தோழர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை- பாகம் 2

வருகின்ற 2026 சட்டம்னற தேர்தலையொட்டி ‘பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் முழக்கத்தோடு மனிதநேய மக்கள் கட்சியை சார்ந்த தோழர் அப்துல் சமதுவை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மணப்பாறையில் ஆற்றிய தேர்தல் பரப்புரை:

அன்பான மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பெருமக்களே, பெரியோர்களே, தாய்மார்களே, 2026 தேர்தல் இதற்கு முன்னால் நடந்த தேர்தல்கள் மாதிரி எல்லாம் இல்லை. இதற்கு முன்னால் நடந்த தேர்தல்கள் எல்லாம் தமிழ்நாட்டு கட்சிகளுக்குள்ளாக நடந்த போட்டியாக இருக்கும். அது கலைஞரா, எம்ஜிஆரா அல்லது ஜெயலலிதாவா என்ற ஒரு தேர்தலாகவே இருந்துகொண்டிருந்தது. நமக்கு அது கவலை இல்லை. மாநில கட்சிகளுக்குள்ளே நடக்கின்ற போட்டியாகவே இருந்தது.

ஆனால் இந்த 2026 தேர்தல் என்பது பாஜக கட்சிக்கும் தமிழர்களுக்கும் நடக்கக்கூடிய ஒரு போராட்டமாக இன்றைக்கு வந்துள்ளது. இதுவரைக்கும் வடநாட்டிலிருந்து எந்த கட்சியும் “தமிழ்நாட்டை நான் நசுக்குவேன், தமிழர்களுடைய அரசியலை ஒடுக்குவேன், தமிழர்களுடைய கட்சிகளை நான் வேரோடு பிடுங்கி எறிவேன்” என்றெல்லாம் எந்த கட்சியும் வடநாட்டிலிருந்து சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டில் கால் வைத்தது இல்லை. ஆனால் இந்த முறை என்ன நடக்கிறது என்றால், பாஜக தமிழ்நாட்டின் அரசியலை நான் முற்றிலுமாக கைப்பற்றுவேன் என்று இறங்குகிறார்கள். அப்போது இந்த தேர்தலில் நாம் யாரை எதிர்கொள்ளப் போகிறோம், எந்த பிரச்சனையை எதிர்கொள்ளப் போகிறோம் என்று பார்த்தால், டெல்லிக்காரன் தமிழ்நாட்டு அரசியலை நாசம் செய்யப் போகக்கூடிய ஒன்றை வெளிப்படையாக சொல்லிவிட்டான்.

பாஜககாரர் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். நாம் இறந்துப் போனால் 10,000 ரூபாய் அவர்கள் பாஜக நமக்கு உதவித் தொகையாக கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறான். உலகத்தில் எந்த கட்சியும் இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்ததாக நான் பார்த்ததில்லை. “இறந்துப் போனால் 10,000 தருவேன்” என்பதற்கு, நாளைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏதாவது உதவி வேண்டுமென்றால் நாம் இறந்துப் போனால்தான் உதவி கிடைக்கும் போல இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு கட்சி தமிழ்நாட்டில் அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு இங்கே தேர்தலுக்கு வருகிறார்கள். நாம் அதிமுககாரர்களை பார்த்துதான் கேட்க வேண்டும். உங்கள் கட்சியை, அதிமுக கட்சியை நான்கு ஐந்து அணிகளாக உடைத்தது யார்? உங்கள் கட்சியை நான்கு ஐந்து கட்சியாக உடைத்தது யார்? எடப்பாடியார் அணி, டிடிவி அணி, சசிகலா அணி என்றெல்லாம் உங்கள் கட்சியை உடைத்தது பாஜக. உங்கள் கட்சியை உடைத்த அந்த பாஜகவோடுதான் கூட்டணி வைத்து தாராளமாக 40 இடங்களை கொடுத்திருக்கிறார் எடப்பாடியார். உங்கள் கட்சியை நாசம் பண்ணிய ஒரு கட்சிக்கு 40 இடங்களை தாராளமாக வாரி வழங்கியிருக்கிறார் என்றால், நாளைக்கு இவர் கையில் தமிழ்நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? தமிழ்நாடு நாசமாகப் போய்விடும். சொந்த கட்சியையே காப்பாற்ற முடியாத எடப்பாடியார் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

மேலும், “நாங்கள் ஒன்றிய அரசோடு, மோடி அரசோடு இணக்கமாக இருந்து பல திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை” என்றார் எடப்பாடியார், அப்படி பாஜகவுக்கு அடிமையாக இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் என்னவென்று இதுவரைக்கும் அவர் சொன்னதே இல்லை. ஒரு திட்டத்தைக்கூட “எடப்பாடியார் தமிழ்நாட்டுக்கு நான் நல்லது கொண்டு வந்தேன்” என்று இதுவரைக்கும் அவரே அவர் வாயால் சொல்லவில்லை. நாம் வந்து அவர் கொண்டு வரவில்லை என்று சொல்லவில்லை, அவரே சொல்லவில்லை. ஏனென்றால் அப்படி எந்த திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை.

பாஜக தமிழ்நாட்டுக்கு நல்ல திட்டத்தை கொண்டு வருவதற்கு ஒரு நாளும் விடாது. மோடிக்கு தமிழ்நாட்டின் மேல் வெறுப்பு இருக்கிறது, தமிழர்கள் மேல் ஒரு வெறுப்பு இருக்கிறது. அந்த வெறுப்பு நாம் வந்து அழியும் வரைக்கும் ஓயாது பாஜகவுக்கு. தமிழ்நாட்டினுடைய எல்லா திட்டங்களையும் தடுத்து வைக்கக்கூடிய பாஜக, அதற்கு துணை போகக்கூடிய அதிமுகவை நாம் எப்படி ஆதரிக்க முடியும்? தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

நாம் என்ன சொல்கிறோம் என்றால், எதிர்க்கட்சியாக நாங்கள் பாஜகவை தமிழ்நாட்டிலே அதிமுகவோடு சேர்ந்து வேலை செய்தோம் என்று பேசுகிறார்கள். அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து பேசுகிறார்கள். கடந்த ஐந்து வருடத்தில் பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கென்று என்ன கோரிக்கை வைத்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று பார்த்தால், மதுரையில் தர்காவை இடிக்க வேண்டும் என்று போராட்டம் பண்ணியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு இப்போது எது பிரச்சனை? தர்காவா பிரச்சனை? பள்ளிக்கூடம் நடத்துவதற்கு டெல்லியிலிருந்து நிதி வரவில்லை. கல்லூரி நடத்துவதற்கு நிதி வரவில்லை. நமது பிள்ளைகளுக்கு பாடப் புத்தகம் அச்சடித்துக் கொடுப்பதற்கு நிதி வரவில்லை. நமது ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு நிதி வரவில்லை. நமது ஊரில் வளர்ச்சித் திட்டம் கொண்டு வருவதற்கு நிதி வரவில்லை. இங்கே ரயில்வே பாதை போட்டிருக்கிறானே, இன்னும் இரண்டு பாதையை சேர்த்து போட்டு இங்கே தென்மாவட்டங்களை எல்லாம் இணைப்பதற்கு என்றால் அதற்கு ரயில் விடவில்லை.

மேலும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு 18% வரி போட்டான், அப்புறம் 12% வரி போட்டான். ஆனால் சப்பாத்தி இயந்திரத்துக்கு 5% வரி. நமக்கு 12% வரி. என்ன காரணம்? தமிழன் தோசை சாப்பிடுகிறான், இட்லி சாப்பிடுகிறான், அதானால் வரியை கூட போடு. ஆனால் சப்பாத்தி மெஷினுக்கு 5% வரி. ஏனென்றால் வடநாட்டுக்காரன், இந்திக்காரன் எல்லாம் சப்பாத்தி சாப்பிடுகிறான். யோசித்துப் பாருங்கள். ஒரு நாடு, ஒரு பிரதமர், ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்தால் அந்த ஆள் நல்ல ஆளா? அது நல்ல பிரதமரா? அது ஒரு நல்ல ஆட்சியா? இவர்களெல்லாம் நல்லவர்களா?

தமிழ்நாட்டுக்கு ஒக்கி புயல் வந்தது, வர்தா புயல் வந்தது, நிவர் புயல் வந்தது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா அம்மையார் கேட்டார். அதற்குப் பிறகு வந்த ஓபிஎஸ் கேட்டார். அதற்குப் பிறகு எடப்பாடி கேட்டார். அதற்குப் பிறகு வந்த ஸ்டாலின் கேட்டார். இந்த கட்சி, எந்த கட்சி, இந்த முதல்வர், எந்த முதல்வர் என்று இல்லை, எல்லாரும் கேட்டார்கள். ஒன்றேகால் லட்சம் கோடி தமிழ்நாட்டுக்கு நட்டமாகியிருக்கிறது, டெல்லியிலிருந்து கொடுங்கள் என்று கேட்டால் வெறும் 12,000 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 100 ரூபாய் கேட்டால் 10 ரூபாய் தந்திருக்கிறான்.

நான் கேட்கிறேன்: இதெல்லாம் உங்கள் அப்பன் வீட்டு பணத்தையா நாம் கேட்கிறோம். நாம் கொடுக்கிற வரிப்பணத்திலிருந்து கேட்கிறோம். வருடத்துக்கு இரண்டு லட்சம், மூன்று லட்சம் கோடி ரூபாய் தமிழன் வரிப்பணமாக கொடுக்கிறான். நீங்கள் ஒவ்வொருத்தரும் மாதத்துக்கு 10,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றால் அதில் குறைந்தபட்சம் 1,200 ரூபாய் நீங்கள் வரி கட்டுகிறீர்கள். வீட்டில், மாதம் மளிகை சாமான் கணக்கு போடுகிறீர்கள் அல்லவா, அதேபோல எவ்வளவு வரி என்று போட்டு பாருங்கள். 1000 ரூபாய் செலவு பண்ணுகிறீர்கள் என்றால் 120 ரூபாய் வரி டெல்லி சர்க்காருக்கு கொடுக்கிறீர்கள். 5,000 ரூபாய் சம்பாதித்தாலும் வரி கட்டுகிறான், 10,000 சம்பாதித்தாலும் வரி கட்டுகிறான். அம்பானியை தவிர, அதானியை தவிர, குஜராத்தின் மார்வாடியை தவிர அத்தனை பேரும் வரி கட்டுகிறோம். அத்தனை பேரும் வரி கட்டுகிறோம். ஆனால் நமக்கு நல்லது செய்யவில்லை இந்த பாஜககாரன்.

இன்றைக்கு கீழடி என்கின்ற பெருமை நமக்கு வந்திருக்கிறது. இந்தியாவிலேயே மூத்த நாகரிகமாக தமிழர் நாகரிகம் இருந்தது. அது வைகை ஆற்றங்கரையில் இருந்தது, மதுரைக்கு அருகில் இருந்தது என்று ஆதாரம் கிடைத்திருக்கிறது. இன்றைக்கு அப்படி ஒரு ஆதாரத்தை அயோத்திக்கும் காட்டிவிட முடியுமா? “உன் ஊர் பழைய ஊர்” என்று சொல்லிவிட முடியுமா? அயோத்தி பழைய ஊரா? டெல்லி பழைய ஊரா? குஜராத் பழைய ஊரா? இல்லை. மதுரை பழைய ஊர். தமிழ்நாடு பழைய ஊர்.

தமிழன்தான் இந்த நிலத்தினுடைய முதற்குடி, மூத்தக்குடி. தமிழன்தான் முதல் குடி. இந்தியாவிலேயே முதல் இனம் – தமிழினம், முதல் மொழி – தமிழ் மொழி, முதல் நாகரிகம் – தமிழர் நாகரிகம். அந்த பெருமை எங்களுக்கு இருக்கிறது. பாஜககாரனுக்கு என்ன பெருமை இருக்கிறது? சாணி தின்னும் பயல்களுக்கு என்ன பெருமை? மாட்டு கோமியம் குடிக்கிறவனுக்கு என்ன பெருமை இருக்கிறது? எங்கள் ஊருக்கு வந்து என்ன திமிர் இருந்தால் “உங்களுக்கு நான் மெட்ரோ ரயில் தரமாட்டேன்” என்று சொல்வாய்? “உனக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாட்டேன்” என்று சொல்வாய்?

இப்படி எந்த திட்டத்தையும் கொண்டு வராமல், திருப்பரங்குன்றம் பிரச்சனையை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள் என்றால், நாம் பாஜககாரனை பார்த்து என்ன கேட்கிறோம்: “பாஜககாரனுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அமித்ஷா என்றைக்காவது காவடி தூக்கியிருக்கிறாரா? இல்லை நரேந்திர மோடி முருகனுக்கு ஏதாவது அழகு போயிருக்கிறாரா? இல்லை மொட்டை அடித்திருக்கிறார்களா? இவர்கள் எல்லாம் குஜராத்துக்காரன். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கக்கூடிய சிக்கந்தர் தர்கா காலம் காலமாக இருக்கிறது. அதனால் என்ன பிரச்சனை தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது? நானும் மதுரையில் இருந்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் திருப்பரங்குன்றத்தில்தான் மொட்டை அடிப்பார்கள். திருமணம் செய்வதென்றால் திருப்பரங்குன்றத்தில் நடத்துவார்கள். நாங்கள் இதுவரைக்கும் அதை தொந்தரவாக மதுரைக்காரனே பார்த்ததில்லையே, கேட்டதில்லையே.

தமிழ்நாட்டுக்குள் நாம் எல்லாம் அண்ணன் தம்பியாக பழகுகிறோம், ஜாதி மதம் பார்க்காமல் இருக்கிறோம், அது கண்ணை உறுத்துகிறது. அதற்கு கலவரம் பண்ணுவதற்கு, தீபம் ஏற்று, தீபம் ஏற்று என்கிறான். ஏன்டா அங்கே தீபம் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாஜக கும்பல் “விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றக்கூடாது, அதற்கு மேல் தர்கா இருக்கிறது, அங்கே நீ போய் தீபம் ஏற்று” என்கிறான். தர்கா என்பது என்ன? இறந்தவரை புதைத்த இடம். அது ஒரு அடக்கத்தலம். எந்த ஊரிலாவது எந்த கோவிலுக்காவது இடுகாட்டில் போய் தீபம் ஏற்றுவீர்களா? எவ்வளவோ முருக பக்தர்கள் இருப்பீர்கள். பிள்ளையார் கோவிலில் ஏற்றுவீர்களா? இல்லை. இறந்தவர்களை புதைத்த இடத்தில் போய் ஏற்றுவீர்களா? சுடுகாட்டில் போய் பக்கத்தில் நின்றுதான் “நான் தீபம் ஏற்றுவேன்” என்று சொன்னால், அது முருகனை அசிங்கப்படுத்துகின்ற விடயம். அதைத்தான் பாஜககாரன் செய்திருக்கிறான்.

தர்கா என்பது என்ன? இந்த மண்ணுக்காக, மக்களுக்காக சிந்தித்தவர், மக்களுக்காக அன்பு செலுத்தியவர், இறந்த பின்னால் அவரை புதைத்த இடத்தை மக்கள் வணங்குகிறார்கள். நாங்களும் தர்காவுக்கு போகிறோம். எங்கள் குடும்பத்திலும் வருடா வருடம் நாகூர் தர்காவுக்கு போவார்கள். அதை வேண்டி விரும்பி போவது. ஆனால் இதையெல்லாம் பிரச்சனையாக்கி தமிழ்நாட்டில் கலவரம் கொண்டு வரக்கூடிய பாஜகவையும் அதிமுகவையும் தயவு செய்து ஊருக்குள் விடாதீர்கள். அப்படி விட்டுவிட்டால் நாளைக்கு தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது.

800 வருடத்துக்கு முன்னால் மதுரையை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்கின்ற பாண்டிய அரசன் காஜிமார் பள்ளிவாசலுக்கு நிலம் கொடுத்து, காசு கொடுத்து “அங்கே இஸ்லாத்தை நீங்கள் வளர்த்துவிடுங்கள்” என்று அன்றைக்கு பாண்டிய மன்னன் சொன்னது. அதற்கு முன்னால் சோழ மன்னர்கள் சொன்னது. நமது ஊரில் எந்த அரசன் அன்றைக்கு பாண்டியன் “எதுக்குயா இங்கே மசூதி கட்டுகிறாய்” என்று கேட்கவில்லையே. அதுதான் தமிழ்நாடு. அதுதான் மதுரை. தமிழன் ஜாதி மதம் பார்க்காமல் அண்ணன் தம்பியாக இருக்கிறோம். எந்த கடையில் யார் இருக்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோமா? இல்லையே. ஆனால் பாஜக காரன் என்ன செய்கிறான்? கலவரம் செய்கிறான். உன்னை விடலாமா ஊருக்குள்ளே?

அதனால் பாஜகவை விரட்டிவிட்டு, இந்த தொகுதிக்கு நல்லது பண்ணக்கூடிய அப்துல் சமது, எனக்கு ரொம்ப நாளாக தெரியும், 15 வருடமாக தெரியும், எத்தனையோ மக்கள் பிரச்சனைக்காக போராடியிருக்கிறார், சிறைக்கு போயிருக்கிறார், வேலூர் சிறைக்கு போயிருக்கிறார். எனக்கு தெரிந்து வேலூர் சிறைக்கு போனவர். எதற்கு? மக்கள் பிரச்சனைக்காக. கல்பாக்கத்தில் ஆஸ்பத்திரி மக்களுக்கு இல்லை என்பதற்காக போராடி சிறைக்கு போன மனிதன்.அப்படிப்பட்ட ஒரு போராளியை நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான சட்டமன்ற வேட்பாளராக இருப்பார் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

அதிமுகவை அடிமையாக கொண்டு வந்தீர்கள் என்றால் என்ன ஆகும்? நாளைக்கு பாஜக கையில் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். அதுதான் பீகாரில் நடந்திருக்கிறது. பீகாரில் நிதீஷ் குமாரை வந்து “பாவமே” என்று பாஜகவை கூப்பிட்டு இடம் கொடுத்தார். இன்றைக்கு நிதீஷ் குமாரை தூக்கி வெளியே வீசிவிட்டார்கள். நிதீஷ் குமார் என்ன செய்தார்? முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு “நான் எம்.பி.யாக போகிறேன்” என்று எம்.பி.யாக போய்விட்டார். இன்றைக்கு வேறு ஒருத்தனை கொண்டு வந்து, பாஜககாரனை கொண்டு வந்து முதலமைச்சர் ஆக்கிவிட்டார்கள்.

நாளைக்கு இதே விஷயம் எடப்பாடிக்கு நடக்கும். நாளைக்கு எச். ராஜா முதலமைச்சர் ஆனாலும் ஆவதற்கு எல்லா வேலையும் பாஜககாரன் செய்வான். அதனால் அதிமுகக்காரர்கள் விவரமானவர்களாக இருந்தீர்கள் என்றால், உங்கள் கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள். உங்கள் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் ஓட்டு போடாதீர்கள். நான் அதிமுக கட்சிக்காரர்களுக்கு மேல் உங்கள் மேல் கோபத்தில் நான் சொல்லவில்லை. உங்கள் மேல் இருக்கும் பாசத்தில் சொல்கிறேன். ஏனென்றால் திமுகவை பாஜக தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறது. உன் கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஒரு கவுன்சிலர் சீட்டு தனியாக நின்று ஜெயிக்க முடியாத கட்சிதான் பாஜக. அவனுக்கு எதற்கு 40 இடங்களை தாரை வார்த்துக் கொடுத்தார்? எடப்பாடியை இப்போது இடத்தை மிரட்டி வாங்கியிருக்கிறார்கள். நாளைக்கு கட்சியையே மிரட்டி எழுதி வாங்கப் போகிறார்கள். எடப்பாடியார் கொடுத்துவிட்டு போய்விடுவார்.

முதலில் நான் ஒன்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன்: பாஜக மாதிரி கேடுகெட்ட தீயசக்தி உலகத்திலேயே கிடையாது. மக்களை வஞ்சிக்கக்கூடிய கட்சி நல்ல கட்சியாக இருக்க முடியுமா? இங்கே ராம சீனிவாசன் பாஜக வேட்பாளராக நிற்கிறீரே, அவர் வந்தால் கேளுங்கள்: “40 வருடமாக தமிழ்நாட்டில் கட்சி நடத்துகிறீர்களே பாஜககாரர்களே, உங்கள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது காமராஜர் சிலைக்கு, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, எம்ஜிஆர் படத்துக்கு மரியாதை செலுத்துகிறீர்களே, ஏன் உங்கள் கட்சியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணிய ஒரு தலைவர் படத்தையாவது காட்டியிருக்கிறீர்களா? அதற்கு மாலை போட்டிருக்கிறீர்களா? காமராஜர் காங்கிரஸ் கட்சிக்காரர், முத்துராமலிங்க தேவர் பார்வர்ட் பிளாக் கட்சிக்காரர், எம்ஜிஆர் அதிமுக கட்சிக்காரர். மற்ற கட்சி தலைவனுக்கு எல்லாம் மாலை போடுகிறீர்களே, உங்கள் 40 வருட கட்சியில் ஒரு தலைவனும் இல்லையா? ஒரு நல்லவன் கிடையாதா?

எல்லா கட்சியிலும் மக்களுக்கு நல்லது செய்த நான்கு தலைவர்களை சொல்வார்கள். எந்த கட்சி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். கம்யூனிஸ்டை எடுத்தால் ஒரு புத்தகமே போடலாம். திராவிட இயக்கத்தை எடுத்தால் அதற்கு ஒரு புத்தகத்தை போடலாம். இப்படி எல்லா கட்சிக்கும் கன்னியாகுமரியிலிருந்து ஒரு பெரிய பட்டியலை போடலாம். ஆனால் 40 வருடமாக கட்சி நடத்துகிறான் பாஜககாரன், அவன் கட்சியில் நல்லது பண்ணியவன், தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணியவனே ஒரு தலைவனுடைய பெயர் கூட அந்த கட்சிக்காரனால் சொல்ல முடியாது.

நான் கோயம்புத்தூரில் இருந்து வருகிறேன். கோயம்புத்தூரில் ஒரு விஷயம் நடந்தது. 20 வருடத்துக்கு முன்னால் அங்கே கலவரம் கொண்டு வந்தார்கள். பாஜககாரன் கலவரம் கொண்டு வந்தான். கோயம்புத்தூரில் கலவரம் நடந்தது. என்ன? எப்படி ஆரம்பித்தான் தெரியுமா? “இது இந்து கடை, இது முஸ்லிம் கடை, இது கிறிஸ்தவர் கடை” என்று ஆரம்பித்தான். சண்டையை மூட்டிவிட்டான்.ஊர் முழுக்க சண்டை நடந்தது. இரண்டு வருடம் சண்டை நடந்தது. இந்து கடையும் இல்லை, முஸ்லிம் கடையும் இல்லை, கிறிஸ்தவன் கடையும் இல்லை. இரண்டு வருடம் கழித்து வந்து பார்த்தால் எல்லாமே சேட்டு மார்வாடி கடை. எல்லா இடமும் சேட்டு மார்வாடி கடை. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு கட்சியை நாம் விட முடியுமா?

கோயம்புத்தூர் நிலைமை என்ன ஆனது? இன்றைக்கு ஜாதியாக, மதமாக பார்த்து உள்ளுக்குள் கலவரம் வந்து தமிழன் கடை வைக்க முடியவில்லை. சேட்டு மார்வாடி கடையாக இருக்கிறது. தேட்டு மார்வாடி கடையாக மாறிப்போனது. அதே மாதிரி மதுரை மாறிவிட வேண்டாம். மதுரையில் பாஜக வளர்கிறது என்று சொல்கிறார்கள். பாஜக வளர்ந்தால் தமிழன் கடை எல்லாம் சேட்டு கடையாக மாறிவிடும் என்று அர்த்தம்.

கோயிலை சுற்றி யார் கடை வைத்திருக்கிறார்கள்? அவர்கள் வந்ததற்கு அப்புறம்தானே பாஜக வளர்ந்தது? அவர்கள்தானே பாஜகவுக்கு காசு தருகிறார்கள்? அவன் ஒரு கட்சியை குஜராத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான் சேட்டு மார்வாடி. அந்த கட்சிக்கு அவன் காசு தருகிறான். அந்த கட்சியை வளர்த்தெடுக்கிறான். அந்த கட்சிக்கு அவன் ஓட்டு போடுகிறான். குஜராத்துக்காரன் கட்சி எதற்கு அதிமுக தூக்கி சுமக்கிறது. குஜராத்திலிருந்து ஒரு கட்சியை கூட்டிக்கொண்டு வந்து இங்கே மார்வாடி சேட்டுக்காரன் கடை போடுவதற்கு ஒரு கட்சியை வளர்த்து விடுகிறாயே என அதிமுகவை பார்த்து கேட்க வேண்டும்.

இங்கே நாளைக்கு ராம சீனிவாசன் ஜெயித்தால் சேட்டு மார்வாடி கடைதான் இருக்கும்” என்று சொல்லிவிட்டேன் நான். இதுதான் இதுதான் கோயம்புத்தூரில் நடக்கிறது. வானதி சீனிவாசன் ஜெயித்ததற்கு அப்புறம் தமிழனுக்கு கடை கொடுப்பதற்கு ஆள் இல்லை. தமிழனுக்கு கடை கொடுக்க ஆள் இல்லை. ஆனால் சேட்டு மார்வாடிக்குதான் எல்லா கடையும் இருக்கிறது. அதோடு விட்டார்களா என்றால் பரவாயில்லை. கோயம்புத்தூரில் நமது திண்டுக்கல் ரோடு, மாதிரி பழைய தெரு இருக்கிறது, பழைய ரோடு இருக்கிறது. ரங்கைய கவுண்டர் ரோடு என்று பெயர். ரங்கைய கவுண்டர் ரோட்டுக்கு சேட்டு பெயர் வைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த தெருவெல்லாம் மாற்றி நாளைக்கு சேட்டு பெயராக ராம சீனிவாசன் வைப்பார். நாளைக்கு மதுரை எல்லா தெருவுக்கும் ஸ்டேட் மார்வாடி பெயர் இருக்கும். தமிழன் கடை நடத்த முடியாது. கேட்டால் “மார்வாடியும் இந்து, நீயும் இந்து” என்று போய்விடுவான். அடுத்து இவன் முஸ்லிமா? அவன் கிறிஸ்தவனா? என நம்மை பிரிப்பான். தமிழனை மதமாக பிரிப்பான். ஆனால் குஜராத்துக்காரனை இந்து என்று சொல்லி குழந்து ஒட்ட வைத்துக்கொள்வான்.

இது நடக்கலாமா? நடக்க விடலாமா? சேட்டு மார்வாடியிடம் வேலை பார்க்க முடியுமா? நமது ஆட்கள் வேலை பார்க்க முடியுமா? வியாபாரம் பண்ண முடியுமா? நமது ஆள் இத்தனை கடை வைத்திருக்கிறார்களே, போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் எல்லாமே இருக்கிறதா? அந்த கடையில் என்றைக்காவது சேட்டு மார்வாடி வீட்டிலிருந்து பொருள் வாங்குவதற்கு வந்திருக்கிறார்களா? தமிழன் கடையில் தங்க மயில் ஜுவல்லரி இருக்கிறது, இந்த கடையில் சேட்டு மார்வாடிக்காரர்கள் என்றைக்காவது நகை வாங்குவதற்கோ, துணி வாங்குவதற்கோ, பொருள் வாங்குவதற்கோ வந்திருக்கிறார்களா? பார்த்திருக்கிறீர்களா? பார்த்தது இல்லை?

நான் கல்லூரியில் படித்த காலத்தில், பள்ளியில் படித்த காலத்தில் இதையெல்லாம்தான் எல்லா அநியாயத்தையும் பார்த்துவிட்டேன். இன்றைக்கு கோயம்புத்தூர்காரர்களுக்கு வேறு வழி இல்லை. எல்லா கடையும் பறிபோய்விட்டது. எல்லா கடையும் பறிபோய் விட்டது. சென்னையில் சௌகார்பேட்டை அதே மாதிரிதான் ஆகிப்போனது. இப்படியே விட்டோமென்றால் நாடு நாசமாகப் போய்விடும். இதை கேட்டால் “பாரத் மாதா கி ஜே” என்று வருவார்கள். உன் பாரத் மாதா ஜெயை டெல்லியில் வைத்துக்கொள், குஜராத்தில் வைத்துக்கொள்.

இது தமிழ்த் தாய் நடமாடிய மண். இது தமிழனுடைய மண். இங்கே தமிழ் மொழிதான் இருக்கும். தமிழ்நாடுதான் எங்கள் மண். எங்கள் மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டைத்தான் நாங்கள் தூக்கிப் பிடிப்போம். நாங்கள் எதற்கு சப்பாத்தி சாப்பிடுபவர்கள் ஊரை தூக்கிப் பிடிக்க வேண்டும்?

நேற்றைக்கு ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார். என்னவென்றால், உத்தரப் பிரதேசத்துக்கு மூன்று மடங்கு எம்.பி-கள் எண்ணிக்கையை அதிகம் செய்துவிட்டார். எம்.பி-கள் எண்ணிக்கையை மூன்று மடங்கு. பீகாருக்கு, உத்தரப் பிரதேசத்துக்கு தமிழ்நாட்டுக்கு ஒன்றைக்கூட காணோம். தமிழ்நாட்டுக்கு ஒன்றைக்கூட காணோம். 70 எம்.பி இருக்கின்ற உ.பி-யில் இப்போது 150 எம்.பி கொண்டு வந்துவிட்டார்கள். 40 எம்.பி இருந்த பீகாருக்கு 70 எம்.பி கொண்டு வந்துவிட்டார்கள். இன்றைக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி ஆறு மாநிலம் சேர்ந்தால்கூட பீகார், உத்தரப் பிரதேசத்தினுடைய எம்.பி-களின் எண்ணிக்கைக்கு சமமாக முடியாது. இனி தமிழ்நாட்டுக்காரன் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வர முடியாது.

ஒரு சட்டத்தை நான் இதில் ஒரு விடயத்தை சொல்லி முடிக்கிறேன். என்ன நிலைமை என்று? நமக்கு கடல் இருக்கிறதா? மீனவன் இருக்கிறானா? மீனவனுக்கு ஒரு சட்டம் கொண்டு வந்தான் மோடி சர்க்கார். மீனவனுக்கு சட்டம் கொண்டு வந்தானே, அந்த சட்டத்தை எழுதியவன் யார் தெரியுமா? ஆதரித்தவன் யார் தெரியுமா? உத்தரப் பிரதேசக்காரனும், பீகார்காரனும், மத்தியப் பிரதேசக்காரனும். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சட்டம் கொண்டு வந்தார்கள். இந்த மூன்று மாநிலத்துக்கும் கடலே கிடையாது. கடலே இல்லை. கடலே இல்லாதவன் எல்லாம் நமது ஊருக்கு சட்டம் கொண்டு வந்துவிட்டான்.

அதனால் பெரியோர்களே, தாய்மார்களே, தமிழ்நாட்டுக்கு நல்லது என்ன என்பதை யோசித்து முடிவெடுத்து நீங்கள் அதன்படி நடக்க வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும், தமிழனை காப்பாற்ற வேண்டும், தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், தோழர் அப்துல் சமது அவர்களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை சட்டமன்றத்திற்கு நீங்கள் அனுப்ப வேண்டும். அப்படிப்பட்ட ஒரு போராளி சட்டமன்றத்திற்கு தேவை. அவர் மணப்பாறை குறித்து, இந்த மக்களினுடைய வளர்ச்சி குறித்து பலமுறை எங்களிடத்திலும் பேசியிருக்கின்றார். அதற்கான ஆய்வுகளை செய்யுங்கள் என்றெல்லாம் எங்களிடத்தில் கேட்டிருக்கின்றார்.

இந்த மக்கள் மீது பேரன்பு கொண்ட அப்துல் சமது அவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்புவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் நாமெல்லாம் மான தமிழர்கள். சுயமரியாதை மிக்கவர்கள். எடப்பாடியாரைப் போல ஒட்டுமொத்த கட்சியை அடகு வைக்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டை அடகு வைக்கக்கூடியவர்கள் அல்ல நாம். அப்படிப்பட்ட நாம் இந்த மணப்பாறை தொகுதியை மானம் மிகுந்த தொகுதியாக, தோழர் அப்துல் சமது அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்புவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.பொதுக்கூட்டத்தில் நான் நிச்சயம் பங்கெடுப்பேன் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த சமயத்தில் உங்களை நான் மீண்டும் சந்திக்கின்றேன். வெல்லட்டும் தோழர் அப்துல் சமது! வெல்க தமிழ்நாடு! வெல்க தமிழர்! வெல்க தமிழ் மொழி! என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »