மாநில உரிமையைப் பறிக்கும் ஜல் ஜீவன் 2.0 திட்டம்

ஜல் ஜீவன் 2.0 எனும் பெயரில் மாநில அரசிடமிருந்து குடிநீர் வழங்கும் உரிமையை பறிக்கும் இந்திய ஒன்றிய அரசு:

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கூட்டாட்சி (Federalism) அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளாக மாநில உரிமைகள் மற்றும் ஒன்றிய அரசின் அதிகார மையப்படுத்தல் குறித்து பல்வேறு மாநிலங்கள் கவலை தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு தொடர்ந்து இந்த விவாதத்தின் மையமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தில் கடந்த ஜீன் 02, 2026 அன்று தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் காணொலி வாயிலாக கையெழுத்தானது. தமிழ்நாடு கையெழுத்திட்டிருப்பது என்பது வெறும் குடிநீர் திட்ட ஒப்பந்தமாக மட்டும் பார்க்க முடியாது. இது மத்திய நிதி, மாநில உரிமை, நிர்வாக சுதந்திரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பெரிய அரசியல் விவாதத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

ஜல் ஜீவன் மிஷன் 1.0 கட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியது. மாநில அரசின் கணக்குப்படி, மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார் ₹3,112 கோடி நிதி நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இதனால் தமிழ்நாடு தனது சொந்த நிதியிலிருந்து ₹2,550 கோடிக்கு மேல் முன்பணமாக செலவழித்து திட்டங்களை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும், ஓக்கேனக்கல் மூன்றாம் கட்ட குடிநீர் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பங்கான ₹2,283 கோடியும் தரவில்லை என்றும் முன்னாள் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில் தான் தற்போது ஜல் ஜீவன் மிஷன் 2.0 ஒப்பந்தமானது கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று முதல் முறையாக ”performance-linked funding” செயல்திறன் அடிப்படையிலான நிதி வழங்கல் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது திட்டத்தை எப்படி செயல்படுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்து நிதி வழங்கும் முறை. இது மேலோட்டமாக பார்ப்பதற்கு சரியான நடவடிக்கையாக தோன்றும், ஆனால் சரியாக வேலை நடந்திருக்கிறதா? என்று முடிவு செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் இருக்கும். மாநில அரசுகளுக்கு நிதி வேண்டுமென்றால் ஒன்றிய அரசு சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டுமென்று மறைமுகமாக மிரட்டுவதற்குத் தான் இந்த நடைமுறை.

மேலும் ஜல் ஜீவன் மிஷன் 2.0-இன் ஒப்பந்தத்தில் “11 Structural Reforms” என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே ஆவணமாக அந்த 11 அம்சங்களின் முழு பட்டியலை பொதுவெளியில் விரிவாக வெளியிடவில்லை. இருப்பினும் பல மாநிலங்களுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஜல் சக்தி அமைச்சக அறிக்கைகளிலிருந்து முக்கிய அம்சங்கள் தெளிவாக தெரிகின்றன. அதன் மூலம் நாம் புரிந்துகொள்ளக்கூடியது ஒன்றுதான் எப்படியாவது மாநில அரசிடமிருந்து தண்ணீர் உரிமையை ஒன்றிய அரசு பறிக்க வேண்டுமென்பதுதான்.

உதாரணத்திற்கு, கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை நிர்வகிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாகத்திடம் தான் இருக்கவேண்டுமென்று ஒன்றிய அரசு சொல்கிறது எனில், கிராம பஞ்சாயத்துக்கள் நிர்வகிப்பதற்குரிய நிதியை ஒன்றிய அரசு தரமாட்டார்களாம். அது மாநில அரசோ அல்லது சம்பந்தபட்ட கிராம நிர்வாகமே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டுமாம். குறிப்பாக குடிநீர் வழங்கும்போது ஏற்படும் பழுதுகள், மின்கட்டணம் புது மோட்டார்கள் வாங்குவது உள்ளிட்ட பாராமரிப்பு பணிகளுக்கு (Operation and Maintenance) தேவையான நிதியையும் மாநில அரசு அல்லது கிராம நிர்வாகமே பார்க்க வேண்டுமாம். இதற்கு Financial Sustainability பராமரிப்பு செலவுகளுக்கான உள்ளூர் நிதி ஆதாரங்களை உருவாக்குதல் என்று ஒன்றிய அரசு சொல்கிறது.

இதன் மூலம் என்ன சொல்கிறார்கள் எனில், மாநில அரசோ- கிராம நிர்வாகமோ குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்காதே காசு வாங்கிக்கொண்டு விநியோகம் செய். அப்படியில்லையென்றால் அதற்குண்டான நிதிச்சுமையை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளுங்கள். அதாவது ”குடிநீர் என்பது அரசு தன் மக்களுக்கு வழங்கும் ’கடமை’ என்பதிலிருந்து விலகி சேவை (Service based Model) ஆக மாற்றியிருக்கிறது”.

அது மட்டுமில்லாமல் கிராம பஞ்சாயத்துகள் வழங்கும் குடிநீர் அளவுகளை கண்காணிக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடமிருந்து ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும். அதற்காகத்தான் Digital Monitoring & Data Compliance என்ற ஒன்றை இந்த ஜல் ஜீவன் 2.0வில் புகுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் மாநிலங்களிலுள்ள கிராம பஞ்சாயத்துகளின் நிர்வாக நடவடிக்கையை நேரடியாகவே கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வேலையை ஒன்றிய அரசு செய்யும். இதுமட்டுமல்ல, ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கும் குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டம் வடிகால் திட்டங்கள், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் குடிநீராக மாற்றும் திட்டமென மாநிலங்கள் குடிநீர் சார்ந்து செயல்படுத்தும் அனைத்தையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்துவுமே இந்த ஜல் ஜீவன் 2.0 ஒப்பந்தம். 

ஏற்கனவே கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கை என்ற ஒன்றை கொண்டு வந்து, இந்தியை புகுத்த நினைத்ததும், இந்திய ஒன்றியம் முழுவதும் ஒரே பாடத் திட்டத்தைப் புகுத்த நினைத்ததும், அனைத்திற்கும் தேசிய அளவிலான தேர்வுகளை நடத்திட நினைத்ததும் என மாநில கல்வி உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசு. இப்போது குடிநீரிலும் அதே வேலையை செய்ய நினைக்கிறது. அதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த ஜல் ஜிவன் 2.0 எனும் சதி திட்டம்.

குடிநீர், கல்வி, சுகாதாரம் போன்றவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி மாநிலங்களின் பொறுப்புகளாக இருந்தாலும், நிதி ஒதுக்கீட்டை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெரும்பாலும் ஒன்றிய அரசிடமே இருப்பதால், மாநிலங்கள் நிதி தேவைக்காக ஒன்றிய அரசின் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய சூழல் உருவாகிறது. இன்று குடிநீர் திட்டம், நாளை கல்வித் திட்டம், நாளை மறுநாள் சுகாதாரத் திட்டம் என்று ஒவ்வொரு துறையிலும் நிதியை நிபந்தனையுடன் இணைத்தால், மாநிலங்களின் நிர்வாக சுதந்திரம் படிப்படியாக குறையும்.

எனவே ஜல் ஜீவன் 2.0 குறித்த விவாதம் வெறும் குடிநீர் பற்றிய விவாதம் அல்ல. அது இந்திய கூட்டாட்சியின் எதிர்காலம், மாநிலங்களின் அதிகாரம், ஒன்றிய அரசின் நிதியின் தன்மை, மற்றும் மாநில உரிமைகள் பற்றிய பெரிய அரசியல் விவாதத்தின் ஒரு பகுதி.

ஆகவே மாநில உரிமைகளை பறிக்கும் இந்த ஜல் ஜீவன் 2.0 ஒப்பந்தத்திலிருந்து உடனடியாக தமிழ்நாடு அரசு வெளியேற வேண்டும். ஒன்றிய அரசின் நிதியை வைத்து மிரட்டும் போக்குக்கு முடிவுகட்ட தமிழ்நாடு மக்களுக்கு நடந்தவற்றை வெளிப்படையாக அறிக்கையாக தரவேண்டும். ஒன்றிய அரசின் இந்த ஆணவ மனநிலைக்கெதிராக தமிழ்நாடளவிலும் இந்திய ஒன்றிய அரசு அளவிலுமுள்ள மாநில கட்சிகளின் ஒருங்கிணைவை உடனடியாக உருவாக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »