிபிஐ கட்சியினுடைய தோழர்கள். இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து மக்களினுடைய குரலாக தோழரின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அன்புக்குரியவர்களே! இன்றைக்கு நாம் ஒரு மோசமான சூழலில் சிக்கி கொண்டிருக்கிறோம். என்ன சிக்கல் என்றால் நமக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத, நமக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத, நம்மை எந்த வகையிலும் நண்பராக பார்க்காத பாரதிய ஜனதா கட்சி ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கிக்கொண்டு தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைக்கிறது.
தமிழ்நாட்டிற்குள்ளாக பிளவு அரசியலைக் கொண்டு வருகிறார்கள். தமிழர்கள் இந்துக்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ கிறிஸ்தவர்கள் என்றோ பிரியாமல், தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் தமிழை நேசிக்க கூடியவர்கள் தமிழ்நாட்டிற்காக போராடக்கூடியவர்கள் தமிழர்கள் என்கின்ற நீண்ட நாகரிகத்திற்கு சொந்தக்காரர் என்றுதான் நாமெல்லாம் வாழ்ந்தோம். நமக்குள் மத வேற்றுமை கிடையாது, சாதி வேற்றுமை கிடையாது. ஆனால் நம்மை எல்லாம் மதரீதியாக பிளவுபடுத்துகின்ற வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. மறந்துவிடாதீர்கள் தோழர்களே!
நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு மிகப்பெரிய இந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினோம். நாங்கள் திடீர் என்று போராடவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். சென்னை ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய இந்தி எழுத்துக்களை எல்லாம் அழித்தோம். அந்த போராட்டத்தின் பொழுது எங்களோடு போராட்டத்திலே கடந்த 17 ஆண்டுகளாக உடன் நின்ற மே17 இயக்கத்தினுடைய பொறுப்பாளர் தோழர் சிவா திலீபன் ரயில் முன்னால் பாய்ந்து “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!!” என்று முழக்கமிட்டு தன் இன்னுயிரை கொடுத்தார்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் அந்த ஈகத்தை கொச்சைப்படுத்தினார்கள். சிவா திலீபன் அவர்கள் ஏன் தன்னுயிரைக் கொடுத்தார்? ஒன்றிய நிறுவனங்களில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் இளைஞர்களுக்கு அங்கு வேலை கிடைப்பதில்லை. ரயில்வே, ஓன்ஜிசி, திருச்சி ரயில்வே தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, வங்கி என அனைத்து ஒன்றிய நிறுவனங்களில் இந்திக்காரர்கள் வேலை பார்க்கிறார்கள். அதனால் தான் அத்தனை இடத்திலும் இந்தியை வைத்திருக்கிறான். அது ஒரு ஆதிக்கம். நம்மை எல்லாம் அடித்து நொறுக்க வேண்டும் என்று வந்திருக்கக்கூடிய ஒரு ஆதிக்கம். நம் ஊரில் இருக்கக்கூடிய அலுவலகங்களில் எதுக்கு இந்தி? 35 ஊர்களில் நாங்கள் இந்தியை அழித்தோம். 35 ஊர்களிலும் ரயில்வே போலீசு இந்திக்காரராகவே இருந்தார்கள்.
இதை எதிர்த்து என்றைக்காவது அதிமுகவினுடைய தலைவர் எடப்பாடி அவர்கள் கேள்வி கேட்டிருப்பாரா? சிவா திலீபன் அவர்களுக்கு ஒரு மரியாதையை செலுத்தி இருப்பாரா? தமிழ் மொழிக்காக பேசியிருப்பாரா? இன்றைக்கு அதிமுகவினர் கொடுத்த அறிக்கையில் கூட ‘தமிழகத்தை காப்போம்’ என்று இருக்கிறது. தமிழ்நாடு என்ற வார்த்தை வரக்கூடாது என்று பிஜேபி விரும்புகிறது. அறிஞர் அண்ணா பெயர் வைத்த தமிழ்நாடு என்ற பெயர் வரக்கூடாது என்று பிஜேபிக்காரன் கூறுகிறான். சங்கரலிங்கனார் அதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தார். 60 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்து நம்முடைய நிலத்தின் பெயராக, நம்முடைய சுய மரியாதையின் அடையாளமாக ‘தமிழ்நாடு’ என்ற பெயர் வரவேண்டும் என்று உயிர் கொடுத்தார். அந்த போராட்டத்தின் விளைவாக அறிஞர் அண்ணா ஆட்சி ஏற்ற உடன் இந்த நிலத்தினுடைய பெயரை தமிழ்நாடு என்று மாற்றினார். இது நம்முடைய நாடு. தமிழனுடைய நாடு. தமிழன் வாழ்கின்ற நாடு. தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய நாடு. ஆனால் அந்த தமிழ்நாடு என்கிற பெயரை கூட உச்சரிக்கக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி ‘தமிழகம்’ என்று பேசுகிறது. அதே வார்த்தையை எடப்பாடி தனது அறிக்கையில் போட்டிருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்று போட்டிருக்கிறார்.
முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றுங்கள் எடப்பாடியாரே… அதிமுக கட்சியை நான்காக உடைத்தது யார்? சசிகலா அணி, எடப்பாடியார் அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என நான்காக உடைத்தது பிஜேபி. முதலில் உங்கள் கட்சியைக் காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். எங்கள் தோழர் முபாரக் அவர்களின் குரல் தமிழ்நாட்டை காக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவரைப் போன்ற ஒரு போராளியை சட்டமன்றத்திற்கு நாம் அனுப்ப வேண்டும். ஒரு அடிமையின் அடிமையை நாம் அனுப்பிவிடக் கூடாது.

பாஜக தமிழ் மொழிக்கான நிதியை ஒதுக்கியதா? நமது பிள்ளைகளுக்கான கல்வி நிதியை தடுத்து வைக்கக்கூடிய ஒரு கட்சியை மன்னிக்க முடியுமா? நம்மையெல்லாம் மிரட்டி இந்தியைத் திணிக்கும் பாஜகவிடம் தமிழ்நாடு ஒருபோதும் அடிமையாக இருக்காது. தமிழன் தலை நிமிர்ந்து நிற்பவன், தந்தை பெரியாரினுடைய தடியைப் போல உயர்ந்து நிற்பவன். அதனால் அன்பானவர்களே! இந்த தேர்தலில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும், தமிழ் மொழி வெற்றி பெற வேண்டும். தமிழன் வெற்றி பெற வேண்டும்.
பிஜேபி உடன் கூட்டணி வைத்த அனைத்து கட்சிகளும் உடைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 12 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி உடைக்கப்பட்டது. அதிமுக நான்காக உடைக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்த சிவசேனை கட்சி இரண்டாக உடைக்கப்பட்டது. பிரதமர் வேட்பாளர் என்று நரேந்திர மோடிக்கு நிகராக பேசப்பட்ட நிதீஷ் குமாருடைய கட்சி உடைக்கப்பட்டது. யாரெல்லாம் பிஜேபி உடன் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த கட்சி நாசமாக போயிருக்கிறது. அதற்கு பிறகு அந்த மாநிலம் நாசமாக போயிருக்கிறது.
தமிழ்நாட்டின் மேல் மோடிக்கு அன்பு இருக்கிறதா? தமிழ் மொழி மேல் அவருக்கு அக்கறை இருக்கிறதா? இல்லை. மகாராஷ்டிராவினுடைய முதலமைச்சர் மதுரைக்கு வந்து “பாஜகவிற்கு வாக்களித்தால் மெட்ரோ ரயில் கொண்டு வருகிறேன்” என்று சொல்லி மிரட்டும் தொனியில் பேசிகிறார். தமிழ்நாட்டிலே, தமிழ் நிலத்திலே, சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரை நிலத்தில் நின்று கொண்டு நம்மையெல்லாம் மிரட்டுவதற்கு அவர்கள் துணிந்திருக்கின்றார்கள். என்ன துணிச்சல்!! கோவையில் பாஜகவின் வானதி சீனிவாசன்தானே வெற்றி பெற்றார், பின் ஏன் அங்கு மெட்ரோ ரயில் வரவில்லை? நாம் இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பிஜேபி 40 ஆண்டுகளாக கட்சி நடத்துகிறது. மோடி ஒவ்வொரு முறை டெல்லியில் இருந்து இங்கு வரும்போதும் கர்மவீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். பிற கட்சித் தலைவர்களுக்கு மாலை போடும் பாஜகவால் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த ஒரு பாஜக தலைவரின் பெயரைக் கூட சொல்ல முடியவில்லை. 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு நல்லது எதுவும் செய்யாத பாஜகவை விரட்ட வேண்டும் அல்லவா?
அது மட்டுமல்ல பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் அனைத்து காட்சிகளையும் நாம் விரட்ட வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நாம் சொல்லப்போகும் செய்தியாக இருக்க வேண்டும். இந்த நிலத்தை சாதியாக மதமாக கூறு போட நினைக்கும் எவனையும் தமிழ் மண்ணில் நாம் அனுமதிப்பதில்லை.
5000 ஆண்டு காலமாக இந்த மண்ணை எவனும் ஆக்கிரமிக்க நாங்கள் அனுமதித்ததில்லை என்று பெருமையோடு சொல்லுங்கள். நமக்கு சுயமரியாதை முக்கியம். 5000 ஆண்டுகளாக நமது முன்னோர்கள் சாதி மத பேதம் இல்லாமல் காத்து வந்த மண்ணை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட பொறுப்புக்கு சொந்தக்காரர் தோழர் முபாரக் அவர்கள்.

நாம் எல்லோருமே தமிழன்தான். தமிழன் எங்கிருந்தாலும் தமிழன்தான். ஆனால் எங்கிருந்து வந்தாலும் வடவன் வடவன்தான், குஜராத்தி குஜராத்திதான். பாஜகவினர் அமித்ஷா, யோகி ஆதித்தியநாத் என்று யாரைக் கூட்டி வந்தாலும் இங்கு எடுபட போவதில்லை. நாம் ஒன்று சேர்ந்து விரட்டி விடுவோம். இது நமது பொறுப்பு.
இது தேர்தல் பிரச்சனை மட்டுமல்ல, கடந்த 12 ஆண்டுகளாக இதைத்தான் தமிழ்நாடு பேசி வருகிறது. தமிழ்நாட்டை பாதுகாக்கக் கூடிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டின் நலனுக்காக பிஜேபி ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட்டதில்லை. ஆனால் திருப்பரங்குன்ற பிரச்சனையை எடுத்து வந்து ஜாதியாக மதமாக நம்மைப் பிரிக்க நினைத்தான். ஆனால் மதுரை அசையவில்லை. மதுரை திருப்பரங்குன்ற மலையைப் போல உயர்ந்து நின்றது. மதுரை மக்கள் மதப்பிரிவினையை எதிர்த்து ஒன்றாக நின்றார்கள். பாஜகவின் கலவர முயற்சியை முறியடித்த தமிழ் மண் இந்த தேர்தலிலும் வெற்றி பெறும். அந்த வகையிலே சட்டமன்றத்திலே தோழர் முபாரக் அவர்களுடைய குரல் உயர்ந்து ஒலிக்கும்.
தமிழ்நாட்டின் குரல் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நாம் சொல்லக்கூடிய குரல் – “ஜாதி, மதம் அல்லாமல் தமிழன் என்கின்ற ஒற்றை அடையாளம்தான் எங்களை இணைக்கிறது. எங்களை தமிழ் இணைக்கும். எங்களை தமிழ் வாழவைக்கும். தமிழ்நாட்டை நாங்கள் பாதுகாப்போம். தமிழரை நாங்கள் உயர்த்தி பிடிப்போம்.”
தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ் மொழி வெல்லட்டும்! தமிழன் வெல்வான்! தோழர் முபாரக் அவர்கள் பெருவெற்றி பெறட்டும். நன்றி! வணக்கம்!!”