தோழர் டி.லதா அவர்களை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை பாகம் -2

‘தமிழ்நாடு வெல்லட்டும், பாஜக கூட்டணி வீழட்டும்’ எனும் முழக்கத்தோடு, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் வேட்பாளர் தோழர் டி.லதா அவர்களை ஆதரித்து கீழ்வேளூர் தொகுதியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய தேர்தல் பரப்புரை:

“அறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்னார். ஏன் சொன்னார்? அன்றைக்கு இதே மாதிரி தான் தமிழர்களை நசுக்க வேண்டும், நமக்கு உதவி செய்யக்கூடாது என்ற கொள்கை டெல்லிக்காரனிடம் இருந்தது. காலங்காலமாக வடநாட்டில் ஆட்சியில் இருக்கிறவன் தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்றே நினைக்கிறான். ஏன் தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணக் கூடாதா? டெல்லிக்காரன் நல்லது பண்ணக் கூடாதா? இந்தியாவிலேயே அதிக வரி கொடுக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் அதிக வரி கொடுக்கக்கூடிய, நேர்மையாக வரி கொடுக்கக்கூடிய, ஏமாற்றாமல் வரிகட்டக்கூடிய மக்கள் தமிழர்கள். நாம் கொடுக்கக்கூடிய வரி இனிக்கிறது. நாம் கொடுக்கக்கூடிய வரியை வைத்துதான் உத்திரப்பிரதேசக்காரன் கஞ்சி குடிக்கிறான். பீகார்க்காரன் சப்பாத்தி சாப்பிடுகிறான். அவனுக்கான பள்ளிக்கூடம் கட்டுவதிலிருந்து, அங்கே சாலை போடுவதிலிருந்து அனைத்து நிதியும் நம் சட்டை பையிலிருந்து போகிறது. நம் வீட்டிலிருந்து போகிறது.

நாம் கொடுக்கக்கூடிய வரியைப் பெற்றுக்கொண்டு, நமக்கு எந்தத் திட்டமும் தரமாட்டேன் என பாஜக சொல்கிறது. இந்த நாகை மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இங்கு எத்தனை திட்டத்தை கொண்டு வர முடியும்! ஏன் கொண்டு வரவில்லை? ஏன் செய்வதில்லை? மதுரை நகரம் என்பது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, இந்தியாவில் மிக பழமையான நகரம். அந்த மதுரை நகரத்துக்கு மெட்ரோ ரயில் கேட்டால் பாஜக கொடுக்க மாட்டேன் என சொல்கிறது. கோயம்புத்தூர் நகரம் தொழில் நகரம். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கக்கூடிய நகரம். அந்த நகரத்திற்கும் மெட்ரோ ரயில் கொடுக்க மாட்டேன் என சொல்கிறது.

ஆனால் போபாலிலும் இந்தூரிலும் மெட்ரோ ரயில் கொடுத்திருக்கிறான். ஏன் கொடுத்தான்? அங்கு ரயிலில் ஏறுவதற்கு ஆளே இல்லை, ஆனால் ரயில் கொடுத்திருக்கிறான். ஏனெனில் அது டெல்லிக்காரன் ஊர். இந்திக்காரன் ஊர். நம் வரிப்பணம் அங்கே போகிறது, ஆனால் நமக்கு மெட்ரோ தரமாட்டேன் என்கிறான். இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆட்சியை பிஜேபி செய்து கொண்டிருக்கிறது. இப்படி நம்மையெல்லாம் வஞ்சிக்கக்கூடிய ஒரு கட்சியாக பிஜேபி இருக்கிறது. இதை பொய் என சொல்லிவிட முடியுமா? இதை கண் முன் பார்க்கிறோம். எத்தனை கொடுமையை பார்க்கின்றோம்!

தமிழன் இதை கண்டு கொதித்தெழ வேண்டாமா? தமிழன் போராட்ட களத்திற்கு வர வேண்டாமா? ஜல்லிக்கட்டை கண்ட இந்த இனம், வீதியிலே நின்று மாட்டுக்காக போராடிய இனம் நம் தமிழினம். தமிழ் மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் நாம் போராட வேண்டாமா? பிஜேபியை விரட்ட வேண்டாமா? நரேந்திர மோடியை திருப்பி அனுப்ப வேண்டாமா? அந்த இந்துத்துவ கூட்டணியை வீழ்த்த வேண்டாமா? என்று நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வீதியில் தமிழன் நின்றான். ஜல்லிக்கட்டு காளையை பார்க்காத சென்னையில் 10 லட்சம் பேர் ஏன் நின்றோம்? அதேபோல் எல்லா ஊர்களிலும் திரண்டார்கள். தமிழர்களுடைய சுயமரியாதையை பிஜேபி சோதித்துப் பார்த்தது. பொங்கலுக்கு விடுமுறை விட மாட்டேன் என சொன்னான். அதற்காக போராட வந்தார்கள். அடுத்து தமிழர்களுடைய பண்பாடாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர மாட்டோம் என்று மோடி சர்க்கார் சொன்னது, தமிழன் வீதிக்கு போராட வந்தான். மாட்டுக்காகவே வீதிக்கு வந்தவன் மானத்திற்காக வரமாட்டானா? மதுரையிலோ கோயம்புத்தூரிலோ மெட்ரோ வந்தால் தொழில் வரும். எளிதாக மக்களால் போக முடியும், வர முடியும். ஆனால் பாஜக இதை தடுத்து வைத்திருக்கிறது.

சற்று யோசித்துப் பாருங்கள்! மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் பாலம் கட்டுவதற்கு 1000  கோடி/ 2000 கோடி செலவு செய்து கொண்டு இருக்கிறோம். எத்தனை கோடி செலவு செய்தாலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாது. எல்லாருக்கும் வண்டி வாகனம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு மெட்ரோ ரயில் வந்தால் இத்தனை செலவு நமக்கு கிடையாது. இத்தனை போக்குவரத்து நெரிசல் கிடையாது. அதனால்தான் மெட்ரோ ரயில் வேண்டும் என சொல்கிறோம்.

சென்னையில் மெட்ரோ ரயில் வந்ததற்கு பிறகு, போக்குவரத்து என்பது எளிதாக மாறியது. தொழிலுக்கு செல்லக்கூடியவர்கள், வேலைக்கு செல்லக்கூடியவர், கல்லூரிக்கு செல்லக்கூடியவர்கள் எல்லாம் எளிதில் செல்கிறார்கள். எந்த துயரமும் இல்லாமல் எந்த கடினமும் இல்லாமல் செல்கிறார்கள். நகரம் வளருவதற்கு பொதுப்போக்குவரத்து மிக அவசியம். 120 வருடத்துக்கு முன்பே லண்டனில் வந்துவிட்டது. ஐரோப்பாவில் இருக்கக்கூடிய நகரங்களில் எல்லாம் இந்த மெட்ரோ ரயில் 100/ 120 வருடத்துக்கு முன்பே வந்துவிட்டது.

ஆனால் இன்றைக்கு நம் ஊரில் மெட்ரோ ரயில் வரக்கூடாது என பிஜேபிக்காரன் ஒற்றைக்காலில் நிற்கிறானே, பிஜேபிக்காரனை பார்த்து நீங்கள் கேட்க வேண்டும் – “தமிழ்நாட்டின் மேல் மோடிக்கு இவ்வளவு கோவம்/ வஞ்சனை ஏன்?” என்று கேட்க வேண்டும்.

மகாராஷ்டிராவிலிருந்து முதலமைச்சர் பட்னாவிஸ் என் மாநிலத்தில்  தேர்தல் பங்கெடுத்து, தமிழ்நாட்டை கொச்சைப்படுத்துவதும் தமிழர்களை இழிவுபடுத்துவதுமே தவறு. அதையும் மீறி மதுரைக்கு வந்து மகாராஷ்டிராவுடைய முதலமைச்சர் என்ன பேசினார் என தெரியுமா? ”பிஜேபி வேட்பாளருக்கு நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால், அவர் நேரடியாக நரேந்திர மோடியை சந்தித்து மதுரைக்கு மெட்ரோ ரயில் தருவார்” என்று பேசுகிறார். இது மிரட்டும் தோனி. அதாவது ”நீ ஓட்டு போடவில்லை எனில், உனக்கு மெட்ரோ தர மாட்டேன்” என்கிறார்.

நான் (திரு) பிஜேபிக்காரனை பார்த்து கேட்கிறேன் – “ஏற்கனவே கோயம்புத்தூர்க்காரன் ஓட்டு போட்டு தானே வானதி சீனிவாசனை தேர்ந்தெடுத்தான். அப்போது ஏன் மெட்ரோ ரயில் தரவில்லை?” இதையெல்லாம் பிஜேபிக்காரனை பார்த்து மக்கள் கேட்க வேண்டும்.

234 தொகுதியில் பிஜேபிக்காரன் ஜெயித்தாலும் தமிழ்நாட்டுக்கு எதுவும் பண்ண மாட்டான். அதுதான் உண்மை. அவர்கள் தமிழ்நாட்டை அழிக்க வேண்டும், தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உடையவர்கள். தமிழனை தலைதூக்க விடக்கூடாது என வஞ்சகம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அது புரியாமல் அதிமுககாரர்கள் கூட்டணி வைத்துள்ளார்களே, பார்க்கவே பரிதாமாக இருக்கிறது.

அதிமுக எனும் பெரிய கட்சி, ஆட்சி செய்வதில் மிக முக்கியமான பங்கு வகித்த ஒரு கட்சி. ஜெயலலிதா அம்மையார் ”மோடியா லேடியா” என துணிச்சலாக எதிர்த்து நின்று, மோடியை ஜெயிக்க விடாமல் திருப்பி அடித்த கட்சி. அந்த அம்மையார் சுயமரியாதையோடு நின்று வெற்றி பெற்ற கட்சி அதிமுக. ஆனால் இன்று அதிமுகவின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது?

உங்களுக்கே நன்றாக தெரியும், பிஜேபிக்காரன் பெரும்பாலான நீதிமன்றத்தில் நீதிபதியை எல்லாம் விலைக்கு வாங்கி வைத்துள்ளான் என்று. ஜெயலலிதா அம்மையார் ஜெயிலுக்கு செல்லும்போது நல்ல உடல்நிலையில்தான் சென்றார். ஆனால் வெளியே வந்து ஒரு வருடத்துக்குள் இல்லாமல் போய்விட்டார். உண்மையாக விசாரணை நடத்த வேண்டுமெனில், சிறையில் என்ன நடந்தது என்றுதான் விசாரிக்க வேண்டும்.

அதிமுக கட்சிக்காரர்களை பார்த்து கேட்கிறேன்: உங்கள் கட்சியின் மீது அக்கறை இருந்தால், ஜெயலலிதா அம்மையார் மீது உங்களுக்கு மரியாதை இருந்தால், அவரை சிறைக்கு அனுப்பி அவர் உடல்நலத்தை சிதைத்த பிஜேபி மேல் உங்களுக்கு கோபம் வர வேண்டும் இல்லையா?

தனியாக போட்டி போட்டால் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்க வக்கு இல்லாத பிஜேபிக்கு 40 இடத்தில் (அதுமட்டுமின்றி 27 சீட்டு பிஜேபிக்கு அதன் கூட்டணியும் சேர்த்து) தாமரை சின்னத்தில் போட்டி போடுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார் எடப்பாடியார்.

பிஜேபிக்காரன் கலவரம் பண்ணுவதற்கு பேசுவார்கள், சாதியாக மதமாக  தமிழனை பிரிப்பதற்கு எல்லாம் பேசுவார்கள். ஒரு கவுன்சிலர் சீட் ஜெயிக்க முடியாத அந்த கட்சிக்கு எப்படி 40 சீட்டு கொடுத்தீர்கள் என்று கேட்க அதிமுகவில் முதுகெலும்புள்ள ஒருவர் கிடையாதா?

உண்மையாக சொல்ல வேண்டுமெனில் மக்களே! அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால், நீங்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக கட்சியை காப்பாற்ற முடியாது. அதிமுகவை நான்காக உடைத்தது யார்? சசிகலா அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இத்தனை அணிகளாக அதிமுகவை உடைத்தது யார்? திமுகவா? கம்யூனிஸ்ட்களா? இல்லை. பிஜேபிதான் உடைத்தது. அந்த கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறாரே எடப்பாடியார்! உங்கள் கட்சியையே நீங்கள் காப்பாற்ற முடியவில்லையே! பிறகு எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவீர்கள்? உங்கள் கட்சியை உடைத்தவன் தமிழ்நாட்டை உடைக்க மாட்டான் என என்ன நிச்சயம்? பதில் சொல்ல முடியுமா?

எடப்பாடியார்தான் முதலமைச்சராக வருவார், வெற்றி பெறுவார் என அதிமுககாரர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து அப்படி நினைக்காதீர்கள். அப்படியே வென்றாலும் எடப்பாடியை  நரேந்திர மோடி முதலமைச்சராக்குவாரா?  ஐந்து சீட்டு வென்றால் போதும் அவர் நயினார் நாகேந்திரனை முதலமைச்சர் ஆக்கிவிட்டு சென்று விடுவார்.

நான் பொய் சொல்லவில்லை. மகாராஷ்டிராவில் என்ன நடந்தது? பீகாரில் என்ன நடந்தது? 20 சீட்டு /30 சீட்டு வென்றுவிட்டு மொத்தமாக நிதீஷ்குமாரை தூக்கி ஓரமாக உட்கார வைத்துவிட்டு ஆட்சியை கைப்பற்றிவிட்டது பிஜேபி. பிஜேபி பெரும்பான்மை வெல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிஜேபிக்காரன் அதிமுக கட்சியை உடைத்து, அவனுக்கானதாக மாற்றிவிட்டு, போய்க் கொண்டே இருப்பான்.

தமிழ்நாட்டில் பிஜேபி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறது. 

இப்படி ஒரு நாசகரமான கட்சியை, ஒரு கேவலமான கட்சியை நாம் வரலாற்றில் பார்த்துள்ளோமா? அடுத்தவனை, அடுத்த கட்சியை அழிக்கக்கூடியது, தமிழ்நாட்டை அழிக்கக்கூடியது, தமிழனை வஞ்சிக்க கூடியதை மட்டுமே யோசிக்கக்கூடிய ஒரு கட்சி பிஜேபி.

மதுரைக்கு மெட்ரோ தர மாட்டான். ஆனால் திருப்பரங்குன்ற பிரச்சனை எடுத்து வைத்து கலவரம் செய்ய எல்லா முயற்சியும் எடுக்கிறான். தமிழனுக்கு எப்படி சாமி கும்பிட வேண்டும் என பிஜேபி கற்றுக் கொடுக்கிறானா? முதலில் உன் கட்சித் தலைவர் காவடி எடுத்தாரா? அலகு குத்தினாரா? மொட்டை அடித்தாரா? நரேந்திர மோடி மொட்டை அடித்துக்கொண்டு திருப்பரங்குன்ற மலைக்கு போனாரா? அமித்ஷா மொட்டை அடித்து காவடி தூக்கிக்கொண்டு பழனி மலைக்கு போனாரா? அல்லது திருச்செந்தூருக்காவது காவடி எடுத்தாரா? உங்களுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஆனால் திருப்பரங்குன்றத்தை வைத்து கலவரம் செய்வதற்கு மட்டும் வந்து நிற்கிறது பிஜேபி கும்பல்.

மதுரையில் சிக்கந்தர் தர்கா பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. மக்கள் போகிறார்கள், வருகிறார்கள், முருகனையும் கும்பிடுகிறார்கள். எனக்கு முதலில் மொட்டை போட்டது கூட திருப்பரங்குன்றத்தில்தான். தமிழ்நாடு நன்றாகத்தானே இருக்கிறது. மதுரையில் பெரிய பள்ளிவாசல் இருக்கும். அது பழைய பள்ளிவாசல். அந்த பள்ளிவாசலை கட்டுவதற்கு இடத்தை கொடுத்து, அதை கட்டுவதற்கான பொருளை கொடுத்தது யார் என்றால், 900 வருடத்துக்கு முன்பு மதுரையை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் கொடுத்தார். கன்னியாகுமரி தேங்காய்ப்பட்டணத்தில்  பழைய பள்ளிவாசல் இருக்கிறது. அதுவும் பாண்டியர் காலத்தில்தான் கட்டப்பட்டது.

தமிழர்களுக்கு மதம் முக்கியமில்லை, மொழி முக்கியம். நாங்கள் இனத்தால் தமிழர்கள். நாங்கள் என்ன சாமி வேண்டுமானாலும் கும்பிடுவோம். ஆனால் நாங்கள் தமிழர்கள்.

நீ (பாஜக) என்னதான் பட்டை போட்டாலும் சரி, காவடி தூக்குகிறேன் என சொன்னாலும் சரி, நீ (பாஜக) குஜராத்துக்காரன்தான். நீ டெல்லிக்காரன்தான். நீ உத்திரப்பிரதேசக்காரன்தான். நீ இந்திக்காரன்தானே ஒழிய, நீ தமிழன் கிடையாது. பிஜேபிக்காரன் தமிழன் கிடையாது. பிஜேபிக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தமிழ்நாட்டுக்கும் பிஜேபிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவன் (பிஜேபி) தமிழ்நாட்டுக்கு தொடர்பில்லாத அந்நிய கட்சி. அவன் இன்றைக்கும் கட்சியில் இந்திக்காரனைத்தான் வைத்திருக்கிறான். இந்திக்காரனைத் தான் பொறுப்பாளராக போடுகிறான். நரேந்திர மோடி பூத் கமிட்டி கூட்டம் நடத்துகிறாரே, அதற்கும் இந்தியிலே பெயர் வைத்திருக்கிறான். தமிழ்நாடை வளர்த்துவோம், தமிழ்நாடு வளர்ச்சிக்கு பணி செய்வோம் என சொல்லக்கூடிய கூட்டத்திற்கு பேர் கூட தமிழில் இல்லை.

இதற்காகத்தான் மே 17 இயக்கம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறோம். கடந்த மார்ச் 2026 -ல் எல்லா ரயில்வே நிலையத்திலும் இருக்கக்கூடிய இந்தி எழுத்துக்களை அழிக்கக்கூடிய போராட்டத்தை ஆரம்பித்தோம். நம் ஊர் ரயில்வே நிலையத்தில் எதற்கு இந்தி எழுத்துகளை எழுதி வைக்கிறாய்? இதேபோல வடநாடுகளில் தமிழில் எழுதி வைக்கிறாயா? இல்லையே! நாம் போகும்போது பார்க்க முடிவதில்லையே! இதுவெல்லாம் நம் வரிப்பணத்தில் செய்வது.

அப்படிப்பட்ட போராட்டத்தில் எங்கள் அமைப்பினுடைய பொறுப்பாளர் தோழர் சிவா திலீபன் அவர்கள் ”இந்தி ஒழிக தமிழ் வாழ்க” என்று முழக்கமிட்டு ஓடுகின்ற ரயிலுக்கு முன்னால் குதித்து, தமிழ் மொழிக்காக தன்னுயிரை கொடுத்து ஒரு ஈகையாக மாறினார். அவர் சமரசம் இல்லாத போராளி, திராவிட இயக்க பற்றாளர், பெரியாரிய பற்றாளர், தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டவர்.

சிலர் கேட்கலாம், இந்தி எதிர்ப்பு திடீரென செய்தது ஏன் என்று! இங்கே ரயில்வே நிலையத்தில் மட்டுமல்ல துப்பாக்கி தொழிற்சாலை, சேலம் உருக்காலை, ஆவடி தொழிற்சாலை, பெல் (BHEL), ஐசிஎஃப் (ICF), என்எல்சி (NLC), வங்கி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற எல்லா ஒன்றிய நிறுவனங்களில் இந்திக்காரனுக்கு மட்டும்தான் வேலை என்று, மோடி சர்க்கார் நம் மீது இந்தியை திணித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வேலைகள் (ஒன்றிய நிறுவனங்களில் வேலைகள்) காலியாக இருக்கின்றன. ஆனால் இவற்றில் தமிழ் இளைஞனுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான்  நம் இளைஞன் வேலை இல்லாமல் இருக்கிறான். அப்படிப்பட்ட பிஜேபியை விரட்ட வேண்டும் அல்லவா? பிஜேபி உடன் கூட்டணி வைத்திருக்கக்கூடிய அதிமுகவை விரட்ட வேண்டும் அல்லவா? என யோசித்துப் பாருங்கள்.

தமிழ் நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் நிலத்துக்கும், தமிழ் இனத்திற்கும் அவ்வளவு அநியாயம் செய்துள்ளான் பிஜேபிக்காரன். இதை பற்றி எல்லாம் கேட்பதற்கு சீமான் கும்பல் வருவதில்லை. பிஜேபிக்காரனோடு சேர்ந்து சீமானுக்கு என்ன தேவையோ அந்த வேலையை செய்துகொண்டு இருக்கிறான். (சீமான்) தமிழ் தமிழ் என்கிறான், கை கால்களை தூக்குகிறானே தவிர, தமிழுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழை காட்டிக் கொடுத்து பிழைக்க கூடிய வேலையை சீமான் செய்து கொண்டிருக்கிறான். சீமானுக்கு ஓட்டு போட்டு தமிழ்நாட்டை அவமானப்படுத்தி விடாதீர்கள். சீமானைப் போல ஒரு அரசியல் புரோக்கரை தமிழ்நாடு பார்த்ததில்லை. தமிழை வைத்து, ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தக்கூடியவன் சீமான்.

எங்கள் இயக்கத்தில் ஒரு உயிரை கொடுத்திருக்கிறோம். ஒரு உயிரை ஈகம் பண்ணி இருக்கிறோம். அப்படி தமிழருக்காக போராடிய இயக்கம் மே 17 இயக்கம்.

அன்பானவர்களே! தமிழ்நாடு பிழைக்க வேண்டும் என்றால் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும், பிஜேபி வீழ்த்தப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

இந்த தொகுதியிலே நிற்கக்கூடிய வெற்றி வேட்பாளர் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தோழர் லதா அவர்கள் தொடர்ச்சியாக மக்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார். அவர்கள் எந்த அணியில் இருந்தாலும் சரி, மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய முதல் குரல் கம்யூனிஸ்ட்களிடமிருந்து தான் எழுகிறது. அப்படிப்பட்டவர்களை நீங்கள் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். இவர்கள்தான் எதிர்க்கட்சியாக மக்களுக்கு குரல் கொடுத்தார்களே தவிர எடப்பாடியார் செய்யவில்லை.

தோழர்களே! பெரியோர்களே!! தாய்மார்களே!!! இது வெறும் தேர்தல் அல்ல, தமிழ்நாட்டை காப்பதற்காக நாம் நடத்தக்கூடிய வாழ்வா சாவா போராட்டம். மோடி சர்க்கார்/ பிஜேபி தமிழ்நாட்டை நசுக்க வேண்டும் என நினைக்கிறது. தமிழ் மொழியை ஒழிக்க வேண்டும் என நினைக்கிறது. தமிழை வாழவிடாமல் மொத்தமாக வீழ்த்த வேண்டும் என நினைக்கிறது. இந்த கும்பலை ஒரு நாளும் அனுமதித்து விடாதீர்கள்.

எடப்பாடியார் “மத்திய அரசாங்கத்தோடு இணக்கமாக இருந்தால்தான் நல்ல திட்டத்தை கொண்டு வர முடியும், மேலும் மத்திய அரசாங்கத்தோடு சண்டை போட்டு கொண்டே இருந்தால் எப்படி நல்ல திட்டத்தை கொண்டு வர முடியும்?” என்று பேசுகிறார்.

நான் கேட்கிறேன்: “எடப்பாடியார் நான்கு ஆண்டு ஆட்சி காலத்தில் செய்த நான்கு நல்ல திட்டத்தை சொல்ல முடியுமா? சொல்ல முடியாத விடயத்தை எதுக்கு காதில் பூ சுற்ற வேண்டும்?” அந்த நான்கு ஆண்டுகளும் பிஜேபிக்கு அடிமையாகத்தான் ஆட்சி செய்தீர்கள். பிஜேபியோடு சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டை நாசப்படுத்துவதற்காக வேலைகள் நடந்தன.

எடப்பாடியார் காலத்தில் மழை வருவதற்கான யாகம் செய்ய 2000 கோடி ஒதுக்கி வைத்தார். அதாவது அண்டாவுக்குள் உட்கார்ந்து யாகம்/ பூஜை செய்ய 2000 கோடியை பார்ப்பனர்களுக்கு ஒதுக்கி வைத்தார். அதை விவசாயிக்கு கொடுத்தால் கூட பிழைத்திருப்பான். இதுதான் பிஜேபி உடன் கூட்டணி வைக்கும் அதிமுகவின் திட்டம்.

ஆனால் இந்த விவசாயிகளுக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழருக்கு நீங்கள் சுத்தியல்- நட்சத்திரம்-அருவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அந்த சின்னம் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்காகவும், தொழிலாளர்கள் அதிகாரத்தில் செல்வதற்காகவும், தொழிலாளிக்கு அதிகாரம் வேண்டும் என்பதைக் குறிக்கும் சின்னம். வெறும் கூலிவேலை பார்த்துவிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு  போவதற்கு மட்டுமல்ல, அந்த தொழிலாளி அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும், அவன் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும், பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும், சட்டங்களை இயற்ற வேண்டும், ஆட்சி அதிகாரத்தை நடத்த வேண்டும் என்கின்ற முழக்கத்தைக் குறிக்கும் சின்னம். எனவே அந்த சின்னம் வெற்றி பெற வேண்டும். ஒரு காலத்திலும் தோற்றுப் போகக்கூடாது, அதை நீங்கள் செய்ய வேண்டும்.

டெல்லியிலிருந்து வரக்கூடிய எந்த அதிகாரமும் தமிழ்நாட்டுக்கு நல்லது கிடையாது. வடநாட்டில் எத்தனையோ பேர் ஆட்சி செய்து இருக்கிறார்கள், எத்தனையோ சுல்தான் வந்திருக்கிறார்கள், எத்தனையோ குப்தர்கள் வந்திருக்கிறார்கள், ஆனால் எவனும் தமிழ்நாட்டை ஆண்டதில்லை. தமிழ்நாட்டை வடநாட்டான் ஆள தமிழன் ஒரு நாளும் அனுமதித்ததில்லை.

மாறாக வடநாட்டை நாம் ஆட்சி செய்வதற்கு படை நடத்திச் சென்றிருக்கிறோம். இமயமலையிலே கல் எடுப்பதற்காக 2300 ஆண்டுகளுக்கு முன்பாக சோழன் சென்றிருக்கின்றான். மலேசியா சென்றிருக்கின்றான், கடாரம் சென்றிருக்கின்றான். தமிழன் சென்றிருக்கிறான், கடலை ஆண்டிருக்கின்றான், நிலத்தை ஆண்டிருக்கிறான். ஆனால் வடநாட்டுக்காரன் தமிழ்நாட்டை ஆள்வதற்கு தமிழன் ஒரு நாளும் அனுமதித்ததில்லை. மறித்து நிற்கிறான், சண்டை போடுகிறான், மானத்தோடு போராடுகின்றான். அதுதான் தமிழன் வரலாறு.

இப்போது வடக்கிலிருந்து வரக்கூடிய பிஜேபியையும் அதன் கூட்டணியையும் நாம் வீழ்த்த வேண்டுமா இல்லையா? என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். உங்கள் நண்பர்களிடத்தில் பேசுங்கள், சொந்தக்காரர்களிடத்தில் பேசுங்கள்.

ஒரிசாவில் 80 ஆண்டுகளாக பிஜேபி கிடையாது. பிஜேபி ஏமாற்றி வென்றது.  தற்போது ஒரிசாவில் கலவரம் நடக்கிறது. அப்போது நரேந்திர மோடி என்ன சொன்னார் தெரியுமா? “ஒரிசாவில் இருக்கக்கூடிய பூரி ஜெகநாதர் கோயிலுடைய சாவியை தமிழன் திருடிச்சென்று விட்டான்” என்றார். ‘தமிழன் திருடன்’ என சொன்னது நரேந்திர மோடி. அப்போது ஒரு விளம்பரமே போட்டான். நல்ல வாழை இலையில் பழைய சோறு போட்டு சாப்பிடக்கூடிய ஒரு தமிழன் ஒரிசா மக்களை ஏமாற்றுகிறான் என்று சொல்லி வீடியோ போட்டது பிஜேபி. தமிழனை ஒரிசாவில் அவமானப்படுத்தி பிரச்சாரம் செய்தது பிஜேபி. அது மட்டுமல்ல, பீகாரிகளை தமிழ்நாட்டில் அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள், பீகாரிகள் தமிழ்நாட்டில் வாழ முடியவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்தது பிஜேபி.

ஆனால் நாம் பீகார் / இந்திக்காரனை அண்ணன் தம்பியாக பார்க்கிறோம். என்றாவது அடித்துள்ளோமா? துன்புறுத்தி இருக்கிறோமா? அவனை சித்திரவதை செய்து இருக்கிறோமா? எதுவும் இல்லையே. அவனுக்கு வாழ்க்கை தருகின்றோம், வேலை தருகின்றோம், சம்பளம் தருகின்றோம், அவனுக்கு வேண்டும் என்றால் விடுமுறை தருகின்றோம். அன்பாய் அவர்களை வாழ வைக்கிறோம். ஆனால் இந்த (பிஜேபி ) நரேந்திர மோடி அவதூறு செய்கிறார். தமிழ்நாட்டை இழிவுபடுத்தக்கூடிய பிஜேபியை இதன்பின் அனுமதிக்க முடியுமா? நரேந்திர மோடியை  அனுமதிக்க முடியுமா? பிஜேபி கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும்.

வடநாட்டில் கறி வைத்தற்காக முஸ்லிம்களை அடித்து கொலை செய்கிறான். இந்த அநியாயம் நாளை நம் ஊரில் நடந்தால் என்ன ஆகும்? நம் ஊரில் முஸ்லிமோ கிறிஸ்தவனோ அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்கிறோம். தமிழனுக்கு ஜாதி மதம் முக்கியமில்லை. தமிழன் என்கின்ற அடையாளம்தான் முதன்மையானது. அதை மறந்துவிடாதீர்கள்.

பிஜேபிக்காரன் நாமெல்லாம் இந்துக்கள் என பேசுகிறான். அப்படி சொல்லிக்கொண்டு குஜராத்காரன், உத்திரப்பிரதேசகாரன், பீகார்காரன், ராஜஸ்தான்காரன் போன்ற மாநிலங்களை சார்ந்த நான்கு பேரை கூட்டி கொண்டு வருகிறான். ஆனால் 2000 ஆண்டுகளாக இங்கு இருக்கக்கூடிய முஸ்லிம்களை அந்நியர்கள் என்று கூறுகின்கிறான். நம்முடன் அண்ணன் தம்பியாக ஒன்றாக பிறந்து வளர்ந்து வாழ்கின்ற சகோதரர்களை எதிரிகளாக சொல்கிறான். ஆனால் குஜராத்தி மார்வாடி சேட்டுகளை இந்து என்று அரவணைத்து கொள்ளுங்கள் என சொல்கிறான்.

உங்களுக்கெல்லாம் ஒரு தகவல் சொல்கிறேன்: நான் கோயம்புத்தூரிலிருந்து வருகிறேன். 30 வருடத்துக்கு முன் நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது இந்த கடை இந்து கடை, இந்த கடை முஸ்லிம்கடை என்று அடையாளப்படுத்தினான் ஆர்.எஸ்.எஸ்காரன். பின் முஸ்லிம் கடையிலெல்லாம் வாங்காதே என ஆரம்பித்தான். இவர் முஸ்லிம், இவர் கிறிஸ்தவர், இவர் இந்து என பிரிக்க ஆரம்பித்தான். முதல் முதலில் இந்து முன்னணிக்காரன்தான் இந்த வேலையை பார்க்க ஆரம்பித்தான். இதை தொடங்கி வைத்தது ஆர்.எஸ்.எஸ்காரன் தான்.

ஆர்.எஸ்.எஸ்காரன் உங்களுடைய குழந்தைகளுக்கு / மாணவர்களுக்கு ‘நாங்கள் பக்தியை சொல்லி தருகின்றோம். ஒழுக்கத்தை சொல்லி தருகிறோம்’ என பேச ஆரம்பிப்பான். நம் ஆட்கள் ஏமாந்து அனுப்பிவிடுவார்கள். முதல் நான்கு நாட்கள் உடற்பயிற்சி சொல்லி கொடுத்துவிட்டு பிறகு படிப்படியாக எப்படி குண்டு வைக்கிறது? எப்படி பெண்களை வன்கொடுமை பண்ணுவது? எப்படி ஊரை கெடுக்கிறது? எப்படி கொள்ளை அடிக்கிறது?  என ஆர்எஸ்எஸ்காரன் சொல்லிக் கொடுப்பான்.

அந்த அடிப்படையில் அவன் இதெல்லாம் முஸ்லிம் கடை, இதெல்லாம் இந்து கடை என பிரித்து அடித்து உடைப்பான். உங்களுக்கு தெரியும் கோயம்புத்தூர் கலவரம் பற்றி! அதன் பின் என்ன நடந்தது? தற்போது இந்து கடையும் இல்லை, முஸ்லிம் கடையும் இல்லை, அங்கு இருக்கும் கடை எல்லாம் மார்வாடி சேட்டுக் கடை. அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு இந்த இந்து முன்னணிக்காரன், ஆர்எஸ்எஸ்காரன் பச்சைத்தமிழனை இந்து என்றும் முஸ்லிம் என்றும் பிரித்து அவர்களுக்குள் சண்டை போட வைத்து கடையை காலி பண்ண வைத்தான். அந்த கடைகளை எல்லாம் சேட்டு மார்வாடி விலைக்கு வாங்கி, அவன் வியாபாரம் நடத்திக்கொண்டு இருக்கிறான். அதோடு நிற்கவில்லை, இன்றைக்கு ரங்கேகவுடர் வீதிக்கு ஒரு ஜெயின் மார்வாடி பெயரை வைக்க, ஒரு மார்வாடி வேட்பாளருக்கு கவுன்சிலர் பதவிக்கு இடம் கொடுத்தது எடப்பாடியார். யார் ஊரில் யார் நாட்டாமை பண்ணுவது? இதனை சும்மா விடக்கூடாது.

அன்பானவர்களே! பிஜேபிக்காரன் யாரு என முகம் தெரிந்துவிடும். ஆனால் ஆர்எஸ்எஸ்காரன் யார் என தெரியாது. நல்லவன் மாதிரியே பேசுவான். அவன்தான் ஊருக்குள் எல்லா கலவரத்தையும் பண்ணக்கூடியவன். அவனிடம் மட்டும் உங்கள் பிள்ளைகளை அனுப்பாதீர்கள். பக்தி சொல்லி தருகிறேன், ஆன்மீகம் சொல்லி தருகிறேன், நல்ல பழக்கங்கள் சொல்லி தருகிறேன், அப்பா அம்மாவை எப்படி போற்றுவது என்று சொல்லி தருகிறேன் என பிள்ளையை கூட்டி கொண்டு போவான்.

நான்கே மாதத்தில் குஜராத்துக்கு கூட்டிக்கொண்டு போய் குண்டு வைக்கக் கற்றுக்கொடுத்து, உங்கள் பிள்ளையை தீவிரவாதியாக/ பயங்கரவாதியாக மாற்றிடுவான். மறந்துவிடாதீர்கள். இது என் கூட படித்த நண்பனுக்கு நடந்தது. அவன் ஏழு வருடம் சிறைக்குப் போனான். அவனை ஆர்எஸ்எஸ் கை கழுவிட்டு போய்விட்டான். தற்போது வடநாடு பற்றி எரிகிறது. ஆகவே மக்கள் கவனமாக இருங்கள்.

ஆர்எஸ்எஸ்-பிஜேபியிடமிருந்து ஊரை காப்பாற்ற வேண்டும் என்றால், கம்யூனிஸ்ட்கள் இங்கு வெற்றி பெற வேண்டும். கம்யூனிஸ்ட்கள் கொடி உயர வேண்டும். அதுதான் முக்கியம். அந்த வகையிலே இங்கே தோழர் லதா அவர்கள் வெற்றி வேட்பாளராக இருக்கிறார். தோழர் லதா அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்து சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பி, அந்த வெற்றி விழாவிலே நன்றி தெரிவிக்கின்ற விழாவிலே நீங்கள் என்னை அழைப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அந்த நன்றி அறிவிப்பு விழாவிலே உங்களோடு சேர்ந்து நின்று அந்த விழாவை கொண்டாடுவோம் என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »