தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளி அவமதித்த ஆளுநர்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்கும் போதும் சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்விலும் வந்தேமாதரம் பாடல் முதலில் ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் ஒலிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தமிழர்களின் இன உணர்வை புண்படுத்தியதோடு வந்தே மாதரம் பாடல் குறித்த பல சர்ச்சைகளையும் எழுப்பி உள்ளது.

1870களில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எனும் வங்காள கவிஞரின் நாவலான ஆனந்த்மத்தின் ஒரு பகுதியாக முதலில் வெளியிடப்பட்டது வந்தேமாதரம் பாடல். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த சன்யாசிக் கலகத்தின் பின்னணியில் எழுதப்பட்ட ‘ஆனந்தமத்’ நூல் அன்று ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. (பதினெட்டாம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது ‘ஆனந்தமத்’. இதில் மறைமுகமாக இந்து-இசுலாமிய பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்காக இஸ்லாமிய ஆட்சியாளர் ஒருவரை மோசகமாக சித்தரித்ததாகவும் ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகத்தை எதிரியாக்க இந்த நூல் எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது.)

1905ஆம் ஆண்டில் நடந்த வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து 1907-08 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. (ஆனால் அப்போது இந்தப் பாடலின் முதல் இரண்டு பத்திகள்தான் பாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்தப் பாடலில் மொத்தம் ஆறு பத்திகள் உள்ளன. முதல் இரண்டு பத்திகள் ரம்மியமான நிலம், பூக்கள், ஓடும் நீர், குளிர்ச்சியான காற்று, அறுவடை என்று விவரிக்கும் அதே வேளையில், அடுத்தடுத்த பத்திகளில் துர்கா, தெய்வம், பத்து போர் ஆயுதங்களை ஏந்தியவர் எனப் பல சொற்கள் வருகின்றன. பாரத மாதா புகழ் பாடிய அந்தப் பாடலில் ‘ஆயுதமேந்திய’ போன்ற சொல்லாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

(…When the swords flash out in seventy million hands,

And seventy million voices roar

Thy dreadful name from shore to shore?

தமிழாக்கம்:

…ஏழு கோடி கைகளில் வாள்கள் ஒளிரும் போது,

ஏழு கோடி குரல்கள் முழங்குகின்றன…)

ஆங்கிலேயருக்கு எதிரான போர்க்குரலாக முதலில் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டாலும், பிற்காலத்தில் இந்து மகாசபா உட்பட பல இந்துத்துவவாதிகள் அதை தங்கள் வயப்படுத்திக் கொண்டனர். வரலாற்றில் இந்தப் புள்ளியில் இருந்துதான் வந்தேமாதரம் பாடலைச் சுற்றி சர்ச்சைகள் எழத் தொடங்கின. இசுலாமியர் இந்தப் பாடலின் சில பத்திகளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இந்து-இசுலாமியர் இரு சமூகங்களுக்கிடையில் அதிகரித்துவரும் கசப்புணர்வைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஆங்கிலேயர் வந்தே மாதரம் தொடர்பான சர்ச்சைகளில் தலையிட வேண்டாம் என்று தங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இந்தச் சூழலில் அக்டோபர் 1937இல், நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு வந்தே மாதரம் சர்ச்சை குறித்து கடிதம் எழுதினார் நேரு. இக்கடிதத்தில், இந்தப் பாடலின் பின்னணி இசுலாமியரை எரிச்சலடையச் செய்யலாம் என்று கவலை தெரிவித்தார். மேலும் பாடலின் வார்த்தைகளை புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். இறுதியில்  இந்த விடயத்தில் ரவீந்திரநாத் தாகூரிடம் ஆலோசிப்பதாகக் கூறினார்.

(புகைப்பட ஆதாரம்: DNA  செய்திக்குறிப்பு)

தாகூர் நேருவுக்கு எழுதிய பதில் கடிதத்தில் “முதல் இரண்டு பத்திகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, ஆனால் மீதமுள்ளவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று எழுதினார். மேலும் “‘வந்தே மாதரம்’ பாடல் முழுவதையும், அதன் சூழலுடன் சேர்த்துப் படிக்கும்போது, இசுலாமியரைக் காயப்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றும் கூறி இருக்கிறார்.

அபுல் கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் ஆலோசனையை ஏற்று, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே நிகழ்வுகளில் பாடப்படும் என்று முடிவானது. இந்து மதம் சாராதவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே முழுப் பாடலும் அன்று அவர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும் தனிப்பட்ட காரணத்திற்காக வந்தே மாதரம் பாடலைப் பாட விரும்பவில்லை என்றால், மாற்றுப் பாடலை பாடலாம் என்றும் அந்தக் குழு ஒப்புக்கொண்டது.

இவ்வாறு மக்களின் சமூக ஒற்றுமைக்காக தவிர்க்கப்பட்ட வந்தே மாதரம் பாடலின் பத்திகள் அனைத்தையும் சேர்த்து முழு பாடலையும் தற்போது கட்டாயமாக்கி உள்ளது பாஜக மோடி அரசு. வந்தே மாதரம் எழுதப்பட்ட 150-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 6, 2026 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முழுப் பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என்று கூறி இருக்கிறது.

இதன் காரணமாக அண்மையில் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளத்திலும் புதிய அரசு பொறுப்பேற்ற போது ‘ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வு’ என்று கூறி வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்வினையாக கேரளத்தின் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பினாராய் விஜயன் “வந்தே மாதரம் முழுப் பாடலை பாட சொல்வது ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கைத்திட்டம்” என்று தற்போது எதிர்ப்புக்குரல் எழுப்பி உள்ளார். (வங்காள முதல்வராக பிஜேபியின் சுவேந்து அதிகாரி பதவியேற்றபோது அது இசைக்கப்படவில்லை. ஆனால் பதவியேற்ற சில நாட்களிலேயே மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில், கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று தனது அடாவடியைத் தொடங்கி விட்டது பாஜக.)

தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநருக்கு முன்னர் பதவி வகித்த திரு. ஆர்.என்.ரவி பங்கேற்ற ஒரு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற நம் ஆரிய எதிர்ப்பு முழக்கத்தைத் தவிர்த்துப் பாடி அவமதித்தனர்.

தென் மாநிலங்களில் இந்தி திணிப்பு, சம்ஸ்கிருத திணிப்பு போன்றவற்றை முடுக்கி விடுவதற்காக பல வேலைகளை செய்து வந்த பாஜக, தொடர்ந்து தமிழை புறந்தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனாலேயே வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளி அவமதித்து இருக்கிறது தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகை. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒன்றிய பாஜக அரசும் அதன் முகவர்களும் இவ்வாறு தமிழின உணர்வைத் தொடர்ச்சியாக அவமதிப்பதைக் கண்டித்து வரும் மே 31 , 2026 அன்று சைதை பனகல் மாளிகை அருகில் மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்று கூடி நம் தமிழ்த்தாய் வாழ்த்திற்காக முழங்குவோம்…

வாழ்க தமிழ்!

வெல்க தமிழ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »