
தமிழ்நாட்டைக் கைப்பற்றுவோம் என்று அந்நிய நாட்டைக் கூறுவது போல மோடி கூறியதற்கும், அதிமுக பல துண்டுகளாக சிதறிக் கிடப்பதற்கும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவியில் இருந்து விலகியதற்கும் இடையிலுள்ள அரசியல், ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புகள் கொண்டவையாக இருக்கின்றன. பாஜகவின் ஒரே நாடு – ஒரே கட்சி என்கிற நோக்கத்திற்கும், தமிழ்நாட்டைத் துண்டாடும் ஆபத்திற்கும் பெரிதும் வலுசேர்ப்பவையாக இருக்கின்றன.
பீகார் மாநில கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் பதவி விலகி இருப்பதற்கு பின்னுள்ள பாஜகவின் அரசியல் நகர்வுகள், அனைத்து மாநிலங்களிலும் கையாளும் உத்தியாகவே இருக்கின்றன. அந்த உத்தியே தமிழ்நாட்டின் அதிமுக கட்சியை உடைத்ததிலும் கையாளப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் NDA (பாஜக, அதிமுக, இதர கட்சிகள்) கூட்டணி வெற்றி பெற்றால், பீகாரில் நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டதாக கூறியதைப் போல, எடப்பாடியும் கட்சியைக் கைகழுவி விடுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பீகாரை பாஜக கைப்பற்றியது போல, நாளை தமிழ்நாட்டைக் கைப்பற்றுவோம் என்று மோடி கூறியது உண்மையாகி விடுமோ என்கிற கலக்கம் அதிமுக தொண்டர்களிடம் எழுந்துள்ளது.
பீகாரை 2005 வரை நீண்ட காலம் ஆட்சி செலுத்தியது லாலு பிரசாத் யாதவ் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD). 2005-ல் அவர் மீதும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தேர்தலிலும் எதிரொலித்தது. லாலு பிரசாத் யாதவ் தோற்றார்.. 2005-2015 வரை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (JD(U)) பாஜகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று ஆட்சி செய்தது. 2014-ல் குஜராத் இனப்படுகொலைக்கு காரணமான மோடி இந்தியப் பிரதமராக அறிவிக்கப்பட்டதும் அதனை நிதிஷ்குமார் எதிர்த்து பாஜக கூட்டணி விட்டு விலகினார்.. 2015-ல் மகாகத்பந்தன் என்ற பெயரிட்ட மகா கூட்டணியாக RJD, காங்கிரசுடன் அமைத்து வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.

மோடி அமித்ஷாவின் மாநிலக் கட்சிகளை உடைக்கும் சதித் திட்டங்கள் ஆரம்பமான காலகட்டம் அது. RJD (ராஷ்டிரிய ஜனதா தளம்) கட்சியின் லல்லு பிரசாத் யாதவ், அவரது மகனான தேஜஸ்வி மீது 2017-ல் மீண்டும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்களின் வீடுகளில் ED/CBI சோதனைகள் பாஜகவினால் நடத்தப்பட்டன. கூட்டணி மாற்றத்திற்குரிய கருவியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டன. உடனே நிதிஷ்குமார் கட்சியும், அவரைத் தொடர்ச்சியாக RJD எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் NDA கூட்டணிக்கு (பாஜக கூட்டணி) மாறியதற்கும் பாஜகவின் மிரட்டல் இருந்ததாக பேசப்பட்டன. மேலும் RJD கட்சியில் இருந்து 25 எம்.எல்.ஏ-க்களில் 18 பேர் தங்கள் NDA கூட்டணி பக்கம் வர இருப்பதாக பாஜக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மீது ED/CBI கொண்டு தாக்குதல்களை தொடுப்பது, எம்.எல்.ஏ-க்களை மிரட்டி விலைக்கு வாங்கியது, நிதிஷ்குமாரை மிரட்டி தன் பக்கம் இழுத்து மகா கூட்டணியை உடைத்தது மற்றும் சாதி-மத அரசியல் ஆகியவை மூலம் RJD-ஐ தொடர்ந்து பாஜக பலவீனப்படுத்தியது. மகா கூட்டணியை உடைத்து 2025-ல் நிதிஷ்குமாரை தலைமையாகக் கொண்ட கூட்டணி என்பதை முதன்மைப்படுத்தி பிரச்சாரம் செய்து வென்றது பாஜக, நிதிஷ்குமாரை முதல்வராக்கியது. இப்போது பதவியில் இருந்து நீங்க வைத்து விட்டது. நாடாளுமன்ற உறுப்பினராகும் தனது விருப்பத்திற்காக விலகியதாக அவரை விட்டே கூற வைத்திருக்கிறது.
மாநிலக் கட்சிகளை ED/CBI விசாரணைகளை ஏவி பலவீனைடையச் செய்து மாநிலங்களின ஆட்சியைக் கைப்பற்றும் பாஜகவின் சதித்திட்டமே இது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட, இப்படியான பாஜக சதியின் அடுத்த இலக்கு தமிழ்நாட்டில் எடப்பாடியின் அதிமுகவா? என்கிற கேள்வியும் வலுவாகி எழும்பியிருக்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலக் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவது, கூட்டணி கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்ப்பது போன்ற பாஜகவின் பிரிவினை அரசியலுக்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, மணிப்பூர் அருணாசல பிரதேசம், மேகாலயா, மிசோராம், அரியானா, ராஜஸ்தான் என அதற்கு உட்படாத மாநிலங்களே இல்லை எனுமளவுக்கு மாநிலக் கட்சிகள் சிக்கலுக்குள்ளாயின.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற்று முதல்வராக இருந்த போது, அக்கூட்டணி பிடிக்கவில்லை எனக் கூறி அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, சில எம்.எல்.ஏக்களுடன் தலைமறைவானார். ஆளுநரால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் பாஜகவுடன் இணைந்து ஷிண்டே ஆட்சியில் அமர்ந்தார். தேர்தல் ஆணையம் ஏக்நாக் ஷிண்டேவை சிவசேனாவாக அங்கீகரித்தது. பாஜக ED, CBI வைத்து மிரட்டி கைப்பாவையாக ஆளுநரைப் பயன்படுத்தியாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. சிவசேனாவை மட்டுமல்ல மகாராஷ்டிராவின் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏக்களும் விலைக்கு வாங்கப்பட்டு அஜித்பவாருடன் இணைந்தனர். பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக, அஜித்பவார் துணை முதல்வரானார். தேர்தல் ஆணையம் அஜித்பவார் கட்சியை தேசியவாத காங்கிரசாக அங்கீகரித்து …
மணிப்பூரில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும், பாஜக சிறிய கட்சிகள், சுயேட்சைகள், காங்கிரசின் ஒரு எம்.எல்.ஏ -வை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்தது. அங்குள்ள ஆளுநரைக் கொண்டு அவசரமாக ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கோவாவிலும் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருந்தும் மணிப்பூரைப் போல அங்கும் நிலைமையை மாற்றி பாஜக ஆட்சி பிடித்தது.
கர்நாடகாவில் 2019-ல் காங்கிரசின் குமாரசாமி ஆட்சியில் பல எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அவரை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக. மத்தியப் பிரதேசத்தில் 2020-ல் 22க்கும் மேற்பட்ட காங்கிரஸை எம்.எம்.ஏ-க்களை விலைக்கு வாங்கி காங்கிரசின் கமல்நாத் ஆட்சியைக் கவிழ்த்தது. அருணாசலப் பிரதேசத்தில் 2016-ல் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பறித்து பாஜக கூட்டணியில் இணைய வைத்தது.

வடகிழக்கு மாநிலங்களிலும் அங்குள்ள சிறிய கட்சிகளை பலவீனப்படுத்தி படிப்படியாக தங்கள் கூட்டணிக்குள் இணைத்து கொண்டு பின்னர் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி பிடித்திருக்குறது. அஸ்ஸாம், திரிபுரா, அருணாசல பிரதேசம், மணிப்பூரில் நேரடியாக பாஜக ஆட்சி பிடித்து விட்டது. மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களில் வெற்றி பெற்றி கட்சிகளுடன் கூட்டணி கட்சியாக இணைந்திருக்கிறது. இங்கெல்லாம் மற்ற மாநிலங்களில் நடத்திக் காட்டியதைப் போல எம்.எல்.ஏ-க்களை கையகப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரே நாடு – ஒரே கட்சி என்கிற இலக்கினை வைத்து செயல்படும் பாஜகவில் இந்த அரசியல் விளையாட்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து சிக்கிய பெரிய மாநில கட்சியே அதிமுக. ஜெயலலிதா அம்மையார் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என அறிவித்து மோடியா? லேடியா? எனப் பிரச்சாரம் செய்துபெரும்பான்மையாக வெற்றி பெற்றார். அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த போது ஓ. பன்னீர் செல்வம் தற்காலிக முதல்வரானார். ஜெயலலிதா சிறையை விட்டு வெளியே வந்ததும் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மறைந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவிற்கு தலைமையேற்ற வி.கே. சசிகலா அம்மையார் ஓ.பன்னீர் செல்வத்தை பதவி விலகச் சொல்லி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். அப்போது தான் பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.
‘ஓ. பன்னீர்செல்வத்தை 2017-ல் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் செய்ய வைத்தது நான்தான்’ என்று ஆர்.எஸ்.எஸ்-ன் குருமூர்த்தி பகிரங்கமாக 2019-ம் ஆண்டு துக்ளக் நிகழ்வில் அறிவித்தார். அதிமுக அரசியல் பிளவில் பாஜகவின் செயல்திட்டம் இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதியானது. சசிகலா- ஓபிஎஸ் பிளவு நடந்தது. அதன் பிறகு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற போது எடப்பாடியை முதல்வராக அறிவித்து விட்டு அவர் சிறை சென்றார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் சசிகலாவை ஒதுக்கினர். எடப்பாடி – பன்னீர் செல்வம் கூட்டணி தொடர்ந்தது. அதன் பின்னர் இருவருக்குமான அதிகாரப் போட்டி ஏற்பட்டது. மோடி, அமித்ஷாவை மாற்றி மாற்றி இருவரும் சந்தித்தனர். இருவரின் இணைப்புக்காக ஆதரவு கொடுப்பது போல பாஜக நடித்து, இருவரின் பிரிவுக்கே வழிவகுத்தது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சண்டையை கூர்மைப்படுத்தினர். தேர்தல் ஆணையம் எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியது. ஆனால் இன்னமும் வழக்கு நடக்கிறது.

அடுத்ததாக, சசிகலா – டிடிவி தினகரன் இணைந்து அமமுக என்கிற கட்சி தொடங்கினர். டி.டி.வி. தினகரன் வீடுகளில் 2017, 2018, 2022-ம் ஆண்டுகளில் CBI / IT /ED விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன . குடும்ப பிரச்சனை அதிகமாகியது. சசிகலா தினகரன் பிளவு நடந்தது. இன்று 2026 தேர்தலில் தினகரன் NDA (பாஜக, அதிமுக) கூட்டணியில் ஐக்கியமானார். சசிகலா தேர்தலில் தனியாக நிற்கிறார். இப்போது எடப்பாடி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி, சசிகலா அணி என உடைந்து நிற்கிறது அதிமுக. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநில கட்சியான அதிமுக-வை உடைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அனைத்தையும் செய்து முடித்திருக்கின்றனர்
இப்படி அதிமுக பலவாக உடைத்ததற்கு முக்கியக் காரணமாக, தாங்களே தலைமை ஏற்க வேண்டும் என்கிற பாஜகவின் எண்ணமே காரணமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இன்றைய தேர்தல் கூட்டணியில், பெரிய கட்சியாக எடப்பாடியின் அதிமுக இருக்கும்போது, அதிமுக கூட்டணி என்று இதனைக் கூறாமல் பாஜக கூட்டணி என்பதே முதன்மைப்படுகிறது. அமித்ஷா சென்னைக்கு வந்து எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு இந்தக் கூட்டணிக்கு தலைமைத் தாங்கி விட்டு போகிறார். மோடி தமிழ்நாட்டை கைப்பற்றுவோம் என்று பேசுகிறார். இந்த அரசியல் சூழல்களே, பீகார் நிதிஷ்குமாரின் இன்றைய நிலையையும், எடப்பாடியின் நாளைய நிலையையும் இணைத்துப் பார்க்க அடிப்படையாக அமைகிறது. ஒரு வேளை இந்தக் கூட்டணி ஆட்சியை பிடித்தால் எடப்பாடி முதல்வராக நீடிக்க முடியுமா? நிதீஷ்குமாரைப் போல எடப்பாடியும் எம்.பியாக சென்று விடுவாரா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இவ்வாறு மாநிலப் பெரிய கட்சிகளை உடைத்து சிறிய கட்சிகள் ஆக்கி அதன் பின்னர் அதற்கு தலைமை ஏற்கும் உத்தியை அனைத்து மாநிலங்களையும் போல் தமிழ்நாட்டிலும் அதிமுக கட்சியைக் கொண்டு செய்திருக்கிறது. மேலும், இன்றைய 2026 தேர்தலில் NDA-வில் இணைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது பாஜகவின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் உத்தியாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.
அதிமுக மட்டுமல்ல, மற்றொரு மாநில கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியும் பிரிந்து நிற்கிறது. 2024 தேர்தலில் அதிமுக பாஜகவுடன் சேராமல் தனித்து நின்றது. அப்போது அதிமுகவுடன் சேர விடாமல் பாஜக-வுடன் கூட்டணி வைக்க அன்புமணி அழுது நிர்ப்பந்தித்ததாக ராமதாஸ் வெளிப்படையாகப் பேசினார். இன்று தந்தையும் மகனும் பிரிந்து நின்று அன்புமணி NDA (பாஜக, அதிமுக கூட்டணியிலும் ராமதாஸ் சசிகலா கூட்டணியிலும் உள்ளனர்.
ஒரே நாடு – ஒரே கட்சி என்கிற நோக்கத்திற்காக இவ்வாறு மாநில கட்சிகளைத் துண்டாடி, பின்னர் அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறை (ED, CBl, lT) ஆகியவற்றைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்து, மாநில கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஜனநாயகத்தை முற்றிலும் சிதைக்கும் அரசியலை பாஜக செய்து கொண்டிருக்கிறது. இத்துறைகளைக் கொண்டு மாநில கட்சிகளின் முதல்வர்களையே மிரட்டியது.

அமலாக்கத் துறையை ஏவி டெல்லியின் முன்னாள் முதல்வர் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த கெஜ்ரிவால் மீது மதுபான வழக்கு, ஜார்கண்ட் மாநில முதல்வர் மீது நிலமோசடி வழக்குகளை புனைந்தது. அவர்கள் வழக்குகளை எதிர்கொண்டு தங்களை குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தில் நிரூபிக்கும் காலத்திற்குள்ளான பொய்யான, போலியான பிரச்சாரங்களை செய்து ஆட்சியைக் கைப்பற்றுகிறது. கெஜ்ரிவால் வழக்கில் அரசியல் பழிவாங்கும் காரணத்திற்கு இந்த வழக்கு புனையப்பட்டது என நீதிமன்றமே அமலாக்கத்துறையை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் இந்த அரசியலைப் பற்றி அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்தாலும் அதிமுக தலைமை கேட்பதாக இல்லை. அதனால் தான் அதிமுகவைக் காப்பாற்ற அதிமுக தொண்டர்களிடமே அதிமுகவிற்கே வாக்களிக்காதீர்கள் என்கிற பிரச்சாரத்தை மே 17 இயக்கம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்தக் கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டைக் கைப்பற்றுவோம் என்று ஆணவத்துடன் கூறும் வடநாட்டுக் கட்சிக்கு அடிமையாகும் நிலையே ஏற்படும் என எச்சரிக்கையும் செய்கிறது.

மேலும் இக்கூட்டணியின் மிகப் பெரும் ஆபத்தாக தமிழ்நாடு உடைக்கப்படுவதும் இருக்கும். தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என முன்னரே பாஜகவின் தமிழ்நாட்டு தலைவரான நயினார் நாகேந்திரன், அர்ஜூன் சம்பத் போன்றவர்களால் சர்ச்சை கிளப்பப்பட்டது. இக்கூட்டணி வென்றால் காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக உடைத்ததைப் தமிழ்நாட்டையும் பாஜக உடைக்கும். இத்தகைய எதிரிகளால், துரோகிகளால் தமிழ்நாடு துண்டாடப்படாமல் காக்கும் பொறுப்பு தமிழர்களின் கையிலிருக்கிறது.