
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழ்நாடு வெல்லட்டும், பாஜக கூட்டணி வீழட்டும் ‘ எனும் முழக்கத்தோடு, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் வேட்பாளர் தோழர். டி.லதா அவர்களை ஆதரித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய தேர்தல் பரப்புரை:
பிஜேபி கட்சி என்ன நல்லது செய்யும்? என்று நாம் யோசிக்க வேண்டும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பிஜேபி தமிழ்நாட்டிலே கட்சி நடத்துகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் இதுவரை தமிழ்நாட்டிற்கோ தமிழருக்கோ நல்லது செய்த பிஜேபி தலைவர் ஒருவர் பேரையாவது அவர்களால் சொல்ல முடியுமா? அப்படியான ஒரு பெயரையும் இதுவரை அவர்களால் கூற இயலவில்லை. மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கர்மவீரர் காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் படங்களுக்கு மாலை போடுகிறார், அவர்களைப் பற்றி பேசுகிறார். கர்மவீரர் காமராஜர் காங்கிரஸ் கட்சிக்காரர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பார்வர்ட் பிளாக் கட்சிக்காரர். எம்ஜிஆர் அதிமுக கட்சிக்காரர். இவர்களுடைய படங்களுக்கெல்லாம் மாலை போட்டு இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்கிறார்கள் என்று சொல்லும் நரேந்திர மோடி, 40 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் கட்சி நடத்தும் பிஜேபியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த ஒரு தலைவரை காட்ட முடியுமா? பிற கட்சிகளில் இருக்கும் தலைவர்களை தமிழ்நாட்டுக்கு நல்லது செய்தார்கள் என்று மாலை போட்டு மரியாதை செய்யக்கூடிய பாஜகவினர், தங்கள் கட்சியான பிஜேபியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நல்லது செய்தார்? என்று ஒரு தலைவரை கூட குறிப்பிட முடியாத நிலையில்தான் இருக்கின்றார்கள். இப்படி தமிழ்நாட்டுக்கு விரோதமாக இருக்கும் தமிழின விரோத கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி.
இதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்பொழுது கூட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபையில் வைத்திருந்தார்களே! தமிழ்நாட்டின் நலனுக்காக ஏதேனும் ஒன்றை அவர்கள் பேசினார்களா?
ஒட்டுமொத்த பாராளுமன்றத்தை நாங்கள் கட்டுப்படுத்தி இருக்கிறோம் என்று நரேந்திர மோடி கொக்கரிக்கிறாரே, தமிழ்நாட்டிற்கு நல்லது செய்யும் திட்டங்களை பாராளுமன்றத்தில் அறிவித்தாரா? இல்லையே! தமிழ்நாட்டினுடைய திட்டங்களை எல்லாம் தடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது.
இந்தியாவினுடைய அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நாளில்தான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழ்நாடு மட்டும் வளர்ந்திருக்கிறது, உத்தர பிரதேசமும் பீகாரும் ஏன் வளரவில்லை என்ற கேள்வியை கேட்க விரும்புறேன். தமிழ்நாடு ஏன் வளர்ந்திருக்கிறது என்றால் இது தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் வளர்த்த மண். 1940லேயே அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுறார் – “வடக்கு நமக்கான நிதியை தடுக்கிறது. மறந்து விடாதீர்கள், வடக்கரினுடைய சதியை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று பணத்தோட்டம் என்கின்ற புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார். தமிழனுக்கு வருகின்ற நிதியை தடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அப்பொழுது திராவிட இயக்கம் முடிவு செய்தது. பேரறிஞர் அண்ணா அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் கர்மவீரர் காமராஜர் அவர்களும் சேர்ந்து தமிழ்நாட்டினுடைய கல்வித்தரத்தை உயர்த்தினார்கள். தமிழ்நாடு கல்வியிலே உயர்ந்தது. தமிழ்நாட்டுக்கு எந்த உதவியும் வடநாட்டான் செய்யவில்லை. ஆனால் தமிழர்கள் தங்களுடைய உழைப்பை செலுத்தி, சுய பங்களிப்பை கொடுத்து இங்கு கல்வியை வளர்த்தார்கள், சமத்துவத்தை வளர்த்தார்கள். மதத்தை வளர்க்கவில்லை ஆனால் மனிதநேயத்தை வளர்த்தார்கள்.
நாமெல்லாம் ஒன்று, நாமெல்லாம் தமிழர்கள், ஜாதி பேதம் இல்லாமல் நம் குழந்தைகள் வளர வேண்டும், உலகெங்கும் சென்று வணிகம் செய்ய வேண்டும் என்று 80 ஆண்டுகளாக தமிழ்நாடு உழைத்தது. நீங்கள் உழைத்தீர்கள். நமது தந்தையாரும் நமது தாயாரும் நமது பாட்டனாரும் பாட்டியும் சேர்ந்து உழைத்து இந்த மண்ணை உயர்த்தினார்கள். நம்மை படிக்க வைத்தார்கள். இதை மறந்துவிடுவோமா? தன்னுடைய வயிற்றுக்கு உணவு இல்லையென்றாலும் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டுமென்று அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்கள். அப்படித்தான் நாம் முன்னேறினோம். நாம் வளர்ந்தோம். 80 ஆண்டுகளாக நாம் கல்வியினால் வளர்ந்திருக்கிறோம். ஆனால் இன்று ‘இந்தி படித்தால்தான் உங்களுக்கான கல்வி நிதியை தருவேன், இல்லையென்றால் கல்வி நிதியை தரமாட்டேன்’ என்று பிஜேபியும் நரேந்திர மோடி அரசும் கொக்கரிக்கிறார்களே! இதை எதிர்த்து அதிமுக ஐயா எடப்பாடி அவர்கள் என்றாவது பேசினாரா? அல்லது சீமான் என்றாவது பேசினாரா? அல்லது விஜய் பேசினாரா? யாரும் பேசவில்லை.

இது தமிழ்நாட்டினுடைய பொது பிரச்சனை. கட்சி பிரச்சனை அல்ல. நமக்கான கல்வியை கடந்த 80 ஆண்டுகளாக வளர்த்தோம். அந்த கல்வியினுடைய நிதியை பிஜேபி நிறுத்தி வைத்திருக்கிறது. “எங்களுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் பிஜேபியிடம் நான் கேட்கிறேன், இந்த பணம் உங்க அப்பன் வீட்டுப் பணமா?” நாங்கள் கொடுத்த வரிப்பணம். ஜிஎஸ்டி வரியின் மூலமாக தமிழர்கள் நாம் இந்தியாவிற்கு கொட்டிக் கொடுக்கிறோமே அந்த வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கான பங்கை கேட்பதில் என்ன தவறு?
பாஜக அரசு தமிழ்நாட்டினுடைய தமிழ் மக்களுடைய உழைப்பை எல்லாம் வரியின் மூலமாக சுரண்டுகிறது. அன்பானவர்களே! வெள்ளைக்காரன் கூட சாப்பாட்டுக்கு வரி போடவில்லை. ஆனால் நரேந்திர மோடி சாப்பாட்டுக்கு வரி போட்டார். நீங்கள் உண்ணும் இட்லிக்கும் வரி, சட்னிக்கும் வரி. இதுவரை எந்த ஆட்சியிலாவது சாப்பாட்டுக்கு வரி போட்டிருக்கிறார்களா? சாப்பாட்டுக்கு வரி போட்ட ஒற்றை கூட்டம், கேடுகெட்ட கூட்டம், அது பிஜேபி கூட்டம் என்பதை மறந்து விடாதீர்கள். அது நரேந்திர மோடி என்பதை மறந்து விடாதீர்கள்.
அந்த கூட்டம் நயவஞ்சகக்கூட்டமாக அதிமுக என்கின்ற போர்வையிலே வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபொழுதே அதிமுகவை அடக்கி ஒடுக்கக்கூடிய பாரதி ஜனதா கட்சிக்கு, நாளைக்கு ஐந்தோ பத்தோ எம்எல்ஏக்கள் கிடைத்தால் அதிமுக கட்சி இருக்குமா? என்பதை அதிமுக கட்சிக்காரர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு அதிமுக கட்சி நான்காக ஐந்தாக உடைந்து போயிருக்கிறது எப்படி? யார் உடைத்தார்கள்? அதிமுகவை உடைத்தது பிஜேபி. தன் கட்சியை உடைத்து நாசம் செய்த பிஜேபியோடு வெட்கமில்லாமல் கூட்டணி வைத்திருக்கிறது அதிமுக. நாளைக்கு பிஜேபிக்காரன் தமிழ்நாட்டை உடைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? காஷ்மீரை உடைத்தார்கள், அங்கு ராணுவத்தை அனுப்பினார்கள், அந்த மக்களின் போராட்டங்களை எல்லாம் நசுக்கினார்கள், பொருளாதாரத்தை நசுக்கினார்கள். அவர்களுக்கு வருமானம் இல்லாமல் செய்தார்கள். அந்த மாநிலத்தை மூன்றாக பிஜேபி உடைத்ததைப் போல நாளை தமிழ்நாட்டை நாசம் செய்வார்கள், உடைப்பார்கள். காஷ்மீர் மக்களை நாசம் செய்த பொழுது, அந்த மாநில மக்கள் உரிமையை நசுக்கிய பொழுது, அதற்காக குரல் கொடுத்த ஒற்றை கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை நாம் மறந்துவிடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தோழர் தான் துணிந்து நின்றார், அதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்பானவர்களே, இந்த வேளாங்கண்ணி மண் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் சமத்துவத்திற்கு பெயர் பெற்ற மண். இங்கு ஜாதி மதம் பார்க்காமல் அனைவரும் ஒன்று கூடுகின்றார்கள். அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்கின்ற நம்பிக்கையில் இங்கே வருகிறார்கள். இங்கே கிறிஸ்தவர்கள் தான் வரவேண்டும், இஸ்லாமியர்கள்தான் வரவேண்டும், இந்துக்கள்தான் வரவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை, அல்லது தமிழர்கள் தான் வரவேண்டும், பிற மாநிலத்தை சேர்ந்தவர் வரக்கூடாது என்றெல்லாம் தமிழன் தடுத்து வைக்கவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். அமைதியாக வரலாம். இந்த நிலத்திலே அவர்கள் கடவுளை வணங்கி கொண்டாடலாம். அவர்கள் வேண்டுதலை முன்வைக்கலாம் என்று சமத்துவத்தை சொல்கின்ற மண்தான் இந்த வேளாங்கண்ணி மண். பிஜேபி உடன் கூட்டணி வைக்கும் அதிமுகவைப் பார்த்து கேட்கின்றேன் “நாளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்த வேளாங்கண்ணி அமைதியாக இருக்குமா? இந்த கடைகள் அமைதியாக வணிகம் செய்ய முடியுமா? இந்த கடைகளிலே இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்களிலே நம் மக்கள் வேலை செய்ய முடியுமா?” என்று யோசித்துப் பாருங்கள்.
இந்த வேளாங்கண்ணியில் அனைத்து மக்களுக்குமான கதவுகள் திறந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சமத்துவமான நகரத்தை போல வடநாட்டில் ஒரு நகரத்தை காட்ட முடியுமா? வேளாங்கண்ணியை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் ஒரு காலமும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது. சொந்தக் கட்சியை காப்பாற்ற முடியாத அதிமுகவினர் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்கள்? எடப்பாடியார் அவர்களே உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்ற முடியவில்லையே, நீங்கள் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவீர்கள்? சொல்லுங்கள்.
எடப்பாடியார் ‘தமிழகத்தை மீட்போம்’ என்று அறிக்கை வெளியிடுகிறார். தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது, தமிழகம் என்று சொல்ல வேண்டுமென்று பிஜேபி உத்தரவிடுகிறது. தமிழ்நாடு என்ற பெருமை மிகுந்த இந்த சொல் 2000 ஆண்டுகளாக நம் இனத்திலே நம் இரத்தத்திலே ஊறிய சொல். நம் நிலத்தினுடைய சொல். இந்தியா என்ற சொல் இன்று வந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு என்ற சொல் பல ஆண்டுகளுக்கு முன்பே நம் இலக்கியத்தில் எழுதப்பட்ட வார்த்தை. நம் நிலத்தினுடைய பெயர். இதற்காக சங்கரலிங்கனார் 60 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் “இந்த மண் இனிமேல் தமிழ்நாடு என்றுதான் அழைக்கப்படும்” என்று சட்டசபையிலே சொன்னார். “இந்த மண்ணுக்கு தமிழ்நாடு என்கின்ற பெயர் இருக்கும் வரை இந்த நிலத்தை ஆள்பவன் இந்த அண்ணாத்துரை தான்” என்று சொன்னார். அந்த அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, அந்த அண்ணாவின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ‘தமிழ்நாடு’ என்று சொல்லாமல் தமிழகம் என்று சொல்லி அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடியார். தமிழ்நாடு என்று சொல்லிவிட்டால் மோடி திட்டுவார் என்று அவருக்கு பயம். மாநிலத்தின் பெயரையே சொல்ல துணிச்சல் இல்லாத எடப்பாடியார் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்?
ராஜ்யசபாவில் இருக்கும் அதிமுக எம்பிக்கள் என்றாவது தமிழ்நாட்டுக்காக பேசி இருக்கிறார்களா? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியை கேட்டிருக்கிறார்களா? இல்லை. தமிழ்நாட்டின் நலனுக்காக அவர்கள் ஒரு பேட்டி கூட தரவில்லை.
நம் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை அச்சடிக்க முடியாமல், நமது ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை என்கிற நெருக்கடியை உருவாக்கியது யார்? மோடியின் பாஜக அரசுதான். நாங்கள் கொடுத்த வரிப்பணம் அது. திமிராக சொல்வோம் அது நாம் அவர்களுக்கு போட்ட பிச்சை. தமிழ்நாட்டின் வரியை வைத்து தான் இந்தியாவை நீ (பாஜக) நடத்திக் கொண்டிருக்கிறாய்.
எங்களுடைய உழைப்பில் நாங்கள் கொடுத்த வரியில் இருந்து எங்கள் தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்க முடியாத இந்த பிஜேபியை வேரோடும் வேரடி மண்ணோடும் நாம் குழி தோண்டி புதைத்தாக வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டுக்கும் தமிழனுக்கும் பயன்படாத கட்சி நமக்குத் தேவையில்லை. அதிமுக வேண்டுமானாலும் பயப்படலாம். எடப்பாடியார் வேண்டுமானாலும் அடிமையாக இருப்பதிலே சுகம் காணலாம். ஆனால் தமிழன் சுயமரியாதை மிக்கவன், தலை நிமிர்ந்து நிற்பவன். முதுகெலும்பு உள்ளவன். ஒரு காலத்திலும் இந்த மண் பாஜகவிற்கு அடிபணியாது. அமித்சாவிற்கோ மோடிக்கோ அடிபணிந்து நிற்காது. நாம் துணிந்து நிற்போம். நம் உழைப்பில் தான் நாம் வாழ்கின்றோம்.
அன்பானவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இந்த தேர்தல் நடக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழல் இதற்கு முன்னர் இருந்ததில்லை. அதிமுக கட்சியை நாசம் செய்த இதே பிஜேபி மராத்திய மாநிலத்திலே சிவசேனை கட்சியை நாசம் செய்தது. பீகாரிலே நிதீஷ் குமார் கட்சியை நாசம் செய்தார்கள். ராம்விலாஸ் பாஸ்வானுடைய கட்சியை நாசம் செய்தார்கள். அக்காளிதள் கட்சியை முடித்து விட்டார்கள். இப்படி வடநாட்டில் யாரெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்களோ அவர்களை அழித்து ஒழித்ததுதான் பாஜகவினுடைய வேலை. மறந்து விடாதீர்கள்.
பிஜேபி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறது, ஆனால் அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆகவே அதிமுகவினரே, உங்கள் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால் தயவுசெய்து உங்கள் கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள்.
இங்கே அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலே மரியாதைக்குரிய தோழர் லதா அவர்கள் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த சுத்தியலுக்கும் அரிவாளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்த மண்ணிலே ஆதிக்கத்தை வேரறுத்ததுதான் அந்த அரிவாள். இந்த மக்கள் தொழிற்சாலைகளில் போராடிக் கொண்டிருந்த போது, தொழிலாளர்கள் உரிமைகளை எல்லாம் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுது சுத்தியலால் ஓங்கி அடித்து தொழிலாளர் உரிமையை உயர்த்தி பிடித்த அந்த சின்னம்தான் இந்த அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்.

அரசியலுக்கு மதம் தேவையில்லை. மக்களைப் பற்றி யோசிப்பதுதான் மதச்சார்பின்மை. முற்போக்கு என்பது என்ன? நாம் இன்றைய நிலையிலிருந்து முன்னேறி செல்வது. 80 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, வசதிகள் இல்லை, சாலைகள் இல்லை, நகரங்கள் இல்லை. எல்லாவற்றையும் கட்டி எழுப்பி இருக்கின்றோமே! அதுதான் முற்போக்கு, வளர்ச்சி. இந்த வளர்ச்சி தொடர வேண்டும், இந்த சமத்துவம் நிலைபெற வேண்டும்.
தமிழ்நாட்டில் பிஜேபிக்காரன் செய்த ஒரே போராட்டம் ‘திருப்பரங்குன்றத்திலே சிக்கந்தர் தர்காவை உடைக்கிறேன்’ சொன்ன போராட்டம் தான். காலம் காலமாக நாம் முருகனை கும்பிடுகிறோம். திருப்பரங்குன்றத்திலேதான் எனக்கு முதல் மொட்டை போட்டார்கள். என் குடும்பத்தில் அனைத்து நல்ல நிகழ்வுகளுக்கும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி போன்ற இடங்களுக்கு செல்வார்கள். எல்லாருமே முருக பக்தர்கள்தான்.
சாமி எப்படி கும்பிடுவதென்று நமக்கு பிஜேபிக்காரன் கற்று கொடுக்க வேண்டியது இல்லை. முருகனுக்கும் பிஜேபிக்காரனுக்கும் என்ன சம்பந்தம்? நரேந்திர மோடி என்றாவது காவடி தூக்கி இருக்காரா? அமித்சா அலகு குத்தி இருக்காரா? பிஜேபிக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? பாஜக கலவரம் செய்ய நினைத்தபோது மதுரை மக்கள் அவர்களை விரட்டி அடித்தார்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகரத்துக்கு எது சமத்துவம் என்று தெரியும். மதுரையில் பெரிய பள்ளிவாசல் என்ற பெரிய மசூதியை மாறவர்மன் சுந்தர பாண்டியன் நிதி கொடுத்து கட்டி எழுப்பினார். தேங்காய் பட்டணத்தில் இந்தியாவிலே பழைய பள்ளிவாசல் இருக்கிறது. அதுக்கு பாண்டிய மன்னர்கள் நிதி கொடுத்து பொருள் கொடுத்து வளர்த்தெடுத்தார்கள். நாகூர் தர்காவிற்கு மதுரையிலிருந்து வந்த சோழ அரசர்கள்தான் மினாரை கட்டிக்கொடுத்தார்கள். திருப்பத்தூரில் இருக்கக்கூடிய தர்காவை மருதுபாண்டியர்கள்தான் கட்டி கொடுத்தார்கள்.
இவ்வாறு நமக்கும் இந்த வழிபாட்டு தளத்துக்குமான உறவு என்பது இரத்த உறவு. அது மேரியாக இருந்தாலும் சரி மாரியம்மனாக இருந்தாலும் சரி நாம் மதம் பார்ப்பதில்லை. நல்லதைத் தான் பார்க்கின்றோம். இதுதான் நம் மண்ணின் பண்பாடு.
நான் இந்த ஊருக்கு (வேளாங்கண்ணிக்கு) பல ஆண்டுகள் கழித்து வந்திருக்கின்றேன். என்னுடைய அம்மா இங்கு அழைத்து வருவார்கள். பழனிமலை, சமயபுரம், வேளாங்கண்ணி, நாகூர் என இந்த அனைத்து இடங்களுக்கும் கோடை விடுமுறையில் செல்வோம். என் தாயார் மறைவிற்குப் பிறகு இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். இந்த நகரத்துக்கு வரும்போது சமத்துவம் தான் ஞாபகம் வருது. நம் அம்மாக்கள் யாரும் ஜாதி மதம் பார்த்தது இல்லை. ‘எல்லா சாமியும் நம்ம சாமிதான்’ என்று சொன்ன மண்தான் தமிழ்நாட்டு மண். இந்த மண்ணை மதரீதியாக பிரிக்கக்கூடிய பிஜேபி – அதிமுக கூட்டணியை நாம் முறியடிக்க வேண்டும். தோழர் லதா அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உங்களின் சார்பாக, நான் சார்ந்திருக்கக்கூடிய மே17 இயக்கத்தின் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கின்றேன். இந்த சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்திலே நீங்கள் வாக்களித்து தோழர் லதா அவர்களை
வெற்றி வேட்பாளராக சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள். அதற்கான நன்றி அறிவிப்பு கூட்டத்திலே உங்களோடு நாங்கள் பங்கெடுப்போம் என்பதை சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வெல்லட்டும் தமிழ்நாடு! வெல்க தமிழ்! வாழ்க தமிழர்கள்! என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி!வணக்கம்!!